ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டு இளைஞரொருவர் தீக்குளித்து தற்கொலை

இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தமிழ்நாட்டு வாலிபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்திலுள்ள சீகம்பட்டி பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது வாலிபரான கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியியலாளர் ஒருவரே அவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஈழத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் அவர் தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தீமூட்டிக் கொண்டு வீதி வழியாக ஓடிச் சென்ற போது அவரது பெற்றோர் பின்னாலேயே ஒடிச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர். முடியாமற் போன பின்பு தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆயினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு

நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:

அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

வைகோ நேரில் அஞ்சலி


இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, "தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர் தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்காவது இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்," என்றார்.

மேலும் பேசிய வைகோ, "இளைஞர்களே போராடுங்கள், ஆனால் தயவுசெய்து உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியின் குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.

Comments