ஐ.நாவின் கடைசி விக்கட்டும் விழப்போகிறது லிபியாவில்..

செல்லாக் காசாகிவிட்ட சர்வதேச சமுதாயம் ஒரு போலி நாணயம் – கடாபி

மன நோய் முற்றிய சர்வாதிகாரியான கேணல் கடாபியின் ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்த மக்கள் முயற்சிகள் ஏறத்தாழ தோல்விக் கட்டத்திற்குள் வந்துள்ளன. ஐ.நாவின் தீர்மானங்கள் தோல்வியடைந்துவிட்டன, சர்வதேச சமுதாயமும் தோல்வியடைந்துவிட்டது என்று பெங்காஸியில் இருந்து டேனிஸ் செய்தியாளர் நேற்றிரவு தெரிவித்தார்.

ஐ.நாவின் கடைசி விக்கட்டும் சரிந்து அப்படியொரு தாபனமே இனித் தேவையில்லை என்ற அவலத்தைத் தடுக்க கடைசியாக சின்னஞ்சிறிய நாடான டென்மார்க் மட்டுமே முன் வந்திருக்கிறது.

லிபியாவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க, டேனிஸ் யுத்த விமானங்களை அனுப்பி கடாபியின் விமானங்கள் குண்டு வீசுவதைத் தடுக்க, போராடும் போராளிகளுக்கு உதவ டேனிஸ் பாராளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அவசர அவசரமாகக் கூடிய பாராளுமன்றம் இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளும் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளன.

உறங்கிக் கொண்டிருக்கும் ஐ.நாவிற்காக நாம் காத்துக் கொண்டிருக்க முடியாது. பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை நாமாவது களமிறங்கியாக வேண்டுமென டேனிஸ் பிரதமர் எடுத்திருக்கும் முடிவு உலகத்தை அதிசயிக்க வைத்திருக்கலாம்.

நேற்று ஈரோ நியூசிற்கு பேட்டியளித்த கடாபியின் மகன் மேலும் 48 மணி நேரத்தில் அனைத்து போராளிகளும் தோற்கடிக்கப்பட்டுவிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். அவர் கூறி 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஐ.நா உறங்கிக் கிடக்கிறது. கடந்த 60 வருடங்களாக தவறானவர்களின் பக்கமே நின்றுவரும் ஐ.நா இன்று இரவுவரை தனது தவறான பாதையை திருத்திக் கொள்ளவில்லை. ஆகவே ஐ.நாவிற்காக காத்திருக்காமல் களமிறங்குகின்றன டென்மார்க் விமானங்கள்.

நேற்று முன் தினம் அவசர அவசரமாக அமெரிக்கா சென்ற டேனிஸ் பிரதமர் லாஸ்லொக்க ராஸ்முசன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சில விடயங்களை தெட்டத் தெளிவாக முன் வைத்தார்.

கடாபி வெற்றி பெற்றால்…

சர்வதேச சமுதாயம் என்ற பெயரில் ஒரு சமுதாயம் எதற்காக..?

ஐ.நாவின் தீர்மானங்களை நிராகரித்து கடாபியின் விமானங்கள் குண்டு வீசிக் கொண்டிருக்கின்றன.. அப்படியானால் செயற்பாடற்ற ஐ.நா தீர்மானம் எதற்காக..?

ஜி-8 நாடுகளில் உள்ள பல நாடுகள் லிபியாவுக்கு எதிரான விமானத் தடையை ஆதரிக்கவில்லை. பல நாடுகள் பணம் இல்லாமல் இரவோடு இரவாக கடாபியின் எண்ணெயை இலவசமாக உறிஞ்சிக் கொண்டு மூட்டைப் பூச்சிகள் போல மௌனமாகக் கிடக்கின்றன. இந்த நிலையில் சர்தேச சமுதாயம், ஜனநாயகம், மக்கள் போராட்டம், மனித உரிமை என்று பேசுவதெல்லாம் பொய் அல்லவா..?

டேனிஸ் பிரதமர் அமெரிக்க அதிபரிடம் தெட்டத் தெளிவாக இத்தகைய விடயங்களை சொல்லியுள்ளார். அதே நேரம் இன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சக்தி அற்ற ஓர் அமெரிக்க அதிபர் என்று ஐரோப்பாவில் உள்ள ஊடகங்கள் கூறுகின்றன. முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தாலும் ஜோர்ஜ் டபிள்யூ புஸ் இவரைவிட சிறந்தவர் என்ற கருத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறார். மேலும் 100 வருடங்களுக்கு ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக வரமுடியாதளவிற்கு பலவீனமான அதிபராகவே இவர் இருக்கிறார் என்ற முணுமுணுப்புக்களை சாதாணமான ஐரோப்பிய அறிஞர்களுடன் இருந்து பேசும்போது எம்மால் கேட்க முடிகிறது. ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக வருகிறாரே என்று நாம் கொண்ட பெருமை வெளிறிக் கொண்டிருக்கிறது.

இப்போது லிபிய போராளிகள் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலுக்குள் மக்களோடு மக்களாக முடக்கப்பட்டது போல கடாபியின் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெங்காஸிக்குள் நேரடியாக இறங்காமல் அதை வட்டமாக சுற்றி அவரது படைகள் நகர ஆரம்பித்துள்ளன. அந்தப் பொறிக் கிடங்கிற்குள் போராளிகளை மாட்டிவிட்டு படுகொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

அன்று முள்ளிவாய்க்காலுக்குள் மக்களோடு மக்களாக புலிகளை சுற்றி வளைத்த பின்னர் புலிகளின் முக்கியஸ்தர்களை கொல்வதற்கு புறப்பட்டால் மக்களை கொல்ல நேரிடுமே என்ற விவாதம் சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப்பட்டது. அப்போது புலிகளின் தலைமைகளை அழிப்பதற்காக மக்களும் அழிக்கப்படலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்திருந்தன.

நேற்றிரவு கடாபியும் இதைத்தான் சொன்னார். ஆட்டிலறி, விமானக் குண்டு வீச்சு உட்பட அனைத்துத் தாக்குதல்களும் பெங்காஸி மீது நடாத்தப்படும். மக்கள் யார் போராளிகள் யார் என்ற பேதத்தை தனது படைகள் பார்க்காமலே முன்னேறும் என்று கூறியுள்ளார். இது போரியல் குற்றத்திற்கான சர்வதேச நீதி மன்று போக வேண்டிய செயலாகும். இத்தகைய குற்றத்தை புரிவதும், அதற்கு துணைபோவதும் சர்வதேச போர்க் குற்றமாகும்.

இந்த நிலையில் ஐ.நா செயலர் செயற்பாடற்ற ஒருவராக இருக்கிறார். இதுபோலவே வன்னி மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோதும் இவர் இருந்தார். கடந்த 60 ஆண்டுகளாக ஐ.நா தப்பானவர்களின் பக்கமே இருக்கிறது என்ற வருத்தம் பலருடைய உள்ளத்தில் இருக்கிறது. அதுபோலவே ஜப்பானும் 60 வருடங்களாக தப்பான சக்திகளுக்கு துணைபோய் இன்று இயற்கையின் மாபெரும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கம் ஒரு தாபனமாக இருந்தது. தனது அங்கத்துவ நாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் போய் இரண்டாம் உலக யுத்தத்தில் உலகை மாட்டுப்பட வைத்தது. இப்போது அதே தவறுகளை இன்றைய ஐ.நா நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்ற உண்மை வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும்.

தற்போது…

எல்லா விக்கட்டுக்களும் விழுந்துவிட்டன. கடாபியின் வெற்றிக்கு இன்னமும் ஒரேயொரு விக்கட்தான் விழ இருக்கிறது, அது பெங்காஸி. எல்லா விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியின் படியில் நிற்கும் ஐ.நாவின் கடைசி விக்கட்டும் அதுதான்.

கடாபிக்கு பயந்து எல்லா துடுப்பாட்டக்காரரும் சிறுநீர் வடித்துக் கொண்டிருக்க இதுவரை போர்க்களத்தில் பந்து வீச்சாளராக இருந்த டென்மார்க் துடுப்பாட்டத்திற்காக களத்தில் வந்துள்ளது.

காலம் கடந்துவிட்டது..

ஆனால்..

டேனிஸ் மக்கள் கட்சியோடு சேர்ந்து சர்வதேச அரங்கில் தனது புகழை இழந்துவந்த டேனிஸ் பிரதமர் மறுபடியும் டென்மார்க்கிற்கு சிறிய தலை நிமிர்வை கொடுத்துள்ளார்.

தொடர்கின்றன அலைகளின் அவதானிப்புக்கள்…

அலைகள் வடக்கு ஆபிரிக்க பிரிவு : 17.03.2011

Comments