'வெள்ளைக் கொடி விவகாரம்': ஐநா வல்லுநர் குழுவின் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது

மே 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் விடுதலைப் புலிகளின் மூன்று முதன்மைத் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் சிறிலங்கா இராணுவத்தினை அணுகியதாகவும் ஆனால் அவர்கள் மூவரும் சிறிலங்கா அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் ஐ.நாவினது வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.


"இவர்களது மரணத்திற்கான சூழமைவு தொடர்பான மிகவும் குறைந்தளவிலான தகவல்களே கிடைக்கப்பெற்றிருக்கின்றபோதும் விடுதலைப் புலிகளின் இந்த மூன்று தலைவர்களும் சரணடையும் எண்ணத்தில் இருந்தார்கள் என வல்லுநர்கள் குழு கருதுகிறது" என கடந்த ஞாயிறன்று கொழும்பிலிருந்து வெளியாகும் 'சண்டே ஐலண்ட்' பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஐ.நா வல்லுநர்கள் குழுவினது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொழும்பிலிருந்து வெளியாகும் த ஐலண்ட் பத்திரிகையில் பான் கீ முன் அமைத்த வல்லுநர்கள் குழுவினது அறிக்கை தினமும் தொடராக வெளியிடப்படுகின்ற அதேநேரம் இந்த அறிக்கை தொடர்பாக தங்களது கருத்துக்களை அரசாங்கமும் இதர நிறுவனங்களும் வெளிப்படுத்திவருகின்ற போதிலும் வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினை ஐ.நா இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

'வெள்ளைக்கொடி விவகாரம்' என அறியப்பட்ட இந்தச் சம்பவத்தினது பின்னணித் தகவல்களை உள்ளிடக்கியிருக்கும் இந்த அறிக்கையில், போரின் இறுதி நாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் பேச்சுக்கள் ஊடாக சரணடைவதற்காக ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் பலதரப்பட்ட கல்விமான்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவர்களுடன் 300 வரையிலான பொதுமக்கள் இணைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. "நிபந்தனையற்ற சரணடைவினை ஏற்றுக்கொள்வதற்குப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தயங்கியபோதும், சிறிலங்கா இராணுவத்தினர் இவர்களது இறுதி மறைவிடத்தினை நெருங்கிவிட்ட நிலையில் நடேசன், புலித்தேவன் மற்றும் பெரும்பாலும் கேணல் றமேஸ் ஆகியோர் நிபந்தனையற்ற வகையில் சரணடைவதற்குத் தயாராக இருந்தனர்" என அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

"ஐ.நா அதிகாரிகள், நோர்வே அரசாங்கம், பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள், அத்துடன் அனைத்துலகச் செஞ்சிலுவைக்குழுவின் பிரதிநிதிகளுக்குத் தங்களது சரணடையும் எண்ணத்தினை இவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்."

"மகிந்த ராபக்ச, கோத்தபாய, பசில், வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் இடைத்தரகர்கள் ஊடாக இவர்கள் தகவல் பரிமாறியிருக்கிறார்கள். புலிகளின் இந்த முதன்மைத் தலைவர்களது சரணடைதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதிபர் ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவும் உறுதியளித்திருக்கிறார்கள்."

"இந்தத் தகவல்கள் இடைத்தரகர்களால் புலிகளின் இந்தத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பசில் ராஜபச்ச குறிப்பிட்ட வழித்தடத்தின் ஊடாக வெள்ளைக் கொடியினை உயர்த்திப்பிடித்தவாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருமாறு இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது."

"இந்தச் சரணடைதலின் போது மூன்றாவது தரப்பொன்று பிரசன்னமாகியிருக்கவேண்டும் என்ற புலிகளின் வேண்டுகை நிராகரிக்கப்பட்டிருக்கிறது."

"18 மே 2009 அன்று காலை 6.30 மணியளவில் தங்களது மறைவிடத்திலிருந்து புறப்பட்ட நடேசனும் புலித்தேவனும் 58வது படைப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். இவர்களுடன் உறவினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்களும் சென்றிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கேணல் ரமேஸ் பிறிதொரு குழுவுடன் இவர்களைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள்."

"இது இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் புலித்தேவனும் நடேசனும் சுட்டுக்கொலைசெய்யப்பட்டதாக பி.பி.சியும் ஏனைய தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் இதுதான் என அரசாங்கம் வேறெரு கதையினைக் கூறியிருந்தது."

"இவர்களது மரணம் எத்தகைய சூழமைவில் சம்பவித்தது என்பது போன்ற ஒருசில தகவல்களே கிடைக்கப்பெற்றிருக்கின்றபோதும், விடுதலைப் புலிகளின் இந்தத் தலைவர்கள் சரணடைய விரும்பினார்கள் என வல்லுநர்கள் குழு கருதுகிறது."

இரண்டு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திலேயே புலிகளின் இந்தத் தலைவர்கள் கொல்லப்பட்டனர் என அரசாங்கம் கூறுகிறது. புலிகளின் இந்தத் தலைவர்களைச் சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய ராபக்சதான் உத்தரவிட்டிருந்தார் எனத் தனக்கு படையினருடன் இணைந்து செயலாற்றும் ஊடகவியலாளர்கள் கூறியதாக சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்குக் கூறியிருந்தார்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்குவதாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் பொன்சேகாவினை இராணுவ நீதிமன்றின் முன் நிறுத்தியிருந்தது.

செய்தி வழிமூலம்: Express News Service

Comments