இலங்கையின் புதுமாத்தளன் லிபியாவின் பெங்காஸி நடப்பது ஒன்றே…

பெங்காஸி இசைப்பிரியாக்களின் அவலம் கேட்கும் கடைசி மணித்துளிகள்..
மட்டக்களப்பு தளபதி ரமேஸ் போல கடாபியிடம் போராளிகள் கையேந்த வேண்டிய அவலம் வருமா..?

——————————-

தற்போது பெங்காஸியை நோக்கி சர்வாதிகாரி கடாபி நடாத்தும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கும் 2009 ம் ஆண்டு வன்னிப்போரில் புதுமாத்தளன் – முள்ளிவாய்க்கால் தாக்குதல்களுக்கும் சிந்தனை அடிப்படையில் வித்தியாசம் காண முடியவில்லை.

இன்று உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கடாபி நடாத்தும் தாக்குதல்களுக்கும் அன்று வன்னியில் உலக நாடுகளை ஏமாற்றிவிட்டு சிறீலங்கா நடாத்திய போர்க்குற்ற மீறலுக்கும் மிகப்பெரிய ஒற்றுமை தெரிகிறது. இதோ ஒப்புமைகள் :

01. தாக்குதலுக்குள்ளாகும் மக்கள் வாழும் பகுதிக்கு மின்சாரம், மருந்துப் பொருட்கள், தண்ணீர் போன்றன போக விடாமல் தடுக்க வேண்டும். இது வன்னியில் பல ஆண்டுகளாக நடைபெற்றது. இப்போது அதையே கடாபி லிபியாவில் அமல் செய்துள்ளார். இந்தத் தடையை உடனடியாக விலத்த வேண்டும் என்று நேற்று அமெரிக்க அதிபர் கூறினார். வன்னியில் போடப்பட்ட தடையை உலக நாடுகளால் இந்தியாவைப் பகைத்து விலத்த முடியாமல் போனது கவனிக்கத்தக்கது. இது முதல் ஒற்றுமை. (கடாபியின் நாட்டுக்குள் செய்தியாளர் போயுள்ளனர் ஆனால் வன்னிக்குள் உலக செய்தியாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. )

02. முதலில் 48 மணி நேர யுத்த நிறுத்தமென அறிவிப்பது. அதை யாரோ ஒரு இறப்பர் ஸ்டாம்பு அமைச்சர் மூலம் ஊடகங்களுக்கு கொடுப்பது. பின் அந்த அறிவிப்பு அமலில் இருக்கவே தாக்குதலை நடாத்துவது. இது வன்னியில் நடைபெற்றது. அங்கு 48 மணி நேர யுத்த நிறுத்தமென அறிவிக்கப்பட்டாலும் உண்மையில் எதுவுமே நடைபெறவில்லை. அதுபோலவே இப்போது கடாபியும் யுத்த நிறுதத்தை அறிவித்துவிட்டு அதே கையோடு தாக்குதலையும் அரங்கேற்றியுள்ளார்.

03. பாதிக்கப்பட்ட மக்கள் குழந்தைகளையும், ஏதோ கைக்கு அகப்பட்டதையும் துக்கிக் கொண்டு அகதிகளாக ஓட அரச படைகள் ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடாத்தும். இது அன்னிய நாட்டின் மீது நடைபெறும் தாக்குதல் அல்ல தனது சொந்த நாட்டு மக்கள் மீதே நடைபெறும். தனது சொந்த நாட்டு மக்களை கொன்று இறைச்சிக்கடை போடும் கொள்கையை கடாபி அறிவித்துள்ளார். இதேபோல வன்னியில் சிறீலங்கா படைகள் தனது சொந்த நாட்டு மக்களையே கொலை செய்தன.

04. தாக்குதல் நடைபெறும்போது பொது மக்கள், குழந்தைகள், வயோதிபர், வைத்தியசாலைகள் என்று பேதம் பார்க்காமல் எல்லாவற்றையும் எதிரிகளாக கருதி ஒட்டு மொத்தமாக அழிப்பது ஒரு போர் வியூகம். பின் அதற்கு பயங்கரவாத பட்டத்தை ஒட்டு மொத்தமாக சூட்டிவிட்டால் சரி. இப்போது 40 வருடங்களாக அடக்கு முறைக்குள் கிடந்து உரிமை கேட்ட மக்களையே அல் குவைடா பயங்கரவாதிகள் என்று அறிவித்து ஒட்டு மொத்தமான தாக்குதலை நடாத்துகிறார் கடாபி. தமிழர்கள் மீது பயங்கரவாதிப் பட்டம் கட்டி நடாத்தப்பட்ட தாக்குதலுக்கும் கடாபியின் தாக்குதலுக்கும் இடையே யாதொரு வேறுபாடும் கிடையாது.

04. இதோ வருகிறது இல்லை அதோ அந்தா வருகிறது.. அந்தா அமெரிக்காவின் கப்பல் வருகிறது இந்தா இந்தியாவின் கப்பல் வருகிறது என்று வெளியான அன்றைய வன்னிச் செய்திகள் போலவே லிபியாவிலும் வெளிநாட்டுப் படைகள் இந்தா வருகின்றன இல்லை அந்தா வருகின்றன என்று கூறப்படுகிறது. இன்னமும் எதுவும் நடைபெறவில்லை ஆனால் பெங்காஸியில் கடைசித் தாக்குதல் நடைபெறுகிறது. கடாபியின் படைகள் நகர மையத்திற்கு மேலும் 20 கி.மீ தொலைவில் நிற்கின்றன. இதுபோல சிறீலங்கா இராணுவமும் வன்னிக்குள் 100 கி.மீ தூரத்தில் நிற்கிறோம், 50 கி.மீ தூரத்தில் நிற்கிறோம், 20 கி.மீ தூரத்தில் நிற்கிறோம் என்று கூறியதை நாம் மறந்துவிட முடியாது.

05. கடாபியின் படைகள் நகரின் நடு மையத்துக்குள் போனால் முள்ளிவாய்க்காலில் நடந்த இறைச்சிக்கடைதான் அங்கும் நடக்கும். பல இசைப்பிரியாக்களின் அவல அலறல்கள் வானைப் பிளக்கும். போராளிகள் பலர் போராளிகள் என்ற மரியாதை கூட இல்லாமல் நடத்தப்படலாம். மட்டக்களப்பு ரமேஸ் போல கடாபியின் படைகளிடம் மண்டியிட்டு கையேந்த வேண்டிய அவலமும் வரும்.

காட்சிகள் ஒன்று களங்கள் மட்டும் இரண்டு..

இவைகள் வன்னிக்கும் – பெங்காஸிக்குமிடையேயான போரியல் ஒப்புமையாகும்.

இனியாவது…

இந்த மாதிரியான போர்த்தந்திரமும், காலத்துக்கு ஒவ்வாத கழிசடைத்தனங்களும், இன அழிப்பும், மனநோய் வெறியும் அரங்கேற சர்வதேச சமுதாயம் இடம் கொடுக்கக் கூடாது. இனியாவது மக்களுடைய அடிப்படை வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டிய தனது கடமை ஐ.நா புறந்தள்ளக் கூடாது. லிபியாவையும், சிறீலங்காவையும் உதாரணம் காட்டி உலகம் புதிய நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

லிபியாவில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை வெற்றி பெற விடாமல் தடுத்து யார் ?

இப்போது மேலை நாடுகளின் படைகள் இறங்கியே வெற்றி பெற வேண்டும் என்ற அவலம் உருவாக்கப்பட யார் காரணம் ?

இந்த இரண்டு அவலங்களும் ஏற்பட ஐ.நாவில் உள்ள அதிகாரமிக்க சில நாடுகளே காரணம்.

எனவேதான் ஐ.நாவை அநீதிக்கு துணை போகும் நாடுகளில் இருந்து காப்பாற்ற வேண்டிய புதிய தேவை உருவாகியுள்ளது.

வன்னிப் போரும்…

லிபியப் போரும் உலகுக்கு சொல்லும் உண்மை… என்ன ?

அது அதிகமல்ல ஒன்றேயொன்றுதான்..

முதலில்…

ஐ.நாவை பாதுகாக்க வேண்டும் !

பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்கான சக்தியாக வருங்காலத்தில் ஐ.நாவை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் ஐ.நாவை அநீதியாளர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

இல்லாவிட்டால் கடாபி போன்றவர்களிடமும், அவருக்கு துணைபோகும் கூட்டத்திடமிருந்தும் உலகத்தை காப்பாற்ற இன்று போலவே நாளையும் வெகு தாமதமாகிவிடும்.

இன்று அமெரிக்காவும், டென்மார்க்கும், பிரான்சும், பிரிட்டனும் எடுத்த முயற்சி மேலும் விரிவு பெற்று உலக ஜனநாயகத்தை உன்னதம் பெற செய்ய வேண்டும். இந்த வெற்றி தொடர வேண்டும்.

ஏனென்றால்…

வன்னியும், பெங்காஸியும் உலக மக்களுக்கு போதும்…

அலைகள் நவீன சிந்தனைப் பிரிவு 19.03.2011

Comments