தமிழீழம்
05.04.2011
“நடுகல் வணக்க நாள் ஏப்ரல் 05”
உலக வல்லாதிக்க சக்திகளின் உறுதுணையுடனும் ஆசீர்வாதத்துடனும் பெருமெடுப்பில் படைக்கலப் பிரயோகத்தை மேற்கொண்டு தமிழீழ தாயகம் மீது சிங்களம் தொடுத்த கொடிய நில ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்டு களமாடி வீரகாவியமாகிய வீரமறவர்களின் நினைவு நாள் இன்று.
முல்லைத்தீவு மாவட்டத்தின் இதயமாக விளங்கும் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், முள்ளிவாய்கால் பகுதிகளில், 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ அன்னையின் மானம்காக்க நெருப்பு மழையில் களமாடி, எமது வீரத்தளபதிகளும், வீரவேங்கைகளும் விதையாக வீழ்ந்தார்கள்.
பல்குழல் பீரங்கிக் கணைகளையும், ஆட்லறி எறிகணைகளையும், நச்சுவாயுக் கணை களையும், எரிகணைகளையும் மழையெனப் பொழிந்து ஆனந்தபுரம் நோக்கி முன்னேறிய சிங்களப் படைகளை தீரமுடன் எதிர்கொண்டு எமது வீரமறவர்கள் களமாடினார்கள். சாவு நிச்சயம் என்று தெரிந்த பொழுதும்கூட எதிரியிடம் மண்டியிடாது, உயிரைத் துச்சமென மதித்துத் தமது இறுதிமூச்சு அடங்கும் வரை அடங்காது வீரப்போர் புரிந்து, அடங்காப்பற்றாக விளங்கும் வன்னி மண்ணில் வீரசுவர்க்கம் எய்தியவர்கள் எமது வீரமறவர்கள்.
தமிழீழ மண்ணில் பல களங்களைக் கண்டு வீரவரலாறு படைத்தவர்கள் இவர்கள். சங்கத் தமிழரின் வீரத்தை நவயுகத்தில் மீண்டும் பொன்னெழுத்துக்களால் பதிப்பித்தவர்களும் இவர்களே.
எங்கள் வீரமறவர்களின் இறுதிமூச்சு தமிழீழ மண்ணில் அடங்கிப் போய்விடவில்லை. நீறுபூத்த நெருப்பாக, குமுறும் எரிமலையாக எமது இதயங்களில் கனன்று கொண்டிருக்கும் எங்கள் வீரத்தளபதிகளினதும், வீரவேங்கைகளினதும் விடுதலை தீ, காலநதியின் ஓட்டத்தில் தமிழீழத் தனியரசு என்ற குழந்தையை நிச்சயம் பிரசவிக்கும். எமது வீரத்தள பதிகளும், வீரமறவர்களும் கால்பதித்துக் களமாடி விதையாகி வீழ்ந்த மண்ணில் மீண்டும் சுதந்திரக் காற்று வீசும்.
அந்த நாளை வென்றெடுப்பதற்காக அடிபணியா வீரமறவர்களின் வழித்தடம் நின்று, அந்நிய சக்திகளிடம் மண்டியிடாது விடுதலைப் பயணத்தில் வீறுநடை போடுவோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
Comments