சர்வதேசப் பொறிமுறையொன்றை உருவாக்குவாரா பான் கீ முன்

http://eeladhesam.com/images/breaking/ban3panel.jpgசர்வதேசப் பொறிமுறையா? அல்லது உள்நாட்டுப் பொறிமுறையா? இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் வெளிக்கொண்டு வரும் பொறுப்புடைமையை உள்ளடக்கி இருக்குமென்கிற விவாதம் தோன்ற ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையினையடுத்து, நவம்பர் 2009 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

21.02.2002 இலிருந்து 19 மே 2009 வரையான காலப் பகுதியில் நடைபெற்ற விடயங்கள் குறித்து, அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் முதன்மையான பணி. குறிப்பாக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததற்கான காரணிகளை ஆராய்ந்து, முரண்பாட்டு மோதல்கள் மறுபடியும் நிகழாதவாறு எவ்வாறு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்பதை எடுத்துக் கூற வேண்டியதே இக்குழுவிற்கு அரசு இட்ட கட்டளை.

இதுவரை, இந்த அரச கட்டளைக்கு உட்பட்டே, இவர்கள் செயலாற்றி வருகின்றார்கள். “”அவலக் கதை கேட்போர்” குழுவாகத் தொழிற்படும் இக்குழுவினர், காத்திரமான விசாரணையை மேற்கொள்ளும் தகுதியற்றோர் என்பதுதான் உண்மை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால், சாட்சியமளிக்கும் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பிற்கு, எந்த வகையிலும் இவர்களால் உத்தரவாதமளிக்க முடியாத கையறு நிலையே காணப்படுகிறது. செப்டெம்பர் 2010 இல் இந்த ஆணைக்குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் நீதி, பொறுப்புடைமை (Accountability) குறித்து சிறிதளவு பரிந்துரையும் காணப்படவில்லை என்பது சோகமானது.

அடுத்த மாதம் நடுப் பகுதியில் இரண்டாவது இடைக்கால அறிக்கையொன்று வெளியிடப்படுமென்று அரச தரப்பினர் கூறுகின்றனர். பான் கீ மூனின் அறிக்கையால் உருவான எதிர்வினையாக இதனைப் பார்க்கலாம். 2006 ஜனாதிபதி விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்னமும் வெளிவராத நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவானது, இடைக்கால அறிக்கைகளை வெளியிட்டவாறு தனது பணியை நிறைவு செய்து விடும் போல் தெரிகிறது.

வெளியிடும் இடைக்கால அறிக்கைகளைத் தொகுத்து, இதுதான் இறுதி அறிக்கையென்று வெளியிட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இலங்கையின் விசாரணைக் குழுக்களின் வரலாறு இதுதான்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், சர்வதேச மனித உரிமைச் சங்கங்களும், சில மேற்குலக நாடுகளும் தம்மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களைக் கொடுப்பார்கள் என்பதனை முன் கூட்டியே உணர்ந்த இலங்கை அரசு, நல்லிணக்க ஆணைக்குழு என்கிற முதல் கோட்டினை வரைந்தது.
இதனூடாக, தம்மால் உருவாக்கப்படும் உள்நாட்டுப் பொறிமுறை, சர்வதேச அழுத்தங்களை உறை நிலைக்குக் கொண்டு செல்லுமென அரசு கணிப்பிட்டது. இவைதவிர ஐ. நா. பாதுகாப்புச் சபையில் வெட்டு வாக்கினை (Veto) கொண்டிருக்கும் சீனாவும் ரஷ்யாவும் போர்க்குற்ற விவகாரம் அச்சபையில் கிளப்பப்பட்டாலும் தன்னைக் காப்பாற்றும் அதேவேளை, ஐ. நா. மனித உரிமைப் பேரவையிலும் தப்பித்துக் கொள்ள பிராந்திய வல்லரசாளர்கள் துணை நிற்பார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்தது இலங்கை அரசு.

ஆனால் தனது அதிகாரத்திற்குட்பட்டு பான் கீ மூன் அமைத்த ஆலோசனைக் குழுவால் இலங்கை அரசு தடுமாற்றமடைந்தது என்பது உண்மைதான்.
ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவர் குழுவின் உலகப் புகழ் பெற்ற மனித உரிமை ஜாம்பவான்கள் வீற்றிருப்பதுதான் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பெரும் தலைவலியை உருவாக்கியது. 22 ஜூன் 2010 இல், பான் கீ மூனால் அமைக்கப்பட்ட போர்க் குற்ற விசாரணைகளுக்கான ஆலோசனைக் குழுவில் இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூகி தருஸ்மான், தென்னாபிரிக்க மனித உரிமை நிபுணர் யாஸ்மீன் ஆக்கா மற்றும் அமெரிக்க மனித உரிமை சட்டவாளர் ஸ்டீபன் இரட்ணர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இக்குழுவினர் தனது உத்தியோகபூர்வ பணியினை கடந்த 16 செப்டெம்பர் 2010 இல் ஆரம்பித்தவுடன் இதற்கு தமது கடுமையான எதிர்ப்பினை இலங்கை அரசு தெரிவித்தது. இருப்பினும் இவர்கள் இலங்கைக்கு வருகை தந்து, தாம் உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க முடியுமென்று சமரசப் போக்கொன்றினை மேற்கொள்ள எத்தனித்தது. இதேபோன்று, அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடி குழுவிற்கு விடுத்த அழைப்பினையும் அவர்கள் நிராகரித்தார்கள்.
வரலாற்றில் முதல் தடவையாக இம் மூன்று அமைப்புக்களும் ஒரே அறிக்கையில் மறுப்புத் தெரிவித்து கைச்சாத்திட்ட நிகழ்வும், இந்த விவகாரத்தில்தான் நடந்தேறியுள்ளது.

இந்நிலையில் மார்ச் முதலாம் திகதியன்று, இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க செனட் சபையில் நான்கு முக்கிய அம்சங்கள் அடங்கிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதில் குறிப்பாக போர்க் காலத்திலும் அதற்கு பின்னான நாட்களிலும் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மானுடத்திற்கெதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து, பொறுப்புடைமை மிக்க சுயாதீன சர்வதேச பொறிமுறையொன்று நிறுவப்பட வேண்டுமென இலங்கைக்கான சர்வதேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளாக்கப்பட்டோரின் சுதந்திர நடமாட்டத்தினை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தினை வன்மையாகக் கண்டித்து இலங்கை வெளி விவகார அமைச்சு, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் 3.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில், “”ஜனாதிபதி ராஜபக்ஷவின் நல்லிணக்க ஆணைக்குழுவினை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்ட விடயத்தையும் சுட்டிக்காட்டியது.

அதேவேளை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று தனது வருடாந்த மனித உரிமை அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டது. அதில் தொடரும் நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் பலவந்தமாக காணாமல் போகடிக்கப்படுதல் என்பன இலங்கையில் அதிகரிப்பதாக பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டென இராணுவப் பேச்சாளரும் மறுத்திருந்தார். அதேவேளை ஏப்ரல் 7 ஆம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஷை படையினர் விசாரணை செய்யும் புதிய காணொளி பதிவொன்றினை நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டு பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.

நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பல பெண்கள், இறுதி போர் முடிவடையும் தருணத்தில் தமது கணவன்மாரை, இராணுவம் அழைத்துச் சென்ற விடயத்தை காவல் துறையினரிடம் பதிவு செய்திருந்தும் அவர்களின் இருப்பு குறித்து எந்தத் தகவல்களும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென்று கூறுகின்றார்கள்.
கேணல் ரமேசின் விவகாரமும் காணாமல் போனோர் பட்டியலுக்குள் அடக்கப்படலாம் போல் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதியன்று, மூவரடங்கிய ஆலோசனைக் குழு, தமது இறுதி அறிக்கையை ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கையளித்து, இலங்கை விவகாரத்தில் புதிய பரிமாணமொன்றினை உருவாக்கியுள்ளதெனலாம்.

இதில் ஒரு பிரதி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பப்பட்ட விவகாரமே சர்வதேச மட்டத்தில் பல சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
ஆயினும் பல தரப்புகளிலுமிருந்து இதற்கு பலத்த வரவேற்பு இருந்ததை அவதானிக்க வேண்டும். இலங்கையில் நீதியை முன்கொண்டு செல்ல இவ்வறிக்கை உதவுமென, பான் கீ மூன் மீது புகழாரம் சூட்டியுள்ளார் மனித உரிமை கண்காணிப்பக ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ். அறிக்கை, பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்கிறார் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலய பணிப்பாளர் சாம் ஷரிபி.

இந்த நிபுணர் குழுவை விட, காத்திரமான, ஆழமான ஆய்வினை மேற்கொள்ளக் கூடிய அதிகாரமிக்க விசாரணைக் குழுமத்தை, பான் கீ மூன் அமைக்க வேண்டுமென சர்வதேச நெருக்கடிக் குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் கூறும் அதேவேளை, இதற்கான பதிலைப் பெறுவதற்கு இலங்கை மீது சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

அலன் கீனன் கூறும் இன்னுமொரு விடயம் அவதானிக்கப்பட வேண்டியது. அதாவது ஐ. நா. பாதுகாப்புச் சபையோ அல்லது அதன் மனித உரிமைப் பேரவையோ, விசாரணைக் குழுவை உருவாக்காது என்பதனை அங்குள்ள வீட்டோ அதிகாரம் கொண்ட சீனாவும் ரஷ்யாவும் கொண்டுள்ள இலங்கையுடனான உறவு எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிடும் கீனன், பான் கீ மூன் அவர்களே அத்தகைய அதிகாரமிக்க குழுவை உருவாக்க முடியுமெனக் கூறுகின்றார்.

இந்த அறிக்கையை வைத்து, அடுத்து என்ன செய்யப் போகிறார் பான் கீ மூன் என கேள்விக்கணைத் தொடுப்போரிற்கு, அலன் கீனனின் ஆலோசனை புதிய பாதையைக் காட்டுமென எதிர்பார்க்கலாம். இவை தவிர, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் வெள்ளைக் கொடி விவகாரத்தில் தொடர்புடைய பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரின் பெயரும் இணைக்கப்பட்டிருப்பதால் அறிக்கையில் சறுக்கல் நிகழ்ந்து விடுமாவென்கிற பலத்த சந்தேகம் எழுகிறது.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷ வரைந்த நல்லிணக்க ஆணைக்குழு என்கிற கோட்டிற்குப் பக்கத்தில் வரையப்படும் அனைத்துலக போர்க் குற்ற விசாரணை என்ற கோடு பெரிதாக நீளுவது போல் தெரிகிறது.

அதனை சிறிய கோடாக மாற்றுவதற்கு, நல்லிணக்க ஆணைக்குழுவினை பூதாகரமாக்க வேண்டிய தேவை சிங்களத்தின் மீது திணிக்கப்படுகிறது. அடுத்த மாதம் நடுப் பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலம் முடிவடைந்தாலும் அதனை நீடிப்போமென அரசு வெளிப்படுத்தும் செய்திகள் கால நீடிப்புத் தந்திரோபாயத்தை எடுத்துக் கூறுவது போலுள்ளது.

நன்றி: வீரகேசரி.

Comments