சிறிலங்காவின் அனைத்து சமூகங்களுடனான இன நல்லிணக்க முனைப்புகள் அவசியமானது

பெப்பிரவரி 23ம் நாளன்று சிறிலங்காவினது சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் தலைமையிலான வெளிவிவகாரச் செயலர் றொமேஸ் ஜெயசிங்க, தூதுவர் பாலித கோகன்ன,தற்போது ஐ.நாவிற்கான எங்களது பிரதி நிரந்தரப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ முனை அவரது செயலகத்தில் சந்தித்து உரையாடியிருந்தது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoek-vHj5YW5JB3LMGFwnyMQGv3BeSvyUjQ6sWxi0kPqe97PGXjmKQWyrYBC0mTT1zjkNqzOtrT32VqObA4IFvWI7d9gTh-mJDLZKM5AqUZ_DEGCDPJbAE1LgQt_CeNVu5RLFwXnGLkK4/s1600/manidhaneyam.jpg
தனது பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா ஊடாக ஆரம்பத்தில் இந்தச் சந்திப்பினை சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்தபோதும், சந்திப்புத் தொடர்பான செய்திகள் ஒளிப்படத்துடன் அனைத்துலக ஊடகங்களில் வெளிவந்தநிலையில் வேறு வழியின்றி சந்திப்பு நடந்ததை ஏற்றுக்கொண்டது.

அதிகரிக்கும் அனைத்துலக அழுத்தம்

வேறுபட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும் ஒரு சூழமைவில் ஐ.நா செயலாளர் நாயகத்துடனான சட்டமா அதிபர் மோகன் பீரிசினது இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கான பொறுப்புச்சொல்லும் நடைமுறை தொடர்பாக ஐ.நா அமைத்த வல்லுநர்கள் குழு தனது பணியினை முன்னெடுப்பதற்கு வழங்கப்பட்டிருந்த நீடிக்கப்பட்ட காலக்கெடு பெப்பிரவரியுடன் முடிவுக்கு வந்து விட்டது. இன்னமும் ஒரு சில நாட்களுக்குள் அவர்களது இறுதி அறிக்கை
சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழமைவில் ஐ.நாவிற்கு ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை கொடுக்கப்படுவது ஆபத்துக்குரியதொரு விடயமாகலாம். இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றின் துணையுடன் வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதை சிறிலங்கா நிறுத்தமுடியும். இருப்பினும், வல்லுநர்கள் குழுவினது அறிக்கையின் அடிப்படையில் ஐ.நாவினது மனித உரிமை ஆணையாளர் மற்றும் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைச் சபை என்பன சிறிலங்கா தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக உள்நாட்டில் கைக்கொள்ளப்படும் நடைமுறைகள் அனைத்துலக தரத்திற்கு இல்லையேல் இது தொடர்பான அனைத்துலக விசாரணையினை முன்னெடுக்க முடியும் என தென் மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் கடந்த மார்ச் 01ம் நாள் குறிப்பிட்டிருக்கிறார். இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்களுக்கான பொறுப்புச்சொல்லும் முறைமை ஒன்றை ஏற்படுத்துவதற்கு ஐ.நாவும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து செயற்படுகின்றன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு

பொறுப்புச்சொல்லும் முறைமைக்கான தனது உள்நாட்டுக் கட்டமைப்பாக சிறிலங்கா கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை உருவாக்கியிருந்தது. அனைத்துலக ரீதியில் எழும் கண்டனங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் சிறிலங்கா தான் அமைத்திருக்கும் இந்த ஆணைக்குழுவினது இறுதி அறிக்கையினை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றவேண்டிய கட்டாய பொறுப்பு அதற்கு உண்டு.

தங்களது பிள்ளைகள் மற்றும் துணைவர்கள் தங்களது கண்முன்னால் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதற்குப் பின்னர் அவர்கள் தொடர்பான எந்தத் தகவலுமில்லை எனக்கூறி பல தமிழ்ப் பெண்கள் கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கான அமர்வுகளின் போது சாட்சியமளித்திருக்கிறார்கள். போருக்குப் பின்னான மீள்கட்டுமான மற்றும் இன நல்லிணக்கச் செயற்பாடுகள் திருப்திதரும் வகையில் இடம்பெறவில்லை என இந்த ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அண்மையில் நாடாளுமன்றில் சுவாரசியமான விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது. மீள்குடியேற்றப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென இந்தியா நன்கொடையாக வழங்கிய 500 உழவு இயந்திரங்களில் வெறும் 100 உழவு இயந்திரங்களை மாத்திரம் தங்களது வாழ்வாதாரத்தினை மீளக்கட்டியெழுப்பும் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் பதிலாக 100 உழவு இயந்திரங்கள் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்கும் இன்னொரு 100 உழவு இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தது. கூட்டமைப்பின் இந்தக் கூற்றினை அரசாங்கம் மறுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விவாதம் ஹன்சாட்டில் கூடப் பதியப்பட்டுவிட்டது.

இந்தியாவிலும் சீனாவிலும் தொடர்ந்தும் தங்கியிருக்கும் சிறிலங்கா

ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்கா தொடர்பான தங்களது போக்கினைப் படிப்படியாக கடுமையாக்கிவரும் இந்த நிலையில், அனைத்துலக ரீதியில் தனக்குத் தோள் கொடுப்பதற்கான சிறிலங்கா இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அதிகம் சாய்கிறது.

இந்தியாவினைப் பொறுத்தவரையில் சிறிலங்காவில் அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்களையும் ஐக்கியப்படுத்தும் வகையிலான இன நல்லிணக்க முனைப்புக்கள் இடம்பெறுவது அவசியமானது என்கிறது. இந்த நிலையில் இலங்கையர்களான எங்களைப் பொறுத்தவரையில் நாட்டினது நலனுக்காக ஆட்சியாளர்கள் தங்களது போக்கினை மாற்றிச் செயற்படுவது அவசியமானது.

[இந்தப் பத்தியின் எழுத்தாளர் 2001 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில் சிறிலங்காவினது அதிபரின் பேச்சாளராக இருந்தவர்]

* THURSDAY, 03 MARCH 2011 Daily Mirror ல் வெளிவந்த இந்த ஆக்கத்தை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Comments