'நாம் தமிழர்’ இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் முத்துக்குமார். அவரது மரணம் குறித்து வடகாட்டில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார் சீமான். அதன் பிறகுதான், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்!
ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய இயக்கத்தை சேர்ந்த தியாகு பேசும்போது,
இலங்கையில் நடந்த படுகொலையின்போது முத்துக்குமார் அங்கிருந்த நம் தமிழர்களுக்கு வலி மருந்தும், குருதிப் பைகளும் கொடுத்து அனுப்பினார்.
அப்போது அங்கு மருத்துவர் இருந்தால், மருந்து இல்லை. இரண்டும் இருந்தால், அவர்களுக்கு உணவு இல்லை என்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு சிறுவன் காலில் குண்டடிபட்டுக் கிடக்கிறான். ஒரு காலை எடுத்தால்தான் அவனைப் பிழைக்கவைக்க முடியும். ஆனால், மயக்க மருந்து இல்லை. காலை வெட்டி எடுக்கவேண்டி அவனிடம், 'சற்றே தாங்கிக்கொள். உன் காலை வெட்டி எடுத்து உன்னைக் காப்பாற்றுகிறோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்தச் சிறுவன், 'என்னை எப்படி வேண்டுமானாலும் வெட்டுங்கள். ஆனால், அதற்கு முன்பு ஒரு கோப்பை கஞ்சி கொடுங்கள்...’ என்று கேட்டு இருக்கிறான். அந்த அளவுக்குக் கஷ்டப்பட்ட நம் தமிழர்களுக்கு உதவியது தவறா? முத்துக்குமார் அனுப்பிய மருந்துகள், அங்கிருந்த எத்தனையோ தமிழர்களைக் காப்பாற்ற உதவியது. அவருடைய இழப்பு, நாம் தமிழர் கட்சிக்கு பெரிய இழப்பு.
பிரபாகரனின் தாய் பார்வதிஅம்மாள் உயிருக்குப் போராடிய காலத்தில், இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள நமது அரசு மறுத்தது. அதன் பிறகு அவரை நமது அரசு வரச்சொல்லிச் சொன்னது. ஆனால், அந்தப் புலியைப் பெற்ற புலியோ இங்கு வர மறுத்து, தன் சொந்த மண்ணிலேயே உயிரை விட்டது. அதற்குக் காரணம், இன உணர்வு.
அதே போன்றுதான் முத்துக்குமாரும் இருந்தார். தமிழ்த் தேசியம் பற்றி விவாதிக்க என்னை முத்துக்குமார் அழைத்திருந்தார். நானும் 'சந்திப்போம்’ எனச் சொல்லி இருந்தேன். அவர் வெறும் செயல் போராளி அல்ல, சிந்தனைப் போராளி. அவருக்கு பெரும் பகையே இந்திய வல்லாதிக்கத்தினர்தான். அவருக்கென தனிப்பகை சிறிதும் இல்லை. முத்துக்குமாரது மரணத்துக்குக் காரணமானவர்களை உடனே காவல் துறையினர் கண்டுபிடிக்க வேண்டும்!'' என்று கர்ஜித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பெ.மணியரசன், ''நான் முத்துக்குமாரிடம் அதிகம் பேசியதில்லை என்றாலும், அவர் மாமா கரு.காளிமுத்துவிடம் பழகி இருக்கிறேன். இந்தக் கொலையை மையப்படுத்தி, மீண்டும் ஒரு கெட்ட சம்பவம் இங்கு நடந்து விடாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து முதல்வர் வாய்திறக்க வேண்டும்!'' என்று கூறினார்.
இறுதியாக மைக் பிடித்தார் சீமான். ''முத்துக்குமார் மரணத்துக்காக ஆறுதல் சொல்ல நான் அந்த வீட்டுக்குச் சென்றேன். ஆனால், என்ன சொல்வது எனத்தெரியாமல் இருந்தபோது அவரது மனைவி மாதரசி, 'மாமாவின் கனவை, லட்சியத்தை நிறைவேற்ற நாம் ஒன்றாக இருந்து பாடுபடுவோம்...’ என எனக்கு ஆறுதல் சொன்னார்.
ஆனாலும்கூட, எனது வலது கரத்தையே வெட்டி எறிந்துவிட்டது போல் எனக்கு ஒரு பாதிப்பு. கலைஞர் மீது நம்பிக்கை இல்லையே தவிர, இன்னும் காவல் துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், துக்கத்தைக் கொடுத்தாலும் அதைத் திருப்பிக்கொடுப்பது வழக்கம். அப்படித்தான் இந்தக் கொலையிலும் நடக்கப்போகிறது. உண்மையிலேயே முத்துக்குமார்தான் எங்களுக்குத் தலைவராக இருந்திருக்க வேண்டும்.
காரணம், நான் மொத்தமே பத்து மாதங்கள்தான் சிறையில் இருந்திருக்கிறேன். ஆனால் முத்துக்குமாரோ, பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர். நான் சினிமாவில் இருந்ததால், மக்களுக்குத் தெரிந்தவனாக போய்விட்டேன். இந்த இனத்துக்காகப் போராடியதைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யாதவர் முத்துக்குமார். நம் இனத்துக்காகப் போராடுவது தவறா? சொந்த மண்ணில், இவ்வளவு உறவுகள் மத்தியில் இருந்தவரை வெட்டி கொன்று போட்டிருக்கிறார்கள்.
இந்தக் கொலைக்கு, இந்த மண்ணைச் சேர்ந்த யாரோ உதவியாக இருந்திருக்க வேண்டும்! அதிலும் அவருக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். இல்லை எனில், அவர் சத்தம் போட்டிருப்பார், உதவிக்கு ஆட்களை அழைத்திருப்பார்.
முத்துக்குமாரை கொன்றவர்களுக்கு எங்களுடைய வலியையும் வலிமையையும் நிச்சயம் உணர்த்துவோம். இதுவரை, 'காவல் துறை கண்டுபிடிக்கட்டும்’ என அமைதியாக இருந்தோம். எங்களது பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தோடு நாங்கள் நிறுத்திக்கொள்ள மாட்டோம். இந்தக் கொலைக்கான காரணத்தை இங்கிருக்கும் காவல் துறை கண்டுபிடிக்காமல் விட்டால், சி.பி.ஐ. விசாரணை கேட்போம்!'' என்று ஆவேசமாக முழங்கினார்.
'கொலையாளிகளைக் கைது செய்யும் வரை சீமான் கட்சியினரின் சூடு தணியாது’ என்பது நமக்குப் புரிகிறது. காவல் துறைக்கு?
- வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: பா.காளிமுத்து
Comments