புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!

மே மாத வெயில், தேர்தல் அனல், இந்த உஷ்ணத்தில், ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி, சென்னையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்!

இந்த நிகழ்ச்சியைக் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, சென்னையில் நடத்த இருப்பதாக புகழேந்தி அறிவித்து இருந்தார். போலீஸ் தரப்போ, ‘தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பொது இடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடாது’ என தடைவிதித்தது.

‘பொது இடத்தில் எனக் கூறித்தானே தடை விதிக்கிறீர்கள்…’ என கங்கணம் கட்டிய புகழேந்தி, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், அந்தக் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். ஈழ விடுதலையை வலியுறுத்தித் தீக்குளித்த முத்துக்குமாரின் தங்கை தமிழரசி முதல் கையெழுத்து இட்டார். தொல்.திருமாவளவன், கவிஞர் அறிவுமதி உள்பட 480 பேர் அன்று கையெழுத்து இட்டனர்.

அத்துடன் புகழேந்தி விட்டுவிடவில்லை. உடனடியாக, ‘தடை செய்யப்பட்ட இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோருவது என் அடிப்படை உரிமை’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் 15-ம் தேதி, இதற்கு தீர்ப்பு வந்திருக்கிறது.

நீதிபதி சந்துரு, ”தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல என வைகோ மீதான பொடா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸார் அனுமதிக்க வேண்டும்!” என்று உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, மார்ச் 30-ம் தேதி சைதாப்பேட்டையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீஸார் அதற்கு அனுமதி தந்தனர். நிகழ்ச்சி நடந்த பனகல் மாளிகை முன்பு, ஒரு மணி நேரத்துக்கு முன்பே ஈழ ஆதரவாளர்கள் கூடத் தொடங்க… அங்கே கையெழுத்து இடுவதற்கான பேனரை உணர்வாளர்கள் வைத்தனர். நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் காட்சியளித்த 40 அடிக்கு 10 அடி அகலம்கொண்ட அந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

உடனே விரைந்த போலீஸார், அந்த பேனரை உள்சாலைக்குக் கொண்டுபோகுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘எங்களுக்கு நீதிமன்ற அனுமதி இருக்கிறது. இதைத் தடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி வரும்’ என ஏற்பாட்டாளர்கள் எச்சரிக்க, கலைந்தது போலீஸ்.

சரியாக 4 மணிக்கு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ஓரமாகத் தனது கையெழுத்தை இட்டார். பின்னர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அஸ்தியைக் கரைக்க கன்னியாகுமரி ரயிலைப் பிடிக்கச் சென்றார். அவர் போனதும் வைகோ வந்தார். அடுத்தடுத்து எழுத்தாளர்கள் தியாகு, தமிழருவி மணியன், மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி, பாடலாசிரியர் தாமரை எனப் பல தரப்பினரும் வந்து, புலிகளுக்கு ஆதரவாகக் கையெழுத்து இட்டனர்.

அந்த பிரமாண்ட பேனரில் மொத்தம் 2,200 பேர் கையெழுத்து இட்டிருந்தார்கள். கடைசியில், இரவு 7 மணிக்கு ஓவியர் வீர.சந்தானம், ”தடையை உடைப்போம்!” என முழக்கமிட்டு, நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

இயக்குநர் புகழேந்தியிடம் பேசினோம். ”பனகல் மாளிகை முன்பு நிகழ்ச்சிக்குத் தயாராக இருந்தபோது, திடீரெனக் கூட்டமாக வந்த போலீஸார், ‘பேனரை சைதாப்பேட்டை உள்சாலைக்குள் கொண்டுபோகுமாறு’ கட்டாயப்படுத்தினார்கள். இன்ஸ்பெக்டர் ஒருவர், ‘ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கார் செல்லும் பாதையை மறிப்பதாக’ச் சொன்னார். ஆனால், காலையில் மட்டும்தான் அந்த வழியில் அதிகாரிகள் செல்வார்கள் என்பதை அறிந்து நாங்கள் வாக்குவாதம் செய்ய, வேறு வழி இல்லாமல் அங்கு இருந்து நகர்ந்தார்கள். ‘நிகழ்ச்சிக்கு விளம்பர சுவரொட்டி அச்சடித்துத் தரக் கூடாது’ என அச்சகங்களில் போலீஸ் மிரட்டியது.

இதனால் சென்னையில் யாரும் சுவரொட்டி அச்சடித்துத் தரவில்லை. அதோடு, எங்களுக்கு வழக்கமாக அச்சடித்துத் தருபவர்களைக்கூட போலீஸ் பயமுறுத்தியது. ஜனநாயக நாட்டில் இதுதான் நியாயமா? ஆனாலும், இவர்கள் என்ன செய்து தடுத்தபோதும், தொலைபேசிக் குறுந்தகவல்கள் மூலமும், ஒரே ஒரு செய்தித்தாள் விளம்பரம் மூலம் மட்டுமே 2,000-க்கும் மேற்பட்டவர்களைப் பங்கேற்கவைத்தது, பெரிய வெற்றிதான்.

இதன் மூலம் புலிகள் மீதான தடை பற்றிய மௌனத்தை, அச்சத்தை உடைத்து இருக்கிறோம். இதேபோன்ற கையெழுத்து இயக்கத்தை நடத்துவதுபற்றி பல மாவட்டங்களில் இருந்தும் பேசுகிறார்கள். தடையை உடைக்கும் குரலை நெரிக்க முயன்ற தடையை, நீதிமன்றத்தின் மூலம் உடைத்தோம். தமிழகம் முழுவதும் உரிமைக் குரல் பற்றிப் பரவுவதை, எந்த சக்தியாலும் இனி தடுக்க முடியாது!” என்றார் உறுதியோடு!

Comments