கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்.,?



கடந்த 2009 லோக்சபா தேர்தல்… இலங்கைத் தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். காலையிலிருந்து மதியம் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும், முதல் முதலாய், “தனி ஈழத்தை அடைந்தே தீருவோம்’ என்று ஜெயலலிதா முழங்கியதும் அப்போது தான். தேர்தல் முடிந்ததும், போரும் முடிவுக்கு வந்தது. இலங்கையில், பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் செத்துப் போயினர்.எல்லாம் முடிந்து இரு ஆண்டுகள் ஓடிப்போன நிலையில், சட்டசபை தேர்தல் வந்திருக்கிறது.

இந்தத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பற்றிய பேச்சையே யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்த வைகோவும், தேர்தலைப் புறக்கணித்துவிட, கிட்டத்தட்ட எல்லாருமே இதை மறந்துவிட்டனர். இந்நிலையில், “நாம் தமிழர்’ இயக்கம், ஈழப்பிரச்னையையே மீண்டும் ஆயுதமாக எடுத்துள்ளது.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என்பதையெல்லாம் விட, காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, இந்த அமைப்பு களம் இறங்கியுள்ளது. ஒரு புறத்தில் காங்கிரசை சீமான் பிரசாரத்தில் கிழித்தெடுக்க, அவரது கட்சியினரும், பிற தமிழ் அமைப்பினரும் காங்., போட்டியிடும் தொகுதிகளில் “கொரில்லா’ பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.





இக்கட்சியின் சார்பில், நான்கு பக்க வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் தலையில் துண்டைப் போட வைக்கும் அளவுக்கு, “படு ஸ்ட்ராங்’ ஆகவுள்ளது. முதல் பக்கத்தில் வரிசையாகக் கிடக்கும் சடலங்களின் முன்பாக தலைவிரிகோலமாகக் கதறும் தமிழ்ப் பெண்ணின் படம் அச்சிடப்பட்டு, “தமிழராய் களமமைப்போம், காங்கிரசைக் கருவறுப்போம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.”நம் இனத்தை கொன்றழித்த காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?’ என்று கேள்வி எழுப்பும் அந்த நோட்டீசின் அடுத்த இரு பக்கங்களிலும், இலங்கை போரின்போது நடந்த அகோரங்களின் சாட்சியாக 20 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படமும் இதயத்தைக் கிழித்து எடுக்கக் கூடியவை.அதன் மேலே, “முத்துக்குமாரை நெஞ்சில் விதைப்போம்! 63 தொகுதிகளிலும் காங்கிரசைப் புதைப்போம்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே, ரத்தக்கறையுடன் உள்ள கைச்சின்னத்தில் சோனியா, ராகுல் படங்களும், கடைசிப் பக்கத்திலுள்ள கைச்சின்னத்தின் மேலே மண்டை ஓடும் இடம்பெற்றுள்ளன. ஏன் காங்கிரசை வீழ்த்த வேண்டும்? என்ற கேள்வி எழுப்பும் அந்த நோட்டீஸ், அதற்கு விளக்கமும் தருகிறது.

“தமிழின விடுதலைக் கனவை சிங்களனோடு சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த குற்றத்திற்காக, கொத்துக் கொத்தாய் நம்மினத்தைக் கொன்று குவித்த எதிரிக்கு ஆயுதம் வழங்கிய குற்றத்திற்காக, முள்வேலிக்குள் அடைத்து நம்மினத்தை, எதிரியிடம் கையேந்த வைத்த கொடுங்குற்றத்திற்காக, கழுத்தில் சுருக்கிட்டு தமிழக மீனவரை நாய்களைப் போல் கொல்பவனை நண்பனாக ஏற்ற குற்றத்திற்காக’ என்று ஆறு காரணங்களைச் சொல்கிறது நோட்டீஸ்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், இந்த நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; அது, மக்களிடம் பெரும் விவாதத்தையும் கிளப்பி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், உலகக் கோப்பை கிரிக்கெட் என பலவிதமான நினைவுகளின் நெருக்கடியில் இருக்கும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு கவனம் பெறும், அதனால், “கை’க்கு எந்தளவுக்கு அடி விழும் என்பது மே 13ல் தெரியவரும்

Comments