முள்ளிவாய்க்காலில் எமது இனம் அழிவை நோக்கி அதிவிரைவாக சென்று கொண்டிருந்ததை நாம் ஆற்றமுடியாத ரணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக அறப்போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் ஒருசேர முன்னெடுக்கவேண்டிய வரலாற்றுத் தருணத்தில் உள்ளோம்.
ஆம் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள போர்குற்ற அறிக்கையே இந்த போர்களத்தை திறந்து வைத்துள்ளது. தமிழர் தாயகப்பகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்குற்றங்கள், மனித உரிமைமீறல்கள் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு விளக்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழு தனது விசாரணைகளை சிறிலங்காவில் காலடிவைக்காமலே முடித்து அறிக்கையாக தயாரித்து வழங்கியுள்ளது.
இந்த நிபுணர்கள் குழு வழங்கியுள்ள அறிக்கையானது சிங்களவர்களால் மூர்க்கத்தனமாக விமர்சிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வருவதனால் முற்றுமுழுதாக எமக்கு சாதகமானதாக கருதிவிடமுடியாது. இருந்தாலும் தமிழீழத்திற்காக சர்வதேச நாடுகளின் தளத்தில் நின்று அவர்களின் வழியிலேயே போராடி வெற்றி பெறுவதற்கான ஆயுதமாக இந்த நிபுணர் குழு அறிக்கையினை உலகத்தமிழர்களாகிய நாம் பயன்படுத்த வேண்டும்.
சிறிலங்காவில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை போலியானது. நம்பத்தகுந்த விடையங்களின் அடிப்படையில் அமையாதது – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.
யுத்த நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை – அசுகிரிய பீடாதிபதி.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மறைமுகமாக நோக்கத்தை கொண்டது – கோத்தபாய ராசபக்சே.
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் - சயித் பிரேமதாச.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பொய்யானது – ஜே.வி.பி.
சிங்களவர்கள் ஆளும் கட்சி எதிர்க் கட்சி பௌத்த மதத் தலைவர்கள் என வேறுபாடுகளையும் பேதமைகளையும் தூர வீசி எறிந்துவிட்டு சகல தளங்களிலும் உள்ளவர்கள் தேசத்திற்கே ஏற்பட்ட ஆபத்தாக கருதி மூர்க்கத்தனமாக தமது கருத்துக்களை பதிவு செயதுவருகையில் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவதைப் போன்று சிங்களத்தின் அதிபர் மகிந்த ராசபக்சே நாட்டுமக்களிற்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
வரும் மே தினத்தன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளதோடு நில்லது சினிமா கதாநாயகன் வீர வசனம் பேசுவதைப் போன்று தேசத்திற்காக மின்சார நாற்காலி தண்டனை தந்தாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்து அசத்தியுள்ளார்.
30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத சில தரப்பினர் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ராசபக்சே இவ்வாறான போலிப் பிரச்சாரங்களிற்கு பதிலளிப்பதற்கு தான் தயார் என்றும் கொக்கரித்து தேசத்திற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு மின்சார நாற்காலி தண்டனையைத் தந்தாலும்கூட சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா மீது சுமத்தப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்தும் மனித உரிமை மீறல்களில் இருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு குழுக்களை அமைத்து தொடர்புடைய நாடுகளிற்கு அனுப்பி அதிரடி நடவடிக்கையில் சிங்களம் இறங்கிய போதிலும் தமிழர் தரப்பில் இருந்து ஆக்கபூர்வமான நகர்வுகள் எதுவும் நடைபெறாதது கவலைக்கிடமாகும்.
நாம் தாமதிப்போமேயானால் அதிவிரைவாக செயற்படும் சிங்களம் சர்வதேசத்தை சரிக்கட்டி ராசதந்திர ரீதியில் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அப்படி இல்லாவிட்டால் கூட தமது ஆதரவு நாடுகளிடம் அடைக்கலம் கோரி தம்மை பாதுகாக்க சிங்களம் தயங்காது.
இதனையே கோத்தபாய ராசபகசே எச்சரிக்கையாக விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை மறைமுக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கோத்தபாய வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உறுப்பு நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறான அறிக்கைகளை வெளயிட முனைப்புக் காட்டினால் சீனா ரசியா போன்ற நாடுகளிடம் பாதுகாப்பு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வழங்கியுள்ள அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவத்து வரும் மே முதலாம் திகதி பாரிய எதிர்ப்புப் போராட்டத்தினை நடத்துவதற்கு ராசபக்சே உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலக பணியாளர்கள் மீது தாக்குதல் நடந்தால் பாரிய எதிர் விளைவுகள் ஏற்படும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே சிங்கள இனவாதிகளால் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் சிங்கள அரசின் மீது போர்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடாத்தப்பட உள்ள போராட்டத்தின் போது ஐ.நா. அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் இருப்பதனாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்குற்றங்களிற்காக சர்வதேச சட்டதிட்டங்களிற்கமைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கையினை ஏற்றுக் கொள்ள மறுத்து அடாவடி செய்யும் சிங்களத்தின் அடாவடித்தனத்தினையும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததை பொறுக்க முடியாது கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வரை அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ள சிங்களத்தின் கொலைவெறியினையும் பார்த்துக் கொண்டிருக்கும் நீதிவழங்கும் நாடுகள் சிங்களத்துடன் எவ்வாறு தமிழரகள் சேர்ந்துவாழ முடியும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழர் தரப்பில் இருந்து சில குரல்கள் எழுந்தாலும் நாம் வலுவாக போராட வேண்டியது உயிரினும் மேலானதாகும். அடித்தவன் பழித்தவன் கொலை செய்தவன் கற்பழித்தவன் சொத்துகளை சூறையாடியவன் அழித்து நாசமாக்கியவன் தேசத்தை சுடுகாடாக்கியவன் என எல்லாமும் செய்த சிங்களன் முதல் ஆளாக தன்னை காத்துக் கொள்ள மார்க்கம் தேடிக் கொண்டிருக்கும் போது எல்லாவகையிலும் துன்பத்தையும் வலிகளையும் இழப்புக்களையும் ஒருசேர அனுபவித்துக் கொண்டு இருக்கும் நாம் மாத்திரம் எப்படி வெறும் அறிக்கைகளுடன் ஓய்ந்து போகலாம்…?
சுதந்திர சிற்பிகளாக தேசத்தைப் படைப்பதற்கான பாதையில் பயணித்து மாவீரர்களான காவல்தெய்வங்கள் களத்தில் எதிர்கொண்ட சூழலைவிட இதுஒன்றும் கடினமானது இல்லை. முழுமையான சனநாயக சுதந்திர நாட்டில் வாழும் நாம் எதற்காக தயங்கவேண்டும்.
தமது பாதையில் தமிழினம் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில்தானே நாற்பதாயிரம் மான மறவர்கள் எதிரிகளை சாய்த்து வீரகாவியமானார்கள். அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கலாமா…?
தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பை ஒப்படைப்பதா என நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான போரில் மிகப் பெரிய அளவிற்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்பு வலையத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதெனவும், போர்ப் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நிபுணர் குழு, இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட சிறிலங்கா அரசிடம் விசாரணைப் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒப்படைக்குமாறு கூறுகிறது? என நியாயமான கேள்வியை முன்வைத்துள்ளார் சீமான் அவர்கள்.
மேலும் தெரிவித்துள்ள சீமான. சிறிலங்கா இனப்பிரச்சினை தொடர்பில் அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான சிறிலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது. இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால் அல்லது சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலையை மறைக்க முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்று எச்சரித்துள்ளார்.
சிங்கள தேசம் இழைத்த போர்குற்றங்களிற்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக இந்திய அரசு தமிழ்மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பழ.நெடுமாறன் ஐயா கருத்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது ஐ.நா. அறிக்கை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நா. அறிக்கை முதலாம் குற்றவாளியாக சிறிலங்கா அரசாங்கத்தையும் இரண்டாம் குற்றவாளியாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் மூன்றாவது குற்றவாளியாக ஐ.நா.அமைப்பையுமே அடையாளம் கண்டுள்ளது.
சிறிலங்காவில் போர் நடந்தபோதும் அதற்கு முன்னரும் பின்னரும் எதுவுமே நடைபெறவில்லை என்று கூறி இனி யாரும் தப்பிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பிலே உலகம் கேள்விகளை கேட்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் போரினால் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியையும் சமாதானத்தையும் ஐ.நா. சபை உடனடியாக கொண்டுவந்து தந்துவிடும் என்று நாங்கள் கனவு காண முடியாது என இதன் யதார்த்தத்தை விளக்குகிறார் மனோ கணேசன் அவர்கள்.
சிறிலங்காவின் அரச தலைவர்களையும் படைத் தலைவர்களையும் கூண்டிலேற்ற இதுவே முதற்படி என உரைத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையின் தொடர் விளைவாக சிறிலங்காவின் ஆளும் வர்க்கத்தையும் படை உத்தியோகத்தர்களையும் சர்வதேச சுயாதீன போர்குற்றவியல் விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வலியுறுத்தியுள்ளது.
இதை நியாயப்படுத்தி நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து பாரதூர அத்து மீறல்களில் நான்கு சிறிலங்கா அரசாங்கத்தாலும் அதன் ஆயுதப்படைகளினாலும் திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்டிருக்கும் ஓர் இன அழிப்புச் செயல் என கண்டறிந்துள்ளது என்பதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. அவையாவன
1.பரந்துபட்ட குண்டுத்தாக்குதல் மூலம் பொதுமக்கள் கொல்லப்பட்டமை.
2.வைத்தியசாலைகளும் பாடசாலைகள் உட்பட பொது மக்கள் வதிவிடங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தியது.
3.மனிதாபிமான உதவி மறுப்பு
4.போரில் உயிர்தப்பிப் பிழைத்து உள்ளுரில் இடம்பெயர்ந்தோரும் சந்தேகத்திற்குரிய விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கிய பாதிக்கப்பட்டோர் அனுபவிக்கும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை சிங்கள அரசாங்கத்தாலும் அதன் சிங்களப் படையாலும் இயக்கப் பெற்று பாதுகாப்பற்ற வன்னிப் பொதுமக்களிற்கு எதிராக இழைக்கப்பட்டவை என்பதனால் திட்டமிடப்பட்டு சிறிலங்கா அரசினால் செயற்படுத்தப்பட்ட இனப்படுகொலை என்பது தெளிவாக நிரூபணமாகின்றது.
மேலும் நிபுணர் குழுவினரால் கண்டறியப்பட்ட பிரத்தியேக தீங்கான இனரீதியிலான அரசியல் சமூக பொருளாதார தவிர்ப்புக் கொள்கைகளால் தமிழர்கள் தொடர்ந்தும் இனப்படுகொலைத் திட்டங்களிற்கு உட்படுத்தப்படுவதை சான்று படுத்தும்.
இந்த அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் மற்றையோரும் ஒட்டு மொத்த தமிழர் படுகொலை சம்பந்தமாக கூறிவந்ததை ஊர்சிதப்படுத்துகின்றது. போர் குற்றங்கள் மனிதாபிமான குற்றச் செயல்கள் ஆகியவை பற்றி அறிக்கை தெளிவுபடக் குறிப்பிடுகின்றது.
இவ் அறிக்கை வெளியானதுடன் சிறிலங்கா அரசின் தமிழர் படுகொலை சம்பந்தமான கண்துடைப்பு பிரச்சாரம் தோல்வியுற்றுள்ளது. இறுதியில் சிறிலங்காவின் தலைவர்கள் அவர்கள் தமிழர்கள் மேல் நடாத்திய கொலைகளுக்கு உரிய விலையை கொடுப்பதுடன் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு காரணமாயும் அமைகிறது.
அந்த அறிக்கையில் கற்பழிப்பு சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு ஆட்கடத்தல் பரந்துபட்ட குண்டுத்தாக்குதல் உணவு மருந்து மறுப்பு ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மிரட்டல் ஆகியன கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தமிழ் மக்கள் ஆதியில் இருந்தே அபிப்பிராயப் பட்டது போன்று சிறலங்கா அரசால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பலத்த விமர்சனங்களிற்கும் கண்டனங்களிற்கும் உள்படுத்தப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவு குறைபாடுகள் உடையது என்பதுடன் சர்வதேச தரத்திற்கு அமைய நம்பகத்தன்மை அற்றதும் செயற்திறன் அற்றதுமாகும் என அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது. அரசாங்கம் நடாத்திய தமிழ்ப் பொது மக்களின் படுகொலைகள் சம்பந்தமான விவர அறிக்கை ஒன்று ஏற்கனவே ஐ.நா.குழுவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் சமர்பிக்கப்பட்டதுடன் திரு.நடேசன் அவர்களுடைய மகனுடைய நேர்முக வாக்கு மூலத்திற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திரு.நடேசன் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். அவருடைய மகனுடைய வாக்குமூலம் நடேசனுடைய இறுதிக்கணங்கள் சம்பந்தமான உண்மையான தகவல்கள் அடங்கியது.
இன்னுமொரு நம்பகரமான சாட்சியம் கேணல் ரமேஷ் அவர்களின் மனைவியால் வழங்கப்பட்டது. சிறிலங்காவின் அரச தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூண்டில் ஏற்ற இதுவே முதல்படி என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதுடன் இவர்கள் நாளடைவில் போர்குற்றங்கள் மனிதவிரோத மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் முகம் கொடுத்தே ஆகவேண்டும் என நம்புகின்றது.
இவ் அறிக்கை இறுதிப்போர் நடைபெற்ற காலத்திலும் போர் முடிவுற்ற அண்மைக்காலத்திலும் ஐ.நா.வினதும் மனித உரிமைகள் குழுவினரதும் மோசமான நடவடிக்கைகளையும் கண்டிக்கத் தவறவில்லை.
இவ் அறிக்கை ஐ.நா.வின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கருத்துப்பரிமாறலை இவ் அறிக்கை ஆரம்பித்து வைக்கும் என்பது எங்களது உளமார்ந்த நம்பிக்கை.
தமிழ்த் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் ஒவ்வாத பிணைப்பால் நல்ல அயலவர்களாக நிரந்தர முரண்பாட்டுப் போருடன் கூடியிருக்கச் செய்வது ஊசிதமல்ல என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இங்கே கோடிட்டுக் காட்டுகின்றது.
சிங்களத்துடன் தமிழர்கள் என்றுமே சேர்ந்து வாழ முடியாது என்ற அடிப்படை கருத்துப்பட உண்மை நிலையினை நாடுகடந்த தமிழீழ அரசின் அறிக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் சிங்களம் அடிபட்ட எலிபோல தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. தமிழர் தரப்பு இவ்வாறு அறிக்கைகளை விட்டு எதிர்கால நடவடிக்கைக்காக காத்திருக்கின்றது.
இந்த நிபுணர் குழு அறிக்கையானது சுட்டிக்காட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளை விடுத்து பரிந்துரைத்திருக்கும் வழிமுறைகள் தான் நெருடலாக உள்ளது. தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசிடமே நீதியை வழங்கும் பொறுப்பை ஒப்படைத்திருப்பது உலகமகா கேலிக்கூத்தாகும்.
இதுவரை உலகில் முன்னெப்போதும் நடந்திராத வகையில் இன்றும் தமிழினத்தை முழுவதுமாக கருவறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராசபக்சவிடம் விசாரித்து நீதிவழங்கும் பொறுப்பை ஒப்படைத்திருப்பது தமிழர் தரப்பை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இந்த அறிக்கை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இப்படி இருக்க நாம் செய்ய வேண்டியது ஒன்றுபட்ட பலத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதுதான்.
அநீதி இழைத்துவிட்டு மனச்சாட்சியே இல்லாவிட்டாலும் சிங்களம் ஒன்றுபட்டு சர்வதேசத்துடன் மோதல் போக்கை முன்னெடுத்துவருவதை பாருங்கள் தமிழ்ச் சொந்தங்களே! இந்த அறிக்கை வெறும் அடிப்படையானது மாத்திரம்தான். இது எமக்கான நீதியினையும் விடுதலையினையும் பெற்றுத்தர வேண்டுமானால் அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்த வேண்டும்.
இந்த அறிக்கையினை அடிப்படையாக கொண்டு அனைத்துலக விசாரணைக்குழுவை அமைத்து உடனடியாக நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் போர்குற்றங்கள் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும்.
இதற்கு வலியறுத்துவதே தமிழர் தரப்பின் தலையாய கடமையாகும். தமிழர்களது விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தது முதல் ஏற்படாத வல்லரசுகளுக்கிடையிலான போட்டி நிலைமை தற்போது ஏற்பட்டிருப்பதானது சிறந்த புறச்சூழலாகும்.
ஆபிரிக்க நாடுகளிலும் வளைகுடா நாடுகளிலும் ஏற்பட்டுவரும் மக்கள் புரட்சியும் அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆட்சிமாற்றங்களும் சர்வதேச அரசியல் தளத்தை நிலைகுலையச் செய்துள்ளது. பனிப்போர் காலத்தில் இருந்ததைப் பேன்று உலக வல்லரசுகள் இரண்டு அணிகளாக நின்று தத்தமது பிராந்திய நலன்களை உறுதிப்படுத்துவதில் முணைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
ஆபிரிக்கா நாடுகளிலும் வளைகுடா நாடுகளிலும் ஏற்பட்டுவரும் கொந்தளிப்பான சூழல் ஏற்படுத்தியிருக்கும் நிலையற்ற அரசியலால் ஆட்டங்கண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமது பிடியை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினூடாக ஓர் அரசியல் புரட்சிக்கு தயாராகிவிட்டதனையே இந்த காலங்கடந்த செயற்பாடு உறுதிப்படுத்தி நிற்கின்றது.
தமிழ்மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகுறித்து சர்வதேச மக்களிடையே விளிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் சிங்களத்தின் இனப்படுகொலைக்கு துணைநின்று வேடிக்கை பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளதும் உலகமகா சபையான ஐக்கிய நாடுகள் சபையினதும் முகத்திரை அண்மையில் வெறும் சில ஆயிரம் லிபியர்கள் இறந்ததற்காக வரிந்துகட்டிக்கொண்டு எதிர்தாக்குதல் மேற்கொள்ள முடிவெடுத்த கணமே கிழிந்து கந்தலாகிவிட்டது.
இந்த நிலையில் தமது நம்பகத்தன்மையினை நிலைநிறுத்துவதற்காக தற்போது அவர்களது சம்மதத்துடன் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைக்கான விசாரணையினை கையிலெடுத்துள்ளது மேற்குலகு. இதற்கு எதிர்காளத்தில் பொருளாதாரத்தில் யப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ள சீனாவும், ரசியாவும் நேரடியாவும் இந்தியா மறைமுகமாகவும் களத்தில் குதித்துள்ளன.
இந்த வல்லரசுப் போட்டியில் இந்த போர்க்குற்ற அறிக்கை உயிர்ப்புடன் இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி. அவ்வாறு ஒரு நிலை ஏற்படாதவாறு உலகத்தமிழர்களாகிய நாம் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்ட சக்தியா களமாட வேண்டும்.
இனியும் தமிழர்களை கிள்ளுக் கீரையாக நினைக்க முடியாது என்பதனையும் தொடர்ந்து ஏமாற்றினால் அதனால் எப்படியான விளைவுகள் ஏற்படும் என்பதனையும் உரக்கச் சொல்ல வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்த அறிக்கை விவாதத்திற்கு வரும் போது சிங்களத்திற்கு பக்கத்துணையாக நின்று சீனாவும் ரசியாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆகவே புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாடுகளில் இருக்கும் குறித்த நாடுகளது தூதுவராலயங்களை முற்றுகையிட்டு எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் வலுவாக காட்டுவோம்.
இந்த தருணமானது நாம் இறுதி வெற்றியை பறிப்பதற்கான தருணம். ஆகையால் உலகத் தமிழர்களாகிய நாம் எல்லோரும் உறுதியுடன் போராடுவோம். 2009ம் ஆண்டு எமது இனம் முள்ளிவாய்க்காலில் முழுவதுமாக அழிந்து போவதனை கையறு நிலையில் நின்று உலகத்தமிழினமான நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை வெளிவந்து வரலாற்றுச் சுழற்சியை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக வாய்த்திருக்கும் இறுதித் தருணம் இதுவாகும். தமிழர் தரப்பு நியாயப்பாடுகளையும் சிங்களத்தின் எதேச்சதிகாரப் போக்கினையும் மேற்குலக நாடுகள் நன்குணர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனைத்தானே படித்துப் படித்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஒவ்வொரு மாவீரர்தின உரையிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ந்த சந்திப்புகளிலும் வலியுறுத்தி வந்துள்ளார்.
எமது விடுதலைப் போராட்டமானது அறத்தின் பாற்பட்டதுடன் உண்ணதமான இலக்கினைக் கொண்டதாகும். இதனை உலகம் இன்று வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் உணர்ந்து கொண்டிருக்கும். ஆகவே எல்லா வகையிலும் எமக்கானதாக அமைந்துள்ள வரலாற்றுச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது பயன்படுத்தி வெற்றிபெறுவோம்.
எமது நியாயப்பாடுகளை அனைத்துலக சட்டதிட்டங்களிற்குள் வரையறை செய்து தமக்கு வாய்ப்பான இன்றைய சூழலில் மேற்குலகு முன்னெடுத்துவரும் இந்த அனைத்துலக அரசியல் சூழமைவினை எமது ஒன்றுபட்ட பலத்துடன் வென்று தமிழீத்தை எமதாக்குவோம்.
இதனையே சர்வதேச நிபுணர் போயல் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகப் பேராசிரியரும் சர்வதேச மனித உரிமை நிபுணருமான போயல் அவர்கள் ஐ.நா.நிபுணர் குழு வெளியிட்டுள்ள போர்குற்ற அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சிறிலங்காவில் நிலவிவரும் இன முரண்பாட்டிற்கு தமிழர் தாயகமான தமிழீழத்தை உருவாக்குவதே தீர்வாக இருக்கும் என்று ஆணித்தரமாக கூறியள்ளார்.
ஐ.நா.அமைப்பின் அறிக்கையின் எந்தப் பகுதியையும் சிறிலங்கா அரசு நடைமுறைப் படுத்தப்போவதில்லை. அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அரசு நிராகரித்தும் உள்ளது என்ற போயல் அவர்கள் அரசின் நீடித்த இனப்படுகொலைக்கெதிரான ஒரே தீர்வு தமிழீழ நாட்டை உருவாக்குவதே என்றும் அதனை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
இதுவரை நிகழ்ந்த இப்போதும் தொடர்ந்து வரும் சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கெதிரான ஒரே வழி தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரே தீர்வான தமிழீழ நாட்டை உருவாக்குவதே. அதனை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டியது வரும். எனவே தமிழீழ நாட்டை உருவாக்குங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் பேராசிரியர் போயல் அவர்கள்.
தமிழகச் சொந்தங்களிற்கு அன்பான வேண்டுகோள்!
இந்த நிலையில் தமிழக சொந்தங்களிற்கு ஒன்றை உரிமையுடன் சொல்ல கடமைப் பட்டுள்ளோம். தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களாகிய எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித் தாக்குதல்களால் உள்ளம் குமுறி வெகுண்டெழுந்த அப்துல் ரவூப், முத்துக்குமார், ரவிச்சந்திரன் முதல் இன்று இளம் பொறியியலாளர் கிருட்டினமூர்த்தி வரை பலர் நெருப்புத் தமிழர்களாகி உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
இன மான உணர்வு மேலீட்டால் தமிழக சொந்தங்கள் இந்த நிலைக்கு செல்வதற்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் கருணாநிதியின் அரசின் கபடத்தனம்தான் காரணமாகும். நீங்கள் உங்கள் பெறுமதியற்ற உயிர்களை தீக்கு இரையாக்கி உணர்வை வெளிப்படுத்துவதால் நீங்கள் நினைப்பதை நடக்க தமிழக சாக்கடை அரசியல் வழியேற்படுத்தாது என்பதனையே அக்கினிக் குஞ்சான முத்துக்குமாரது தியாகத்தை பலரும் அரசியலாக்கி கேவலப்படுத்தியமை வெளிப்படுத்தி நிற்கின்றது.
சிங்களனும் இந்தியாவும் சேர்ந்து தமிழினத்தை அழித்துவருவது காணாது என்று நீங்களும் ஏன் எமது இனத்தினை அழிவுப்பாதைக்கு இடடுச்செல்கிறீர்கள். எமது அழிவால் இந்தியாவில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. குறிப்பாக பணத்திற்காக தமது எதிர்காலத்தை அரசியல்வாதிகளிடம் அடகு வைக்கும் தமிழக மக்கள் திரும்பிப் பார்க்கமாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
நீங்களும் அறப்போறாட்டத்தை முன்னெடுத்து சிங்களத்திற்கு துணைநின்று வருகின்ற இந்தியாவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துங்கள். அதைவிடுத்து உங்கள் உயிர்களை இழந்து சோகத்தின் மேல் சோகத்தை உண்டுபண்ணாதீர்கள். உங்களைப் போன்ற உறுதிமிக்க இளைஞர்கள்தான் தமிழீழத்தை மீட்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் தேவை.
எல்லாம் முடிந்து விடவில்லை. துணிவோடு இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நாளை நமதே. நம்புங்கள் தமிழீழம் பிறப்பது நம் கையில் என்று. உலகத் தமிழர்கள் நாம் ஒன்றுபட்டுவிட்டோம் என்ற செய்தி எமது பிளவை கண்டு ரசித்துக் கொண்டிருக்கும் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் இடியாய் இறங்கட்டும்.
இந்த வரலாற்று சம்பவத்தை தவறவிடுவோமாயின் அடுத்து ஆரம்பிக்கும் யுத்தம் வெறுமனே இழப்புகளை ஏற்படுத்துவதற்கானதாகவே இருக்கும்.
இன்றைய சூழநிலை தொடர்பாக போராளி ஒருவருடன் கதைத்தபோது கூறியது முக்கியமானது. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அறவழியில் போராடி அரசியல் ரீதியில் தமிழீழத்தை வென்றெடுக்காது விட்டால் அடுத்து நடைபெற இருக்கும் யுத்தமானது வெறுமனே இலட்சக்கணக்கான சிங்களவர்களை கொன்று குவிப்பதற்கான யுத்தமாகவே இருக்கும்.
ஏனென்றால் எமது போராட்ட நியாயப்பாடுகளை உணர்ந்து கொண்டு ஏற்று செயற்பட உலகநாடுகள் பெயரளவில் தயாராகிவரும் இந்த சந்தர்ப்பத்தினை தவற விடுவோமாயின் இனி எந்தக் காலத்திலும் எமது நியாயங்களை சர்வதேச நாடுகளிடம் புரியவைத்து எமது தாயகத்தை மீட்டெடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையே ஏற்படும்.
அவ்வாறு இருந்தும் ஓர் போர் ஆரம்பிக்குமாக இருந்தால் வெறுமனே இழப்புக்களை ஏற்படுத்தும் போராகவே இருக்க முடியும். இராணுவப் பலத்தின் மூலம் உலகமே வியக்கும்வண்ணம் பல போரியல் சாதனைகளை நிகழ்த்தி விடுதலைப் போராட்டத்தை வீறுடன் முன்னெடுத்துச் சென்ற கடந்த காலங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதே எமக்கான பதிலாகும்.
அரசியல் ரீதியில் நாம் பலம்பெற்றால்தான் இராணுவரீதியில் பெறப்படும் வெற்றிகளுக்கு பலம் சேர்க்கும். இதனையே கடந்தகாலங்களில் போர்வலுச் சமநிலையில் மேலோங்கியிருந்த நிலையிலும் வரலாற்றுத் துயரான முள்ளிவாய்க்கால் துயர் இடம்பெறுவதை தடுக்கமுடியாது ஆற்றமுடியாத வேதனையுடன் நின்றதனை அறிவீர்கள்.
அனைத்துலக ஊடகங்களின் தார்மீக யுத்தம்!
இதுவரை திரும்பிப்பார்க்காது இருந்த அனைத்துலக ஊடகங்கள் தற்போது தனது முழுமையான கவனத்தையும் சிறிலங்கா மீது பதித்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகுறித்து செய்திகளையும் காட்சிகளையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக சனல் 4 மற்றும் அலயசீரா போன்ற அனைத்துலக தொலைக்காட்சிகள் சிங்களத்தின் போர்குற்றத்தை விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டு வருவதானது ஐ.நா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களது விடயத்தில் ஐ.நா. சபையும் மேற்குலக நாடுகளும் இனியும் வஞ்சகம் செய்யமுடியாத இக்கட்டான சூழலை இந்த அனைத்துலக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்த வாய்ப்பினை நாம் சரியானமுறையில் பயன்படுத்தி ஐ.நா. சபையினையும் மேற்குலகத்தினையும் தீர்வினை நோக்கி நகர்த்துவோம்.
ஆகவே அறவழியில் அனைத்துலகத்தை முற்றுகையிட்டு ஐ.நா. நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையினை அடியொற்றி நீதியான தீர்வினைநோக்கி அதிவிரைவாக செயற்பட நிர்ப்பந்தித்து அரசியல் ரீதியில் பலம் பெறுவது இன்றியமையாதது ஆகும். அதுவே தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வெளிப்பாட்டை உறுதிப்படுத்தும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.செந்தமிழ் (22-04-2011)
Comments