சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை - ஒரு பார்வை

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது அமைக்கப்பட்ட நாள்முதல் இன்று வரைக்கும் இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் தாக்கும் வகையிலேயே அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதுவொன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமன்று. ஓக்ரோபர் 14 2010 அன்று பிரசித்திபெற்ற மூன்று உரிமை அமைப்புக்கள் கையெழுத்திட்டுக் கடிதமொன்றை அனுப்பியதுதான் மகிந்த அமைந்த ஆணைக்குழு சந்தித்த மிகப்பெரிய தாக்குதல் எனலாம்.
இவ்வாறு Eurasia Review என்னும் இணையத்தளம் வெளியிட்டுள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வை Srideep Biswas என்னும் ஆய்வாளர் எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அந்த ஆய்வின் முழுவிபரமாவது,

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைப் பின்பற்றி சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்கள் மே 15 2010 அன்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றினை அமைத்திருக்கிறார்.

பெப்பிரவரி 21 2002 தொடக்கம் மே 19 2010 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அந்த ஆணைக்குழு ஆராயும் அதேநேரம் இக்காலப்பகுதியில் இடம்பெற்றதைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் பரிந்துரைகளையும் மேற்கொள்ளும்.

முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர் டீ சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவானது கீழ்க்காணம் அம்சங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

• பெப்பிரவரி 21 2002 அன்று ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது தோல்வியடைவதற்கு வழிவகுத்த சூழமைவுகள் மற்றும் காரணங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மே 19 2009 வரைக்குமான காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியினை ஆராய்தல்,

• தனிநபரோ, குழுவோ அல்லது நிறுவனமோ நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ இதுபோன்ற நிலைமைகள் மாறுவதற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்களா என ஆராய்தல்.

• இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இந்தச் சம்வங்கள் மற்றும் நிகழ்வுகளின் தரும் பாடங்களைக் கண்டறிதல்,

• குறிபிட்ட இந்த நிகழ்வுகளால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்தும் பாதிப்பினை எதிர்கொள்ளக்கூடியதொரு நிலையில் இருந்தால் கைக்கொள்ளவேண்டிய வழிமுறைகளை ஆராய்தல்,

• இதுபோன்ற சம்பவங்களில் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான நிறுவனம்சார் நிர்வாக மற்றும் சட்டம்சார் நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல். மற்றும் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களின் மத்தியிலும் நல்லிணக்கத்தினையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்துவதற்காக பரிந்துரைகளை மேற்கொள்ளுதல்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வாதங்கள் வலுப்பெற்றிருந்தன.

அத்துடன் இதுவிடயம் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் வல்லுநர்கள் குழு என்ற ஒன்றை அமைத்திருந்தார். இவை அனைத்தையும் நிராகரித்த சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை அமைத்திருந்தது.

மக்களை நேரடியாக அணுகி வாக்குமூலங்களைப் பெறுவதற்கு ஏற்றவகையில் தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளையும் பயன்படுத்தும் இந்த ஆணைக்குழு அனைத்துலக மற்றும் உள்ளூர் அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு சிறந்தமுறையில் தனது பணியினை ஆற்றுவதாக சிறிலங்கா அரசாங்கம் தான் அமைத்திருக்கும் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பாகப் புகழ்பாடுகிறது.

தடுப்பு முகாம்கள், புனர்வாழ்வு மையங்கள், மக்கள் மீள்குடியேற்றப்படட பகுதிகளுக்குள் நேரடியாகச் செல்லும் இணைந்த ஆணைக்குழு மக்களின் சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் பதிவுசெய்து வருகிறது.

மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கும் சிறிலங்காவிலுள்ள தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியினை அதிகரிப்பதாகவே ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்திருக்கும் வல்லுநர்கள் குழுவானது செயற்பாடுகள் அமைவதாகவும் சிறிலங்கா வாதிடுகிறது.

ஈழப்போர் பற்றிய ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பான ஐ.நாவைக் கடிந்துகொள்வதற்கு சிறிலங்காவினது அதிகாரிகள் ஒருபோதும் தயங்கியது கிடையாது. உதாரணமாக ஐ.நாவின் பல்வேறுபட்ட நிறுவனங்கள் ஊடாக விடுதலைப் புலிகள் எவ்வளவு நிதியினைப் பெற்றிருந்தார்கள் என்பதைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினது நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்காவினது முன்னாள சமாதான செயலகப் பணிப்பாளருமான ரஜீவ் விஜயசிங்க, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியளித்த பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பிட்ட இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில், "விடுதலைப் புலிகளின் நிதிதிரட்டல் செயற்பாடுகள் வெளிநாட்டுக் கொடையாளர்கள் மற்றும் ஐ.நா நிறுவனங்களையும் இலக்குவைத்துச் செயற்படுகின்றன' என சிறிலங்காவின் அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றோபேட் ஓ பிளேக் அவர்கள் யூன் 12 2007 அன்று அனுப்பிய இரகசியச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட இந்த இரகசியச் செய்தியில், அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையராலயம், ஐ.நா சிறுவர் நிதியம் மற்றும் உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஐ.நா அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் துணை அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றவேண்டிய நிலையினை விடுதலைப் புலிகள் எவ்வாறு ஏற்படுத்துகிறார்கள் என்பதை றொபேட் ஓ பிளேக் விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான அனைத்துலக அல்லது ஐ.நா விசாரணையினை மேற்கொள்ளக்கூடாது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் காத்திரமான மறுப்பு விளங்கிக்கொள்ளக்கூடியதே. எது எவ்வாறிருப்பினும், இடம்பெற்றதாகக் கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையினைத் தானே மேற்கொள்கிறேன் என சிறிலங்கா அரசாங்கம் கூறும் அளவிற்கு அனைத்துலக அழுத்தம் காத்திரமானதாக இருந்திருக்கிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் மற்றும் கண்டறிதல்களைத் தாம் ஆராயவுள்ளதாகவும் தேவையேற்படுமிடத்து தங்களது விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதாகவும் 25 மார்ச் 2011 அன்று சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது அமைக்கப்பட்ட நாள்முதல் இன்று வரைக்கும் இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் தாக்கும் வகையிலேயே அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதுவொன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமன்று. ஓக்ரோபர் 14 2010 அன்று பிரசித்திபெற்ற மூன்று உரிமை அமைப்புக்கள் கையெழுத்திட்டுக் கடிதமொன்றை அனுப்பியதுதான் மகிந்த அமைந்த ஆணைக்குழு சந்தித்த மிகப்பெரிய தாக்குதல் எனலாம்.

லண்டனைத் தளமாகக்கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை, பிறசில்சைத் தளமாகக் கொண்ட அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு மற்றும் நியூயோர்க்கினைத் தளமாகக் கொண்ட மனித உரிமைக் கண்காணிப்பகம் ஆகியவற்றின் சார்பில் அவற்றின் தலைவர்கள் கையெழுத்திட்டு சிறிலங்கா அமைந்த இந்த ஆணைக்குழுவிற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளிக்குமாறு கோரி சிறிலங்கா அரசாங்கம் இந்த அமைப்புக்களுக்கு அனுப்பிய அழைப்பினை நிராகரிக்கும் வகையிலேயே இந்தக் கடிதம் அமைந்திருந்தது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொருத்தமான பொறுப்புச்சொல்லும் பொறிமுறை ஏற்படுத்தப்படவேண்டுமெனில் அது அனைத்துலக விசாரணையாகத்தான் இருக்கவேண்டும் என்றும் சுதந்திரமானதொரு விசாரணைக்கட்டமைப்பு கொண்டிருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகள் எவையும் சிறிலங்கா அமைந்திருக்கும் இந்த ஆணைக்குழுவிடம் இல்லை என இவை கூறியிருந்தன.

இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் மகிந்த அரசாங்கத்தில் முதன்மையான பொறுப்புக்களில் இருந்தவர்கள் என்றும் ஆதலினால் இந்தக் கட்டமைப்பு அரசாங்கத்திற்குச் சார்பாகவே செயற்படும் என்றும் இந்த உரிமை அமைப்புக்கள் அடித்துக் கூறியிருந்தன.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புச்சொல்லும் பொறிமுறை தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பன் கீ மூன் வல்லுநர்கள் குழுவினை அமைத்ததை வரவேற்று மார்ச் 01 2011 அன்று அமெரிக்காவினது செனற் சபை கொண்டுவந்த தீர்மானம் சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு விழுந்த இன்னொரு அடியாக அமைந்தது.

"சிறிலங்காவில் இடம்பெற்ற போரின்போது இரண்டு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் விசாரிக்கும் வகையில் அனைத்துலகக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடமும் அனைத்துலக சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் அழைப்;பு விடுப்பதாக" செனற்சபை தனது தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தது.

செனற் சபையின் இந்தத் தீர்மானமானது இராசதந்திர ரீதியில் போதுமானதாக இல்லாமல் இருந்த அதேநேரம் சிறிலங்காவினது அதிகாரிகள் நடந்துகொண்ட முறை தொடர்பாக எந்தச் சந்தேகத்தினையோ அன்றில் நேரடிக்குற்றச்சாட்டுக்களையோ செனற்றின் இந்தத் தீர்மானம் கொண்டிருக்கவில்லை.

ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால் இந்த் தீர்மானத்தின் ஊடாக செனற்சபை சொல்லவந்த செய்திதான் என்ன என்பது தொடர்பில் தெளிவற்றதொரு தன்மையே காணப்பட்டது. மார்ச் 04 2011 அன்று சிறிலங்காவினது வெளி விவகார அமைச்சு இதுவிடயம் தொடர்பான பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

"அமெரிக்காவின் செனற்சபை இதுபோன்ற தவறான முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக அவர்களை இணங்கவைக்கும் வகையில் செனற்சபையினை இலக்குவைத்து குறிப்பிட்ட சில குழுக்கள் செயலாற்றியிருக்கின்றன. ஆதலினால் ஏதோவொரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் மாற்று நடவடிக்கைகள் மற்றும் சட்டரீதியிலான கருத்துக்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுவது முக்கியமானது. அமெரிக்கச் செனற் சபையின் தீர்மானத்தினை வரைந்தவர்கள் யாரோ அவர்கள் இன நல்லிணக்கத்தினையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் கட்டியெழுப்பும் வகையில் சிறிலங்கா அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இதுநாள் வரையான சிறப்பான பணியினைக் கருத்திலெடுப்பதற்குத் தவறிவிட்டமை வருந்துதற்குரியது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளின் ஆதரவு உணர்வு எப்போதும் மேலோங்கிக் காணப்படும் புலம்பெயர் தமிழர்கள் தங்களது ஊடகங்கள் வாயிலாக சிறிலங்கா அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் குறைகாணுகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்திருப்பதாக இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். உதாரணமாக அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை தொடர்பாக இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது.

"மிருகங்களைக் கொலைசெய்த ஒரு கசாப்புக்கடைக்காரனிடமிருந்து எவ்வாறு நீங்கள் நீதியை எதிர்பார்க்கலாம். மிருகங்கள் ஏற்கனவே செத்துமடிந்துவிட்ட நிலையில் இந்தக் கொடூரத்தினை கண்ணுற்ற சாட்சியங்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கசாப்புக்கடைக்காரனே ஆணைக்குழுவினை அமைத்திருக்கிறான். இந்த நிலையில் இந்த ஆணைக்குழுவிடமிருந்து எவ்வாறு நீதியினை எதிர்பார்க்க முடியும்? குறிப்பிட்ட இந்தக் கோட்பாடு அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்திருக்கும் நல்லிணக்க அணைக்குழுவிற்கும் இனக்கொலை நிறைந்த போரை நேரடியாகக் கண்ணுற்ற தமிழர்களுக்கும் பொருந்துகிறது..." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த ஆணைக்குழுவானது உள்நாட்டு அரசியலில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளிப்பதில்லை என சிறிலங்காவினது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க மார்ச் 25 2011 அன்று அறிவித்திருந்தார்.

சிறிலங்காவில் பிளவுபட்டுப்போயிருக்கும் சமூகங்களை ஒன்றிணைத்தல் மற்றும் பிரச்சினைக்கானதொரு தீர்வினைக் கொண்டுவருதல் போன்ற தனக்கு இலக்கு எதுவோ அதனை அடையமுடியாமல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தடுமாறுவதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த முடிவுக்குக் காரணம் என அதன் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர் ரணில் விக்கரமசிங்கதான் என்ற காரணத்தினால் ரணிலை அவமதிப்பதற்கான ஒரு கருவியாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமே ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த முடிவுக்குக் காரணம் எனப்படுகிறது. ரணில் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை ராஜபக்ச நீண்டபல காலமாகவே சாடிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் பல்வேறுபட்ட தரப்புக்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றிருக்கும் இந்த ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையினை மே 15 2011 அன்று சமர்ப்பிப்பதற்குத் தயாராகிவருகிறது. ராஜபக்சவின் இந்த ஆணைக்குழுவிற்கு எதிராக முனைப்புக்கள் உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியிலும் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ஆணைக்குழுவினது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகள் என்பன சிறிலங்காவில் உண்மையான நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு என்பன ஏற்படுத்தப்படுவதற்கு வழிசெய்யும் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன.

தி.வண்ணமதி

Comments