தமிழ்த்தேசிய மனிதநேய செயற்பாட்டாளர் மீது திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல்

தமிழ்த்தேசிய மனிதநேய செயற்பாட்டாளர் மீது திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் தமிழ் தேசியத்துக்காவும், மற்றும் மனிதநேயத்துக்காவும் பாடுபடும் முக்கிய செயற்பாட்டாளரான திரு தனம்(வயது48) அவர்கள் மீதே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 04.04.20011 அன்று இரவு 11.00 மணியளவில் அவர் தனது வாகனத்தை வீட்டிற்கு முன்னர் நிறுத்திவிட்டுப் பொருட்களை எடுத்துக்கொண்டு நின்றவேளை, ஏற்கனவே பதுங்கி நின்ற இருவர் ஹோக்கி விளையாடும் கட்டை ஒன்றின் மூலம் அவர் பின் தலையில் தாக்கியுள்ளனர். தன் நிலை இழந்து தரையில் வீழ்ந்த அவர் மீது சப்பாத்துக்கால்களால் உதைத்தும் உள்ளனர். தனம் அவர்களின் குரல்கேட்ட அவரது பாரியார் வீட்டில் இருந்து வெளியே வர, அவ்விருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்கள் முகத்தை மறைத்து இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு, கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள தனம் அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிசார் குறிப்பிட்ட அப் பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதித்து, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளில் பல தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. மேற்கொண்டு இது திட்டமிட்டப்பட்ட படுகொலை முயற்சி என்ற கோணத்திலேயே பொலிசார் விசாரணைகளைத் தொடரவுள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாக பிரித்தானியாவில் செயற்பட்டுவரும் மனிதநேய செயற்பாட்டாளர்களை நோக்கி குறிப்பிட்ட ஒரு குழுவினர் அச்சுறுத்தலை விடுத்துவருகின்றனர். தமிழ் உணர்வாளர்கள், மனித நேயப் பணியாளர்கள் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல்களை விடுத்துவந்த சிலர் தற்போது காட்டுமிராண்டித்தனமாக திட்டமிட்ட தாக்குதல்களையும் நடாத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது நோக்கங்களை செயற்படுத்த இவர்கள் தாக்குதல்களை நடத்திவிட்டு பழியை இலங்கை அரசுமீது போடும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம், அல்லது இலங்கை அரசின் உதவியோடு இதனைச் செய்ய ஆரம்பித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இத் தருணத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் தேசியத்தைச் சிதைக்கவும், செயற்பாட்டாளர்களை முடக்கவும், திரைமறைவில் திட்டமிட்டு இயங்கும் இக் குழுக்கள் மக்கள் மத்தியில் இனம்காணப்படவேண்டும். ஜனநாயகத்துக்குப் புறம்பாக செயல்படும் இதுபோன்ற வன்செயல்கள் கண்டனத்துக்கு உரியவையாகும். புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து, செயல்பாட்டாளர்களின் கரங்களை வலுப்படுத்தவேண்டும் ! அத்தோடு தேசியத்துக்காகச் செயற்படும் செயற்பாட்டாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்துகள் மக்களால் முன்வைக்கப்படுகிறது.


Comments