ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை சிறிலங்கா மீதான அழுத்தத்தினை அதிகரிக்க வழிவகுக்கும்

ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் சீனா மற்றும ரசியா என்பன சிறிலங்கா தொடர்பான அனுதாபப்போக்கினைக் கடைப்பிடிக்கும் அதேநேரம் போர்க்குற்றங்களை விசாரிப்பது அதனது உள்ளகப் பிரச்சினை எனவும் கூறுகின்றன.

இவ்வாறு அமெரிக்க குரல் வானொலி voanews தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. அந்த செய்தியின் விபரமாவது,


ஐ.நா செயலாளர் நாயகம் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இன்னமும் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஐ.நாவின் இந்த அறிக்கையானது 'அடிப்படையில் முழுமையற்றதொன்று' என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்திருக்கிறது.

"எந்தவிதமான உறுதிப்படுத்தல்களுமின்றி தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற உண்மைக்குப் புறம்பான ஆதாரங்களை அடிப்படையாக்கொண்டு இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நாவின் அறிக்கை ஆராய்கிறது" என வெளி விவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக காலக்கிரமத்தில் அதிகாரிகள் விலாவாரியாகக் கருத்து வெளியிடுவார்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவினது அறிக்கையினை சிறிலங்காவினது அதிகாரிகள் பார்வையிட்ட அது தொடர்பான கவனயீர்ப்புகளைத் தமக்குத் தெரியப்படுத்திய பின்னர் இந்த அறிக்கை அனைவரின் பார்வைக்காகவும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என்ற செயலாளர் நாயகம் பன் கீ மூனின் கூற்றினை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முன்னர் வரவேற்றிருந்தன. பன் கீ மூனின் இந்தக் கூற்றின் பிரகாரம் குறிப்பிட்ட இந்த அறிக்கை இன்னமும் ஒரிரு நாட்களில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படலாம்.

சிறிலங்காவின் 26 ஆண்டுகாலப் போரின் இறுதி மாதங்கள் தொடர்பாகவே ஐ.நாவின் வல்லுநர்கள் குழு தனது கவனத்தினைக் குவித்திருக்கிறது. சிறிலங்காவில் தமிழர்களுக்குத் தனிநாடுகோரிப் போராடிவந்த தமிழ்ப் பிரிவினைவாத அமைப்பு 2009ம் ஆண்டு சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

போரில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினருமே போர்க் குற்றங்களில் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், போரின் இறுதிநாட்களில் சிறிலங்காவினது அரச படையினர் 10,000 வரையிலான தமிழ்ப் பொதுமக்களைக் கொலைசெய்திருக்கலாம் எனப்படுகிறது.

இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கான அனைத்துலக அழுத்தத்தினை ஐ.நா வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தான் நம்புவதாக அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் சிறிலங்காவிற்கான ஆய்வாளர் அலன் கீனன் கூறுகிறார்.

"இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக சிறிலங்கா கைக்கொள்ளும் வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும் ஆதலினால் அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது அவசியமானது என்ற எங்களது கருத்தினை வலுச்சேர்க்கும் வகையிலேயே ஐ.நாவின் அறிக்கை அமையும் என நாங்கள் வெகுவாக நம்புகிறோம்" என்கிறார் கீனன்.

இருப்பினும் ஐ.நாவின் பாதுகாப்பு சபையோ அன்றில் அதனது மனித உரிமைச் சபையோ சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருப்பதாகவும் கீனன் குறிப்பிடுகிறார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் சீனா மற்றும ரசியா என்பன சிறிலங்கா தொடர்பான அனுதாபப்போக்கினைக் கடைப்பிடிக்கும் அதேநேரம் போர்க்குற்றங்களை விசாரிப்பது அதனது உள்ளகப் பிரச்சினை எனவும் கூறுகின்றன.

"ஐ.நாவின் செயலாளர் நாயகம் தானே ஒரு விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை அமைப்பதுதான் இலகுவானதும் இடம்பெறக்கூடியதமான ஒரே வழியாகத் தெரிகிறது. தற்போது இந்த வல்லுநர்கள் குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தினை இந்த விசாரணைக் கட்டமைப்புக் கொண்டிருக்கவேண்டும்" என்கிறார் கீனன்.

அனைத்துலக சதித்திட்டத்தின் ஒரு அங்கமே எனக்கூறி சிறிலங்கா தொடர்ந்தும் நிராகரித்தும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தங்களது குற்றச்சாட்டுக்களை ஐ.நாவின் அறிக்கை நியாயமானதாக மாற்றும் என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்சி கங்குலி கூறுகிறார்.

"மனித உரிமை அமைப்புகள் முன்வைக்கும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்ற வாதத்திற்கு ஐ.நாவின் இந்த அறிக்கை முற்றறுப்புள்ளி வைக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என கங்குலி தொடர்ந்து தெரிவித்தார்.

போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் உரிமை மீறல்களை வெளிப்படைத்தன்மையுடன் அணுகுவதற்குத் தவறுமிடத்து அது கால ஓட்டத்தில் சிறிலங்காவின் சட்டபூர்வமான தன்மையினைக் கேள்விக்குறியாக்கிவிடும் என அவர் தொடர்ந்தார்.

"அரசாங்கமொன்று போர் ஒன்றை வெல்லுவதற்காக பொதுமக்கள் மீது வகை தொகையின்றிக் குண்டுகளை வீசுவது நியாயமானதே எனச் சிறிலங்கா வாதிடுமெனில், மனித உரிமையில் நம்பிக்கைவைத்துச் செயற்படும் பல நாடுகள் இந்தச் செய்தியினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதுபோல நடந்துகொள்வதன் ஊடாக சிறிலங்கா தன்னைத் தானே அழித்துக்கொள்கிறது என்றுதான் கூறவேண்டும். இடம்பெற்ற குற்றங்களை மூடி மறைப்பதும் ஒருநாள் அவர்களை நிச்சயம் பாதிக்கும்" என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் தொடர்ந்து தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்கள் சிறிலங்காவிற்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் தாங்கள் நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் தமக்கு காத்திரமான ஆணை எதுவும் இருக்கவில்லை என இந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சிறிலங்கா அமைந்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்தமாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments