சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை தமிழர்களின் காலை வாரிய கனடா ஆளும்கட்சி?

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான அனைத்துலக விசாரணை அவசியம் என்ற முன்மொழிவொன்று கனேடிய நாடாளுமன்றத்தில் சகல கட்சிகளின் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையில் கனேடிய ஆளும் கட்சி காலை வாரிவிட்டதாக கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

புதிய ஜனநாயகக்கட்சி எனப்படும் கட்சி தமிழர்களின் விவகாரங்களில் மிகுந்த அக்கறையுள்ளதொரு கட்சியாகும். இக் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைகளிற்கான பொறுப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் யூலியன் இந்த முன்மொழிவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான வழிமூலங்களைச் செய்தார்.

இவ்வாறான தனிநபர் முன்மொழிவு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அது நாடாளுமன்றில் உள்ள சகல கட்சிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெறும் பட்சத்திலே அது சாத்தியப்படும் என்ற வரையறை உண்டு.

அதன் பிரகாரம் நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சிகளான லிபரல்கட்சி, புளக் கியூபெக்குவா கட்சி, மற்றும் இரண்டு சுயேட்சை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற புதிய ஜனநாயகக் கட்சி ஆளும் கட்சியின் ஆதரவை நாடியிருந்தது.

ஆளும் கண்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பற்றிக் பிரவுன் தனது பரிபூரண ஆதரவை இதற்கு வழங்கியதுடன், கட்சியிடமும் இது தொடர்பாக அனுமதியை நாடியிருந்தார். கட்சியும் பரிபூரண சம்மதத்தை தந்ததாகவும், வெளிவிவகார அமைச்சும் இந்த முன்மொழிவுக்கு சாதகமான சமிஞ்சை காட்டியதாகவும் பற்றிக் பிரவுன் புதிய ஜனநாயகக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் யூலியனிற்குத் தெரிவித்திருந்தார்.

இதன் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக இந்தப் முன்மொழிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் யூலியன் தெரிவித்த போது கொண்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற அவைத் தலைவரான ஜோன் பயர்ட் தமது கட்சி இதற்கு ஆதரவல்ல எனக் கூறி இந்த முன்மொழிவை தோல்வியுறச்செய்தார்.

தமிழர்களின் ஆதரவுச் சக்தி போலச் செயற்படும் மேற்படி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற அவைத்தலைவரே இவ்வாறு செயற்பட்டது இந்தக் கொண்சவேட்டிவ் அரசின் நேர்மைத் தன்மையினையும் அது தமிழ் மக்களின் விவகாரங்களில் போலியாகவே செயற்படுகிறது என்பதையும் காட்டி நின்றது என கனடியத் தமிழ்க் காங்கிரஸின் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

Comments