திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள் இங்கே விளக்கங்கள் கீழே
1. உண்மையான தமிழின ஆதரவு தலையெடுக்க விடாமல் இருக்கும் திமுகவின் போலி தமிழின ஆதரவு
2. தமிழின துரோகம்
3. ஊடக ஆதிக்கம்
4.சுமங்கலி கேபிள்விஷன் மற்றும் மீடியா மாஃபியா
5. டாஸ்மாக் வியாபரத்தின் உச்சம், போதையில் தள்ளாடும் தமிழகம்
6. திரைத்துறையை கபளீகரம் செய்த கருணாநிதி குடும்பம்.
7.நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப வருமானத்தை பெறுக்குதல்
8.ஸ்பெக்ட்ரம் ஊழல்
9.சங்கராச்சாரியின் விடுதலையை நோக்கி நடத்தப்படும் வழக்கு, தாகி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு
10.பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிக்காரர்களின் சொத்துகள் மற்றும் குடும்ப அரசியல்.
இது மட்டுமின்றி உமாசங்கர், சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளின் மீதான அப்பட்டமான தாக்குதல்கள், அதிகார துஷ்பிரயோகம், வெளிப்படையாக பேசியதற்காக அவமானப்படுத்தப்பட்ட அஜீத், ஈழ விழிப்புணர்வு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்த வழக்கறிஞர்கள் மீது போலிசை ஏவி தாக்குதல் நடத்தி திசை திருப்பியது என வேதனைகள் ஏராளம் ஏராளம்...
கடந்த ஐந்தாண்டுகளில் மாபெரும் ஆக்கிரமிப்பை நடத்திய கருணாநிதி குடும்பத்திற்க்கு ஒரு அதிகார இடைவெளி கொடுக்கவில்லையென்றால் தமிழகம் ஒரு மாபெரும் மோசமான ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்...
1. உண்மையான தமிழின ஆதரவு தலையெடுக்க விடாமல் இருக்கும் திமுகவின் போலி தமிழின ஆதரவு
போலி தமிழின ஆதரவு போலி முற்போக்கு போலி சாதியொழிப்பு போலி பார்ப்பன எதிர்ப்பு பேசும் திமுக அழிந்தால் மட்டுமே உண்மையான தமிழின ஆதரவு முற்போக்கு
சாதியெதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு அரசியல் சக்திகள் வளர இயலும் இதற்க்கு மிகப்பெரும் தடைகல்லாக இருப்பது போலித்தமிழின ஆதரவு பேசும் திமுக.
தமிழின ஆதரவு என்று சொல்லிக்கொண்டே ஈழ அழிவுக்கெதிராக தமிழார்வலர்கள் நடத்திய போராட்டங்களையெல்லாம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது, அரசில் இருந்து கொண்டே தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் எதுவும் செய்யாதது, சாதிக்கெதிரானவர்கள் என சொல்லிக்கொண்டே ஆதிக்க சாதி சார்பு அரசியல் செய்வது என அனைத்தும் போலித்தனமே... இந்த போலி கட்சி அழிந்தால் மட்டுமே உண்மையான தமிழின ஆதரவு முற்போக்கு கட்சிகள் தலையெடுக்க இயலும்.
2. தமிழின துரோகம்
2008ல் தமிழீழத்தின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பு போர் உச்சத்தில் இருந்து மாபெரும் மனித அழிவு பேரவலத்திற்க்கு பின்புலமாக காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது, அந்த காங்கிரஸ் கூட்டணி அரசினை தாங்கி பிடித்துக்கொண்டிருந்தது திமுக.
திமுக என்பது தமிழின ஆதரவு கட்சி என்பதாலேயே வேறு எக்கட்சிக்கும் கிடைக்காத பல தமிழ் ஆர்வலர்கள் மொழி இனப்பற்றாளார்கள் முற்போக்காளார்களின் பலத்த ஆதரவு கிடைத்தது, இதனால் தமிழினத்தினை காக்க வேண்டிய கடமை வேறு யாரையும் விட இக்கட்சிக்கு உண்டு. மேலும் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது ஆனால் துரோகத்தின் உறைவிடமாக திமுக ஈழப்படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததால் இதற்கான பொறுப்பை திமுக ஏற்க்க வேண்டும். தமிழக மக்களே நேற்று ஈழத்தமிழன் பிணங்களை எண்ண முடியாமல் எண்ணியபோது இங்கே திமுக குடும்பம் ஸ்பெக்ட்ரம் பணங்களை எண்ணமுடியாமல் எண்ணிக்கொண்டிருந்தது... நேற்று ஈழத்தமிழனுக்கு நேர்ந்த போது கடமை தவறி வேடிக்கை பார்த்த திமுக நாளை தமிழக தமிழனுக்கு நேரும்போதும் வேடிக்கை தான் பார்க்கும்.
3. ஊடக ஆதிக்கம்
எந்த ஒரு மோசமான அரசாங்கம் அமைந்தாலும் அந்த அரசின் ஊழல்களையும் அராஜகங்களையும் வெளிப்படுத்துபவை ஊடகங்களே, 1991-96ல் நடைபெற்ற அதிமுக அரசின் மிக மோசமான ஊழல் மலிந்த அரசாட்சியை ஊருக்கு தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டி அதை எதிர்த்து போராடி அடிவாங்கியது கருணாநிதியோ திமுகவோ அல்ல, அதை செய்தது தமிழ் ஊடகங்கள் குறிப்பாக நக்கீரனும் சட்டப்போராட்டம் நடத்தியது கோமாளி என வர்ணிக்கப்படும் சுப்பிரமணியசாமியும்தான்(சுப்பிரமணிய சாமியின் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விசயத்தில் பாராட்டவே செய்கிறோம்). ஆனால் இன்று தமிழக மக்களிடம் எந்த செய்தி சேரவேண்டும் எது சேரக்கூடாது என்பதை முடிவு செய்வது கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள்.
ஈழப்படுகொலை உச்சத்தில் இருந்த போதும் அதை மக்களிடம் சென்று சேரவிடாமல் தடுத்ததும் இந்திய துணைக்கண்டம் முழுதும் ஸ்பெக்ட்ரம் ஊழல், அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் கனிமொழி நடத்திய பேரங்கள் வெளியானதும் அது தொடர்பான செய்திகளை தமிழக மக்களிடம் சென்று சேராமல் செய்யும் அளவிற்க்கு ஊடகங்களை கையில் வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தின் ஊடக ஆதிக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தல்.
30 சேனல்கள் 60 எஃப் எம் ரேடியோக்கள் பத்திரிக்கைகள் என இக்குடும்பத்தின் ஆதிக்கம் மிகப்பெரியதும் ஆபத்தானதும்.
4.சுமங்கலி கேபிள்விஷன் மற்றும் மீடியா மாஃபியா
தங்கள் குடும்ப தொலைக்காட்சியை தவிர்த்து வேறு எந்த தொலைக்காட்சியையும் சரியாக தெரியவைக்காமல் அழிக்கும் வேலையை செய்வது மாறன் குடும்பத்தின் சுமங்கலி கேபிள் விஷன் மூலமே, தமிழகத்தின் 90% கேபிள் இணைப்புகளை அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல், ரவுடித்தனத்தின் மூலம் கொண்டு வந்து இதன் மூலம் பிற தொலைக்காட்சிகள் நல்ல நிகழ்ச்சிகளை அளிக்கும்போது அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரச்சினை செய்வது, தொலைக்காட்சிகளுக்கு பிரைம் பேண்ட் தராதது மட்டுமின்றி இத்தொழிலில் ஏற்கனவே இருந்த
ஹாத்வே போன்ற நிறுவனங்களின் கேபிள்களை அறுத்து ரவுடித்தனம் செய்து வேறு மாற்றே இல்லாமல் செய்தது.மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்ததை பயன்படுத்தி பிற தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுத்தது, என்டிடிவி யுடன் ஸ்டார் விஜய் இணைந்து செய்திகளை வெளியிடுவதை பல்வேறு காரணங்களை கூறி தடைசெய்தது, ராஜ்டிவியை கிட்டத்தட்ட அழித்தது என மீடியா மாஃபியாவாக செயல்படுவது.
5. டாஸ்மாக் வியாபரத்தின் உச்சம், போதையில் தள்ளாடும் தமிழகம்
அரசாங்கமே சாராயம் விற்க்கலாமா என கண்டனம் செய்த திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்தது டாஸ்மாக் கடைகளை தெருவுக்கு தெரு திறந்ததும் கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மாக் வியாபரத்தை 500% ஆக உயர்த்தியதும் டாஸ்மாக் கடைகளை நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பதுமாக தமிழகத்தின் பெரும் இளைஞர்களை குடிகாரர்களாக ஆக்கியதும்.
நல்ல கட்டிடங்களும் கழிப்பறை வசதிகளும் இல்லாமல் இயங்கும் பள்ளிக்கூடங்கள் எத்தனையோ இருந்த போதும் மூன்று இலட்ச ரூபாய் செலவில் டாஸ்மாக் பார்களை ஏசி வசதி செய்ய அனுமதித்ததும் பின் கடும் எதிர்ப்புகளுக்கு பின் இத்திட்டத்தை திரும்ப பெற்றதென்றாலும் இந்த அரசின் நோக்கம் எதை நோக்கி இருந்தது என குறிக்கின்றது.
6. திரைத்துறையை கபளீகரம் செய்த கருணாநிதி குடும்பம்.
முப்பதாயிரம் ரூபாய்க்காக முதுகொடிய வேலை செய்யும் உயர்கல்வி படித்த கடுமையாக உழைக்கும் நம் போன்றவர்களிடையே முந்தா நாள் வரை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த தயாநிதி அழகிரி கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து விநியோகிக்கும் அளவுக்கு பணம் வந்ததெப்படி? உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி, கலாநிதி மாறன் போன்றவர்கள் தமிழகத்தின் பெருமளவிலான திரை அரங்குகளை மிரட்டியும் அதிகார துஷ்பிரயோகம் செய்து வளைத்தும் வைத்து பிறர் யாருமே இத்தொழில் செய்யமுடியாத அளவிற்க்கு கபளீகரம் செய்துள்ளனர்.
சிறு வியாபாரிகளே, சிறுமுதலாளிகளே, பஸ் உரிமையாளர்களே, முதலாளிகளேஉங்களுக்கும் இதே நிலைதான் இவ்வாட்சி தொடர்ந்தால். உங்கள் தொழிலை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
7.நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப வருமானத்தை பெறுக்குதல்
ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் 2006ல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், கலைஞர் காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு ஆயிரத்தி ஐநூறூ கோடி ரூபாய்களென ஐந்து ஆண்டுகளில் 7500கோடி ரூபாய் காண்ட்ராக்டை எந்த அனுபவமுமில்லாத ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பித்த உடனேயே பெறுகிறது.
ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையை நவீனமாக்க 50கோடிகள்
தேவையென்று மத்திய அரசின் குறிப்பு தெரிவிக்கிறது 2500 கோடிகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் நவீனமாக்க இயலும் அனைத்து PHC க்களையும் நவீனமாக்க இயலும் ஆனால் மிகச்சிறப்பாக செயல்படும் அரசாங்க எல்.ஐ.சி நிறுவனத்தையும் தாண்டி ஸ்டார் இன்சூரன்ஸ்க்கு இத்தனை கோடி காண்ட்ராக்ட் தரப்பட்டதன் காரணம் ஊழலே...
இலவச வண்ணத்தொலைக்காட்சியினால் பெருகிய கேபிள்வருமானம், குடும்பத்தொலைக்காட்சிக்கு பெருகிய பார்வையாளர்கள் என ஒவ்வொன்றிலும் குடும்பத்தின் வருவாயை பெருக்கும் காரணங்களே முண்ணனியில் உள்ளன.
8.ஸ்பெக்ட்ரம் ஊழல்
தமிழனுக்கு இப்படியொரு தலைகுனிவை தமிழின விரோதிகளாலும் கூட ஏற்படுத்தியதில்லை, உலகின் மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு இலட்சத்தி எழுபத்தியாறாயிரம் கோடி ஊழலின் ஊற்றுக்கண் தமிழன் என்ற தலைகுனிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஊழலில் கிடைத்த பணமே ஈழத்தமிழினத்தின் மரண ஓலத்தையும் மறைத்தது. ஊழலே அனைத்துக்கும் காரணம், ஊழலே கொள்கைகளை மறக்க செய்யும், ஊழலே மக்களை ஏமாற்ற செய்யும், ஊழலே கடமை தவற செய்யும்... ஊழலே அனைத்துக்கும் காரணம்..
9.சங்கராச்சாரியின் விடுதலையை நோக்கி நடத்தப்படும் வழக்கு, தாகி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு
பார்ப்பன சங்கராச்சாரி மீது நடைபெற்று வரும் கொலை வழக்கை மிக பலவீனமாக கையாண்டு இந்த வழக்கிலிருந்து சங்கராச்சாரி விடுதலையாகுமளவிற்க்கு நடத்தப்படுகிறது,ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வாக்குமூலம் அளித்த பலர் பிறழ் சாட்சியாக மாறுமளவிற்க்கு வழக்கை பலவீனமாக கையாள்கிறது இந்த அரசு.''சங்கராச்சாரியார் மீது வீண் பழி சுமத்திக் கைது செய்த ஜெயலலிதாவுக்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது!'' என்று காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்தவர்கள், தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர் என்றால் இந்த அரசு கருணாநிதி அரசு யாருக்கு சாதகமாக நடந்து கொள்கிறது?
தாகி என்கிற முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டினன் தற்கொலையா செய்து கொண்டார்? அவரை கொன்றவர்கள் யார்? ஏன் வழக்கு பலவீனமாக நடத்தப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்? தினகரன் அலுவலகத்தில் மூன்று பேரை உயிருடன் கொளுத்தி எரித்த வழக்கு என்ன ஆனது?
10.பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிக்காரர்களின் சொத்துகள் மற்றும் குடும்ப அரசியல்.
குடும்பத்தின் தலைவர் முதல்வர், ஒரு மகன் துனை முதல்வர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் எம்பி, பேரன் மத்திய அமைச்சர், துணைவியோ ஒரு இணை அரசாங்கத்தையே நடத்துகிறார்... மொத்த குடும்பமுமே கட்சி ஆட்சி என அத்தனையும் கையில் வைத்திருக்கிறதே இதுவே ஒரு வகையில் பார்ப்பனியம் தான் கருணாநிதியினால் பிறந்தவர்கள் என்ற பிறப்பின் அடிப்படை தவிர வேறு என்ன தகுதி இவர்களுக்கு?
பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிகாரர்களின் சொத்தைப்பற்றியெல்லாம் விளக்கவும் வேண்டுமோ?
http://kuzhali.blogspot.com/2011/04/10.html
ஊழலுக்கெதிரான சவுக்கு
Comments