பன் கீ மூன் இரண்டாவது முறையாகவும் பதவியில் தொடருவதற்கான வாய்ப்பு தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவரும் கருத்துக்களை அவதானிக்கும்போது, இந்தப் பொறியினை ஏற்படுத்தியது பன் கீ மூனா அல்லது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளா என்ற வலுவான கேள்வி எழுகிறது.
இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவின் போர்க் குற்ற வல்லுநர்கள் குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது பன் கீ மூனை பொறியில் சிக்கவைத்துவிட்டது என்ற கருத்தினை குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊடகங்கள் கொண்டிருக்கின்றன.
அனைத்துலக அரசியலைத் திறனுடன் கையாளும் சிறிலங்கா அரசாங்கம் தான் பணிக்கு அமர்த்தியிருக்கும் மக்கள் உறவு நிறுவனங்கள் ஊடாக பன் கீ மூனை வெற்றி கண்டிருக்கிறது என் இந்த ஊடகங்கள் வெகுவாக நம்புகின்றன.
ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சுமூகமானதொரு நெருங்கிய உறவு நிலவிவந்திருக்கிறது என்றும் இவர்கள் இருவருக்கும் இடையில் நிலவிய நெருங்கிய உறவுதான் வல்லுநர்கள் குழு தனது அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகக் கடும்போக்கு நிலைப்பாட்டினை எடுக்காமல் மென்போக்குடன்கூடிய அணுகுமுறையினைக் கைக்கொள்ளுவதற்குக் காரணம் எனவும் இவர்கள் நம்புகிறார்கள்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.நாவின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் பன் கீ மூனுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துரைத்திருந்த அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க, இந்தச் சந்திப்பு வெற்றிகரமானதாக இடம்றெபற்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
வல்லுநர்கள் குழுவின் அங்கத்தவர்கள் சிறிலங்காவிற்கு பயணம் செய்து சிறிலங்கா அமைத்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைச் சந்திப்பதற்கு அதிபர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக லலித் வீரதுங்க கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையிடம் கூறியிருந்தார்.
தனது தாளத்திற்கு பன் கீ மூனை ஆடவைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் இன்னொரு அரசியல் சித்து விளையாட்டுத்தான் இது என சில வெளிநாட்டு ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் உண்மையில் நடப்பது யாதெனில், இந்த வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது முதல் சிறிலங்கா அரசாங்கம்தான் பன் கீ மூனது பொறிக்குள் சிக்கியிருக்கிறது. இந்தப் பொறியினை அமைத்தது பன் கீ மூனா அல்லது அமெரிக்கா மற்றும் அதனது ஆதரவு மேற்கு நாடுகளா என்பது இதுவரை வெளிவரவில்லை.
வல்லுநர்கள் குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் தனது சிறப்புப் பிரதிநிதி ஒருவரைச் சிறிலங்காவிற்கு அனுப்புவதற்கும் பன் கீ மூன் தயாராக இருந்தார். ஆனால் செயலாளர் நாயகத்தின் இந்தச் சிறப்புத் தூதுவர் சிறிலங்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார் எனச் சிறிலங்கா அறிவித்திருந்தது.
ஆனால் பின்னர் தனது முடிவினை மாற்றிக்கொண்ட சிறிலங்கா அரசாங்கம் பன் கீ மூனின் சிறப்புப் பிரதிநிதியான லியாம் பொஸ்கோ சிறிலங்காவிற்கு வருவதற்கு அனுமதித்திருந்தது. சிறிலங்காவினை வந்தடைந்த இந்தச் சிறப்புப் பிரதிநிதி வடக்குக் கிழக்கிற்கான தனது பயணத்தின் பின்னர் கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தியிருந்தார்.
இதன்போதுதான் வல்லுநர்கள் குழுவினை அமைக்கும் பன் கீ மூனின் திட்டத்தினை லியாம் பொஸ்கோ ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இந்த அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கதிற்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
பன் கீ மூன் வல்லுநர்கள் குழுவினை நியமித்த பின்னர் இந்தக் குழுவின் உறுப்பினர்களைச் சிறிலங்காவிற்கு அனுப்புவதற்காக அனுமதியினைப் பெற்றுக்கொண்ட பன் கீ மூன், அதிபர் மகிந்த நெகிழ்வுப்போக்குடன் செயற்படுவதாகக் கூறியிருந்தார்.
எவ்வாறிருப்பினும், வல்லுநர்கள் குழுவினது உறுப்பினர்கள் சிறிலங்காவிற்கு பயணம் செய்வதற்கு அனுமதி வழங்குவது என்ற முடிவினைச் சிறிலங்கா அரசாங்கம் மாற்றிக்கொண்டது. பதிலாக ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவினை இரகசியமாகச் சந்திக்கும் வகையில் சட்டமா அதிபர் உள்ளிட்ட தனது பிரதிநிதிகளைச் சிறிலங்கா நியூயோர்க்கிற்கு அனுப்பியிருந்தது.
பன் கீ மூன் அமைத்திருக்கும் வல்லுநர்கள் குழுவினைச் சிறிலங்கா அரசாங்கத்தினது பிரதிநிதிகள் சந்தித்து உரையாடுவார்களெனில் அது ஐ.நாவின் வல்லுநர்கள் குழுவிற்குச் சிறிலங்கா அரசாங்கம் அங்கீகாரம் வழங்குவதற்கு ஒப்பானதாகும் எனச் சிறிலங்கா முன்னர் கருத்துரைத்திருந்ததை இங்கு குறிப்பிடவேண்டும்.
தனது இந்தக் கருத்தினைப் பொருட்படுத்தாமல், வல்லுநர்கள் குழுவினைச் சந்திக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் தனது உயர்மட்டக் குழுவினை நியூயோர்க்கிற்கு அனுப்பியிருந்தது.
இதுபோன்ற கலந்துரையாடல்களின் ஊடாக வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைத் தமக்குச் சாதகமாக மாற்றலாம் அல்லது இந்தக் குழு சிறிலங்கா தொடர்பான அறிக்கையினைப் பூரணப்படுத்துவதை செயலாளர் நாயகம் அனுமதிக்காத ஒரு சூழமைவினை ஏற்படுத்தலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கருதியே தனது குழுவினை நியூயோர்க்கிற்கு அனுப்பியிருக்கக்கூடும்.
பன் கீ மூனின் பொறிக்குள் சிறிலங்கா அரசாங்கம் விழுந்துவிட்டது என்ற கருத்தே பரவலாகக் காணப்படுகிறது.
பன் கீ மூன் இரண்டாவது முறையாகவும் பதவியில் தொடருவதற்கான வாய்ப்பு தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவரும் கருத்துக்களை அவதானிக்கும்போது, இந்தப் பொறியினை ஏற்படுத்தியது பன் கீ மூனா அல்லது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளா என்ற வலுவான கேள்வி எழுகிறது.
கடந்த ஓகஸ்டில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் வாயிலாகக் கசிந்த ஐ.நாவின் குறிப்பு ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"மியன்மார், சிறிலங்கா மற்றும் உலகின் இதர பாகங்களில் இடம்பெற்ற அளவில்பெரிய மனித உரிமை மீறல்களை எதிர்த்து நிற்பதற்கு முதுகெலும்பில்லாத துணிவற்ற பன் கீ மூன் தவறிவிட்டார்" என அந்தக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பதிலாக, பன் கீ மூனின் வெற்று வேண்டுகோள்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பன் கீ மூனது காலத்தில் உலகில் மிகப்பெரும் நெருக்கடிகள் இடம்பெற்ற வேளையில் ஐ.நா அதிலிருந்து விலகியிருந்திருக்கிறது. உறுப்பு நாடுகளிலும் தனது பணியாட்களிலும் பன் கீ மூன் நம்பிக்கையிழந்திருப்பதோடு அவர்களை மதிக்கவும் தவறிவிட்டார் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்குறித்த இந்த அறிக்கை வெளிவந்திருந்த நிலையில், பன் கீ மூன் இரண்டாவது முறையாகவும் பதவியில் தொடருவதை அமெரிக்காவோ அன்றி மேற்கு சந்திகளோ ஒருபோதும் வரவேற்காது எனவும் மேலும் இந்த வெளிநாட்டு ஊடகம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், வல்லுநர்கள் குழுவானது தனது சிறிலங்கா தொடர்பான போர்க் குற்ற அறிக்கையினை பன் கீ மூனிடம் கையளித்ததைத் தொடர்ந்து, "இரண்டாவது முறையாகவும் பதவியில் தொடர்வதற்கான அமெரிக்காவின் ஆதரவினை பன் கீ மூன் பெற்றார்" என வெளிநாட்டு ஊடகங்கள் தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
"அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்திடமிருந்தும் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளிலிருந்தும் பன் கீ மூன் ஓர் உறுதிப்பாட்டினைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. பன் கீ மூனின் தலைமைத்துவம் தொடர்பாகத் தான் ஆரம்பத்தில் கொண்டிருந்த தவறான கருத்தினை ஒபாமா மாற்றிவிட்டாராம். கடாபியினை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது உள்ளிட்ட முதன்மையான சில அனைத்துலக நடவடிக்கைகளுக்கு பன் கி மூன் நம்பகத்தகுந்ததொரு கூட்டு என ஒபாமா தற்போது நம்புகிறாராம். இரண்டாவது முறையாகவும் பதவியில் தொடர்வதற்கான ஆதரவினை பன் கீ மூன் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஏற்கனவே பெற்றெடுத்தார். இருப்பினும் ரசியா மற்றும் சீனா ஆகியன பன் தொடர்ந்தும் பதவியில் தொடருவதை எதிர்க்கும் என மூத்த இராசதந்திரி ஒருவர் கூறுகிறார். பன் தனது பதவியினைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் செயற்படுவார் என நான் நம்புகிறேன்" என குறிப்பிட்ட அந்த வெளிநாட்டு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் புறநிலையில் யார் யாரைப் பொறியில் சிக்கவைத்தது என்பது தெட்டத் தெளிவு.
தி.வண்ணமதி
Comments