பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைப்பு நடக்க இருந்தது. ‘மாலையில்தான் ஊர்வலம் நடக்கும்’ என அறிவித்து இருந்தாலும், காலை நேரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டம்.
பிரபாகரன், வைகோ படங்களைக்கொண்ட அட்டைகளும் ம.தி.மு.க கொடிகளும் அதிகம் தென்பட்டன. ஏனோ பொலிஸ் தலைகள் குறைவாகவே இருந்தன.
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். அஸ்தி கலசத்தை ஏந்தியபடி ஊர்வலத்துக்குச் செல்லத் தயாரானார் வைகோ. ஆயிரக்கணக்கில் காத்து நின்ற தமிழ் ஆர்வலர்களும் அமைதியாக ஊர்வலத்துக்குத் தயாரானார்கள்.
அப்போது அங்கு வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர், ”நீங்கள் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் செல்வதற்குத்தான் அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ஹோட்டலில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதிக்க முடியாது!” என்று தடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் ஆளாளுக்கு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் இறங்க, உடனே அனைவரையும் அமைதிப்படுத்திய வைகோ, ”நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து காரில்தான் வெளியே வர வேண்டுமா? ரோட்டில் நடக்கவும் அனுமதி இல்லையா?” என்று சூடாகக் கேட்டபடி விறுவிறுவென நடந்தார்.
அவருடன் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோரும் இணைந்துகொண்டனர். அமைதியாக சென்றுகொண்டு இருந்த ஊர்வலத்தில் திடீரென ஒருவர், ”தலைவர் பிரபாகரன் வாழ்க!” எனக் கோஷம் எழுப்பியதும் சூடு பற்றியது.
”வீர வணக்கம்… வீர வணக்கம்… பார்வதி அம்மாளுக்கு வீர வணக்கம்!” என்ற கோஷமும் விண்ணை முட்டத் தொடங்கியது.
உடனே சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர், கூடுதல் பொலிஸாரை அனுப்பும்படி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சற்று நேரத்தில் ஆயுதப் படை பொலிஸார் வந்து சேர்ந்தனர்.
கடற்கரை எங்கும் தமிழ் ஆர்வலர்கள் திரண்டு நின்றதால், சுற்றுலா வந்தவர்கள் திணறித்தான் போனார்கள். ஆனாலும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், நடப்பதை ஆர்வமாக விசாரித்துக்கொண்டு இருந்தனர்.
அஸ்தியைக் கரைத்த பின்னர் திரண்டு நின்ற கூட்டத்தினரிடம் பேசிய வைகோ,
இந்தக் கடற்கரையின் அலை ஓசை, இதே கடலின் மறு பக்கமான வல்வெட்டித்துறையில் எதிரொலிக்கும். உலகம் இதுவரை கண்டிராத ஆயுதப் போராட்டத்தை நடத்தித் தமிழனின் புகழை இமயம் அளவுக்கு எட்டச் செய்தவர் பிரபாகரன். அவரது தாயார் பார்வதி அம்மாள் அஸ்தியை கடந்த 22-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கரைத்தோம். இப்போது கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைத்து இருக்கிறோம்.
இந்த வீரத் தாயை சிங்கள இராணுவம் இறுதிக் காலத்தில் கூட நிம்மதியாக வாழவிடாமல் அலைக்கழித்தது. அந்தத் துயரத்திலேயே அவரும் இறந்துபோனார். அவரை எரித்த சிதையில் சிங்கள இராணுவம் மூன்று நாய்களைக் கொன்று தூக்கிப் போட்டது. இதைவிட, தமிழனுக்கு என்ன அவமானம் வேண்டும்?
விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு இருக்கும் ஒரு செய்தியில், ‘பிரபாகரனை போர்க் களத்தில் அழித்ததற்கான எந்த ஓர் ஆதாரமும் இல்லை!’ என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியையும் சாராத இளைஞர்கள், மாணவர்கள் அணி திரள வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழ் ஈழத்தைக் காப்பாற்ற கடல் கடந்து செல்லும் காலம் விரைவில் வரும்!” என்றார் ஆக்ரோஷமாக.
பழ.நெடுமாறன் பேசும்போது,
பிரபாகரனின் தாய்க்கு இலங்கை அரசு செய்த கொடுமைகள் சொல்லி மாளாது. அவர் சிகிச்சை பெறுவதற்குக்கூட இந்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனை மக்கள் ஒருபோதும் மறக்கவோ… மன்னிக்கவோ மாட்டார்கள்” என்றார் வேதனையுடன்.
உணர்ச்சிப் பிழம்பாகப் புறப்பட்ட இளைஞர்கள், கண்ணீருடன் கலைந்து சென்றனர்!
நன்றி – ஜூனியர் விகடன்
Comments