யார் இந்த செயற்பாட்டாளர் தனம் ? பித்துப் பிடித்திருக்கும் இணையங்கள்.

நேற்று முந்தினம் லண்டனில் தனம் என்பவர் தாக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவலாக இணையங்களில் உலாவருகின்றன. மனிதநேய செயல்பாட்டாளரா? தேசியவாதியா இல்லை தேசத்துரோகியா என்று பட்டிமன்றங்களும் தமிழ் இணையங்களூடாக நடாத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில், மின்னஞ்சல் மூலமாகவும் பல பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஒரு கணனி, கூகுள் உதவியோடு தமிழை தட்டச்சுசெய்யும் பழக்கம் இருந்தால்போதும் தனது சொந்தக் கருத்துகளாக எதனைவேண்டும் என்றாலும் திணிக்க முயலும் ஒருசில தமிழர்கள், மே 18க்கு பிறகு பொறுப்புகளைக் கைப்பற்றவேண்டும் என மேலும் சில தமிழர்கள், தமது அமைப்பே எல்லா அமைப்பை விடவும் முந் நிலை வகிக்கவேண்டும் என சில அமைப்புகளின் பிரதிநிதிகள், இதுபோன்றவர்களால் மட்டுமே தற்போது பிரித்தானியா ஆனாலும் சரி உலக நாடுகள் ஆனாலும் சரி, தமிழர்களுக்கு மத்தியில் பல பிரிவினைகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது.
1989ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்தே பிரித்தானியாவில் தமது தமிழீழ செயல்பாடுகளை ஆரம்பித்திருந்தவர் தனம் ஆகும். அவரை 1990களில் நான் லண்டனில் சந்தித்தவேளை, எரிமலை என்னும் நாளிதழை வீடுவீடாகக் கொண்டுசென்று, கொடுத்து அதன் மூலம் பெறப்படுவதை ஈழத்துக்கு அனுப்பி வந்தார். குறிப்பாக போராட்டத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர் பிரித்தானியாவில் இருந்துமேற்கொண்டு வந்தார் என்பது பலர் அறிந்த விடையம். விடுதலைப் புலிகள் இன்று பலமாக இருந்திருந்தால், இத் தாக்குதல் நடைபெற்றிருக்காது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது, அப்படியே நடந்திருந்தாலும், தேசிய தலைவர் அவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மக்களைக் கேட்டிருப்பார். ஏன் எனில் அவர் விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கு, மக்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவு, சக்திக்கு மீறிய, உதவிகளை ஒன்றுதிரட்டி உதவியுள்ளார் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

பிரித்தானியாவில் மாவீரர்நாள் ஏற்பாடுகளைச் செய்தல், மக்களை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவரும் தனம், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை பிரித்தானியாவில் நடத்தி புலம்யெர்ந்த தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டுவதில் முன்னின்று உழைத்தவர். அத்துடன், 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் இணைந்து மக்களை அணிதிரட்டும் பணியையும் மேற்கொண்டிருந்தவர். 2010ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு ஒலிக்கும் உயிரோடைத்தமிழ் (ஐ.எல்.சி) என்ற வானொலியை நடத்துவதிலும் முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.

கடந்த 21 வருடங்களாக ஒரு தமிழீழ செயற்பாட்டாளராக இருக்கும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதையும் நான் மறந்துவிடவில்லை. தனம் அவர்கள் இருக்கும் வீடு ஒரு தனி வீடு என்றும், அது ஒரு பங்களா என்றும் பலராலும் சொல்லப்படுவதும், அவர் பல காலமாக வேலைசெய்யாமல் இருப்பதாவும், மற்றும் புலிகளின் பெருந்தொகைப் பணத்தை அவர் வைத்திருப்பதாகவும் அவர்மேல் பல குற்றச்சாட்டுகளை எனது நண்பர்கள் கூட முன்வைத்திருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக எனக்கு அவரைத் தெரிந்திருந்தாலும் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்வியுற்ற காரணத்தால், அவரைச் சென்று பார்க்க நான் விரும்பினேன். அவரது விலாசம் எனக்கு தரப்பட்டது. எனது காரில் ஏறி அவர் இருப்பிடம் நோக்கி விரைந்தேன்.

இருப்பிடத்தை அடைந்து குறிப்பிட்ட இலக்கமுடைய வீட்டைப் பார்த்தால் திகைத்துப் போனேன். ஒரு சராசரி பிரித்தானியக் குடிமகன் வசிக்கும் வீட்டை விட அவரது வீடு தரம் தாழ்ந்து இருப்பதைக் கண்டு, இது உண்மையாகவே தனம் அவர்களின் வீடுதான என நினைத்துக்கொண்டு சந்தேகத்துக்கு மத்தியில் கதவைத் தட்டும்போது, சற்று கீழே கவனித்தேன். அங்கே நிறைய சப்பாத்துகள் இருந்தது. அப்போதுதான் "ஓ" அவரைப் பார்க்க வந்த ஆட்களின் சப்பாத்துகளாக அவை இருக்கலாம் என நினைத்தேன், அப்போது கதவுகள் திறக்கப்படுகிறது. இது தனம் அவர்களின் வீடா என நான் கேட்டபோது ஆமாம் எனப் பதில் வருகிறது.

உள்ளே சென்றபோது கட்டிலில் கை மற்றும் தலையில் அடிபட்ட நிலையில் தனம் அவர்கள் இருக்கிறார். வரும் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்று சொல்லியே அவர் குரல் சற்று தளர்ந்துபோய் இருந்தது. 47 வயதாகும் தனம் நீரிழிவுநோய், உயர் ரத்த அழுத்தம் என பல நோய்களால் பீடிக்கப்பட்டவர். தினம்தோறும் சுமார் 19 மாத்திரைகளை உட்கொள்ளவேண்டிய கட்டாய நிலையில் உள்ளவர். இந் நிலையில் கூட தமிழ்த் தேசியம், மனிதநேயம் என அவர் ஏன் அலைந்து திரிய வேண்டும் ? அதனைக் காரணம் காட்டி பணம் சம்பாதிக்கவா ? அப்படி பணம் சம்பாதித்திருந்தால் அவர் ஏன் ஒரு எழிமையான வீட்டில் இருக்கவேண்டும் ?

சிலவேளைகளில், எமது புத்திசாலித் தமிழர்கள் சொல்லுவார்கள் அவர் பணத்தை வேறு இடத்தில் போட்டுவிட்டு, தன்னிடம் ஒன்றும் இல்லை எனக் காட்டத்தான் அவர் எழிமையான வீட்டில் இருக்கிறார் என்று. அந்தச் சந்தேகத்துக்கும் விடைகிடைத்தது. நான் ஒரு பேப்பரில் சில விடையங்களை எழுதுவதற்காக, மேலே பார்க்கிறேன். அங்கே அவர் இருந்த அறையில் மின் விளக்கின் வெளிச்சம் போதவில்லை. எனவே எழுந்து மற்றைய அறைக்குச் சென்றால் அங்கேயும் மின் விளக்கின் வெளிச்சம் போதவில்லை. இதற்கும் நான் சொல்லவரும் கருத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா ? ஆம் அவர்கள் வீட்டில் பாவிப்பது, சாதாரண மின்விளக்கு அல்ல. மின்சாரத்தைக் குறைய பாவிக்கும் எனர்ஜி சேவர் மின்விளக்குகளே.

ஆதாவது பணம் படைத்தவர்கள் அவ்வாறான மின்விளக்குகளைப் பொதுவாகப் பாவிக்கவே மாட்டார்கள். மின்சாரக் கட்டணம் பற்றிச் சிந்திப்பவர்களே இந்தவகை மின்விளக்குகளை பாவிப்பர். அவர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சியானாலும் சரி, வேறு பொருட்களாக இருந்தாலும் சரி அங்கே ஆடம்பரம் எதனையும் நான் காணவில்லை. எல்லாம் எனக்கு புதுமையாகவே இருந்தது. அப்போது தான் நான் ஒரு விடையத்தைப் புரிந்துகொண்டேன். காதால் கேட்பதும் பொய், தீர விசாரிக்காமல் நம்புவதும் பொய், கண்களால் காணவும் வேண்டும், தீர விசாரிக்கவும் வேண்டும், அப்படி என்றால் தான் எமக்கு உண்மை நிலை புரியும் என உணர்ந்துகொண்டேன்.

திரு.தனம் அவர்களைப் பற்றிக் குறைகூறும் பலரை நான் சந்தித்துள்ளேன். அவர்கள் வீட்டிற்கும் சென்று இருக்கிறேன். அவர்கள் வீடு தனத்தின் வீட்டை விட பல மடங்கு உயர்ந்தவை. ஆடம்பரப் பொருட்கள் நிறைந்தவை. அவர்கள்தான் பெரும் பணத்தோடும் ஆடம்பரமாகவும் வாழ்பவர்கள். அதுதான் உண்மையும் கூட.

21 வருடங்களா தமிழீழ விடுதலைக்கு அயராது உழைத்தவர் தனம். போராளிகள் அந்த இராணுவ முகாம்களைத் தாக்கினார்கள், இந்த முகாம் வீழ்ந்தது என்று எல்லாம் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் மார்தட்டிக்கொண்டதற்கு பெரும் காரணிகளாக இருந்தவர்கள் அப்போதைய செயல்பாட்டாளர்கள் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. புலிகள் வெற்றிமேல் வெற்றி பெறும்போது குதூகலித்த தமிழினம் அதற்குப் பின்னணியில் யார் யார் இருந்தார்களோ அவர்களை தற்போது மறந்துவிட்டனர். தேசிய தலைவரே தனது மாவீரர் நாள் உரையில் புலம்பெயர் தமிழர்கள் உதவிகளும் பங்களிப்பும் இல்லாவிட்டால் போராட்டம் இவ்வளவுவெற்றி பெற்றிருக்காது எனச் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் அதனை ஒன்றிணைத்து ஊருக்கு அனுப்பியது யார் ?

இவ்வாறு பல நாடுகளில் செயற்பட்டுவந்த, உணர்வாளர்களே அதற்கு காரணகர்த்தா. இன்று புலிகள் வீழ்ச்சிகண்ட நேரம்பார்த்து, அவர்கள் மேல் பொறாமைகொண்ட சிலரால் திட்டமிட்டு அவர்கள் மீது அவதூறுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. அது மட்டும் என்றால் பரவாயில்லை, ஆட்களைவைத்து தாக்குவது என்பது கடும் கண்டனத்துக்குரிய விடையமாகும். இக் கலாச்சாரம் முளையிலேயே கிள்ளப்படவேண்டிய விடையமாகும்.

தமிழீழ செயற்பாட்டாளர்களைக் குறைகூறுவதும், அவர்களை தூரோகிகளாக்குவதும், அவர்கள் மீது சேறுபூசி ஒதுக்குவதும், தற்போது முளைத்திருக்கும் சில புல்லுருவிகளால் மட்டுமே திட்டமிட்டு நடாத்தப்படுகிறது. நான் முன்னர் குறிப்பிட்டது போல ஒரு கணனி இருந்தால் போதும், 20 வருடம் உழைத்தவரை 20 நிமிடத்தில் துரோகியாக்க முடியும் ! மின்னஞ்சலை அனுப்புவதும், கட்டுரை என்றபெயரில் காலைவாருவதும், இணையத்தை அல்லது பிளாக்ஸ் பாட்டை நிறுவி அதனூடாக தமது கருத்துக்களை பரப்புவது தமிழர்களுக்கு கைவந்தகலை. நேரம் கிடைத்தால் ஈழ விடுதலை பற்றி யோசியாது, யாரைக் கவிழ்ப்பது என்பது குறித்தே சிந்திக்கப்படுகிறது. ரூம்போட்டு யோசிக்கும் கூட்டங்களும் இருக்கிறார்கள்.

இவர் யார், அதற்கு பொறுப்பாக இருக்க ? இவர் யார் அதனைச் செய்ய ? இவர் யார் இந் நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்த, இந்தா நான் நடத்துகிறேன் பார், எனது கட்டுப்பாட்டில் இது இருக்கவேண்டும் , என்னைக் கேட்காது எதுவும் நடக்கக்கூடாது, வானொலியா அதற்கு போட்டியாக ஒன்று, தொலைக்காட்சியா அதற்கு போட்டியாக ஒன்று, இணையமா அதற்கு எதிராக பல ஆயிரம் இணையங்கள், ஈழ விடுதலையா அதற்கு மாற்றுக் கருத்தோடு புறப்படும் சில தமிழர்கள், என உலகிலேயே கேடுகெட்ட இனமாக தமிழ் இனம் மாறிவருகிறது. கருத்துக்கள், விமர்சனங்களை கொண்டு மோதாது, கைகலப்பில் ஈடுபடுதல், வாய் தர்கத்தை அடிதடியில் காட்டுதல். அச்சுறுத்தலை கோஷ்டி போட்டுச் செய்தல் என எமது இனம் தலைகீழாக மாறியுள்ளது.

இது குறித்து மக்களே விழிப்படையவேண்டும் ! இணையமானாலும் சரி, வானொலி தொலைக்காட்சியானாலும் சரி, மக்கள் பார்க்கும் கேட்கும் மற்றும் வாசிக்கும் விடையங்களை பகுத்தறியும் திறன் வளரவேண்டும், எது உண்மையாக இருக்கும் எது பொய்யாக இருக்கும், எது கற்பனையாக இருக்கும் என மக்கள் முதலில் தெளிவுபடவேண்டும் ! மக்களுக்கு மத்தியில், தாமும் தேசியவாதிகள் எனக்கூறிகொண்டு குழப்பங்களை உண்டுபண்ணி இலங்கை அரசுக்கு துணைபோகும், மற்றும் சுயநலத்துக்காகச் செய்யும் ஒரு சில தமிழர்கள் உடனடியாக இனம்காணப்படவேண்டும். இல்லையேல் நாம் போராட்டப்பாதையை நோக்கிப் பயணிக்க முடியாது. இத்தகைய பிரச்சனைகளுக்கே நாளாந்தம் முகம்கொடுக்கநேரிடும் !

எனவே மக்களே நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று. இதுவே புலம்பெயர் தேசங்களில் தற்போது தலைதூக்கியுள்ள பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனை முதலில் களையெடுக்கவேண்டும். இதனை நான் எழுதுவதால் என்னையும், இதனை வெளியிடும் இணையத்தின் மீதும் வீண் பழிகளை சிலர் சுமத்தவும் கூடும். இல்லையேல் அவதூறு பரப்புரைகளை மேற்கொள்ளவும் முற்படுவர். இதனையும் எதிர்கொள்ள நாம் தயாராவே உள்ளோம். புரிந்துணர்வோடு, புத்திசாலித்தனத்தோடு, புது உலகம் அமைப்போம் புறப்படுவீர் தோழர்களே ...

பைந்தமிழ் காவலன்.

Comments