மனித உரிமை மீறல்கள்: ஆதாரத்திற்கும் அதைத் தடுப்பதற்கும் உதவும் செய்மதி 'உளவு' ஒளிப்படக் கருவிகள்

தங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டமைக்கு அமையச் செயற்படும் இந்தச் செய்மதிகள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தினைப் ஒளிப்படமெடுக்கிறது. அதே பகுதியினை மீண்டும் இரண்டு நாட்களின் பின்னர் படமெடுப்பதற்கு ஏதுவாக இதுபோன்ற செய்மதிகள் புவியைச் சுற்றி வருகிறன. குறிப்பிட்டதொரு குற்றம் அரங்கேறுகிறதெனில் அதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதை விட ஒளிப்படமெடுப்பது அதிக பலனைத் தரும் என்பது இங்கு நிரூபணமாகிறது.

இவ்வாறு அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட The Christian Science Monitor என்னும் ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

2009 மே மாதத்தில் சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளை இல்லாதொழித்த பின்னர் இன்னொரு 'சதி' நடவடிக்கை 9000 மைல்களுக்கு அப்பால் நடைபெறுகிறது.

அதாவது லாஸ் புறொம்லி என்பவர் 450 மைல்களுக்கு அப்பால் மேல் நின்று எடுத்த செய்மதிப்படங்களை அமெரிக்க தலைநகரான வோசிங்ரனில் இருந்தபடி பல கோணங்களில் அலசி அவதானித்து வருகிறார்.

மனித உரிமைகள் மற்றும் அறிவியல் திட்டத்தின் ஒரு பகுதியான American Association for the Advancement of Science - AAAS அமைப்பின் ஆய்வு கூடத்தில் எடுக்கப்பட்ட இச்செய்மதி ஒளிப்படங்கள் அலசி ஆராயப்படுகின்றன.

16 அடி நீள அகலமுடைய அச்செய்மதிப் படங்களை ஆராய்ந்து வருபவர்களில் ஒருவரான தரைத்தோற்றவியலாளரான புறொம்லி [Mr. Bromley, a geographer], சிறிலங்கா இராணுவம் பொதுமக்கள்மீது தாக்குதல் நடாத்தியதா என்பதைத் இதன் மூலம் கண்டறிய முடியும் என நம்புகிறார்.

குறிப்பிட்ட இந்தப் படத்தின் ஒவ்வொரு நுண்புள்ளியும் [pixel] 20 அங்குலத்திற்குச் சமம். ஆதலினால் இறந்த உடலங்களை துல்லியமாக அடையாளம் காணுவற்கு இது போதுமானதாக இல்லைத்தான். இருந்தாலும், புறூம்லியும் அவருடன் பணியாற்றுபவர்களும் அப்படங்கள் காண்பிக்கும் ஏனைய சேதங்களை அவதானிக்கிறார்கள்.

ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களால் கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன, பெருந்திரளான பொதுமக்கள் திரண்டிருந்த இடத்தில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருக்கிறன. விடுதலைப் புலிகளின் நீள்சதுர வடிவான கல்லறைகள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறன. முதல் நாள் எடுத்த ஒளிப்படத்தினைவிட அடுத்தநாள் எடுத்த ஒளிப்படத்தில் அதிக கல்லறைகளை இனங்காண முடிகிறது.

இதுபோல பொதுமக்கள் இலக்குவைக்கப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக மறுத்திருக்கிறது. ஆனால் தொடராக போரின் அந்த இறுதி நாட்களில் நடந்தது என்ன என்பதை காட்டும் வகையில் இதுபோல தகவல்கள் தொடராக வெளிவருவதை எவராலும் தடுக்கமுடியாது.

கூகிள் ஏத் தொடக்கம், புவி நிலைகாண் கருவிகள், வேவு விமானங்கள் மற்றும் செய்மதிகள் வரை பயன்பாட்டிலுள்ள இன்றைய உலகில் தகவல்கள் வேகமாக வெளிவருகிறன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் செய்மதிகள் தொலைத்தொடர்பாடல்கள் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1999ம் ஆண்டு முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்கான ஒளிப்படங்களை எடுப்பதற்கான செய்மதிகள் ஏவப்பட்டிருக்கின்றன.

ஆறு அடி மற்றும் 20 அங்குலத் துல்லியத் தன்மையுடன் வானிலிருந்து தரையின் ஒளிப்படங்களை எடுக்கக்கூடிய ஒளிப்படக்கருவிகளை இந்தச் செய்மதிகள் கொண்டிருக்கின்றன. அரசாங்கங்கள், விவசாயத்துறைசார் தனியார் நிறுவனங்கள், நகரத் திட்டமிடல் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பலவேறுபட்ட தேவைகளுக்காக இந்தச் செய்மதிப் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏன் அண்மை நாட்களில் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் இத்தகைய செய்மதிப் படங்களைப் பயன்படுத்துவதற்கு ஆரம்பித்திருக்கின்றன.

கொலறாடோவினைத் தளமாகக் கொண்ட 'டிஜிற்றல் குளோப்' Digital Globe என்ற நிறுவனம் இத்தகைய தேவைக்காக வேட்ல்ட் வியூ -1 Worldview 1 என்ற செய்மதியினை அனுப்பியிருந்தது. சிறிலங்கா தொடர்பாக செய்மதிப் ஒளிப்படங்களைப் பெறுவதற்காக புறூம்லீயும் இந்த நிறுவனத்தினையே அணுகியிருக்கிறார்.

குறிப்பிட்ட இந்தச் செய்மதியானது தினமும் 150,000 சதுரமைல் பரப்பளவு கொண்ட பகுதிகளைப் ஒளிப்படமெடுக்கவல்லது.

உலகத்தினை மணிக்கு 17,000 மீற்றர்கள் என்ற வேகத்தில் சுற்றிவரும் இந்தச் செய்மதி 10 மைல் அறுபது மைல் நீள அகலம் கொண்டு நிலத்துண்டினை 25 வினாடிகளில் 20 அங்குலப் ஒளிப்படமாக எடுக்கும் திறனைக் கொண்டது.

சிம்பாபேயின் சர்வாதிகார ஆட்சியாளன் றொபேட் முகாபேயின் படையினரால் வீடுகள் அடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வு 2005 ம் ஆண்டு செய்மதிகளின் துணையுடன் படமாக்கப்பட்டிருந்தது.

செய்மதிகளைப் பயன்படுத்தி இதுபோன்ற படங்களை எடுக்கும் AAAS அமைப்பினது முதலாவது நடவடிக்கை இதுதான். 2007ம் ஆண்டு டாபூரில் பல நூற்றுக்கணக்கான வீடுகள் எரித்து அழிக்கப்பட்டதையும் அதனது செய்மதிப்படங்கள் உறுதிப்படுத்தின.

பர்மா, காசா, வட கொரியா, எதியோப்பியா மற்றும் கொங்கோ குடியரசு போன்ற நாடுகளில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிப்பதற்கும் செய்மதிப் படங்கள் பயன்படுத்தப்பட்டன. அண்மை நாட்களில் அரபுலகில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் போது, குறிப்பாக லிபியா மற்றும் எகிப்து நாடுகளிலும் அரச எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தீவிரம் பெற்றபோது செய்மதிப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

"இதுபோன்ற செய்மதிப் படங்கள் அதியுயர் பெறுமதிமிக்கவை'"என்கிறார் அனைத்துலக மன்னிப்புச் சபையின் மனித உரிமை நிகழ்சித்திட்ட விஞ்ஞானம் பகுதியின் பணிப்பாளர் ஸ்கொட் எட்வேட் கூறுகிறார்.

இதுபோல செய்மதிகள் வழியாக எடுக்கப்படும் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி மக்கள் இன்னமும் பயின்றுவருகிறார்கள். 2009ம் ஆண்டு திரு.புறூம்லீயினது குழு சிறிலங்காவினது நிலைமைகளை கவனமாக அவதானித்தது.

மணல்பாங்கான பிரதேசத்தில் எறிகணைகள் விழுந்து வெடிக்க மணல்கள் சிதறிக்கிடந்ததை அந்தச் செய்மதிப் படங்களில் தாங்கள் அவதானித்ததாக இவரது குழுவில் அங்கம் வகித்த ஒருவர் கூறுகிறார். எறிகணைகள் விழுந்து வெடித்த இடத்தினை அவதானித்தபோது எறிகணைகள் சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளிலிந்தே வந்து வீழ்ந்திருப்பது உறுதிப்படுத்தமுடியும் என இவர் தொடர்ந்து தெரிவித்தார்.

குறிப்பிட்டதொரு சம்பவம் இடம்பெறும் போது தங்களை யாரோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நன்கறிவார்கள் என்பதை அண்மைய சம்பவம் ஒன்று உறுதிப்படுத்துகிறது.

கடந்த யூலையில் கிர்கிஸ்தான் [Kyrgyzstan] நாட்டில் Osh என்னும் நகரத்தில் இடம்பெற்ற இன வன்முறையின்போது 1600 வீடுகள் எரியூட்டி அழிக்கப்பட்டிருந்தன. இதன்போது எடுக்கப்பட்ட செய்மதிப் படங்களை அவதானித்த ஆய்வுப் பணியாளர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 'எங்களைக் காப்பாற்றுங்கள்' [SOS] என்ற வாசகங்கள் அறுபது அடி உயரமான எழுத்துக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எழுதப்பட்டிருந்தன. செய்மதிகள் வழியாகத் தங்களை யாரோ அவதானிப்பதை இந்த மக்கள் அறிந்திருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. செய்மதியின் செயல்திறனைக் காட்டுமொரு சம்பவம் இது.

தங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டமைக்கு அமையச் செயற்படும் இந்தச் செய்மதிகள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தினைப் ஒளிப்படமெடுக்கிறது. அதே பகுதியினை மீண்டும் இரண்டு நாட்களின் பின்னர் படமெடுப்பதற்கு ஏதுவாக இதுபோன்ற செய்மதிகள் புவியைச் சுற்றி வருகிறன. குறிப்பிட்டதொரு குற்றம் அரங்கேறுகிறதெனில் அதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதை விட ஒளிப்படமெடுப்பது அதிக பலனைத் தரும் என்பது இங்கு நிரூபணமாகிறது.

"இவ்வாறு மனித உரிமைகள் மீறப்படும்போது அவற்றை செய்மதிகளின் துணையுடன் ஒளிப்படமெடுப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது குற்றவாளிகள் யாரோ அவர்களை அனைத்துலக நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கான காலம் வந்துவிட்டது" என கலிபோர்ணியாவிலுள்ள சாரான்போட் பல்கலைக்கழகத்தின் கல்விமான் பற்றிக் மியர் Patrick Meier கூறுகிறார். குறிப்பிட்ட இந்தப் ஒளிப்படங்களை எவ்வாறு பயன்படுத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது என்பதுதான் இன்றைய கேள்வி என்கிறார் அவர்.

மனித உரிமை விடயத்தில் செய்மதிப் படங்கள் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்க்காததொரு அம்சமே. இயற்கை வளங்களை இனங்காணுதல் உள்ளிட்ட அடிப்படை விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில்காண்பதில் செய்மதிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக வறிய நாடுகளுக்கு இது பெரும் துணையாக அமையும்.

தி.வண்ணமதி

Comments