கேணல் ரமேஷ் அவர்களின் நிலமை தொடர்பாக அறிய உலகத்தமிழர் பேரவை,நாடு கடந்த தமிழீழ அரசு முயலுமா??


விடுதலைப் புலிகளின் களமுனை தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷ் அவர்கள் இறுதி யுத்தத்தின் போது அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன்,சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் உட்பட இன்னும் பலருடன் சரணடைந்திருந்தார்.

இவருடன் சரணடைந்திருந்த அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் அவர்களை ராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்திருந்தனர் என்பது பலராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்கள் கொல்லப்பட்டிருந்த புகைப்படங்களும் வெளியாகியிருந்ததோடு,அரசாங்கமே அவற்றை நடேசன் மற்றும் புலித்தேவன் அவர்களின் உடலங்களே என்று உறுதிப்படுத்தியிருந்ததோடு இவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தின் போதே ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் சரணடைந்த போது கொல்லப்படவில்லை என்றும் மறுத்திருந்தனர்.

ஆனால் அவர்களுடன் சரணடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த தளபதி கேணல் ரமேஷ் அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களுடனோ அல்லது புலித்தேவன் அவர்களுடனோ கொல்லப்படவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேணல் ரமேஷ் அவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த பொது களத்தில் நின்ற சிங்கள புலனாய்வு அதிகாரிகள் கேணல் ரமேஷ் அவர்களை கடுமையாக விசாரிப்பது தொடர்பான காணொளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததோடு மட்டும்,அதன் கதை முடிந்து விட்டதாகவே கூறவேண்டியுள்ளது. ஏனெனில் ரமேஷ் அவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார் என்பது 100 வீதம் உறுதிப்படுத்திய பின்பும் அவர் தொடர்பாகவோ அல்லது அவரின் இருப்பு தொடர்பாகவோ அறிவதற்கு தமிழர் அமைப்புக்கள் முன்முரமாக எந்தவிதமான முயற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் கேணல் ரமேஷ் அவர்கள் தொடர்பான இதுவரையில் வெளிவராத காணொளி ஒன்றை அனைத்துலக மன்னிப்பு சபை இன்று வெளியிட்டுள்ளது.இதை பார்த்த உலகத் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச்சபையினாலேயே குறிப்பிட்ட காணொளி வெளியிடப்பட்டுள்ளமை தமிழர் தரப்பிற்கு நன்மைதரும் விடயமாகவே கருத முடியும்.இதை ஒரு கருவியாக எடுத்து கேணல் ரமேஷ் அவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசிடம் இருந்து பெறுவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,உலகத் தமிழர் பேரவை,ஈழத்தமிழர் பேரவை போன்ற தமிழர் அமைப்புக்கள் எந்த எந்த வழிகளில் முயற்சி எடுக்க முடியுமோ அந்த அந்த வழிகளில் முயற்சி எடுக்குமாறு உயர்வு இணையம் தாழ்மையோடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறது.

இலங்கை அரசின் அடிமைத் தனத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக இறுதிவரை களமாடி சிறையில் வாடும் முன்னாள் போராளிகளின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும்,அவர்கள் அங்கு தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மேல் குறிப்பிட்ட தமிழர் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ளுமாறு உயர்வு மெலும் கேட்டுக்கொள்கிறது.

உயர்வு ஆசிரியர் குழு

Comments