சிறீலங்காவை விற்றாவது தன்னை காப்பாற்றும்படி சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள நட்புறவுகளை பேணும் நிறுவனங்களுக்கும், இராஜதந்திர ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் சிறீலங்கா அரசு பணத்தை வாரி இறைத்துவருகின்றது.
அறிக்கைக்கு எதிராக கட்டுரைகளை எழுதுமாறும் வெளிநாடுகளை சேர்ந்த முன்னனி ஊடகங்களிடம் இரகசிய வேண்டுகோள்களை விடுத்துவரும் சிறீலங்கா அரசு ஒவ்வொரு கட்டுரைக்கும் 30,000 டொலர்களை வழங்கவும் முன்வந்துள்ளது.
உள்ளூரில் 10 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் சிறீலங்கா அரசு மே தினத்தில் ஐ.நாவுக்கு எதிராக மிகப்பெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தவும் திர்மானித்துள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அறிக்கையை பகிரங்கப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை பிற்போட்டுள்ளதாக ஐ.நாவின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனவே மே தினத்தின் பின்னரே பெரும்பாலும் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அதிக கவலை கொண்டுள்ளது.
அதேசமயம், நிபுணர்கள்; குழு விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் மௌனம் காத்துவரும் இந்தியாவை அதற்கு எதிராக திருப்புவதற்கு சிறீலங்கா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. சிறீலங்கா அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகள் அடங்கிய குழு ஒன்று இரகசியமாக இந்தியா சென்றுள்ள நிலையில் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த தீர்மானத்தை ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் உதவியுடன் முறியடித்த சிறீலங்கா அரசு, தற்போதைய அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டால் அதனை முறியடிப்பதற்கு அதே நாடுகளின் உதவியை மீண்டும் நாடத் தலைப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கையை மேலும் நகர்த்துவதற்கு அல்லது நடவடிக்கையாக மாற்றுவதற்கு பான் கீ மூனுக்கு மூன்று வழிகளே உள்ளன.
• ஐ.நாவின் பொதுச்சபையில் அதனை சமர்ப்பித்தல்.
• ஐ.நாவின் பாதுகாப்புச்சபையில் சமர்ப்பித்தால்.
• ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பத்தல்.
ஆனால் பெரும்பாலான நாடுகளை கொண்ட ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுச்சபை என்பவற்றில் தீர்மானத்தை நிறைவேற்றுவது கடினமானதாக இருக்கலாம்.
பாதுகாப்புச் சபையே சிறந்த வழி என்பதுடன், அதன் அதிகாரமும் அதிகம். ஆனால் ரஸ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாது ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும் (லிபியா தொடர்பில் மேற்கொண்டதுபோல).
அதனை மேற்கொள்ளும் வல்லமை மேற்குலகத்திடம் மட்டுமே உண்டு, அவர்கள் மேற்கொள்ளும் பொருளாதார மற்றும் வர்த்தக உதவிகளின் பேரம் பேசுதல் மூலம் அதனை மேற்கொள்ளலாம். இதற்கு இந்தியாவின் ஆதரவுகளும் வேண்டும். அதனையும் மேற்குலகம் தான் சமாளிக்க வேண்டும்.
புலம்பெயர் தமிழ் சமூகமும், மனிதாபிமான ரீதியாக சிறீலங்கா விவகாரத்தில் தலையிடாது இருக்குமாறு இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு கோரிக்கைகளை விடுப்பதுடன், அவர்களுடனும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். உலகில் உள்ள முன்னனி மனித உரிமை அமைப்புக்கள் ஊடாகவும் அவர்களுக்கு கோரிக்கைகயை நாம் விடுக்க முடியும்.
ஐ.நா தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிடும்போது மிகப்பெரும் இராஜதந்திரப்போர் சிறீலங்கா அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஆரம்பமாகப்போகின்றது. அதில் வெற்றிபெறுபவருக்கே வரலாறு சொந்தமாகப்போகின்றது.
----------------
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு எதிராக ஒரு மில்லியன் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது.
ஆனால் சிறீலங்கா அரசின் இந்த முயற்சிகளை முறியடித்து அறிக்கைக்கு ஆதரவாக ஒரு மில்லியன் கையொப்பங்களை திரட்டும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் மக்களும், அமைப்புக்களும் ஈடுபடவுள்ளதாக தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் எமது செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிகாரமற்றது என தெரிவித்துவரும் சிறீலங்கா அரசு அதற்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதும், அதற்கு எதிராக கையெழுத்துக்களை பெற்றுவருவதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நாவின் அறிக்கையின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்களையும் தற்போதைய ஆட்சியாளர்களும், போர்க்குற்றவாளிகளும் நன்கு உணர்ந்துள்ளதாக வன்னியை சேர்ந்த தமிழ் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்தும் ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்துக்களை பலவந்தமாக பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மகன் நமால் ராஜபக்சா முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு என்ற போர்வையில் சிறீலங்கா படையினருக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ஒன்னிற்காக அவர் நேற்று (22) கிளிநொச்சிக்கு வந்தபோதே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை முறியடித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை வலுப்படுத்தி, அதில் காணப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிறீலங்காவில் ஒரு இனஅழிப்பு நடைபெற்றுவருவதை உலகிற்கு உணர்த்த முடியும் என புலம்பெயர் நாட்டை தளமாகக் கொண்;ட தமிழ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இன அழிப்பு நடைபெற்றுவருவதை அனைத்துலக மட்டத்தில் உறுதிப்படுத்துவோமாக இருந்தால், அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் அழிக்கப்படும் இனத்தின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட முடியும். எனவே ஐ.நாவின் அறிக்கை என்பது சிறீலங்காவில் இனஅழிப்பு நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் நாட்கள் என்பது தமிழ் மக்கள் தமது இராஜதந்திர முயற்சிகளில் உச்சத்தை தொடவேண்டிய காலம். நாம் அவசரமாக பின்வரும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
• இராஜதந்திர சந்திப்புக்களை மேற்கொள்ளுதல்
• ஐ.நாவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுதல்.
• புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள அரச தூதுவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவுகளை திரட்டுதல்.
• அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுடன் உறவுகளை வலுப்படுத்தி, அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளுதல்.
• அனைத்துலக ஊடகங்களின் ஆதரவுகளை அறிக்கைக்கு ஆதரவாக திரட்டுதல்.
• அறிக்கைக்கு ஆதரவாக பேரணிகளை நடத்துதல்.
• பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக்கோரி ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுத்தல்.
Comments