பிரதமர் ருத்திராவின் அறிக்கையும் அதனால் ஏற்படவிருக்கும் (பின்) விளைவுகளும்.

நாடு கடந்த அரசில் யாப்பை ஏற்றுக்கொண்டு அதன் மீது சத்தியப்பிரமானம் எடுத்த உறுப்பினர்கள் ஒரு பகுதியாகவும், அதனை ஏற்றுக்கொள்ளாமல் யாப்பில் திருத்தம் வேண்டும் அதன் பின்னரே அதனை ஏற்றுகொள்ள முடியும் என ஒரு அணியுமாக இரு அணியினர் உள்ளனர். அவர்கள் தம்மை ஜனநாயக அணி என அடையாளம் காட்டியுள்ளனர். இந் நிலையில் இவர்களுக்கு இடையே உள்ள பிணக்குகளைத் தீர்த்து அவர்களை ஒற்றுமையாக்க சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பல இன்னல்களுக்கு மத்தியில் முன்வந்தது. அதனை 2 அணியினரும் வரவேற்றனர். சுமார் 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கணிசமான அளவு விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.

சத்தியப்பிரமானம் எடுக்காத உறுப்பினர்கள், பதவி இழப்பார்கள் என சபாநாயர் அறிவித்த திகதியையும் அவர் தள்ளிப் போட்டார். இதனால் ஏற்பட்ட சாதகமான சூழ் நிலையால், இப் பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்றதோடு, பரஸ்பரம் இரு அணிகளுக்கும் இடையே ஒரு நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும் உதவியது. நா.க அரசின் சபாநாயகரால் 2ம் முறையாக நீடிக்கப்பட்ட கால எல்லை நாளையோடு முடிவடைய இருக்கிறது. இருப்பினும் இவ்விரு அணிகளும் தமக்காகப் பேச ஐவர் அடங்கிய குழுவை நியமிக்க ஒத்துக் கொண்டனர். 33 பேர் சார்பாக பேசவல்ல ஐவரும், மற்றும் 68 பேர் சார்பாக பேசவல்ல ஐவரும் ஊடகவியலாளர் முன்னர் அமர்ந்து தமது பிரச்சனைகளைப் பேசி முடிப்பது குறித்து இறுதிக்கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுத்தனர் என்பதும் மக்கள் அறியவேண்டிய விடையமாகும் !

வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைப்பதுபோல தற்போது பிரதமர் திரு ருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கை தென்படுகிறது. அதாவது சமாதானம் பேசும் தரப்புக்கு கால எல்லை வழங்காது, மற்றும் பேசித் தீர்வுகாணப்படவேண்டிய விடையங்களை அவர் நிராகரித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நீக்கவுள்ளார் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியும் உள்ளது. நா.க அரசின் யாப்பில் சில பிழைகள் இருக்கிறது அதனைத் திருத்தினால் அதன் மீது சத்தியப்பிரமானம் எடுக்கலாம் என 33 பேர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சபாநாயகர் தொடக்கம் பிரதமர்வரை, முதலில் சத்தியப்பிரமானத்தை எடுங்கள் பின்னர் அதனைத் திருத்தலாம் என்கிறார்கள். திருத்தப்படவேண்டிய யாப்பின் மீது எவ்வாறு சத்தியப்பிரமானம் எடுப்பது என்று 33பேர் அடங்கிய ஜனநாயக அணி கேள்விகளைத் தொடுக்கிறது.

இந் நிலையில் நாளை 25ம் திகதி இரவு 12.00 மணிக்குப் பின்னர் அவர்கள் யாப்பை ஒத்துக்கொண்டு சத்தியப்பிரமானம் எடுக்கவில்லை என்றால் அவர்கள் பதவிகளை இழப்பார்கள் என பிரதமர் திரு ருத்திரகுமாரன் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அப்படி நடக்குமேயானால், 33 தொகுதிகளில் மீளவும் தேர்தல் நடக்குமா என்பதனை அவர் இதுவரை உறுதிசெய்யவில்லை. தேர்தலை திரும்பவும் நடாத்த பெரும் பொருட்செலவு ஏற்படும் என்பது மக்கள் நன்கு அறிந்த விடையமாகவும் உள்ளது. இந் நிலையில் ஏற்பட்டுள்ள பிணக்குகளைப் பேசித்தீர்க்க ஊடகவியலாளர்கள் முற்படும் வேளையில், அதனைக் குழப்பும் நடவடிக்கைகளும் தாராளமாக நடைபெற்றவண்ணம் உள்ளது. சில பொறுப்பற்ற ஊடகங்கள் இப் பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி, தாம் பரபரப்புத் தேடுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகளை அழைத்து நேர்காணல் என்ற பெயரில் பிரச்சனையை ஊதிப் பெரிசாக்குகிறது.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அனைவரும் ஒரு அரசியல் முதிர்ச்சியோடு அல்லது நாகரீகத்தோடு நடந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தவும், அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளவும், நான் பெரிது நீ பெரிது என்று காட்டவுமே நாடு கடந்த அரசை பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது. தமிழர்களின் தேவை என்ன ? அங்கே கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், தமிழீழம் உருவாகவேண்டும் என ஒரே கோட்ப்பாட்டில் அனைத்து உறுப்பினர்களும் நிற்பார்களே ஆனால், இப் பிரச்சனை எப்போதே தீர்க்கப்பட்டிருக்கலாம். இவ்வளவு தூரம் சென்றிருக்கத் தேவையில்லை .

எப்போது தமிழினம் ஒன்றுபடப் போகிறது ? இவ்வளவு பேரழிவுக்குப் பின்னருமா நாம் பிரிந்து நின்று மல்லுக்கட்டப் போகிறோம் ? வேற்று இன மக்கள் எம்மைப் பார்த்து ஏழனம்கொட்டவா நாம் இவ்வாறு நடக்கிறோம் ? என்ற கேள்விகளே மேலோங்கியுள்ளது. இதனைப் பார்க்கும் போது நாம் சிறுவயதில் கேள்விப்பட்ட ஒரு கதைதான் நினைவுக்கு வரும். நரகத்தில் உள்ள அறைகளில் தனித் தனியாக எல்லா இன மக்களையும் இட்டு ஜமதர்மராஜா பூட்டிவைத்தாராம், ஆனால் தமிழர்கள் உள்ள அறையை மட்டும் அவர் பூட்டவே இல்லையாம், ஏன் என்று சித்திர குப்த்தன் கேட்டபோது, எவரும் வெளியே தப்பிக்க முடியாது, ஏன் என்றால் ஒரு தமிழன் வெளியே தப்பிக்க மற்ற தமிழன் விடமாட்டான், எப்படியும் பிடிச்சு இழுப்பான், அதனால் எவனும் தப்பிபோக முடியாது என்றாராம். அந்த நாள் முதல் தமிழர்கள் நிலை இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது...

athirvu

Comments