ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல்

இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டம் துளிர்விட்டது தொடக்கம் இன்றுவரை மிக முக்கியமான, நேரடியான அனைத்துலக தலையீடுகளை [International Intervention] குறைந்தது மூன்று சக்திகள் மேற்கொண்டிருக்கின்றன.

01. வேவ்வேறு காலகட்டங்களிலான இந்தியாவின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீடு.
02. நோர்வேயை மத்தியஸ்தராக முதன்மைப்படுத்தி பின்னிருந்து செயற்பட்ட மேற்குலகின் வகிபாகம்.
03. நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இடம்பெறும் இலங்கைத் தீவுடன் தொடர்புபட்ட பூகோள அரசியல் நகர்வுகள்.
இதில், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் செயற்பாடுகள் அதிக கவனத்திற்குரியனவாகக் காணப்படுகின்றன.


மேற்கூறிய மூன்று நிகழ்வுகளும், வெவ்வேறு காலப்பகுதிகளில், வெவ்வேறு தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், இவையனைத்திற்கும் இடையில் ஒரு பொதுவான அம்சம் காணப்படுகிறது.

அது யாதெனில், குறித்த நகர்வுகள் ஊடாக பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடத்தில் ஒரு மாயைநிலை தோற்றுவிக்கப்பட்டது. அல்லது, ஈழத்தமிழ்மக்கள் ஒரு மாயைக்குள் அகப்பட்டு அதற்கமைவாக சிந்திக்கவும், வாழவும் தள்ளப்பட்டார்கள்.

மாயைகளை உருவாக்குவதனூடாக ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைப்போராட்டத்தினை அதன் பிரதான இலக்கிலிருந்து திசைதிருப்புவது மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருகிறது.

இது, போரட்டத்தை முன்னெடுப்பதற்கான முட்டுக்கட்டையாகவும், உத்வேகத்தை சிதைப்பதற்கான ஒரு கருவியாகவும் கையாளப்பட்டு வருகிறது.

மாயைநிலைகள், தமிழ்மக்கள் யதார்த்தரீதியாக சிந்திப்பதற்கும், நடைமுறை ரீதியாக செயற்படுவதற்கும் தடைக்கற்களாக விளங்கின. அதுவே, முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னரும் தொடர்கிறது.

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, 'ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல்' என்ற இப்பத்தி கடந்த காலத்தின் மிக முக்கியமான கட்டுடைப்புக்கு உட்படுத்த வேண்டிய மாயைகளையும், சமகால மெய்நிலையையும் வெளிப்படுத்த முனைகிறது.

இந்தியா 1971ல் வங்காள தேசத்தின் விடுதலைக்கு உதவியது போன்று ஈழத்தமிழர்களினதும் சுதந்திரத்திற்கு உதவும் என்று கருத்து 1970களின் ஆரம்பத்திலே தமிழ்மக்களிடம் காணப்பட்டது. இதுவும், தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் வீச்சுபெறுவதற்கான காரணங்களில் ஒன்று.

பின்னர், 1983ல் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியாவின் பல்வேறு வழிகளிலான தலையீடு, இந்தியா ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையை மென்மேலும் அதிகரித்தது.

அந்த நம்பிக்கைகளை வளர்க்கக் கூடிய வகையிலேயே, இந்தியாவின் வெளிப்படையான அணுகுமுறைகள் காணப்பட்டன. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1987ல் இந்தியா இலங்கைத் தீவில் கால்பதித்த போதும் கணிசமான தமிழ்மக்கள் மாற்றமடையாத நம்பிக்கையுடனேயே காத்திருந்தனர்.

காலப்போக்கில், அவை நம்பிக்கைகள் அல்ல, இரகசிய நிகழ்ச்சி நிரல்களுடன் இராஜதந்திரமும், அதற்குள் விழுந்த தமிழ்த் தரப்பினரும் கட்டியெழுப்பிய மாயைகள் என்பது மெதுமெதுவாகத் தெரியவந்தது.

இதுபோன்றதொரு நிலையே, 2002ல் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காணப்பட்டது.


போர்நிறுத்தம் தமிழ் மக்களுக்கு சார்பானதென்றும், நோர்வே தமிழ்மக்களுடைய சுதந்திரத்திற்கு பேருதவி செய்யப்போகிறது என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் பெருமளவில் கட்யெழுப்பப்பட்டன. இதில், சிங்கள அடிப்படைவாதக் கட்சிகளின் பங்கும் கணிசமானது.

தாம் மீளமுடியாத பொறிக்கு சிக்குண்டுள்ளோம் என்பதை புரிந்து கொண்டவர்கள் கூட ஆக்கபூர்வமாக எதனையும் செய்ய முடியாதவர்களாகவே காணப்பட்டனர். தமிழ் மக்களோ, மீண்டும் கனவுக்கும் மாயைக்கும் மீண்டும் பலியானார்கள். விளைவு, பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்டார்கள் மற்றும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டார்கள்.

இருப்பினும், இப்போதும் நாம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிலும் பார்க்க, மாயைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனுமே காத்திருக்கிறோம்.

பூகோள அரசியல்போக்கில் மிக முக்கியமான விடயமாக இராஜந்திர நகர்வுகள் காணப்படுகிறன.

இராஜதந்திரம் குறித்த நாடுகளின் தேசிய நலனைப் மையப்படுத்தியே கையாளப்படும். அதற்கு சார்பான காரணிகளை இராஜந்திரம் மிககெட்டித்தனமான அடையாளம் கண்டு தேடிப்பெற்றுக்கொள்ளும். தேடிப்பெற்றுக்கொண்ட காரணிகளை தமது அடைவிலக்குகளுக்கான கருவிகளாகவும், காரணிகளாகவும் மிகச்சாதுரியமாக இராஜதந்திரம் பயன்படுத்தும்.

அரசியலின் ஆணிவேர்களில் ஒன்றாக இராஜதந்திரம் திகழ்கிறது.

சமகால அனைத்துலக அரசியல் என்பது, பொருளாதார நலனை அடிப்படையாக வைத்தே நகர்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லையென்பது எமது மூதாதையர்களால் எமக்கு சொல்லப்பட்ட கூற்று. இன்றைய அனைத்துலக அரசியல் அதற்கு நல்ல உதாரணம்.

இதனை நடைமுறையோடு இணைத்துப் பார்ப்பது காலத்திற்கு பொருத்தமாவதுடன், தமிழ் சமூகத்துக்கு தேவையாகவுள்ள கருத்தாடல் களத்துக்கு வழியமைத்து மாயைகளை களைய வழியமைக்க வேண்டும் என்பது இப்பத்தியின் நோக்கு.

ஈழப்போர் நான்கு சிறீலங்காவிற்கு சாதகமான முறையில் நிறைவடைவதற்கு பல நாடுகள் பல்வேறு வழிவகைகளில் உதவி புரிந்தன என்பது மெல்ல மெல்ல வெள்ளிடை மலையாகின்றது.

அதேவேளை, சிறீலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களும் தொடர்ச்சியாக இறுகி வருகின்றன. இதற்கான காரணங்களாக இலங்கைத் தீவில் அதிகரித்தவரும் சீனாவின் மேலாண்மையே காரணம் என்று பரவாலாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் மேலாண்மையை இந்தியாவும், அமெரிக்காவும் விரும்பவில்லையென்றும், ஆதலாலேயே சிறீலங்காவிற்கு எதிரான அனைத்துலக நெருக்கடிகள் அதிகரிக்கின்றன என்று வாதத்திற்கு வலுச் சேர்க்கும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தீவில் அதிகரித்தவரும் சீனாவின் மேலாண்மை என்பது பலகாரணிகளில் ஒன்றாக இருக்கலாமே தவிர, அது ஒரு பிரதான காரணியாக இன்றுவரை வளர்ச்சியடைவில்லை என்பதே நிகழ்கால மெய்நிலை.

சீனாவுடன், அமெரிக்காவும் இந்தியாவும் மிக இறுக்கமான பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. தமது மண்ணில் சீனா ஆழமாக காலூன்றுவதற்கு தாமே வழியமைத்துக் கொடுக்கும் அமெரிக்காவும் இந்தியாவும், சீனா இலங்கைத் தீவில் காலுன்றுவதை தமக்கான பெரும் அச்சுறுத்தால கணிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு.

சீனா மிகப்பெரும் சக்தியாக வளந்து வருகிறது என்பதுவும், இது ஏனைய சக்திமிக்க தரப்புகளுக்கு நல்ல செய்தியில்லை என்பதுவும் உண்மை. ஆனால், அதன் காரணமாக எந்தக் கட்டத்திலும் சீனாவுடன் ஒரு போருக்கோ அல்லது ஆழமான முரண்பாடுகளை உருவாக்கும் நிலைக்கோ அமெரிக்காவே, இந்தியாவோ வித்திடப்போவதில்லை.

கடந்த காலங்களைவிட, அண்மைய ஆண்டுகளிலேயே சீனாவுடனான இருதரப்பு வர்த்தக உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், மும்முரமான வாணிபங்களிலும் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுவருகின்றன.அரசியலிலும் பார்க்க, பொருளாதார நலன்களே அனைத்துலக உறவுகளை வடிவமைக்கின்றன.

அவற்றிற்கான உதாரணமாக, இந்தியா உள்விவகார அமைச்சு தகவல்களின் படி, 2006-2007 வரை இந்தியாவில் 900 ஆக காணப்பட்ட சீனா தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2010 ஜீனில் 7000 தை தாண்டிவிட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு, விமான மற்றும் துறைமுகப் போக்குவரத்து தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கியமான துறைகளிலுமே சீனாவின் தொழிலாளர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மின்வலு, மின்சக்தி எரிபொருள், தொலைத்தொடர்பு உட்பட்ட முக்கியமான துறைகளும் இதற்குள் உள்ளடக்கம்.

2006ல் 16 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம், 2010ன் இறுதிக் காலப்பகுதியில், 42 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிவிட்டது. இதில், 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதியையும், 11.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதியையும் சீனாவுடன் இந்தியா மேற்கொள்கிறது.

பொருளாதார ஒத்துழைப்பின் நன்மைகருதி, அதன் தாக்கம் உணர்ந்து, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் சுமார் 11000 சீனதுருப்பினர் நிலைகொண்டுள்ளனர் என்ற மிகுந்நத சர்ச்சைக்குரிய செய்தியை சீனாவின் வெளிவிவகாரத்துறை பேச்சாளர் ஜியாங் யூ மறுத்துள்ளார்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள் திரிவுபடுத்தி வெளியிடும் கருத்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை இந்தியத் தரப்பினரும் மறுக்கவில்லை. மாறாக, சுயாதீனமான முறையில் அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளன.

இவையனைத்தையும் விஞ்சுமாற் போலவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக மற்றும் வாணிப உறவுகள் வளர்ச்சியடைந்து செல்கின்றன.

இவையனைத்தும் சில சிறு உதாரணங்கள் மட்டுமே.

ஆகவே, இலங்கைத் தீவில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாண்மை காரணமாக ஏனைய சர்வதேச சக்திகள் தமிழ்மக்களுக்கு ஆதரவாக மாறும் அல்லது செயற்படும் என்று மீண்டும் ஒரு மாயைக்குள் விழாமல், காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ற வகையில், பூகோள அரசியலின் போக்குக்கு அமைவாக, நீண்டகாலத்திற்கு அமைவான திட்டங்களைத் தீட்டி, அதற்கு வடிவம்கொடுத்து எமக்கான உரிமையையும், இறைமையையும் மீளப் பெற்றுக் கொள்ளவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ்மக்கள் ஈடுபடுவதே இன்றைய காலத்தின் தேவையும், கட்டாயமும் ஆகும்.

இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், நிலையான தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.

நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை இது.

போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல. போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும். களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் போக்குநிலையும் அது தரிக்க வேண்டிய ஆயுதமும் நிர்ணயிக்கப்படும்.

போரடினால்தான் தமது இருப்பு உறுதிசெய்யப்படும் என முடிவெடுத்து, அதற்கு வடிவம் கொடுத்து, அதனை செயல்படுத்திய இனங்களே தமக்கான சுதந்திரத்தை அடைந்தது என்பது வராலாற்று மெய்நிலை.

இருப்பின் அடையாளம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் ஊடாகவே முழுமையடைகிறது. ஆகவே, இருப்பு முழுமையடைய வேண்டுமானால், உரிமைக்கான போராட்டம் தளர்வின்றி தொடரவேண்டும். இந்தத் தொடர்ச்சிக்கான பயணத்தில், தாயக நிலைமைகள், சிறிலங்காவின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமகள், புலம்பெயர் நாட்டு நிலமைகள் மற்றும் பூகோள அரசியல் நிலைமைகளை சரிவர கணிப்பீடு செய்து போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும்.

இதற்கான முதற்கட்டமாக பின்வரும் நான்கு விடயங்களில் புலம்பெயர் தமிழர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

01. தாயகம்தான் போரட்டத்தின் அடிநாதம். இன்னும் அழுத்திக் கூறுவதானால், இணைந்த வடக்கு, கிழக்குத்தான் ஈழத் தமிழர் அரசியலின் ஆணிவேர். தமிழ்தேசியப் போராட்டத்தின் அடுத்தகட்டம் புதியவீச்சுடன் தொடரவேண்டுமானால், தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதரங்களும், அடிப்படைத் தேவைகளும் நிறைவுசெய்யப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்வு நிலை வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்கான செயற்பாடுகளை புலம்பெயர் சமூகம் விரிவுபடுத்தவும், விரைவுபடுத்தவும் வேண்டும்.

02. தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளுடனான உறவை பலப்படுத்த வேண்டும். மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக புதிதாக தோன்றிவரும் சூழலையும், அதிருப்தியாளர்களையும் இனம் கண்டு அதனை சரிவரப் கையாள வேண்டும். அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை. செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கொள்கைப் பற்றுடனும், அர்ப்பணிப்புணர்வுடனும், இலக்கில் உறுதியாகவும் இருந்தால் யாருடனும், எங்கும் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

பொருளாதார ரீதியான பிரச்சினைகளால் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பின்பு அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக தென்னிலங்கை மக்கள் மாற்றம் பெற்றிருக்கிறார்கள். இது அவர்களிடத்தில் அதிருப்தி அலைகளை மேலோங்கச் செய்கிறது. அதேவேளை, பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவத்தினரும், ஜே.வி.பிக்கு ஆதரவாக உள்ள முப்படையைச் சார்ந்தோரும் ஒரு இணைப்புப் பாலத்தை உருவாக்கி, சிங்கள இளைஞர்களை அணிதிரட்டி மகிந்த ஆட்சிக்கு எதிராக போராடத் திட்டமிட்டுள்ளார்கள் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இது போன்ற செயற்பாடுகளை ஈழத்தமிழர்களின் அரசியற் போராட்டத்துக்கு சாதகமாக கையாள்வது என்பது தொடர்பாக தற்போதே திட்டமிடல்கள் மேற்கொள்ள வேண்டும். ஓரு போராட்டம் வெடித்தபின் திட்டமிட்டு காய்களை நகர்த்துவதென்பது ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையாது. இத்தகைய போராட்டம் எப்போதும் வெடிக்கலாம். ஆனால், அது வெடித்தால் அதனை எவ்வாறு ஈழத்தமிழர் அரசியலுக்கு ஆதரவாக பயன்படுத்துவதென்பதற்கான திட்டம் இப்போதே தமிழர்களால் தீட்டப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை சக்திவாய்ந்த நாடுகளின் வெளிவிவகார திணைக்களங்களும், அனைத்துலக உளவு நிறுவனங்களும் ஈடுபட்டுவருவது வழக்கமான ஒரு விடயம்.

அதேவேளை, தமது 'புரட்சியில்' தமிழ் இளைஞர்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற நோக்கோடு, ஜே.வி.பி தமது செயற்பாடுகளை வடக்கில் முடுக்கிவிட்டுள்ளது. அதற்கான எதிர்வினைகளே, கோத்தாபயவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் 'இரகசியப்' படையணியால் ஜே.வி.பிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளாகும்.

ஜே.வி.யின் தந்திரத்துக்குள் தமிழ் இளைஞர்கள் சிக்காமல், அவர்களுடைய செயற்பாடுகளை ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்துக்கு சார்பாக எவ்வாறு கையாளலாம் என்ற தந்திரத்துடன் தமிழ்ச் சமூகம் செயற்பட வேண்டும். ஜே.வி.பி ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு தமது தார்மீக ஆதரவை இன்றுவரை வழங்காத அதேவேளை, முட்டுக் கட்டையாக இருந்து வந்துள்ளது என்பதை கவனத்திற்கொள்க.

03. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் போரடிக்கொண்டிருக்கும் தமிழர்கள், மகிந்த ஆட்சிபீடம் உச்சவளங்களுடன் செயற்படுவதால் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது உண்மையே. ஆனால், மகிந்தவின் ஆட்சிக்கு அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் கொடுக்கும் முக்கிய சக்தியாக புலம்பெயர் தமிழர்களே உருவெடுத்துள்ளார்கள் என்பது இன்றைய களயதார்த்தம்.

ஆதலாலேயே, புலம்பெயர் தமிழர்களின் கட்டமைப்புகளை சிதைப்பதற்காக வெவ்வேறு தரப்புகளையும், பல்வேறு களங்களையும் பெரும் ஆளணி மற்றும் நிதிச்செலவுகளோடு மகிந்த கூட்டணி களத்தில் இறக்கியுள்ளது. இவர்கள், வெவ்வேறு வேடங்களோடு வெளிக்கிளம்பியுள்ளார்கள். இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் பகுத்தறிந்து செயற்பட வேண்டும். அதேவேளை, தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு மறைமுக கட்டமைப்புகள் ஊடாக ஆற்றிவரும் உதவிகள் தேவையின் நிமிர்த்தம் மேம்படுத்தப்படவேண்டும். அங்கு வாழும் உறவுகளுக்கு கைகொடுத்து அவர்களை பலப்படுத்த வேண்டிய தலையாய கடமை புலம்பெயர் தமிழர்களுடையது.

அத்துடன், போர்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் போன்ற மகிந்த அரசிற்கு நெருக்கடிகளையும், ஈழத்தமிழர்களுக்கு நீதியையும் பெற்றுத்தரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக செயற்படுகின்ற அதேவேளை, ஈழத்தமிழர்களின் அரசியற் போராட்டத்தின் இலக்கினை அடையும் முகமாக அனைத்துலக சக்திகளுடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் புலம்பெயர் தமிழர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இராஜதந்திரிகளுடனான உறவுகள், இதில் தனிநபர் உறவுகள் கூடுதலான சந்தர்ப்பங்களில் சக்திவாய்ந்தது. பொஸ்னியா மற்றும் கம்போடிய ஆகிய நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இடம்பெற்ற நீதிதேடும் முயற்சிகளில், தனிநபர் உறவுகள் எத்தகைய தாக்கத்தினை செலுத்தின என்பது சிறந்த உதாரணங்கள் ஆகும்.

சிறிலங்கா அடைந்த மிகப்பெரிய வெளியக இராஜதந்திர வெற்றிகளின் பின்னணியில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பங்களிப்பே முதன்மையானது. இது, லக்ஸ்மன் கதிர்காமர் வளர்த்துப் பராமரித்த தனிப்பட்ட உறவுகளாலேயே சாத்தியப்பட்டது. இதையொத்த பாணியையே தற்போது பிரான்சுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தயான் ஜயதிலக்க இராஜதந்திர அந்தஸ்து பெற்றது முதல் பின்பற்றி வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இதுபோன்ற உதாரணம் பொருந்தும். ஆனால், ஓரு நாட்டுடனும், ஒரு சில இராஜதந்திரிகளுடனும் மட்டுமன்றி இது பரவலாக விரிவு படுத்தப்பட வேண்டும்.

04. அனைத்துலக அளவில் இடம்பெற்று வரும் அனைத்து வகைப்பட்ட நகர்வுகளையும், செயற்பாடுகளையும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புகள் உன்னிப்பாக அவதானித்து, அதிலிருந்து ஈழத்தமிழர் போராட்டத்திற்கான விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுடனும், அங்குள்ள குடியியல் அமைப்புகளுடனும், ஊடகங்களுடனும் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உறவுகள் இன்று உதவாவிட்டாலும், என்றைக்கோ ஒரு நாள் அவை நிச்சயம் உதவும். அத்துடன், குறிப்பிட்ட நாடுகளில் இடம்பெறும் முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் அலசி ஆராய்ந்து பதிவு செய்யப்பட வேண்டும்.

மீண்டும் கூறுகிறேன், இவ்வாறான செயற்பாடுகளை சக்திவாய்ந்த நாடுகளின் வெளிவிவகார திணைக்களங்களும், அனைத்துலக உளவு நிறுவனங்களும் ஈடுபட்டுவருவது வழக்கமான ஒரு விடயம். அதன்காரணமாகவே, திடீரென நிகழும் ஆட்சிமாற்றங்களுக்கு ஏற்றாற் போல் சக்திமிக்க நாடுகள் உடனடியாகவே தம்மை தயார்படுத்திக் கொள்கின்றன. இவை, எல்லாக் கட்டத்திலும் முற்றுமுழுதாக வெளித் தெரிவதில்லை. சிலவேளைகளில், முன்னர் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, தமக்கு ஏற்றாற் போன்ற போராட்டங்களை தோன்றுவதற்கு சக்திமிக்க நாடுகள் தூபமிடுகின்றன.

உதாரணமாக, 2010 ஜனவரியில் சிறிலங்காவில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில், மகிந்த அதிபரானால் தாம் என்ன செய்ய வேண்டும், சரத் பொன்சேகா அதிபரானால் என்ன செய்ய வேண்டும் என்ற இருவகைத் திட்டங்களையும் சக்திமிக்க நாடுகள் சில மாதங்களுக்கு முன்னரே தீட்டியிருந்தன. அதேவேளை, தமக்கு சார்பானவர் ஆட்சிபீடம் ஏற வேண்டும் என்பதற்கான பின்னணி பணிகளையும் குறித்த நாடுகள் சம நேரத்தில் முன்னெடுத்திருந்தன.

ஆகவே, இது போன்ற காரணிகளை கவனத்திற்கொண்டு தமிழ் அமைப்புகள் செயற்திட்டங்களை வகுக்க வேண்டும். தென்சூடானின் சுதந்திரம் மட்டுமல்ல, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்ங்களும் தமிழ் மக்களுக்கு படிப்பினைகளே.

ஆதலால், தமிழ் அமைப்புகள் தமது செயற்பாட்டுத் தளங்களை விரிவுபடுத்த வேண்டும். எல்லாவகையான நாடுகளுடனும் அல்லது ஆகக்குறைந்தது அங்குள்ள சிவில் அமைப்புகள், ஊடாகங்களுடனாவது தொடர்புகளை பேணிப், பராமரிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்ட அல்லது ஆதரவாக செயற்படாத நாடுகளுடனும் இத்தகைய உறவுகள் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், குறித்த நாடுகளின் ஆதரவும், எதிர்ப்பும் அந்தந்த நாடுகளின் தேசிய நலனில் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன. இந்த ஆதரவும், எதிர்ப்பும் அனைத்துலக உறவுகளிலே சாதாரண விடயங்களே.

இதற்கான அனைத்துலக அளவிலான சிறந்த உதாரணங்களை அடுத்த தொடரிலே அலசுவேன்.


*ஊடகவியலாளரான நிர்மானுசன் பாலசுந்தரம் அனைத்துலக அளவிலான மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன், சமாதானம் மற்றும் மோதுகை மாற்றுநிலையாக்கம் தொடர்பான துறைகளிலான ஆய்வாளரும் ஆவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: bnirmanusan@gmail.com

Comments