"ஈழமுரசு லீக்ஸ்" - ஈழப்போரின் கடைசிக்​கட்டம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்: ஜூனியர் விகடன்

பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகளில் வெளியாகும் ‘ஈழமுரசு’ பத்திரிகையில், ஈழப்போரின் கடைசிக்​கட்டம் பற்றி அதிர்ச்சித் தகவல்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன!


ஈழமுரசு லீக்ஸ் என்ற பெயரில் ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்று ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியையும் அவரது மகள் கனிமொழி​​யையும் கடுமையாக விமர்சிக்கிறது அந்தக் கட்டுரை. »ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், நூற்றுக்​கணக்​கில் அப்பாவி மக்கள் செத்துக்கொண்டு இருக்க, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என கடைசியில் போர்நிறுத்த முயற்சியில் புலிகள் இறங்கினர். இதற்காக, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, தங்கள் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் மூலமாக கருணாநிதிக்கும் தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்​பினர் கனிமொழிக்கும் கடிதங்கள் அனுப்பினர். இந்தக்

கடிதங்களுக்கு கருணாநிதி உரியபடி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

நடேசனுக்குத் தாமதமாக கனிமொழி ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘டெல்லி சொற்படி ஆயுதங்களைக் கீழே போடுங்கள்’ என்று கூறியுள்ளார். கருணாநிதிக்கும் புலிகளுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தில் பாதிரியார் ஜெகத் கஸ்பரும் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் தொடர்பாளர்களாகச் செயல்பட்டனர்!’ என்று அக்கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கிறது!



»தி.மு.க-வுக்கும் புலிகளுக்கும் நீண்ட இடைவெளி தொடர்ந்தும், லட்சக்​கணக்கான தமிழ் மக்களை காப்பாற்றவே கருணாநிதியுடன் புலிகள் இணக்கம் பேணினார்கள். 2008, அக்டோபரில், இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, கருணாநிதி கருத்து வெளியிட்டார். ‘போர்நிறுத்தம் காணாவிட்டால், 14 நாள்களுக்குள் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகு​வார்கள்’ என அறிவித்தார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, கருணாநிதியின் மின் அஞ்சல் முகவரிக்கும் சுப.வீரபாண்டியன் மூலமாக நேரடியாகவும் நடேசன் கடிதம் அனுப்​பினார்! » என்றும் குறிப்பிட்டுள்ளது ஈழமுரசு.

மேலும் அது வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள் இவைதான்…


2008 அக்டோபர் 15-ம் தேதி, இலங்கை போர் நிறுத்தத்துக்காக முதல் ஆளாக எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாக கனிமொழி தன் தந்தையிடம் விலகல் கடிதம் அளித்தார். அதையட்டி, கனிமொழிக்கு நேரடியாகவும் சுப.வீரபாண்​டியன் மூலமாகவும் நடேசன் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அதில், »சகோதரிக்கு, ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நோக்குடன் உங்கள் ராஜ்யசபா அங்கத்தினர் பதவி துறந்து முன்மாதிரியாக நடந்துகொண்டமை முழுத்தமிழ் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எமது இயக்கத்தின் நன்றியினையும் மக்களின் நன்றியினையும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்!’ என நடேசன் கூறியுள்ளார்.



ஆனால், இரண்டு வாரங்களுக்குள் கனிமொழி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். போர் நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அக்டோபர் 31 அன்று தமிழீழ தேசிய போரெழுச்சிக் குழுவின் செயலாளர் சே.முகுந்தன், சுப.வீரபாண்டியன் மூலமாக கருணாநிதிக்கு மனு அனுப்பினார். இதற்கும் எந்தப் பலனும் இல்லை! டிசம்பர் 2-ம் தேதி வன்னியில் இருந்து தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் க.ஆதித்தன், கருணாநிதிக்கு இன்னொரு கடிதம் அனுப்பினார். இதன் நகலை மீண்டும் டிசம்பர் 7-ல் கருணாநிதியின் மின்னஞ்சல் முகவரிக்கு நடேசன் அனுப்பினார்.

இருந்தாலும் கருணாநிதியின் மனம் நெகிழவேயில்லை. 02.01.2009 அன்று கிளி​நொச்சியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்தது.

கிளிநொச்சி வீழ்ந்தவுடன், புலிகளை ஆயுதங்களைக் கீழே போடுமாறு சிதம்பரம் உள்பட்ட மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தினர். அந்த நேரத்தில் 12.02.2009-ல் நடேசனுக்கு ஜெகத் கஸ்பரால் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ‘அன்புள்ள திரு நடேசன், தொடர்பு விவரங்களை உள்ளடக்கிய மடல் எமது நேரம் பிற்பகல் 4.45-க்கு அவர்களால் (இந்திய அரசால்) அனுப்பப்பட்டு உள்ளது. தயவுசெய்து உறுதிப்படுத்தவும் – ஜெகத்’ என இருந்தது.

»ஈழத்தமிழர்களுக்கு கௌரவமான போர்​நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நடேசன் நேரடித் தொடர்புகளை பேணு​வதற்கு வசதியாக, 02.03.2009 அன்று மின்னஞ்சல் ஒன்றை கனிமொழி அனுப்பினார். ஆனந்தபுரம் போர் தொடங்க சில மணிக்கு முன்னர் 29.03.2009 அன்று காலையும், மதியமும் கனிமொழிக்கும், கருணாநிதிக்கும் நடேசன் அவசரச் செய்தி ஒன்றை அனுப்பினார். ‘இதைத் தன்னால் வாசிக்க முடியவில்லை’ என்று கனிமொழி பதில் அனுப்பியதால், மீண்டும் அதே செய்தியை மறுநாள் காலை கனிமொழிக்கு நடேசன் அனுப்​பினார். அதன் விவரம்…

‘அன்பான சகோதரி கனிமொழிக்கு, இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர். எமது அவலங்களைப் போக்கவே யுத்த நிறுத்தத்தை தொடர்ச்​சியாக வலியுறுத்துகிறோம். ஆனால் சிங்கள அரசு, யுத்தத்தை தொடர்ந்து நடத்துகிறது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் எல்லாம், ‘இந்திய அரசின் உதவியால்தான் இந்த யுத்தத்தை வென்றுகொண்டு இருக்கிறோம்’ என பகிரங்கமாக அறிவித்தவண்ணம் உள்ளனர். இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் இந்திய அரசை வலியுறுத்தி, யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவந்தால் எமது மக்களைக் காப்பாற்றலாம். நிபந்தனை​யற்ற யுத்த நிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்துக்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்​கின்றேன்… அன்பான சகோதரன் பா.நடேசன்’ என்று நடேசன் குறிப்பிட்டிள்ளார்.

மிகவும் நெருக்கடியான நேரத்தில் அனுப்பிய இக்கடிதத்துக்கு, கருணாநிதியோ கனிமொழியோ உடனடியாகப் பதில் அனுப்பவில்லை. புலிகளின் பகுதி சுருங்கிய நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 07.04.2009-ல் கனிமொழி பதில் அனுப்பினார். அதில், ‘நடேசன் அண்ணன், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ‘ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும்’ என்று அரசாங்கம் எதிர்பார்ப்​பதால், தயவுசெய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், இந்திய அரசாங்கம் உதவக்கூடும் போல் தோன்றுகிறது. நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவுசெய்து டெல்லியுடனேயே பேசுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் அக்கறையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. தயவுசெய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்!’ என இருந்​தது.

கனிமொழியின் இந்தக் கடிதத்துக்கான எதிர்ப்பை புலிகள் நாசூக்காகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அன்று பிற்பகல் புலிகளின் ஆயுதங்களைக் கைவிட வலியுறுத்திக் கனிமொழியால் இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டது. ‘நடேசன் அண்ணன், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக எல்லோரும் கவலையில் உள்ளோம். இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முன்வரும்பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாக அறிவிப்பதைப்பற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள். நான் சொல்வதைச் செய்ய முடியாவிட்டால், தயவுசெய்து டெல்லியில் உள்ளவர்களோடு பேசவும்! » என்று இருந்தது.

போரை நிறுத்த முயலுமாறு புலிகள் வலியுறுத்திய​போது, ஆயுதங்களைக் கைவிட கனிமொழி சொன்னது ஒரு புறம் இருக்க… நடேசனுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அப்போதைய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கத் தொடங்க, தமிழகத்தில் மீண்டும் மக்களின் கொந்தளிப்பு. அதைத் தணிக்கும் நோக்கில் 27.04.2009 அன்று சென்னையில் கருணாநிதியால் உண்ணாவிரதம் அரங்கேறியது. காலையில் தொடங்கிய கருணாநிதி, ‘தனது முயற்சியால் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட்டது’ என்று மதியத்துக்குள் பழரசம் அருந்தி முடித்துக் கொண்டார். ஆனால், அதே நாளில் வன்னியில் நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களைச் சிங்களம் நரபலி வேட்டையாடியது. கருணாநிதியை நம்பியிருந்த வன்னி மக்களுக்கு சாவைத்தான் பரிசாக வழங்கினார் கருணாநிதி. ஈழத் தமிழினமே பலிகடா ஆனது!

இவ்வாறு கடுமையான விமர்சனத்​தோடு முடிந்திருக்கிறது, அந்த கட்டுரை. அந்தத் தகவல்கள் உண்மைதானா என்பது பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி​னோம்.

பேராசிரியர் சுப.வீரபாண்​டியன், »ஈழ மக்களின் போராட்​டத்துக்கு உதவியாகத் தமிழக அரசிடம் அவ்வப்போது நான் தொடர்புகொண்டு இருந்தேன். தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் கலை​ஞர் செய்தார். இது​தான் அடிப்படை உண்மை. தேர்தல் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் தேதிவாரியாகக் கடித விவரங்களைச் சொல்ல இயலாது!’ என்று முடித்துக்​கொண்டார்.

பாதிரியார் ஜெகத் கஸ்பரிடம் கேட்டபோது, »ஈழப் போரின் கடைசிக்​கட்டத்தில் 2009 ஜனவரி, பிப்ரவரியில் இந்திய அரசின் சார்பில் போர்நிறுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில், போர்நிறுத்த வரைவைத் தயாரித்ததும், புலிகளுக்கும் இந்திய அரசுக்குமான தொடர்பாளராக இருந்ததும்தான் என் பணி.

உணர்வாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பலர் இந்த முயற்சி வெற்றிபெறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்! அதன்பிறகு ஏப்ரல், மே மாதங்களில் புலிகளின் சார்பில் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர். அதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை!’ என்றார்.

தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் கேட்டபோது, »இந்த விவகாரம் தொடர்பாக உங்களுக்கு நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை!’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

»போரை நிறுத்தச் சொல்லுங்கள்! » என்று ஈழ மக்கள் கதற… »ஆயுதங்களைக் கீழே போடுங்கள் » என்று இவர்கள் சொல்ல…. ஒன்றரை லட்சம் தமிழர்கள் பலியானது நடந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன சாட்சி இருந்தால் குற்ற உணர்வு ஏற்படும்!

- இரா.தமிழ்க்கனல்

Comments