சிறீலங்காவின் சுற்றுலாதுறைக்கு எதிராக யேர்மன் தலைநகரில் சென்ற சனி (12.03.2011) மற்றும் ஞாயிறு (13.03.2011) நாட்களில் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பிரனால் முன்னெடுக்கப்பட்டது.
யேர்மன் தலைநகரில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சர்வதேச சுற்றுலா வர்த்தக சந்தையில் சிறீலங்கா தனது உண்மையான நிலைமையை மறைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவைக்கும் நோக்கத்துடன் கலந்துகொண்டதை அறிந்த யேர்மன் தமிழ் இளையோர்கள், அதற்கு எதிராக சிறீலங்காவின் தற்சமய நிலைமைகளையும் அத்துடன் அங்கு நடந்தேறிய கொடுமைகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.
அத்தோடு சிறீலங்கா சுற்றுலாதுறை அங்கு நடந்த இனஅழிப்பை மூடிமறைத்து தான் செய்த குற்றங்களில் இருந்து தப்பிக்க கோடிக்கணக்கான நிதியை செலவழித்து வெளிநாட்டு மக்களை திசை திருப்பும் முகமாக நடப்பதை அங்கு கூடி நின்ற மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இளையோர்களின் செயற்ப்பாட்டை அறிந்த சிறீலங்கா சுற்றுலாத்துறை வெளியே வந்து கவனயீர்ப்பு நிகழ்வை நிறுத்துவதுக்கு கடுமையாக முயற்சித்தனர். தொடர்ந்து சுற்றுலாதுறை அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் யேர்மன் பெண்மணியை இளையோர்கள் மீது ஏவிவிட்டனர்.
யேர்மன் காவல்துறையிடம் அனுமதி பெற்று ஒழுங்கு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பை நிறுத்த முடியாமல் போனதை கசப்போடு உணர்ந்துகொண்டவர்கள் இளையோர்களை அச்சுறுத்தும் முகமாக அவர்களை புகைப்படம் பிடித்தனர்.
இருப்பிலும் இரண்டு நாட்கள் காலமாக முன்னெடுக்கப்பட்ட இவ் நிகழ்வின் ஊடாக பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் சிறீலங்காவின் தற்காலிக நிலைமையை கருத்தில் கொண்டு தாம் சிறீலங்காவுக்கு சுற்றுலா பயணம் செய்யமாட்டார்கள் என கூறியதோடு யேர்மன் நாட்டில் வாழ்ந்தாலும் தம் இனத்துக்காக குரல் கொடுக்கும் இளையோர்களை பாராட்டினார்கள.
இத்துடன் யேர்மன் இளையோர் அமைப்பின் ஊடக அறிக்கையும் தொடர்ந்து யேர்மனிய மக்களுக்கு பரப்புரை செய்யும் முகமாக தயாரிக்கப்பட்ட காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.
Comments