நிபுணர்கள் குழுவின் பரிந்துரை ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தருமா?

ஈழப்போரின் இறுதி நாட்களில் நிகழ்ந்த போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தாங்கி தாமதமாகவேனும் ஆராயப்பட்டு உத்தியோகபூர்வமாக சர்வதேச அரங்கில் நியாயம் கற்பிக்கக்கூடிய வகையில் வெளிவந்திருக்கும் நிபுணர்களின் போர்க்குற்ற ஆய்வு அறிக்கை,,

ஏப் 12ம் நாள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன. அறிக்கையின் நகல் ஸ்ரீலங்கா அரசுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் அந்த அறிக்கையின் அறிவுறுத்தல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றும் மாற்றாக அரச சார்பற்றவகையில் பதில் அளிப்பதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டு கருத்து தெரிவிக்கப்படும் என்றும், தவிர ஐ.நாவை முறியடிப்பதற்கு உயர்மட்டத்திலுள்ள புத்த பிக்குகளையும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்து ஒரு முக்கூட்டு அறிக்கை வெளியிடுவதென்றும் ஸ்ரீலங்கா அரசுதரப்பில் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவை ஒருபுறமிருக்க, நாட்டிற்காக நான் தூக்குமேடைக்கும் செல்லத் தயார் என்று மகிந்தர் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு விரக்தியில் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த மகிந்தர் சமீபத்தில் ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையைப் பற்றி விவாதித்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே தான் தாய் நாட்டைக் காப்பாற்ற தூக்குமேடைக்கும் செல்லத் தயார் என்று நாட்டுமக்களின் அனுதாபத்தை கவரும் நோக்கத்தோடு வீர வசனங்களை பேசியுள்ளார் என்றும் தெரிகிறது.

புலிகளுக்கு சார்பான சில குழுக்களின் தொடர் அழுத்தங்களால், ஐ.நா இப்படியான முடிவுகளை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான போர்குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளபோதும் அவை அனைத்தும் போலியானவை அவற்றை தான் சட்டை செய்யப்போவதில்லை என்றும் மகிந்தர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சர்வதேச நியாயவாத அமைப்புக்களின் விடாப்பிடியான அழுத்தம் காரணமாக நிபுணர்கள் குழு ஐ.நா செயலர் அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது நிபுணர்கள் குழு ஆய்வுசெய்வதற்காக, நிச்சியம் போர் நடந்த இடத்திற்கு சென்று தகவல்களை திரட்டியிருக்கவேண்டும். அப்படி தகவல்களை திரட்டியிருப்பின் கூடுதல் ஆதாரங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க வாய்ப்புக்கள் நிறையவுண்டு, ஆனால் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவு நிலைகொண்ட நாடுகளின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்கா அரசு நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியது. ஸ்ரீலங்காவின் இந்தப்போக்கு ஐ.நா செயலருக்கும் நிபுணர் குழுவினருக்கும் கசப்பை உண்டுபண்ணியிருக்கலாம். இருந்தும் பல்வேறுபட்ட புகைப்பட, ஒளிப்பதிவு, தரவுகள்.. வேறு தொண்டரமைப்புக்களின் அறிக்கைகள் சாட்சியங்கள் மூலம் நிபுணர்கள் குழு மிகுதியான பொருட்செலவு செய்து ஓர் நிறைவான அறிக்கையை தயாரித்து ஐ.நா சபைக்கு வழங்கியிருக்கிறது.sd

இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் ஈழப்போரில் ஐ.நா நடந்துகொண்ட விதம் பற்றியும் விமர்சித்திருக்கிறது. வருங்காலங்களில் ஸ்ரீலங்கா அரசின் போர்க்குற்றம் சம்பந்தமாக நிபுணர்களின் இந்த அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் மனித உரிமை அமைப்புக்களினதும் ஈழத்தமிழர்களினதும் பெருத்த எதிர்பார்ப்பாகும். இவ்வறிக்கை நடைமுறைக்கு வருவதற்கு இலங்கை அரசை விடவும் இந்திய அரசும் ஏதாவது தில்லுமுல்லு செய்வதற்கு முயலக்கூடும்.

சிறீலங்காவில் அந்நாட்டு அரசாங்கம் அங்கு வாழும் தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள் என்று நிபுணர்கள் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மிகப்பிரதான சாராம்ஷமாக கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணிகளை காணலாம்.

> :"விடுதலைப் புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை".

> "அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்".

> "போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை".

> "ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது".

இந்தநிலை தொடர்வதற்கான காரணங்கள் இரண்டு கூறப்படுகின்றன, ஒன்று, நாடு பதட்ட நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தலில் தொடர்ந்து இருப்பதாகக் காட்டி இராணுவ மயத்தை திரும்பப்பெறாமல் போர்க்காலத்தில் ஸ்ரீலங்கா அரசு மரபுமீறி நடந்துகொண்ட எதேச்சதிகார யுத்த மீறல்கொடுமைகளை நியாயஸ்தலங்களுக்கு சென்று விசாரணை வளையத்துள் சிக்கிவிடாமல் தப்பிவிடவேண்டுமென்கிற தந்திரமாகவும், இரண்டாவது, தமிழர் சமுதாயத்திற்கு எந்தக்காலத்திலும் சமமான உரிமையும் கொடுத்துவிடக்கூடாது என்ற நீண்டகால வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் காணலாம்.

இந்நிலை தொடருமாகவிருந்தால் எந்த நிபுணர்களின் அறிக்கையும் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி அந்தமக்களுக்கு அமைதியான ஒரு வாழ்வை வழங்கப்போவதில்லை. மாறாக அரசியல் கிளர்ச்சிகளும், அரசாங்கத்துடன் மக்களின் ஒத்துப்போகாத தன்மையும் இலங்கையில் தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கும். அது மீண்டும் ஒரு ஆயுத கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறதோ இல்லையோ அமைதியான ஒரு நாடாக இலங்கை ஒருபோதும் இருக்கப்போவதில்லை. இந்நிலை தொடரும் பட்சத்தில் இன்றய நிலையைவிட பன்மடங்கு கலாச்சார சீரழிவும், பொருளாதார முடக்கமும் ஏற்படும் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போய் சோமாலியா போன்ற நிலை இலங்கையை பற்றிக்கொள்ள நீண்டகாலம் தேவைப்படப்போவதில்லை.

இன்று புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழினத்தின் விடுதலையை முன்னிறுத்தி பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்கள் ஜனநாயகரீதியில் போராடி வருகின்றன. இலங்கையிலுள்ள தமிழினத்தின் விடுதலை சர்வதேசத்தால் உறுதிப்படுத்தாதவரை புலம்பெயர் தேசங்களில் உருவாகும் அசாதாரண நிலையை தடுக்க அந்த அரசுகள் அழுத்தம் கொடுக்கவும் முடியாது.

புலம்பெயர் தேசங்களின் மக்கள் எழுச்சியின் தாக்கமும் மற்றும் அமைப்புக்களின் விசனமும், பான் கீ மூன், அவர்களால் நிபுணர்கள் குழுவை அமைக்க நிர்ப்பந்தித்தது. ஆனால் கடந்தகால பட்டறிவின் பிரகாரம் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த ஐ.நா செயலாளர் அவர்களால் முடியுமா என்கிற கேள்வியும் சாதாரண ஒருவனின் மனதில் தேங்கிக்கிடப்பதைக் காணலாம். இந்தியா, சீனா, போன்ற நாடுகளின் அழுத்தங்கள் ஒருபக்கமும் ஐநாசபைக்குள்ளேயே இந்திய ஸ்ரீலங்கா சார்பான அதிகாரிகளின் சதிகளும் புரையோடிக்கிடப்பதால், அவர்களின் தவறான வழிகாட்டலின் காரணமாக பான் கீ மூன், அவர்கள் திடமாக முடிவெடுக்க முடியாமல்த்தான்.. நிபுணர்கள் குழுவை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் ஸ்ரீலங்கா அரசை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதால் அடுத்த நடவடிக்கை பல சிக்கல்களை உண்டுபண்ணும் என்பது திண்ணம்.

இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் ஒருதலைப்பட்சமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது என நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு சில சக்திகளின் குறுகிய தலையீட்டால் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாகவே நிபுணர்கள் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுவதை காணலாம். இவற்றை ஆராய்ந்து தீர்க்கவேண்டிய பொறுப்பும் இப்போ ஐ.நா சபைக்கு இருப்பதாக அறிக்கை விதந்துரைத்திருப்பதையும் காணலாம். ஆனால் அதற்கும் குறிப்பிட்ட அந்த நாடுகள் எதிர்ப்புத்தெரிவிக்கவும் கூடும்.

இதனை கருதில்க்கொண்டு ஐ.நா அமைப்பை சங்கடத்தில் மாட்டிவிடாமல் நிபுணர்கள் குழு தமது பரிந்துரையில், நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு உள் நாட்டிலேயே நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும், சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்திருக்கிறது. இவற்றை கருத்தில்க்கொண்டு அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் அவர்கள் தனது கருத்தில் சிறீலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கிவரும் சீனா மற்றும் ரஸ்யா போன்றவை வீட்டோ அதிகாரம் கொண்டவை. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டதாக ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும்,அந்த குழுவானது மேலதிக விசாரணைகளை நடத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டிருக்கும் விடயங்களானவை

1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.

4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.

5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.

8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.


தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும் அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கை தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறது இவைகளில் முக்கியமானவைகளை நிறைவேற்றினாலே தமிழர்களின் அதிகபட்ச பிரச்சினைகள் தீர்வுக்கு வந்துவிடும்.

ஆனால் அறிக்கைபற்றி எதையும் ஆராய்ந்து பார்க்கும் முன்பே ஸ்ரீலங்கா அரசு தனது வழமையான பாணியில் எதிர்ப்பை மட்டும் வெளியிட்டு தான் எந்தச்சட்டத்துக்கும் அடங்காத கட்டாக்காலி என்பதை நிரூபிப்பதற்கு முயல்வது தெரிகிறது. ஆனால் அமெரிக்காவும் இந்தவிடயத்தில் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு சார்பாக தனது கருத்தை கடுமையாக தெரிவித்திருப்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபை தனது அறிக்கையில் போரின் போது சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை 2009 ம் ஆண்டு தவறிழைத்திருந்தது. ஆனால் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் சந்தர்ப்பம் ஐ.நாவுக்கு கிடைத்துள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் சபை தவறவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு கோரி ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு பொதுமக்கள் மனுக்களை அனுப்பும்படி அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகொள் விடுத்துள்ளது.

இதனிடையே இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேச வல்லவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிடுகையில் இது மிக நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பரப்பி வரும் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென குதர்க்கமாக குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றம் புரிந்ததாகக் கூறி சர்வதேச நீதிமன்றிற்கு இலங்கையை அழைத்துச் செல்வதே ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் ஒரு நோக்கமென அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் குறித்த அறிக்கையை தாம் முற்றாக புறக்கணிப்பதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும். இலங்கையில் இராணுவத்தரப்பினரால் இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் கௌரவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முக்கியத்துவமிக்கது என்பதன் காரணமாகவே அவ்வாறு கூட்டறிக்கை வெளியிட முயற்சி செய்யப்படுகின்றது என்றும், அதன் மூலம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினர் தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என்பவற்றுக்கிடையில் கருத்தொருமைப்பாடு நிலவுவதாக வெளியுலகுக்கு உணர்த்த முடியும் என்று விளம்பரப்படுத்தலாமென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மந்திராலோசனையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறான கூட்டறிக்கையின் அவசியம் குறித்து கங்காராம விகாரையின் பிரதம தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகத்தெரிகிறது. அதன் காரணமாக ஜனாதிபதி அது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதுடன், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் நாடு திரும்பியதும் பிரஸ்தாப கூட்டறிக்கையை வெளியிடுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அறியக் கிடைத்துள்ளது.

சர்வதேச ஐ.நா நிபுணர்கள் குழு எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கும் இலங்கை அரசு நிற்கும் இடத்திற்கும் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது. நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளாக போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள்,மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்று தனது தீர்ப்பில் குழு பரிந்துரைத்திருக்கிறது

இறுதிக்கட்டத்தில் வன்னியில் இடம்பெற்ற போரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும். மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஐநாவின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரையில் அழுத்திக்கூறப்பட்டிருக்கிறது.

அனேகமாக இவற்றை நடைமுறைக்குட்படுத்தவேண்டிய அழுத்தம் பலதரப்பிலிருந்தும் ஐ.நா மன்றத்துக்கு கொடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. இவை ஒரு குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க இலங்கை அரசு ஒத்துழைக்குமென நம்பமுடியாது, ஆனால் சிலவிடயங்களை ஒத்துக்கொண்டு காலத்தை இழுத்தடிக்கும் வழமையான தந்திரத்தை ஸ்ரீலங்கா அரசு தனது ஆட்சிக்காலத்தில் இழுத்தடிக்க முயற்சிக்கலாம். இந்த தந்திரங்களை முறியடிக்கும் விதமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் வேகமாகவும் அதே நேரம் விவேகமாகவும் போட்டியில்லாமல் காய் நகர்த்தவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இலங்கை அரசாங்கம் இவற்றிற்கு கட்டுப்பட்டு நீதி விசாரணைகளை ஐநா சபையின் நேரடிக்கண்காணிப்பில் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். அதே நேரம் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள தமிழர்களுக்கான உரிமைகளையும் அரசியல் ரீதியாக வழங்கவேண்டிய கட்டாயம் உருவாகி வருவதற்கான சூழலும் தோன்றக்கூடும். இலங்கை அரசாங்கம் இதற்கு வழமைபோல எதிர்ப்புத்தெரிவித்து முரண்டுபிடிக்குமானால் ஐ.நா சபையின் சிபார்சின் பேரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கூண்டிலேறவேண்டிய அதிர்ஸ்டமும் உண்டாகலாம்.

கனகதரன்.

Comments