ஐ.நா. அறிக்கை: இறுதிப் போரில் மக்களின் பேரிழப்புக்கு இலங்கை அரசே முக்கிய பொறுப்பாளி - காணொளி


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புக்களில் பெருமளவிலானவை அரச படையினரின் எறிகணை மழையினால் ஏற்பட்டவையே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை.

அறிக்கையின் ஒரு பகுதி நேற்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியானது. ஐ.நாவினால் உத்தி யோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதும், அறிக்கை வெளியானது குறித்து ஐ.நா. விசனம் அடைந்துள்ளது. அடுத்த வாரத்தில் முழு அறிக்கையும் வெளியிடப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. நிபுணர் குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் திகதி பான் கீ மூனி டம் கையளித்தது. அது உடனடியாக இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருந்த விவரங்கள் வருமாறு :

இறுதிப் போர் குறித்து இலங்கை அரசு தற்போது கூறிவருவதற்கு மிகமிக வேறான பக்கத்தை நிபுணர் குழுவின் நம்பத்தகுந்த குற்றச் சாட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. "பொதுமகன் ஒருவருக்குக் கூட பாதிப்பு'' ஏற்படாத விதத்தில் "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை''யை மேற்கொண்டதாக அரசு கூறுகின்றது. ஆனால், அதற்கு மாறாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்று நம்பத்தகுந்த அளவில் நிபுணர் குழு அவற்றைக் கண்டறிந்துள்ளது. அவை நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அனைத்துலக மனிதார்ந்த சட்டங்களையும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களையும் மீறியிருக்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வரும். அவற்றில் சில மனித குலத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாரதூரமான போர்க்குற்றங்களாகக் கொள்ளத்தக்கவை. உண்மையில், போரின் போதும் சரி, அமைதியின் போதும் சரி, அனைத்துலகச் சட்டங்களால் தனிநபர் மதிப்பைப் பாதுகாப்பதற்கென வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் மீறுவதற்கு இந்தப் போர் வழிகாட்டி உள்ளது. குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புடையதான, உண்மையென நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.

பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் பெரும் எடுப்பிலும் பரந்தளவிலுமான எறிகணைத் தாக்குதலைப் பயன்படுத்தியவாறு, செப்ரெம்பர் 2008 இற்கும் 19 மே 2009 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை இராணுவம் வன்னிக்குள் முன்னேறியது. இந்த நடவடிக்கை வன்னியில் வாழ்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது. 330,000 பொதுமக்கள், தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த பகுதிக்குள் சிக்கிக் கொண்டார்கள். எறிகணை வீச்சுக்குத் தப்பி ஓடினார்கள். ஆனால் அவர்கள் புலிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டார்கள். ஊடகங்களை அமைதியாக்கவும் போரை விமர்சித்த ஏனையவர்களை அரசு பலவந்தமாக மிரட்டியும் பணிய வைத்தது. அதற்காக கடத்தல் மற்றும் காணாமற் போதல்களைச் செய்வதற்காக வெள்ளை வான்களைப் பயன்படுத்தியது உட்பட பலவித அச்சுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

சூனியப் பிரதேசங்களில் கண்மூடித்தனமான எறிகணை வீச்சு
மக்களைச் சென்று ஒன்றுகூடுமாறு தானே வழிப்படுத்திய யுத்த சூனியப் பிரதேசங்களின் மீது இலங்கை அரசே பெருமெடுப்பில் எறிகணை வீச்சை நடத்தியது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக வெளியே கூறியதன் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகப் பகுதி, உணவு விநியோக வழிகள், காயப்பட்டவர்களையும் அவர்களது உறவினர்களையும் ஏற்றிச்செல்ல கரைக்கு வந்த செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் கப்பல்களின் அருகில் இருந்த இடங்கள் என்பவற்றின் மீதும் அரசு எறிகணைகளைப் பொழிந்தது.
எறிகணை வீச்சால் ஏற்படப்போகும் சேதங்கள் பற்றித் தெரியாமல் இலங்கை அரசு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை. இழப்புக்கள் குறித்து அரசின் சொந்த புலனாய்வு அமைப்புக்கள், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, ஐ.நா. மற்றும் ஏனைய அமைப்புக்கள் சுட்டிக்காட்டிய போதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இறுதிப் போரின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பாதிப்பில் மிக அதிகமானவை அரச படைகளின் எறிகணைத் தாக்குதலாலேயே ஏற்பட்டது.

வைத்தியசாலைகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்
முன்னரங்குகளில் இருந்த வைத்தியசாலைகள் மீது அரசு திட்டமிட்டமுறையில் எறிகணைத் தாக்குதல் நடத்தியது. வன்னியின் அனைத்து வைத்தியசாலைகளும் மோட்டார் மற்றும் ஆட்லறி எறிகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன. அவை அந்த இடத்தில் இருக்கின்றன என்பது நன்கு தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டது. போர் நடைபெற்ற இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய மனிதாபிமான உதவிகளையும் அரசு நன்கு திட்டமிட்டுப்பிடுங்கிக் கொண்டது. உணவுப் பொருள்களும் மருத்துவ உபகரணங்களும் குறிப்பாக சத்திர சிகிச்சைக்கான சாதனங்களும் தடுக்கப்பட்டதால் மக்களின் பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்தது.
மறுபக்கத்தில், போர்ப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டும் என்றே குறைத்து மதிப்பிட்டது.


எண்ணற்ற மனிதப் படுகொலைகள்
2009 ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் ஆயிரம் ஆயிரம் பொதுமக்கள் (10,000 முதல் ஒரு லட்சத்துக்கு இடைப்பட்டதான எண்ணிக்கை) கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், இறுதி சில நாள்களில் மட்டும் எங்கு, எப்போது என்று சொல்லமுடியாது இடம்பெற்ற மனிதப் படுகொலைகளிலேயே இறந்தனர். போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறிய பின்னரும் தப்பிப் பிழைத்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் மேலும் துன்பத்துக்கும் இழப்புக்களுக்கும் உள்ளாக்கியது அரசு. விடுதலைப் புலிகள் அமைப்புப் போராளிகளைத் தேடியறியும் நடவடிக்கைகள் எந்தவித வெளிப்படைத்தன்மையோ வெளியாள்களின் பிரசன்னமோ இன்றி நடந்தது.பிரித்தெடுக்கப்பட்ட சிலர் கிட்டத்தட்ட மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவ்வாறே பிரித்தெடுக்கப்பட்ட பெண்கள் சிலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் பலர் காணாமற் போயிருக்கிறார்கள். அது பற்றி அவர்களது மனைவிமார்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்துள்ளார்கள்.

மூடப்பட்ட முகாம்களுக்குள் முடக்கம்
இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மூடப்பட்ட முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். அளவில்லாத கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மிக மோசமான நிலைமை, தடுத்து வைக்கப்பட்டவர்களின் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைத் தகர்த்து எறிந்தது. இதனால் அங்கும் பல உயிர்கள் தேவையற்ற வகையில் இழக்கப்பட்டன.
முகாம்களில் இருந்த சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். புலிகள் இயக்கத்தினர் என்ற சந்தேகத்திற்குட்பட்டோருக்கு ஏனைய வசதிகள் அகற்றப்பட்டன. அவர்கள் வெளி உலகத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டனர். இந்தக் கையறு நிலையால் அவர்கள் மேலும் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கான ஏதுநிலையைத் தோற்றுவித்தது.

புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
போர்ப் பகுதிகளில் மிகப் பெரும் ஆபத்துக்கள் நிலவிய போதும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி மறுத்தனர். மக்களை அவர்கள் மனிதக் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தினர். முன்னேறி வரும் இலங்கை இராணுவத்தினருக்கும் தமக்கும் இடையிலான மனிதக் கேடயங்களாகவும் அச்சமயத்தில் புலிகள் மக்களைப் பயன்படுத்தினர். போர் நடைபெற்ற காலம் முழுவதும் கட்டாய ஆள்சேர்ப்பு என்ற கொள்கையைப் புலிகள் நடைமுறைப்படுத்தினர். போரின் இறுதிக் கட்டத்தில் தமது கட்டாய ஆள்சேர்ப்பை இயக்கம் தீவிரப்படுத்தியது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
தமது பாதுகாப்புக்காக பொது மக்களை பதுங்கு குழிகள் தோண்டுமாறு புலிகள் நிர்ப்பந்தித்தனர். இதனால் பொதுமக்கள் யார் ஆயுததாரிகள் யார், என்று பிரித்தறிய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதுவும் பொதுமக்களின் மேலதிக இழப்புக்களுக்குக் காரணமானது. தெளிவான தோல்வி அடைந்த ஒரு போரைத் துரத்திச் செல்வதற்காக இவை அனைத்தும் செய்யப்பட்டன. தமது மூத்த தலைவர்களைக் காப்பாற்ற புலிகள் எடுத்த நடவடிக்கைகளால் பல பொதுமக்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டி ஏற்பட்டது. 2009 பெப்ரவரி மாதம் முதல், போர்ப் பகுதிகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை மிகமிகக் குறுகிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லத் தொடங்கியது புலிகள் இயக்கம். இது இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்தது.
பெருமளவு பொதுமக்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து புலிகள் ஆட்லறித் தாக்குதல்களை நடத்தினார்கள். அல்லது பொது மக்கள் பகுதிகளுக்குள்ளும் வைத்தியசாலைகளின் அருகிலும் ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்தினார்கள். இறுதிப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் போர்ப் பகுதிகளுக்கு வெளியே தற்கொலைத் தாக்குதலை நடத்தும் தமது கொள்கையை புலிகள் தொடர்ந்தார்கள். முன்னரைப் போன்று சேதங்களை ஏற்படுத்தக் கூடிய வினைத் திறனை இழந்திருந்தாலும் கூட பொது மக்கள் இலக்குகள் மீது அவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினார்கள்.

இறுதியாக, நம்பத் தகுந்த குற்றச்சாட்டுக்களில் ஐந்து பிரிவுகளில் அரசு கடும் மீறல்களில் ஈடுபட்டதாக நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
1. பரவலான எறிகணைத் தாக்குதல் மூலம் பொதுமக்களை அரசு கொன்றது,
2. வைத்தியசாலைகள் மற்றும் மனிதார்ந்த நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியது,
3. மனிதாபிமான உதவிகளை மறுத்தது,
4. போரால் பாதிக்கப்பட்டவர்களதும் தப்பிப் பிழைத்தவர்களதும் (இடம்பெயர்ந்தோர் மற்றும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட) மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன,
5. அரசை விமர்சித்தோர் மற்றும் ஊடகங்களுக்கு எதிரானவை உள்ளிட்ட, போர்ப் பகுதிகளுக்கு வெளியே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை.

அதேபோன்று விடுலைப் புலிகளும் 6 வகையான பிரிவுகளில் மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
1. மனிதக் கேடயங்களாகப் பொதுமக்களைப் பாவித்தது,
2. புலிகளின் பகுதிகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களைச் சுட்டுக் கொன்றது, 3. பொதுமக்களின் இடங்களுக்குள் வைத்து இராணுவ உபகரணங்களைக் கையாண்டமை,
4. சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் படைகளில் சேர்த்தமை,
5. கட்டாயப்படுத்தி வேலை வாங்கியமை,
6. தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைக் கொன்றமை.

அனைத்துலக மனிதார்ந்த சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறுவதற்குப் பொறுப்புக் கூறுவது என்பது வெறுமனே கொள்கையோ தெரிவோ அல்ல; அனைத்துலக மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் அது ஒரு கடமை.
இந்தப் பாரதூரமான சட்டமீறல்கள், இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிவதற்காக காத்திரமான விசாரணைகள் மற்றும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றன. சந்தேகமற இது நிரூபிக்கப்பட்டால், சர்வதேசக் குற்றங்களுக்குக் முக்கிய காரணமான இலங்கை இராணுவத் தளபதிகள், மூத்த அரச தலைவர்கள், இராணுவம், புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகளாக்கப்பட வேண்டும்.
அதேசமயம், மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுதல் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாலும் செல்ல வேண்டும். கடந்த காலங்களில் மனித உரிமைகளையும் மனித மதிப்பையும் அத்துமீறுவதற்குக் காரணமாக அமைந்த அமைப்புக்கள், தனிநபர்களுக்கு அப்பால் அதற்குத் துணை நின்ற அரசியல் மற்றும் சட்ட ரீதியான காரணங்கள் குறித்தும் பரந்தளவில் அக்கறை செலுத்தப்பட வேண்டும். பொறுப்புக் கூறுதல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் உண்மையும் அடைவதற்கானதாக இருக்க வேண்டும்.
அவ்வாறே தனது குடிமக்களின் உரிமைகளை மீறிய விடயத்தில் தனது பொறுப்பு மற்றும் பங்கு குறித்த உத்தியோகபூர்வமான அறிக்கையிடலை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பொறுக்கூறுதல் வேண்டி நிற்கின்றது.

ஐ.நாவின் கொள்கைக்கு ஏற்ப எந்தவொரு பொறுப்புச் சொல்லும் பொறிமுறையையும் நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை. அதேசமயம் தேசிய கணிப்பீடுகள் மற்றும் மக்களின் அபிலாஷைகளைப் உள்ளடக்கியதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருக்க வேண்டும். எப்படி இருந்த போதும் எந்த ஒரு தேசிய முயற்சியும் அனைத்துலக தராதரத்தை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். நீதியை நிலைநாட்டுவதற்கு நடுநிலையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்குக் கூறப்படவேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல
இலங்கை அரசு நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல.
அதில் ஆழமான குறைபாடுகள் உள்ளன. இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா. பொதுச்செயலரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு ஏற்ப அது திருப்திகரமானதாக இல்லை. போரின் இறுதிநாள்களில் ஐ.நாவின் அரசியல் அங்கங்களோ அல்லது அமைப்புகளோ வன்னியில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளன.

பரிந்துரை: 1
அ. ஆயுதப்போரின் போது இருதரப்பினாலும் மீறப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஆ. இலங்கை தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் உடனடியாக சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிந்துரை: 2
கீழ் குறிப்படும் விடயங்கள் குறித்து இலங்கை அரசு குறுகிய கால (உடனடி) நடவடிக்கைகளை மெற்கொள்ள வேண்டும். (துணைப்படைகளின் களைவு, போரால் பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்தல், இறந்த/ காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கல், போரில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு உள சமூக ஆதரவு வழங்குவதல், அனைத்து இடம்பெயர்ந்தவர்களையும் விடுவித்து மீள்குடியமர்த்துதல், இயல்பு வாழ்வுக்குத் திரும்பும் வரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல் ஆகியவை)

பரிந்துரை: 3
போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலான நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பரிந்துரை: 4
இலங்கை தொடர்பாக 2009ல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை திரும்பக் கொண்டுவருவது குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய வேண்டும். என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளில் ஐ.நாவும் இலங்கையும் செய்ய வேண்டியவை தொடர்பாக விரிவான விளக்கக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

Comments

Nalliah said…
முள்ளிவாய்க்காலில் முற்றுகையில், பல்லாயிரக்கணக்கான பணயக் கைதிகளை கைகழுவி, அவர்களின் காலைவாரி, அவர்களின் படுகொலைகளுக்கு பாத்திரவாளிகளான ஐ நா வின், காலங்கடந்த காத்திரமற்ற இந்த அறிக்கையினால், சீனா, ரஷ்சியா இருக்கும்வரை இலங்கை அரசின் மீது எந்தவித நடவடிக்கையும் நடைமுறையில் ஐ நா வினால் நடைமுறைப்படுத்த முடியாது என்பதே யதார்த்தம்

Nalliah Thayabharan