ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்


கடந்த சனியன்று பான் கீ மூனின் வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைத் தனித்துவமாக வழங்கியிருந்த 'ஐலண்ட்' பத்திரிகை சிறிலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அதன் இதர- பொருத்தமான பகுதிகளை தொடராக வெளியிட்டு வருகிறது.

ஐ.நா நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளில் முக்கியமானதான, பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐலன்ட் நாளிதழ் முதலாவது பாகத்தில் விபரித்துள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக ஐந்து முதன்மையான குற்றச்சாட்டுக்களை வல்லுநர்கள் குழு சுமத்தியிருக்கிறது. தொடராக வெளியிடுவதற்கு எண்ணியுள்ள இந்த அறிக்கையின் முதலாவது பாகமாக போரின் போதான பொதுமக்கள் இழப்புகள் தொடர்பான தகவல்கள் தரப்படுகின்றன. இதுவிடயம் தொடர்பாக வல்லுநர்கள் குழு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

ஈ. கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை (பக்கம் 39 - 41)

132. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உறுதியான புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை. போரின் போது உண்மையில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதைச் சரியாகக் கணிப்பிடுவதை பல அம்சங்கள் கடினமாக்குகின்றன.

அவையாவன:

அ. போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆகக்கூடுதலாக 330,000 பேர் வசித்து வந்ததாகத் தெரிகின்ற போதும், போர் இடம்பெற்ற பிராந்தியத்தில் இருந்த மக்களின் மிகச்சரியான தொகை எதுவென யாருக்கும் தெரியாது.

ஆ. போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து வந்த மக்களைக் கையாண்ட நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை எதுவுமற்ற நிலையில், வன்னிப் பிராந்தியத்திலிருந்து எத்தனை பேர் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளை வந்தடைந்தனர் என்ற சரியான தகவல்கள் எதுவுமில்லை.

இ. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எத்தனை பேர் என்ற சரியான தவல்களின்மை. அத்துடன் இறுதி நாட்களில் கட்டாய ஆட்திரட்டல்களைப் புலிகள் மேற்கொண்டமை நிலைமையினை மேலும் சிக்கலாக்குகிறது.

ஈ. பல பொதுமக்கள் முறையான பதிவுகள் எதுவுமின்றி அவர்கள் கொல்லப்பட்ட இடத்திலேயே புதைக்கப்பட்டிருக்கிறார்கள், சில சமயங்களில் மரணமடைந்ததை யாரும் அறியாத நிலையில் பலர் இறந்த இடத்திலேயே கிடந்திருக்கிறார்கள்.

133. மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பகுதி ஆகியவற்றினால் திரட்டப்பட்ட காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் இறந்தவர்களின் தொகையினை ஊகிக்க முனைகிறார்கள்.

போரின் இறுதி நாட்களில் ஒட்டுமொத்தமாக 40,000 பேருக்குச் சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு 5,000 பேருக்கு அவயவங்கள் அகற்றப்பட்டிருக்கிறது எனச் சிலர் மதிப்பிடுகிறார்கள். 1:2 அல்லது 1:3 என்ற விகிதத்தில் காயம் மற்றும் இறப்புகள் இருப்பது தான் வழமை. இறந்தவர்களது தொகை அதிகமானது என்பதையே இந்த மதிப்பீடு காட்டுகிறது.

இறுதிப்போரின் பின்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தடைந்தவர்களது தொகையெதுவோ அதனை வன்னியிலிருந்த மக்கள் தொகையிலிருந்து கழித்து, இறுதிப்போரின் போது 75,000 பேர் கொல்லப்பட்டனர் என வேறு சிலர் கணக்கிடுகிறார்கள்.

(2009ம் ஆண்டு சனவரியில் போரற்ற பகுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டபோது 330,000 பொதுமக்கள் அங்கிருந்திருக்கிறார்கள் என்றும் இதற்கு முன்னரே 35,000 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார்கள் என்றும் கூறும் இந்தத் தரப்பினர் இறுதியாக 290,000 பொதுமக்கள் வன்னிப் பகுதியிலிருந்து வந்ததை வைத்துக் கொண்டே மேற்குறித்த இந்தப் புள்ளிவிபரம் வெளியிடப்படுகிறது).

134. ஐக்கிய நாடுகள் சபையினது சிறிலங்காவிற்கான அணி இன்னொரு தகவல் மூலமாக அமைகிறது. ஓகஸ்ட் 2008 தொடக்கம் 13 மே 2009 வரையிலான காலப்பகுதியில் 7721 மரணமடைந்த அதேநேரம் 18479 பேர் காயமடைந்ததாக, ஒருபோதும் வெளியிடப்படாத ஐ.நாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

மே 13ம் திகதிக்குப் பின்னர் ஐ.நாவினால் புள்ளிவிபரங்களைத் திரட்ட முடியவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளுக்குள் சென்று வருவதற்கான அனுமதி பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும் பெப்பிரவரி 2009 முதல் பொதுமக்கள் இழப்பு விபரங்களை ஐ,நா சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

பொதுமக்கள் இழப்புகள் மற்றும் இதர மனிதாபிமானக் கரிசனைகள் தொடர்பான நம்பத்தகு தகவல்களைத் திரட்டும் வகையில் 'நெருக்கடிகால செயற்பாட்டுக் குழு' என்ற ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினது புள்ளி விபரங்கள், வன்னிப் பகுதியில் செயற்பட்ட ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழு, மதத் தலைவர்கள் தரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குழு தனது புள்ளிவிபரங்களைத் திரட்டியது.

குறித்த ஒரு சம்பவத்தினை மூன்று தகவல் மூலங்களிலிருந்து உறுதிப்படுத்த முடியாமல் போனால், அந்தச் சம்பவத்தினை இந்தக் குழு உள்ளெடுக்காமல் தவிர்த்திருக்கிறது. 'தமிழ்நெற்' போன்ற வன்னிக்கு வெளியேயிருந்த தகவல் மூலங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற புள்ளிவிபரங்கள் நம்பத்தகுந்ததாக இல்லாத நிலையில் உள்ளெடுக்கப்படவில்லை.

135. ஐக்கிய நாடுகள் சபையினது சிறிலங்காவிற்கான அணியினரால் திரட்டப்பட்ட புள்ளிவிபரங்கள் ஒரு ஆரம்பமாக இருந்தாலும் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் தொகை மிகவும் குறைவானதே எனத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செயற்பட்டு வந்த பல்வேறுபட்ட அவதானிப்பாளர்கள் நேடியாகக் கண்ட இழப்பு விபரங்களே ஐ.நாவினது குழுவினால் திரட்டப்பட்டது. பல இறப்புக்கள் யாரும் பார்க்காதவாறு இடம்பெற்றிருக்கலாம். மே 13ம் நாளுக்குப் பின்னர் ஐ.நாவின் இந்த அணி புள்ளிவிபரங்களைத் திரட்டுவதை நிறுத்திய நிலையில் இதற்குப் பின்னரே அதிகளவிலான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

இடைவிடாது தொடர்ந்த எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக, இறந்தவர்களை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு மக்கள் தப்பிச் சென்றனர். இந்த மரணங்கள் தொடர்பாக எந்தப் பதிவையும் அவர்கள் மேற்கொள்ளவுமில்லை, மருத்துவமனைக்குக் கொண்டு வரவுமில்லை ஏன் சில சமயங்களில் இறந்தவர்களைப் புதைக்கவுமில்லை. இதனடிப்படையில் நோக்குமிடத்து உண்மையான இழப்பு விபரமானது ஐ.நா குறிப்பிடும் தொகை எதுவோ அதனைவிடப் பன்மடங்கு அதிகமாய் இருக்கலாம்.

136. ஐக்கிய நாடுகள் சபையானது தான் சேகரித்த இந்த இழப்பு விபரங்களை ஒருபோதும் வெளியிடவில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். அரசாங்கத்துக்கு இந்தத் தகவல்களை வழங்குவதுடன் மாத்திரம் ஐ.நா நிறுத்திக்கொண்டது.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையினரால் வழங்கப்பட்ட இழப்புகள் தொடர்பான இந்தப் புள்ளி விபரங்களை முற்றாக மறுத்த சிறிலங்கா அரச அதிகாரிகள், இந்த இழப்பு விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டது என்றும் இதுபோல இழப்பு விபரங்களைச் சேகரிப்பது ஐ.நாவின் பணியல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

போரின் போதான மக்கள் இழப்புக்கள் தொடர்பாக ஐ.நா அப்போது தனது அறிக்கைகளில் குறிப்பிடும் போது, 'அதிகமான இழப்புக்கள்' என்றும் பொதுமக்கள் இழப்புக்கள் 'ஏற்றுக்கொள்ள முடியாதளவிற்கு அதிகரித்திருக்கிறது' என்றுமே கூறிவந்திருக்கிறது.

புள்ளிவிபரங்களை வெளியிடுவதில்லை என்ற தனது நிலைப்பாட்டினை 13 மார்ச் 2009 வரை ஐ.நா கடைப்பிடித்தது. ஈற்றில் 2009ம் அண்டு சனவரி 20ம் நாள் முதல் 2800 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 7,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் இவற்றில் பல போரற்ற பகுதிகளாகப் பிரகனடப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள்ளேயே இடம்பெற்றதாகவும் ஐ.நாவின் மனிதஉரிமைகளுக்கான உயர் ஆணையர் மார்ச் 13ம் நாளன்று குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து எழுந்த அழுத்தங்கள் மற்றும் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கான தங்களது நுழைவு அனுமதியினை இழந்து விடுவோமோ என்ற அச்சம் ஆகியன தான் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா அமைப்புகள் பெரிதாக எதனையும் குறிப்பிடாதமைக்கான காரணங்களாகும்.

வன்னிப் பிராந்தியத்தில் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த அந்த வேளையில் ஐ.நா இழப்பு விபரங்களை வெளியிடத் தவறியதாகப் பலர் குற்றம் சுமத்துகிறார்கள். ஏனைய பிராந்தியங்களில் இடம்பெற்ற மோதல் நிலையுடன் ஒப்பிடும்போது சிறிலங்காவில் தான் ஐ.நா இதுபோல புள்ளிவிபரங்களை வெளியிடுவதில் எச்சரிக்கையுடன் இருந்திருக்கிறது.

137. போர் முடிவுக்கு வந்தபின்னர் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், தங்களது உறவினர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அதிகளவிலான மக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் போரின்போது 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதாக நம்பத்தகு தகவல் மூலங்கள் கூறுகின்றன.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் போரின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான புள்ளிவிபரங்கள் எதுவும் இன்னமும் இல்லை. ஆனால் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டார்கள் என பல்வேறுபட்ட நம்பத்தகு தகவல் மூலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை இந்தச் சூழமைவில் நிராகரித்துவிட முடியாது.

முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படுவதுதான் போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் உண்மையான தொகையினைக் கண்டறிவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுவதற்கும் வழிசெய்யும்.

கடந்த சனியன்று பான் கீ மூனின் வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைத் தனித்துவமாக வழங்கியிருந்த 'ஐலண்ட்' பத்திரிகை சிறிலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அதன் இதர- பொருத்தமான பகுதிகளை தொடராக வெளியிட்டு வருகிறது.அதில் பொதுமக்கள் இலக்குகள் மீதான எறிகணைத் தாக்குதல்.. வல்லுநர்கள் குழுவின் அறிக்கையின் இரண்டாம் பாகம்:

பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பொருத்தமான பகுதிகளை முன்னர் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இன்றும் தொடர்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வல்லுநர்கள் குழு ஐந்து முதன்மையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தது. அதிகளவிலான பொதுமக்கள் இழப்புகள் என்பதுதான் அது முன்வைத்த முதலாவது குற்றச்சாட்டு.

நேற்றையதினம் வெளிந்ததன் தொடர்ச்சியாக பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பாக வல்லுநர்கள் குழுவினது அறிக்கையின் பொருத்தமான பகுதி இங்கே தரப்படுகிறது. வல்லுநர்கள் குழுவின் அறிக்கையின் 28 தொடக்கம் 32வது பக்கத்திற்கும் இடைப்பட்ட விடயங்கள் இங்கு தரப்படுகிறது.

6. இரண்டாவது போரற்ற பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்கள்

100.06 பெப்பிரவரி 2009 முதல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கடல், வான், தரை என அனைத்து முனைகளிலிருந்தும் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மிகவும் குறுகிய இந்த நிலப்பரப்பினுள் 300,000 தொடக்கம் 330,000 வரையிலான பொதுமக்கள் அப்போது செறிந்திருந்திருக்கிறார்கள்.

வான்வழித் தாக்குதல்கள், நீண்ட தூரவீச்சுக்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள், மோட்டார்கள், பல்குழல் எறிகணை செலுத்திகள், ஆர்.பி.ஜி உந்துகணைகள் மற்றும் சிறியரக துப்பாக்கிகள் ஆகியவற்றைக்கொண்டு அரச படையினர் தாக்குதல்களை நடாத்தியிருக்கிறார்கள்.

சில சம்பவங்களின் போது மிகவும் குறுகிய தூரத்திலிருந்தும் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது.

பல்குழல் எறிகணை செலுத்தி என்பது ஒரே நேரத்தில் அதிகளவிலான எறிகணைகளை பரந்துபட்ட இடத்தினை நோக்கி பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் செறிந்துவாழும் பிரதேசம் ஒன்றை கோக்கிப் பயன்படுத்தும் போது மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதோடு மக்கள் இழப்புகளும் அதிகமிருக்கும்.

101. அந்தக் காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு கூறியிருந்தார், "பொதுமக்கள் பாதிக்காதவாறுதான் நாங்கள் படை நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்கிறோம். பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் அதிக அக்கறையுடன் இருக்கிறோம். இல்லையேல் ஆட்லறி எறிகணைகளைச் செறிவாகப் பயன்படுத்தி எங்களால் வேகமாக முன்னேறிச்செல்லமுடியும்" என்றார் அவர்.

பெப்பிரவரி 25 மற்றும் ஏப்பிரல் 27 ஆகிய நாகட்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போரற்ற பகுதிகளுக்குள் ஆட்லறி எறிகணைகளையோ அன்றில் கனரக ஆயுதங்களையோ பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் அங்கு இடம்பெற்றது எதுவோ அது அரசாங்கத்தின் இந்த உறுதிப்பாட்டுக்கு எதிரானதாகவே தெரிகிறது.

இடைவிடாத ஆட்லறி எறிகணைத்தாக்குதல்தான் இராணுவத்தின் படைத்தந்திரத்தின் பிரதான அங்கமாகத் திகழ்ந்திருக்கிறது. வெற்றி நெருங்கிவந்தபோதும் அரச படையினர் இந்தத் தந்திரத்தினைக் கைவிடவில்லை, மாறாக எறிகணைத் தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகள் எதுவுமே செய்யமுடியாததொரு நிலையில் மக்கள் அதிகம் செறிந்திருந்த பகுதிகளுக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருந்த நிலைமையிலும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்தவில்லை.

படையினர் இவ்வாறு வகைதொகையின்றித் தொடர்ந்தும் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு ஏற்ப அவர்களுக்கு அழுத்தத்தினைக் கொடுக்கும் வகையிலும் அரச படையினர் வேண்டுமென்றே இந்த எறிகணைத் தாக்குதல்களை நடாத்தியிருந்தார்கள். போரற்ற பகுதிகள் மீது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும் இங்கு மூன்றாவது இணைப்பில் காட்டப்பட்டிருக்கின்ற செய்மதிப் ஒளிப்படத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆட்லறி எறிகணை செலுத்திகள் போரற்ற பகுதிகளை இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்தப்படுவதற்கான தயார் நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் தாக்குதல்களை நடாத்துவதற்கு ஏற்ப அவர்களிடம் எஞ்சிய ஓரிரு கனரக ஆயுதங்களே இருந்தது. அத்துடன், கனரக ஆயுதங்களை வைத்துத் தாக்குதல்களை நடாத்துவதற்கு ஏதுவாக போதிய இடமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை.

102.
குறிப்பிட்ட இந்தக் கரையோரப் பகுதி நாளுக்கு நாள் மக்களால் நிரம்பி வழிந்த நிலையில், வாழுவதற்கான இடத்துக்கான பற்றாக்குறை அதிகரித்துச்சென்றது. இடம்பெயர்ந்த மக்கள் தங்களது கூடாரங்களை கடற்கரையோரங்களை அண்டியே அதிகம் அமைத்திருந்தார்கள்.

மாற்றுத் தெரிவுகள் எதுவுமற்ற நிலையில் மக்கள் குடியிருப்பதற்கே பொருத்தமாக அமையாத கரையோரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் இவர்கள் கூடாரங்களை அமைத்தனர். இந்தச் சதுப்பு நிலங்களில் பதுங்கு குழிகள் அமைத்துத் தங்களைப் பாதுகாக்க முடியாத நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டார்கள்.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் தங்களால் முடிந்தளவிற்கு இவர்கள் அமைத்த பதுங்குகுழிகளுக்குள்ளேயே இந்த அகதிகள் நாளின் பெரும்பகுதியினைக் கழித்தார்கள். தங்களைப் பாதுகாக்கும் இன்னொரு முயற்சியாக இந்த மக்கள் தங்களது பதுங்குகுழிகளுக்கு மேல் வெள்ளைக் கொடிகள் நாட்டியிருந்தார்கள்.

போதிய குடிநீரோ அன்றி உணவோ இவர்களிடத்தில் இருக்கவில்லை. பட்டினியின் விளைவாகவும் குறிப்பிட்ட அகதிகள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்டார்கள். திடீரென மழை கொட்டத்தொடங்கியபோது இந்த மக்களின் பதுங்குகுழிகளுக்கு நீர் புகுந்துவிட, இந்த மக்கள் பேரவலத்திற்குள் தள்ளப்பட்டனர்.

07. புதுமாத்தளன் மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதல்

103.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை புதுமாத்தளனுக்கு நகர்த்தப்பட்ட நிலையில், 'வன்னிப் பகுதியில் அரச மருத்துவமனைகள் எதுவும் செயற்படவில்லை' என அரசாங்கம் அறிவித்தது.

எது எவ்வாறிருப்பினும் இரண்டாவது தடவையாக அறிவிக்கப்பட்ட போரற்ற பகுதியில் மூன்று தற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டன.

புதுமாத்தளன் பாடசாலையில் ஒரு மருத்துவமனையும் வலைஞர்மடம் பகுதியில் இன்னொரு மருத்துவ நிலையமும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பறிதொரு தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மருத்துவமனைகளின் அமைவிடத்தினது ஆள்கூற்றுப் புள்ளிகள் தொடர்பான விபரங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு மருத்துவமனையினை அடையாளப்படுத்தும் வகையில் குறியீடுகளும் பயன்படுத்தப்பட்டன. அரச மருத்துவர்கள் காயமடைந்த மக்களுக்குத் தொடர்ந்தும் சேவையாற்றினர்.

தினமும் காயமடையும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு வந்துசேர புதுமாத்தளன் மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தது.

வன்னிக்கான அடிப்படை மருத்துவ விநியோகத்தினை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்திய நிலையில், புதுமாத்தளன் மருத்துவமனையில் அடிப்படை மருந்துப் பொருட்கள் எவையும் இருக்கவில்லை.

உறுப்புகள் சிதைந்து காணப்பட்ட நோயாளர்களின் உறுப்புகள் மயக்க மருந்து ஏற்றப்படாமல் துண்டிக்கப்பட்டன. சத்திரசிகிச்சைக் கூடத்தில் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் அற்ற நிலையில் கசாப்புக் கடைக் கத்திகளைக் கொண்டு உறுப்புகள் துண்டிக்கப்பட்டன.

மருந்து கட்டும் மருத்துவப் பொருட்கள் எதனையுமே இல்லாத நிலையில் பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் பயன்படுத்தும் துவாய் மற்றும் பருத்தித் துணிகள் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் மரங்களின் கீழே படுக்கவைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான குளுக்கோஸ் போன்ற திரவ ஊடகங்கள் மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் பாய்ச்சப்பட்டன.

இந்த தற்காலிக மருத்துவமனைகளில் கடமையாற்றிய ஒரு சில மருத்துவர்கள் ஓய்வுறக்கமின்றி தங்களால் முடிந்த பணியினைச் செய்துகொண்டிருந்தபோது பொருத்தமான மருத்துவப் பராமரிப்புக்கான வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் பலர் செத்து மடிந்தனர். ஒவ்வொரு நாளும் மருத்துவமனையின் முன்பக்க மூலையில் இறந்த உடலங்கள் வந்து குவிந்தன.

104.
பெப்பிரவரி 09 2009 அன்று புதுமாத்தளன் மருத்துவமனை வளாகத்திற்குள் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தமையினால் 16 நோயாளர்கள் கொல்லப்பட்டனர்.

சாலை பகுதியிலுள்ள சிறிலங்கா இரராணுவத்தின் தளத்திலிருந்தே முதலில் எறிகணைகள் ஏவப்பட்டபோதும் புதுமாத்தளன் நீரேரிக்கு மறுபுறம் இருந்தும் மோட்டார்கள் ஏவப்பட்டன. ஆற்றுக்கு மறுபுறத்திலிருந்துகொண்டு கடற்கரைப்பக்கமாக அமைந்திருந்த மருத்துவமனையின் செயற்பாடுகளை வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடியும். இருந்தபோதிலும் மருத்துவமனையினை இலக்குவைத்துப் படையினர் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள்.

காயமடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றபோதும் காயமடைந்த பொதுமக்களுடன் ஒப்பிடும் போது அளவில் குறைவான இந்தப் போராளிகள் தனியானதொரு விடுதியில் வைத்துப் பராமரிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் பெப்பிரவரி மாதத்தின் இறுதிப் பகுதி மற்றும் மார்ச் மாதத்தின் முதல்பகுதியில் பலமுறை இந்த மருத்துவமனையின் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன. மார்ச் 27ம் நாளன்று இந்த மருத்துவமனையின் மீது படையினர் மேற்கொண்ட ஆர்.பி.ஜி எறிகணைத் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களைத் தவிர, தற்காலிக மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக்கூடம், நோயாளர் விடுதி என்பனவும் சேதமடைந்தன.

105.
இது இவ்வாறிருக்க தனித்தனியாக இடம்பெற்ற சம்பவங்களினால் தினமும் எறிகணைத் தாக்குதல்களும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆளற்ற வேவு விமானத்தின் துணையுடன் மக்கள் கூடுமிடங்களை இனங்கண்டு அவற்றின் மீதும் சிறிலங்கா அரச படையினர் எறிகணைத் தாக்குதலை நடாத்தியிருக்கிறார்கள்.

மார்ச் 25ம் நாளன்று அம்பலவன்பொக்கணைப் பகுதியினை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல்குழல் எறிகணைத் தாக்குதலின் விளைவாக சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 140 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஏப்பில் 08 2009 அன்று அம்வலவன்பொக்கணைப் பகுதியில் பிராந்திய சுகாதார சேவைகளினால் வழங்கப்பட்ட குழந்தைகளுக்கான பால்மாவினைப் பெறுவதற்காக காத்திருந்த மக்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலின் போதும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பால்மாவினைப் பெறுவதற்காக குழந்தைகளின் பதிவுப் புத்தகத்துடன் சில தாய்மார் இறந்துகிடந்தனர்.

8. செஞ்சிலுவைக்குழுவின் கப்பல் ஊடாக வழங்கப்பட்ட மனிதாபிமான நிவாரண உதவிகளுக்கான தடைகள்

106.
பெப்பிரவரி 10 2009 முதல் காயமடைந்தவர்களை கப்பல்கள் மூலம் போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து வெளியேற்றியதன் ஊடாகவும் மக்களுக்கான உணவு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றதன் ஊடாகவும் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் துயரங்களைப் போக்கும் வகையில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு முதன்மையான பணியினை ஆற்றியிருந்தது.

போரின் இறுதி மாதங்களில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் கப்பல்கள் 16 முறை போரிடம்பெற்ற பகுதிக்குச் சென்றுவந்திருக்கிறது. வன்னிப்பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் வெளிநாட்டுப் பணியாளர்கள் முதலாவது கப்பலில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

இருப்பினும் ஒவ்வொரு முறை கப்பல் வரும்போதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளில் நான்கு அல்லது ஐந்து மணிநேரங்கள் வரை அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவினர் தங்கியிருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையினது பணியாளர்கள் கப்பலில் பயணிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

107.
காயமடைந்த பொதுமக்களுக்கும், மோசமாகக் காயமடைந்தவர்களுக்குத் துணையாக ஒருவருக்கும் பயண அனுமதியினை வழங்கிய புலிகள் அவர்களைக் கப்பலில் பயணிக்க அனுமதித்தனர்.

கரையிலிருந்து ஒரு கடல்மைலுக்குக் குறைவான தூரத்திற்குக் கப்பல் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிறிய படகுகளின் ஏற்றப்பட்ட நோயாளர்கள் பின்னர் நடுக்கடலில் வைத்துக் கப்பல்களின் ஏற்றப்பட்டனர்.

கரைகளில் நீண்ட நேரம் காத்திருந்தே நோயாளர்கள் கப்பல்களின் ஏறினர். ஆனால் இவ்வாறு கரைகளில் கப்பலுக்காகக் காத்திருந்த நோயாளர்களை இலக்குவைத்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

சிறிலங்கா அரச படையினரால் ஏவப்பட்ட எறிகணைகள் சிலசமயம் செஞ்சிலுவைக் குழுவின் கப்பலை அண்டிய பகுதியிலும் வீழ்ந்து வெடித்தன. ஏப்பிரல் 22ம் நாளன்று கப்பலுக்கு அருகாக எறிகணை வீழ்ந்து வெடித்த நிலையில் கப்பலின் கப்டன் அதனை ஆழ்கடலுக்கு ஓட்டிச்சென்றிருந்தார்.

108.
அத்துடன் இந்தப் பிராந்தியத்தில் சிக்கியிருந்த பொதுமக்களுக்கான உணவு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஒரேயொரு வழிவகையான செஞ்சிலுவைக்குழுவின் கப்பல்கள் செயற்பட்டன.

ஆனால் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் அளவு அங்கிருந்த மக்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. போரற்ற பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்தப் பிராந்தியத்தினது நிலைமை நாளுக்குநாள் மோசமாகிச்சென்ற நிலையில் மார்ச் 17ம் நாளன்று அங்கு சென்ற கப்பலில் பயணித்த செஞ்சிலுவைக்குழுவின் பணியாளர் ஒருவரைச் சூழ்ந்துகொண்ட அகதிகள் தங்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுமாறு அவர்களிடம் மன்றாடினர். ஆனால் புலிகள் அந்த மக்களைக் கட்டாயத்தின் பெயரில் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

09 மே 2009 அன்றுதான் வன்னிப்பகுதியினை நோக்கி செஞ்சிலுவைக்குழுவின் இறுதிக் கப்பல் சென்றிருந்தது. 15 மே 2009 அன்று காயமடைந்தவர்களை ஏற்றவென பிறிதொரு கப்பல் அங்கு சென்றபோதும் மோதல்கள் உக்கிரமாகத் தொடர்ந்த நிலையில் தனது இலக்கினை அடையாமல் அங்கிருந்து திரும்பியது.

இரண்டாவது பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்பட்ட பகுதியிலிருந்து ஒட்டுமொத்தமாக 14,000 காயமடைந்த மக்களும் அவர்களுக்குத் துணையாகச் சென்றவர்களும் செஞ்சிலுவைக்குழுவின் கப்பல்கள் ஊடாக அப்புறப்படுத்தப்பட்டனர். தவிர 2350 மெற்றிக்தொன் உணவுப்பொருட்கள் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செஞ்சிலுவைக்குழுவின் கப்பல்கள் மூலம் அனுப்பப்ட்டிருக்கிறது.

இவ்வாறாக செஞ்சிலுவைக் குழுவின் கப்பல்கள் ஊடக அப்புறப்படுத்தப்பட்ட காயமடைந்த அனைவரும் பொதுமக்களே. விடுதலைப் புலிகள் தங்களது காயமடைந்த உறுப்பினர்களைக் கப்பல்கள் மூலம் அனுப்பவில்லை.

Comments