திரு. ருத்திரகுமாரன் அவர்களுக்கு ஊனப்பட்ட போராளி ஈழவேங்கையின் கண்ணீர்க் கடிதம்!


ஐயா!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையப் பெற்றதும், அதில் தாங்கள் பிரதமராக அறிவிக்கப்பட்டதும் தோற்றுப்போன இனமாகத் துவண்டு போயிருந்த தமிழீழ மக்களான எமக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. புலம்பெயர் தமிழர்களது ஒன்றிணைந்த பலத்தினூடாக நாங்கள் மீண்டும் எழுந்துவிடுவோம் என்ற பேருவகையில் திளைத்து நின்றோம்.

ஆனால், தற்போது அங்கு நிகழும் அத்தனை சம்பவங்களும் எங்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன. புலம்பெயர் நாடுகளில் என்னதான் நடக்கின்றது? நாங்களும், எங்கள் சொந்தங்களும் நாளைய பொழுதை நிச்சயமற்றதாக எதிர்கொள்ளும் நிலையில், எங்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலம்பெயர் தமிழர்கள் குறித்து வரும் செய்திகள் எரிந்துபோன எங்கள் உள்ளங்களிலும் குருதியை வடிக்க வைக்கின்றது.

விடுதலைப் புலிகள் வெடித்துச் சிதறிய போதும், கள முனைகளில் தோல்வியைத் தழுவிய போதும், நாங்கள் விடுதலைப் போரில் தோத்ததாக முடிவு செய்துவிடவில்லை. ஏனென்றால், எங்கள் தலைவரைப் போலவே, நாங்களும் புலம் பெயர்ந்த மக்கள் எமக்காகப் போராடுவார்கள், எங்கள் தேசியத் தலைவரின் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அத்தனை கொடூரங்களையும் தாங்கியவாறு உயிர் தப்ப விரும்பினோம். இப்போது, நீங்கள் புரியும் பதவி யுத்தத்தைப் பார்க்கும்போது நாங்கள் ஏன் உயிர் பிழைத்தோம்? என்ற அருவெறுப்பில் அமிழ்ந்து போயுள்ளோம்.

அங்கு என்னதான் நடக்கின்றது? எங்களையும், எங்கள் நாட்டையும் மீட்கப் போராட வேண்டிய நீங்கள் உங்களுக்குள் யுத்தம் புரிகின்றீர்கள்? இங்கே, சிங்களம் எங்களை அடக்கினாலும் நாளை புலிகள் மீண்டும் எழுவார்கள். எம்மை விடுவிப்பார்கள் என்று கனவு காணாத, கனவு அல்ல நம்பிக்கை கொள்ளாத தமிழனே இங்கு இல்லை. எங்கள் மீட்பர்கள் என்றாவது கடல் வழியாகவும், ஆகாய வழியாகவும் தரை இறங்குவார்கள். எங்களை சிங்கள எதிரிகளிடமிருந்து மீட்பார்கள் என்றுதானே நாங்கள் ஒவ்வொருவரும் நம்பியிருக்கின்றோம். எங்கள் கனவுகளைக் கலைத்துவிடாதீர்கள்.

முள்ளிவாய்க்கால் வரை எங்களை நகர வைத்த எதிரி எங்கள் மக்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவித்தபோதும் நாங்கள் தோற்றுப் போனதாக உணரவில்லை. ஆனால், இப்போது புலம்பெயர் தேசங்களில் நீங்கள் தொடர்ந்துவரும், சகோதர யுத்தத்தால் உங்கள்மீதான நம்பிக்கையை இழந்து, சிங்கள அரசிடம் சரணாகதி வாழ்வையாவது தொடரலாமோ? என்ற அங்கலாய்ப்பில் ஆழ்ந்து போயுள்ளோம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் எங்கள் உறவுகள் ஜனநாயகக் கட்டமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியபோது அது எங்களை மீட்டெடுக்கும் ஒரு புதிய ஜனநாயக வியூகமாகவே நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால், அது தற்போது எந்தத் திசையில் பயணிக்கின்றது என்பது புரியாமல் குழம்பிப் போயுள்ளோம். திரு. ருத்திரகுமாரன் அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்றே நம்பிக்கை கொண்டிருந்தோம். அந்த நம்பிக்கை எல்லாம் கானல் நீராகக் காணாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தினுள் ஆழ்ந்துபோயுள்ளோம்.

விடுதலைப் புலிகளின் வீரமும், தியாகமுமே இந்தப் புதிய ஜனநாயக தளத்தினைப் பிறப்பித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களாக விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீது முரண்பாடு கொள்வதற்கு திரு. ருத்திரகுமாரனுக்கு என்ன நிகழ்ந்தது? தமிழீழ விடுதலைக்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர் தேசங்கள் எல்லாம் மக்களுடன் இணைந்து களப்பணி ஆற்றிய விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களுடன் போர் தொடுக்கும் நிர்ப்பந்தம் எப்படி உருவானது. எதிரிகள் நண்பர்களாகவும், நண்பர்கள் எதிரிகளாகவும் அணிமாறி அரசியல் செய்யும் வித்தையை யார் கற்றுக்கொடுத்தது?

தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை நிராகரிக்கவும், தமிழ்த் தேசிய களத்தில் பூனைகளாக மதில்மேல் நின்றவர்களை ஏற்றுக் கொள்ளவுமான தமிழகத்து அரசியல்பாணி திரு. ருத்திரகுமாரன் அவர்களிடம் ஒட்டிக்கொண்டது எப்படி? நேற்றும், இன்றும், நாளையும் என்று காலங்களில் மாற்றமின்றித் தமிழீழத் தாகத்தோடு களத்தில் நிற்கும் அண்ணையின் அணியினரை அங்கீகரிக்க மறுக்கும் சின்னத்தனம் எப்படி நெஞ்சில் புகுந்தது?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளாகள் எதனைத் தடுக்க முற்பட்டார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எந்தச் செயற்பாட்டுக்கு தடைக்கல் போட்டார்கள்? நேர்மையாக, ஜனநாயக முறைமையில் தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் தடம் புரளாமல் செல்வதற்கான வேண்டுகோள்களை மட்டும்தானே விண்ணப்பமாக திரு. ருத்திரகுமாரனுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த பத்துக் கோரிக்கைகளுக்கும் பதிலளிப்பதற்கான நேர்மை திரு. ருத்திரகுமாரனுக்கு எப்படி இல்லாமல் போனது. அவையில் அங்கீகரிக்கப்படாத நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்புமீது பதவிப்பிரமாணம் செய்யக் கோருவது கடைந்தெடுத்த ஜனநாயக அயோக்கியத்தனம் என்பது திரு. ருத்திரகுமாரனுக்கு எப்படிப் புரியாமல் போனது?

தமிழீழ விடுதலைக்காக எங்கள் தோழர்களும், தளபதிகளும், மக்களும் செலுத்திய விலையை வீணாக்கி விடாதீர்கள். எங்கள் தேசியத் தலைவரின் மாறாத இலட்சியத்தை மலினப்படுத்திவிடாதீர்கள். இறுதிக் கணத்திலும் இலட்சியத்திற்காக வெடித்துச் சிதறிய கரும்புலிகளின் உயர்ந்த அர்ப்பணிப்புக்களை அநியாயம் ஆக்கிவிடாதீர்கள். விடுதலைப் புலிகளின் இலட்சிய நெருப்பை மனதில் கொண்டுள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும், தமிழ்த் தேசிய தளங்களையும் நிராகரித்து வரலாற்றுத் தவறைப் பதிபு செய்யாமல், அனைவரையும் அரவணைத்து நேர்மையாகவும், நீதியாகவும், உண்மையான ஜனநாயகத்தினூடாகவும் தமிழீழ விடுதலைக் களத்தை முன்நகர்த்திச் செல்லும்படி திரு. ருத்திரகுமாரன் அவர்களிடம் தமிழீழ மக்கள் சார்பாகவும், தமிழீழ விடுதலைக்காக இறுதிப் போரின்போது சாகா வரம் பெற்ற என்போன்ற ஊனப்பட்ட போராளிகள் சார்பாகவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மாறாத தமிழீழ தாகத்துடன்
தலைவர் பாதையில் களமாடத் தயாராக உள்ள
ஊனப்பட்ட போராளி
ஈழவேங்கை

Comments