மற்றுமொரு ஆபிரிக்க நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்கின்றன. 21 மில்லியன் மக்கள் தெகையை கொண்ட ஐவோரி கோஸ்ட் இன் அதிபர் லோறன்ட் கபாகோவை பாதுகாப்பதற்காக அவரின் படையினர் அவரை அரச தலைவர் மாளிகையின் பதுங்குகுழியில் வைத்து பாதுகாத்துவருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக நடைபெறும் சமரினை தொடர்ந்து எதிர்தரப்பு படையினர் தலைநகரத்தினுள் புகுந்துள்ளனர். அரச தலைவருக்கு ஆதரவான படையினருக்கும், எதிரணியின் தலைவரான அலாசனே ஒற்றராறாவின் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்துவிட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய அதிபர் தனது பதவி விலகும் நாளை தெரிவிக்காததே அதற்கான காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.
1893 ஆம் ஆண்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்துவந்த ஐவோரி கோஸ்ட்டிற்கு 1960 களில் தான் சுதந்திரம் கிடைத்தது. எனினும் அங்கு காணப்படும் கோப்பி மற்றும் கொக்கோ பொருட்களின் வர்த்தகத்திற்காக தமக்கு சார்பான அரசையே மேற்குலகம் அங்கு ஆட்சியில் வைத்திருந்தது.
மேற்குலகத்திற்கு சார்பான பெலிக்ஸ் கொபோனெற் பொக்னியின் ஆட்சியில் அங்கு அரசியல் உறுதித்தன்மையும், பொருளாதார முன்னேற்றமும் காணப்பட்டது. பல ஆபிரிக்க நாடுகள் மேற்குலகத்திற்கு எதிரான போக்கை கொண்டிருந்தபோதும், ஐவோரி கோஸ்ட் அதற்கு எதிரான போக்கையே கொண்டிருந்தது.
தென்பகுதியை கிறிஸ்த்தவர்களும், வடபகுதியை முஸ்லீம்களும் தமது பகுதிகளாக பிரகடனப்படுத்தியிருந்தபோதும், அதனை தந்திரமாக ஒருங்கிணைத்து ஆண்டுவந்தார் கொபோனெற். ஆனால் 1993 ஆம் ஆண்டு அவர் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அரசதலைவர் ஹென்றி கோனனினால் நாட்டின் இனவேறுபாடுகளை சமாளிக்க முடியவில்லை.
1999 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட இராணுவப்புரட்சியை தொடர்ந்து றொபேட் குயே பதவியை கைப்பற்றிக்கொண்டபோதும், ஒரு வருடத்தின் பின்னர் நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து அவரின் ஆட்சியை தூக்கியெறிந்த லோறன்ட் கபாகோ பதவியை கைப்பற்றியிருந்தார்.
ஆனால் இரண்டு வருடங்களின் பின்னர் அவரை இராணுவப்புரட்சி மூலம் எதிர்த்தரப்பினர் கவிழ்க்க முற்பட்டபோது அது தோல்வியில் முடிவடைந்திருந்தது. ஆனாலும் வடபகுதி முஸ்லீம்களின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உள்நாட்டுபோரை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது.
அங்கு நடைபெற்ற போரில் பெருமளவான முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டதுடன், வடபகுதி மக்கள் அரசியல் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். ஐவோரி கோஸ்ட்டின் தென்பகுதி அரசின் கையில் இருந்தபோது, வடபகுதி எதிர்த்தரப்பின் கைகளில் இருந்தது.
இதனைத்தொடர்ந்து ஐவோரி கோஸ்ட் மீது பொருளாதார தடைகளை விதித்த ஐக்கிய நாடுகள் சபை அதன் கொக்கோ, வைரம் ஆகியவற்றின் ஏற்றுமதிகளை தடை செய்ததுடன், ஆயுத இறக்குமதியையும் தடை செய்திருந்தது.
எனினும் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அமைதி நடவடிக்கைகள் அங்கு முன்னெடுக்கப்பட்டன. அதிகாரப்பகிர்வு திட்டம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களின் எல்லைகளில் பிரான்ஸ் நாட்டின் படையினர் தலைமையில் ஐ.நா அமைதிகாக்கும் படையினர் சுற்றுக்காவல்களில் ஈடுபட்டுவந்தனர்.
எனினும் 2005 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த தேர்தலை கபாகோ பிற்போட்டிருந்தார். பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது.
லோறன்ட் கபாகோ 46 விகித வாக்குகளையும், அலாசனே ஒற்றராறா 54 விகித வாக்குகளையும் பெற்றதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்திருந்தது. அதனை மேற்பார்வையிட்ட ஐ.நா அதிகாரிகளும் அலாசனே ஒற்றராறா வெற்றிபெற்றதாகவே அறிவித்திருந்தனர். ஆனால் கபாகோ பதவி விலக மறுத்துவிட்டார்.
இது தான் தற்போது நடைபெறும் மோதல்களுக்கான காரணம். சட்டவிரோதமாக அரச தலைவர் நாற்காலியை இறுகப்பற்றியுள்ள கபாகோவை நீக்குவதற்கு எதிர்த்தரப்பு கடும் சமரை மேற்கொண்டுவருகின்றது.
ஐவேரின் கோஸ்ட்டின் முக்கிய நகரமான அபிட்ஜான் பகுதியில் உள்ள அவரின் மாளிகையை சுற்றி தூப்பாக்கி சூடுகளும், ஆர்.பி.ஜி உந்துணை தாக்குதல்களும், மோட்டார் தாக்குதல்களும் சரமாரியாக நடத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சரணடைவதற்கான காலஅவகாசத்தை எதிர்த்தரப்பினர் அரச தலைவருக்கு வழங்கியபோதும், கடந்த புதன்கிழமை (06) வரை அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கபாகோ கொல்லப்பட்டால் என்ன நடைபெறும்? அவரை வீதியில் இழுத்துச் செல்வார்களா என மேற்குலக ஊடகங்கள் விவாதம் நடத்திவருகின்றன.
இதனிடையே, தலைநகரத்தை கைப்பற்றியுள்ள எதிர்த்தரப்பினர், கைப்பற்றப்பட்ட இராணுவமுகாம்களில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். வீதியின் இருபுறமும் சடலங்கள் சிதறிக்கிடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போர் என இதனை எதிர்த்தரப்பினர் விபரித்துவருகின்றனர். கபாகோவின் நடவடிக்கையே இந்த மோதல்களுக்கு காரணம் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் அலைன் ஜுபி தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் பாதுகாப்புச்சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் அங்கு அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் பிரான்ஸ் மற்றும் ஐ.நா படைகள் ஈடுபட்டுவருகின்றன. எனினும் தமது படையினர் அரச தலைவர் கபாகோவிற்கு எதிராக செயற்படவில்லை என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் ஒற்றராறாவின் படையினருக்கு ஆதரவாக பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை ஆகியவற்றின் உலங்குவானுர்த்திகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரச தரப்பின் இராணுவநிலைகளை தாம் தாக்கியழித்துள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேசயம், கபகோவின் அரசு மீது மேலும் புதிய தடைகளை கொண்டுவந்துள்ளதாக கடந்த புதன்கிழமை (06) ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஒற்றராறாவே தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரச தலைவர் என அமெரிக்கா, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தெரிவித்துவருகின்றன.
எனவே எதிர்வரும் நாட்களில் அங்கு ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படும் என நம்பப்படுகின்றது. அதுவும் மேற்குலகத்திற்கு ஆதரவான அரசாகவே அமையப்போகின்றது.
அரபு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நிகழ்ந்துவரும் மேற்குலகத்திற்கு சார்பான ஆட்சி மாற்றங்களானது, உலக ஒழுங்கில் விரைவில் பல மாற்றங்களை ஏற்படுத்தப்போவதையே கட்டியம் கூறுகின்றன.
நன்றி: ஈழமுரசு (09.04.1011)– வேல்ஸ் இல் இருந்து அருஷ்
Comments