கனடா காப்பர் அரசின் அரசபயங்கரவாதம்

மிகவும் வியப்பூட்டும் மாற்றங்கள் வட அமெரிக்கக் கண்ட நாடான கனடாவில் நடக்கிறது. நாகரிக முதிர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான கனடா வேகமாக சிம்பாப்வே போல் இல்லாவிட்டாலும் நிட்சயமாக ஒரு காட்டுமிராண்டி நாடாக மாறி வருகிறது.

சட்டத்தின் ஆட்சி நிலவும் நாடு, பண்பாட்டுப் பல்வகைமை, ஆங்கில – பிரெஞ்சு மொழிச் சமத்துவம், மிகவும் முற்போக்கான சமஷ்டி அட்சி நிலவும் நாடு என்றெல்லாம் சாதனை படைக்கும் கனடா. ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்காவுக்கு நிகராக விளங்குகிறது.

சென்றவருடம் கப்பல் மூலம் வந்த தழிழீழ ஏதிலிகளைக் கனடா நடத்தும் விதம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேறு நாட்டவரை இவ்வளவு கொடூரமாக நடத்தியதற்கான சான்று இந்த நாட்டில் இது வரை காலமும் இல்லை.

குறிப்பாக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்ட ஏதிலிகள் மீது பல வெறுப்பூட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது என்ற ஊரடங்குச் சட்டம் (Curfew Order) ஏவப்பட்டுள்ளது. இவர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு வெளியே செல்ல முடியாது, காவல் துறையினர் வந்து பார்க்கும் போது வீட்டில் இல்லாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என்ற காவல்துறையினரின் எச்சரிக்கையோடு கலக்கம் அடைந்த ஏதிலிகள் பயப்பீதியுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

சில பேர் காவல் நிலையத்தில் ஒப்பமிடவேண்டும், வேலைக்குச் செல்லக்கூடாது. ஒருவரையும் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்புக் கொள்ளக்கூடாது. என்ற இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கனடா காவல்துறை, புலனாய்வுத்துறை இவர்கள் மீது 24 மணிநேரக் கண்காணிப்பை மேற்கொள்கிறது.

இவ்வளவும் போதாதென்று ஸ்ரீபன் ஹாப்பரின் கொன்சர்வேற்றிவ் கட்சி அடுத்த மாதம் நடத்தவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு கப்பலில் வந்த அப்பாவிகளைத் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளது. ஏதிலிகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் முதலாவது பிரதமராக கனடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் விளங்குகின்றார்.

கப்பலில் வந்தவர்களால் நாட்டில் குழப்பம் ஏற்பட வாய்;ப்பிருப்பதாகவும், இவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் படியும் கட்சியின் தேர்தல் அறிக்கை வீண்பழி சுமத்துகிறது. மேற்குலகின் எந்தவொரு நாட்டிலும் இம்மாதிரியான தேர்தல் பிரசாரத்தைக் காணமுடியாது.

ஸ்ரீபன் ஹாப்பர் ஒட்டுமொத்தக் கனடாத் ஈழத் தமிழர்களையும் சாடும் வகையில் கட்சியின் தொலைக்காட்சி விளம்பரங்களில் அகதி அந்தஸ்து கோருவோரின் படங்களைக் காட்டி ஏளனம் செய்கிறார். தமிழர்கள் தனது கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தீர்மானித்து விட்டார் போலும்.

கனடாத் தூதரகங்களில் குடும்ப உறவுகளோடு இணைவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கின்றன. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்;கள் ஐந்து வருடங்கள் சென்றும் பதில் ஏதும் கூறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

1948ம் ஆண்டின் ஐநா மனித உரிமைப் பிரகடனத்தின் படி குடும்பங்களைப் பிரிப்பதும் தடுப்பதும் பாரிய மனித உரிமை மீறலாகக் கணிப்பிடப்படுகிறது. கனடாத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பாரிய மனித உரிமை மீறல்களை திரைமறைவில் செய்து வருகின்றார்கள்.

அவுஸ்ரேலியா அரசு ஏதிலிகள் வரவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்த போது மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் கனடா அரசும், தூதரங்களும் செய்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசாது இருப்பது வியப்பூட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்களின் கூற்று.

இந்த இழுபறி நிலைக்கு விளக்கம் கூறவேண்டிய பொறுப்புடைய கனடா அரசு பேசாமல் இருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. தகவல் அறியும் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை போன்ற நவீன கால விழுமியங்களைக் கனடா உதாசீனம் செய்கிறது.

சட்டத்தின் ஆட்சி நிலவும் நாடென்று மார்தட்டும் கனடாவில் நீதித்துறை மீளாத்துயில் கொள்கிறது. சட்டம் உறங்கும் போது சமதர்மமும், மக்கள் சமத்துவம் காணமல் போகின்றன. அமெரிக்காவில் தாழ்த்தப்பட்டோராக இருந்த கறுப்பினத்தவர்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

கனடா வாழ் தமிழர்களே, தாம் அனுபவித்த உரிமைகளை கனடாவின் நிறவெறி அட்சியில் இழக்கும் நிலைக்கு வந்துள்ளனர். சிறிலங்காவின் இனப் பாகுபாடும் நீதித்துறையின் அலட்சியப்போக்கும் கனடாவுக்கு வந்துவிட்டதா என்று ஈழத் தமிழர் அனைவரையும் கலக்கம் அடையவைத்துள்ளது.

தெளிந்த அரசியல் நோக்கர்;கள் பார்வையில் கனடா ஒரு 'பொலிஸ் ஸ்ரேட்” (Police State) என்று அழைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. 'நீதியின் மயக்கம்" புலனாய்வுத்துறையின் மேலாதிக்கத்திற்கு வழிவிட்டுள்ளது. இதுதான் இன்றைய கனடிய தமிழரின் சோக வாழ்வு...

Comments