கொன்சவேட்டிவ் கட்சியின் “சன் சீ” விளம்பரம் வரம்பு மீறிய ஒரு செயல் என கனேடிய லிபரல் கட்சி


தமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து
கொன்சவேட்டிவ் கட்சியின் “சன் சீ” கப்பலை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட விளம்பரம் வரம்பு மீறிய ஒரு செயல் என கனேடிய லிபரல் கட்சி கண்டித்துள்ளது.இந்த விளம்பரம் இனவாத விசம் கொண்டது. இது அகற்றப்பட வேண்டுமென என கனடாவின் தமிழ் அமைப்புக்களான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்களவை என்பன பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தன.

இதற்குப் பதிலளித்த கொன்சவேட்டிவ் கட்சி தாங்கள் எந்தக் காரணம் கொண்டும் விளம்பரத்தை அகற்ற மாட்டோம் எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் லிபரல் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்குப் பொறுப்பான லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகரும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தடுப்பு முகாம்களுக்கு விஜயம் செய்த போது கொழும்பு விமான நிலையத்தில் வைத்து சிறீலங்காவால் திருப்பி அனுப்பப்பட்டவருமான பொப் ரே இந்த விளம்பரம் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அகதிகள் என்போரைத் தீர்மானிக்கும் நீதித்துறைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் முற்கூட்டிய ஒரு தீர்மானமாக அவர்களை குற்றவாளிகள் என்றும், கடத்தல்காரர்கள் என்றும் குறியிடுகிறது என்றும், சன் சீ கப்பலை இரண்டு முறை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மேற்படி உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழர்கள் கனடா பெருமைப்படக் கூடிய ஒரு சொத்து என்றும், தமிழர் சமூகம் சார்ந்தோர் கனடாவின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்காற்றுகிறார்கள் என்றும், நாற்பது வருடகாலமாக அவர்கள் அனுபவித்து வரும் இனப்பிரச்சினையே அவர்கள் கனடாவிற்கு புலம்பெயர்ந்ததற்கான காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழர் சமுதாயத்தின் கல்வித் துறையிலான சாதிப்பு, வியாபார மற்றும் தொழில் சார் துறையிலான அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது என்றும் தமிழர்களின் இந்தப் பெருமைகளை கொன்சவேட்டிவ் கட்சி தனது விளம்பரத்தில் சேர்க்க வேண்டும் என்றும் லிபரல் கட்சி தனது வேண்டுகோளில் தெரிவித்துள்ளது.

Comments