கடந்த மூன்றரை மாதங்களில் மட்டும் வடக்கில் 35 வன்புணர்வுக் குற்றங்கள்: 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகள்

http://www.tamilthai.com/wp-content/uploads/2011/04/timthumb.php_45.pngஇந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மட்டும் 35 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகளாவர். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இக்குற்றங்கள் பதிவாகி உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுமியர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர். 10-16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகளும் 16 வயதுக்கு மேற்பட்ட 8 பெண்களும் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.

யாழ். மாவட்டத்தில் நகரப் பகுதி, கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, சாவகச்சேரி, வட்டுக்கோட்டை, அல்வாய் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரப்பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும் வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம், வவுனியா நகரப்பகுதி ஆகிய இடங்களிலும் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றதாகப் புள்ளி விவரம் கூறுகின்றது.

பதிவு செய்யப்பட்ட சம்பவங்களே இவை என்றும் இவற்றைவிட பதிவு செய்யப்படாமல் இன்னும் அதிகமானவை இடம்பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் பெண் உரிமை விடயத்தில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. “இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு, நவீன தொடர்பாடல் தொழில்நுட்பம் வரைமுறையற்று பயன்பாட்டில் இருப்பதே காரணம்” என்று தெரிவித்தார் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவர் எஸ்.சிவரூபன். டிப்டொப் ஆசாமிகளின் வெளிக்கவர்ச்சியில் மாணவிகள் இலகுவில் மயங்கிப் போய் விடுவதாலும் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் விரும்பிப் பாலியல் உறவு வைத்துக் கொண்டாலும்கூட அது வன்புணர்வாகவே கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துவதே இத்தகைய குற்றங்களைக் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

60 வயது முதியவர் கைது!

தென்மராட்சிப் பிரதேசத்தில் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 21ஆம் திகதி சிறுமிக்கு இரத்தக் கசிவு இருந்ததை அவதானித்த பெற்றோர், தனியார் வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற முயன்றுள்ளனர். அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். அங்கிருந்து பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சிறுமி மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி தெரியவந்தது. இது தொடர்பில், சிறுமியை தனியார் வகுப்புக்கு அழைத்துச் செல்லும் முதியவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இந்த நபரே சிறுமியைத் தனியார் வகுப்புக்குக் கூட்டிச் சென்று வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினம் அன்று சிறுமியை தனியார் வகுப்புக்கு அழைத்துச் செல்லும் வழியில் பற்றை ஒன்றுக்குள் கொண்டு சென்று வன்புணர்வுக்கு முயன்றுள்ளார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

Comments