ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார்.
இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் விமானத்தை பாவிப்பதும் போர்க்குற்றமே என்ற செய்தியையும் தெளிவாகக் கோடுபோட்டுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சர் இத்தாக்குதல் பற்றிக் கூறும்போது இது தருணம், இது தேவை, இது கட்டாயம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். தற்போது ஐ.நாவை சரியான பாதையில் வளைத்து ஓர் உலக ஜனநாயக அணி வீறு கொண்டுள்ளது.
லிபியாவில் உள்ள பென்காசி என்னும் கரையோர நகரத்தையும், அதனைச் சூழவுள்ள பகுதிகள் சிலவற்றை, கிளர்ச்சியாளர் கைப்பற்றி வைத்திருந்தனர். பென்காசி நகரத்தில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றிய சில பொதுமக்கள், அல்லது கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுவோர் , அந் நாட்டு அதிபர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் யார், எவ்வாறு உருவானார்கள் அல்லது இலகுவாக இவர்கள் கைகளில் எப்படி ஆயுதங்கள் வீழ்ந்தது என்பது எல்லாமே மர்மம். அது ஒரு புறம் இருக்க, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க லிபியா இராணுவம் போர் தொடுத்தது. படிப்படியாகப் பல இடங்களை அது மீளவும் கைப்பற்றியது.
ஆனால் இது தொடர்பாக மேற்குலகின் கண்ணோட்டம் வேறுவிதமாக அமைந்திருந்தது. அதாவது ஆயுதம் தாங்கிப் போராடுவோரை இம் முறை அமெரிக்கா தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பொது மக்கள் என்றும் அவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா உட்பட அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கேணல் கடாபி தெரிவித்த கருத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவோம் எனக் கூறிய அமெரிக்க, பின்னர் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, அந் நாடு மீது வான் தாக்குதலை நடத்த அனுமதியையும் பெற்றுள்ளது.
பென்காசி என்னும் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களில் சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்படும் போதும், தமிழர்கள் தொடர்போராட்டங்களை நடத்தும்போதும் ஏன், கண்டுகொள்ளவில்லை என்ற பெரும் கேள்வி இங்கே எழுகிறது. இது பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டும் அல்ல உலகநாடுகளில் எங்கே எல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கே உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் கேட்கப்படவேண்டும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இங்கே இயங்கும் தமிழ் அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இது குறித்து கலந்துரையாடவேண்டும் என அதிர்வு இணையம் வேண்டி நிற்கிறது.
ஏன் எனில் மேற்குலகம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. லிபியா கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதும், பொங்கி எழுகின்ற மேற்குலகம், தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட ரசாயன எரி குண்டுகளையும், ஆட்டிலறி ஏவுகணைகளையும், மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் போது இவர்கள் என்ன செய்தனர். தற்போது பென்காசியில் உள்ள மக்களை தாம் காப்பாற்றப் போகிறோம் என்று அமெரிக்க புறப்பட்டுள்ளது. அன்று ஐ.நா பாதுகாப்புச் சபை என்ன செய்தது ? இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்று பிரித்தானியா கொண்டு சென்ற தீர்மானத்தை, ஐ.நா வின் பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததற்கு சீனாவும் இந்தியாவுமே காரணமாகும்.
இந்திய வல்லரசு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அதே இந்தியா தற்போது தாம் தமிழர்கள் பக்கம் தான் நிற்போம் எனக் கூறியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு முன்வைக்கவேண்டும். லண்டன் வந்த சோனியா காந்தி தாம் தமிழர் பக்கமே எப்போதும் இருப்பதாகக் கூறியதாக, உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏன் சோனியா அரசு அதனை எதிர்த்தது ?
தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில், தான் எப்போதும் தமிழர் பக்கம் தான் இருப்பேன் என்று கூறி வோட்டுகளைக் குவிக்க அவர் நினைப்பதும் அதற்கு துணைபோகும் வகையில் சிலர் அறிக்கைகளை வெளிவிடுவதும் கண்டனத்துக்குரிய விடையமாகும்.
எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழர்கள் வசிக்கும் அந் நாட்டு பாராளுமன்றங்களுக்கு கொண்டுசென்று நீதிகேட்கவேண்டிய தேவை தற்போது தோன்றியுள்ளது என்றே கூறவேண்டும். அதனைக் கேட்கும் உரிமையும் தமிழர்களுக்கு இருக்கிறது, காரணம் நாம் வெளிநாடுகளில் வேலைசெய்து வரியாகச் செலுத்தும் பெரும் பணத்தையே, இன்று லிபியா மீது போர்தொடுக்க அதனை சில நாடுகள் பயன்படுத்துகிறது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.
அதிர்வின் ஆசிரியபீடம்.
Comments
ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .
ஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.
இன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.
ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.
- நல்லையா தயாபரன்