சுவாமியின் பின்கதவுத் தரிசனம் தந்திரிகளின் மறுமுகம் வரலாற்றுத் துரோகம்

‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் கடந்த வாரம் ஈழமுரசுலீக்ஸ் வெளியிட்ட கட்டுரையின் அடுத்த தொடர், நேற்று வெள்ளிக்கிழமை ஈழமுரசு பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

சிங்கள - இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்து தமிழீழ தேசத்திற்கு கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொழியும் இழைத்த வரலாற்றுத் துரோகம் தொடர்பான தகவல்களை கடந்த பதிப்பில் ஈழமுரசு வெளிக்கொணர்ந்திருந்தது. இது தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் மட்டுமன்றி இந்தியாவின் முதன்மை ஆங்கில ஊடகங்களிலும், அனைத்துலக ஊடகங்கள் சிலவற்றிலும், கொழும்பு ஊடகங்களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையிலும் மீள்பிரசுரமாகியிருந்தது.

இந்நிலையில் சிங்கள-இந்திய அரசுகளின் மற்றுமொரு கூட்டுச்சதி குறித்த தகவல்களையும், அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களையும் இவ்வாரத்திற்கான பத்தியில் வெளிவந்துள்ளது.

அக்கட்டுரை கீழே எமது சங்கதி வாசகர்களுக்காக தருகின்றோம்.

சுவாமியின் பின்கதவுத் தரிசனம் - சேரமான்

சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்து, தமிழீழ தேசத்திற்கு கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொழியும் இழைத்த வரலாற்றுத் துரோகத்தை பட்டவர்த்தனமாக்கும் தகவல்களையும், கடிதங்களை எமது கடந்தவாரப் பத்தியில் வெளியிட்டிருந்தோம். இதன் தொடர்ச்சியாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா எடுத்திருந்த மற்றுமொரு நடவடிக்கை தொடர்பான தகவல்களையும், கடிதங்களையும் இவ்வாரத்திற்கான பத்தியில் வெளிக்கொணர்கின்றோம்.



இந்தியாவின் இந்த சதி நடவடிக்கையில் டில்லியின் பின்கதவுத் தொடர்பாளர்களுக்கான பாத்திரத்தை தமிழீழத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும், தமிழகத்தை சேர்ந்த பிரபல ‘சாமியார்’ ஒருவரும் வகித்திருந்தனர். இவ்விரு பின்கதவுத் தொடர்பாளர்களும் தமிழீழ தேசத்திற்கு நன்மை செய்ய முற்பட்டார்களா அல்லது சிங்கள-இந்திய கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்தார்களா என்பது பற்றி ஆராய்வதற்கு நாம் இங்கு முற்படவில்லை. ஆனால், 2009, மே 18இற்குப் பின்னர் அரசியல் அரங்கில் கட்டவிழும் நிகழ்வுகளையும், இப்பத்தியில் நாம் வெளிக்கொணரும் தகவல்கள் - கடிதங்களின் அடிப்படையிலும் இது தொடர்பான முடிவை அலசி ஆராய்ந்து எடுக்கும் பொறுப்பை வாசகர்களாகிய உங்களிடமே நாம் விட்டுவிடுகின்றோம்.

சரி, இந்தியாவின் பின்கதவுத் தொடர்பாளராக விளங்கிய தமிழீழத்தை சேர்ந்த ஊடகவியலாளர் யார் என்ற கேள்வி இப்பொழுது உங்களைத் துளைத்திருக்கக்கூடும். இந்த ஊடவியலாளர் தமிழ்த் தேசிய அரசியலில் ஓர் ஊடக ‘ஜாம்பவான்’ என்று அறியப்படுபவர். யாழ்ப்பாணத்தில் இருந்தும், கொழும்பில் இருந்தும் வெளிவரும் இரண்டு முன்னணித் தமிழ் நாளிதழ்களின் தலைமை ஆசிரியராக விளங்கியவர் இவர். இவ்விரு நாளிதழ்களின் நிறுவனராகவும், முகாமையாளராகவும் விளங்குபவர் இவரது மைத்துனர். தற்பொழுது வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக இவர் விளங்குவதோடு, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இவரது மைத்துனர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

1980களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய இந்த ஊடகவியலாளர், 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் யாழ் குடா வந்ததை தொடர்ந்து திடீர் புலி விசுவாசியாக மாறியவர். ஒரு நடுநிலையான ஊடகவியலாளர் என்று சிங்கள ஊடகவியலாளர்களிடம் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் இவர், தமிழ் ஊடகவியலாளர்களின் மத்தியில் ஒரு புலியாகவே வலம் வந்தவர். அதே நேரத்தில் சிங்களப் படை அதிகாரிகளுடனும், ஆட்சியாளர்களுடனும் நெருங்கிய தொடர்புகளையும் இவர் பேணி வந்தவர். இறுதியாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இந்திய தூதரகம் உட்பட கொழும்பில் உள்ள பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் இவர் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.

இவர் வேறு யாருமல்ல: உதயன்-சுடரொளி நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் அவர்களே இவர்! இவர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்ப்பதற்கு முன்னர், இந்தியாவின் பின்கதவுத் தொடர்பாளராக விளங்கிய சாமியார் யார் என்பதைப் பார்ப்போம்.


தமிழகம் தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு பௌதீகவியல் பட்டதாரி. இவரது தந்தை இந்தியாவில் ஒரு முக்கிய தொழிலதிபர். தற்பொழுது நாற்பத்தைந்தாவது அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் இவர், தனது இருபத்தாறாவது அகவையில் ஆன்மீக ஞானம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. வாழுங்கலை நிறுவனம் என்ற அமைப்பை அதே ஆண்டு (1982) நிறுவிய இவர், இந்தியாவிலும், உலக நாடுகளிலும் மிகுந்த செல்வாக்குடைய சாமியாராக விளங்குகின்றார். இவரது அமைப்பு ஒரு அனைத்துலக அரசுசாரா அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு அரசுகளின் நிதியுதவியைப் பெறுவதோடு, ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டு அமைப்பில் ஆலோசனை நிறுவனமாக விளங்குகின்றது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் கிளைபரப்பி இயங்கி வரும் இவரது அமைப்பு, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் போருக்குப் பின்னரான உளநலப் பயிற்சித் திட்டங்களை உலக நாடுகளின் நிதியுதவியுடன் செயற்படுத்தி வருகின்றது.

இவர் வேறு யாருமல்ல. குருஜீ அல்லது பூஜ்ய சிறீசிறீ என்றழைக்கப்படும் சிறீசிறீ ரவிசங்கர் அவர்களே இவர். இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கும் இவர், 2004ஆம் ஆண்டு வரை ஈழத்து அரசியலில் பெருதளவு அறியப்படாத ஒருவராகவே விளங்கினார். எனினும் 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற கடற்கோள் அவலத்தைத் தொடர்ந்து தொடர்ந்து, ஈழத்து அரசியலில் இவரது பிரவேசம் தொடங்கியது. சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச போன்றோருக்கு நல்லாசி வழங்கும் ஒருவராக விளங்கும் இவர், கடற்கோளைத் தொடர்ந்து இலங்கையில் சமாதானக் குழு ஒன்றையும் அமைத்திருந்தார். இந்தக் குழுவில் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவும் இணைக்கப்பட்டிருந்தார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த இவர், சமாதான முயற்சிகளில் ஒரு தொடர்பாளராக விளங்குவதற்கான தனது விருப்பத்தை சிங்கள அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வெளிப்படுத்தியிருந்தார்.

இறுதிப் போரில் சிறீசிறீ ரவிசங்கர் அவர்கள் வகித்த பாத்திரம் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தொடர்பான மேலதிக தகவல்களை நாம் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

1990ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட வித்தியாதரன், அதே காலகட்டத்தில் சிங்களப் படை அதிகாரிகளுடனும், அரசாங்க உயர் தரப்பினருடனும் உறவைப் பேணி வந்திருந்தார். 1996ஆம் ஆண்டின் முதற்கூறில் சிங்களப் படைகளால் யாழ் குடாநாடு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய சிங்களப் படைத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலகல்லேயுடன் நட்புறவை இவர் ஏற்படுத்திக் கொண்டார்.

ஒரு புலி ஆதரவுத் தளத்தில் செய்திகளை வெளியிட்டவாறு சிங்களப் படைத் தரப்புடன் இவர் தொடர்பைப் பேணியமை, ஈ.பி.டி.பியினருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. போதாக்குறைக்கு ஈ.பி.டி.பியின் தினமுரசுப் பத்திரிகையின் விற்பனைக்கு இவரது பத்திரிகை இடையூறாகவும் விளங்கி வந்தது.

இந்நிலையில் ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களைப் படுகொலை செய்தமை போன்று இவரையும் ‘தீர்த்துக் கட்டுவதற்கான’ திட்டம் ஒன்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் வகுக்கப்பட்டிருந்தது. எனினும் ஈ.பி.டி.பியின் கொலைக்குழு களமிறங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் லெப்.ஜெனரல் பலகல்லேயின் தலையீட்டால் இவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து அடிக்கடி கிளிநொச்சி சென்று திரும்பிய இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களுடன் மீண்டும் தொடர்புகளைக் கட்டியெழுப்பிக் கொண்டார்.

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலுக்கு முன்னர், தன்னை ஆதரிக்குமாறு கோரி தனது நெருங்கிய தூதுவர் ஒருவரை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மகிந்த ராஜபக்ச அனுப்பியதாக அதேகாலப் பகுதியில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்தமை வாசகர்களின் நினைவில் இருக்கக்கூடும். மகிந்தரின் அந்தத் தூதுவர் வேறு யாருமல்ல: அவர்தான் வித்தியாதரன். எனினும் இதே தூதுவர் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மகிந்த ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன: அவை முற்றிலும் தவறானவை. மகிந்த ராஜபக்சவையோ அன்றி ரணில் விக்கிரமசிங்கவையோ தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரிக்கவில்லை: அவர்களிடமிருந்து பணம் எதனையும் பெறவுமில்லை. சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் என்ற வகையில் எந்தவொரு வேட்பாளரையும் தாம் ஆதரிக்கப் போவதில்லை என்பதே வித்தியாதரன் ஊடாக மகிந்தருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய செய்தியாக இருந்தது.

இதன் பின்னர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், சிங்கள அரசும் இணங்கிய பொழுது, மீண்டும் தனது தூதுவராக வித்தியாதரனை மகிந்தர் களமிறக்கியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் அனுசரணையாளராக நோர்வே விளங்கிய பொழுதும்கூட, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வித்தியாதரன் ஊடாகப் பின்கதவுத் தொடர்புகளைப் பேணுவதில் மகிந்தர் விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்த வகையில் மகிந்தருக்கும் வித்தியாதரனுக்கும் இடையில் அலரி மாளிகையில் பல தடவைகள் சந்திப்புக்கள் நிகழ்ந்தேறியிருந்தன. இவற்றில் வித்தியாதரனுடன், அவரது மைத்துனரும், தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவருமான சரவணபவனும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் மகிந்தவின் பின்கதவுத் தொடர்பாளர் என்ற கோதாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வித்தியாதரன் அவர்கள் மட்டும் தனியே சென்று சந்தித்திருந்தார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையிலான சமரச முயற்சிகள் முறிவடைந்ததை தொடர்ந்து, தனது பின்கதவை மகிந்தர் மூடிக்கொள்ள வித்தியாதரனின் தூதுவர் பாத்திரமும் முடிவுக்கு வந்திருந்தது. வித்தியாதரனை தனது தூதுவராக மகிந்தர் கையாண்டிருந்தாலும்கூட, பிரமேதாசாவின் பாணியில் தமிழீழ விடுதலைப் புலிகளை குறைந்தபட்சம் ஒராண்டுக்காவது தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியவில்லை என்ற சீற்றம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இதற்கு தான் நம்பிக்கை வைத்த அளவிற்கு செயற்திறன் மிக்க ஒருவராக வித்தியாதரன் விளங்கவில்லை என்று ஒருதடவை வித்தியாதரனிடமும், சரவணபவனிடமும் மகிந்தர் சீறிப்பாய்ந்திருந்ததாக தகவல் உண்டு.

சுருக்கமாகக் கூறப்போனால், ஒரு இரட்டை முகவர் (டபிள் ஏஜன்ட்) போன்று செயற்பட்ட வித்தியாதரன், உண்மையில் புலியா அல்லது சிங்கமா என்பதை மகிந்தரால் கணிப்பிட இயலவில்லை. ஒரு புலியாக அறியப்பட்ட வித்தியாதரன் பற்றிய உண்மையான கணிப்பை 2009, மே 18இற்குப் பின்னரே ஈழத்தமிழ் தேசிய ஊடகவியலாளர்களால் எடுக்க முடிந்தது என்பது வேறு கதை.

எனினும் 2006ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மகிந்த ராஜபக்சவால் பின்தள்ளப்பட்ட வித்தியாதரன், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டார். அன்று முதல் மகிந்தரிடமிருந்து டில்லிக்கு கட்சிதாவிய வித்தியாதரன், இந்தியாவின் பின்கதவுத் தொடர்பாளர் என்ற பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியிருந்தார். இதனால் சிறிது காலத்திற்கு இவருடனான தொடர்புகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் துண்டித்திருந்தனர்.

இந்நிலையில் 2007ஆம், 2008ஆம் ஆண்டு காலப் பகுதியில் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவிற்கும், இந்தியாவிற்கும் பயணம் செய்த வித்தியாதரன், அங்குள்ள இந்திய ராஜதந்திரிகளுடனும், புலனாய்வுத்துறை அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான பின்கதவுச் செய்திகளைக் காவி வந்திருந்தார்.

உக்கிரகட்டத்தை நோக்கி யுத்தம் நகரத் தொடங்கியிருந்த 2008ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட மக்களின் எழுச்சியையும், அரசியல் தலைவர்களின் ஆதரவுக் குரலையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குமான சமிக்ஞைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நேரடித் தொடர்புகளை வித்தியாதரன் புதுப்பித்துக் கொண்டார்.

இந்நிலையில் வித்தியாதரனை டில்லிக்கு வருமாறு 2008 ஒக்ரோபர் இறுதியில் இந்திய ஆட்சியாளர்கள் கட்டளையிட்டிருந்தனர். இதற்கான பணிப்புரை இந்திய தேசிய பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரியும், முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளருமான மத்திய அமைச்சருக்கு நிகரான அதிகாரமுடைய முக்கிய புள்ளி ஒருவரால் வித்தியாதரனுக்கு விடுக்கப்பட்டு, அவரது டில்லிப் பயணத்திற்கான ஒழுங்கை மேற்கொள்ளும் பொறுப்பு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வழங்கப்பட்டது.

இது பற்றி 31.10.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு சில சங்கேத வாசகங்களைக் கொண்ட அவசர செய்தியொன்றை வித்தியாதரன் அனுப்பியிருந்தார். அந்தச் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:

“அன்புள்ள அண்ணன்,

பக்கத்து வீட்டுக்காரர் தொடர்பான அவசர விடயம் ஒன்று குறித்து உங்களுடன் பேசுவதற்கு நான் விரும்புகின்றேன். எனது ஸ்கைப் முகவரி – என்.வித்தியாதரன். தயவு செய்து உங்களுக்கு உகந்த நேரத்தை தொலைபேசியில் தெரிவித்தால் நாம் கதைக்கலாம். எனது அன்பை அண்ணனுக்கும் ஏனையோருக்கும் தெரிவியுங்கள்.

நன்றி.

நல்வாழ்த்துக்களுடன்
வித்தியாதரன்”

மே 18இற்குப் பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக சந்திப்புக்களில் கருத்துக்கூறி வரும் வித்தியாதரன், அப்பொழுது பா.நடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தேசியத் தலைவரை அண்ணன் என்று விழித்து தன்னை ஒரு புலி விசுவாசியாகவே அடையாளப்படுத்தியிருந்தார் (இதற்கான சாட்சிகள் எம்மிடம் உள்ளனர்).

இந்நிலையில் வித்தியாதரனுக்கு 05.11.2008 அன்று எழுதிய பதில் செய்தியில் பின்வருமாறு பா.நடேசன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்:

“அன்பின் வித்தியாதரன்,

அவர்கள் உங்களை ஏன் சந்திப்பதற்கு கேட்கின்றார்கள் என்பது தெரியவில்லை. முதல்முறையும் இழுத்தடித்தவர்கள். முடியுமானால் போய் சந்தித்து என்ன விடயம் என்பதை அறியத்தரவும்.

நன்றி

அன்புடன்
பா.நடேசன்”

இதற்கிடையே 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் நாளுக்கு முன்னர் கிளிநொச்சியை ஆக்கிரமிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கைகளில் பலத்த ஆளணி இழப்புக்களுக்கு சிங்களப் படைகள் ஆளாகிய நிலையில், அரசியல் அழுத்தங்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளை கிளிநொச்சியை விட்டுப் பின்வாங்க வைப்பதற்கான முயற்சிகளில் மகிந்தரின் அரசாங்கம் இறங்கியிருந்தது. இதற்கான திட்டம் இந்திய-சிங்கள அரசுகளால் கூட்டாக வரையப்பட்டு, இந்தியாவின் பின்கதவுத் தொடர்பாளர்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவருடன் நேரடியாக பேசுவதற்கு முயற்சிக்குமாறும் கொழும்பு, பெங்க@ர், நியூயோர்க் ஆகிய தலைநகரங்களில் உள்ள தமது பின்கதவுத் தொடர்பாளர்களிற்கு இந்தியா பணித்திருந்தது.

இந்நிலையில் வித்தியாதரன் ஊடாக தமிழீழ தேசியத் தலைவருக்கான செய்தி ஒன்றை தனது செயலாளர் சுவாமி சத்தியோஜாதா ஊடாக சிறீசிறீ ரவிசங்கர் அனுப்பியிருந்தார். இதுபற்றியும், சிறீசிறீ ரவிசங்கரின் கடிதத்தை இணைத்தும் பின்வரும் செய்தியை 07.11.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு வித்தியாதரன் அனுப்பியிருந்தார்.

“அன்புள்ள அண்ணன்,

சுவாமி சிறீசிறீ ரவிசங்கர் அவர்களின் செயலாளரான சுவாமி சத்தியோஜாதா அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். இதனை உங்களின் தகவலுக்காக நான் அனுப்புகின்றேன் - தயைகூர்க. மற்றைய விடயம் தொடர்பாக அவர்களிடமிருந்து தகவல்கள் கிடைத்ததும் நான் இந்தியாவிற்கு செல்லும் திகதியை உங்களுக்கு உடனடியாக அறியத் தருவேன். பெரும்பாலும் அடுத்த வாரம் நான் பயணம் செய்வேன். தேவையேற்பட்டால் இந்தியாவில் இருந்து நான் உங்களுடன் தொடர்பு கொள்வதற்கு வழி ஏதாவது செய்யவும். கடந்த தடவை போல் அல்லாது இம்முறை உயர்மட்ட சந்திப்பை நான் நிகழ்த்த இருப்பதால், முக்கியமான முடிவை எட்டி எமக்கு சாதகமான மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

நன்றி.

நல்வாழ்த்துக்களுடன்,
வித்தியாதரன்.”

இதனிடையே தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு சுவாமி சத்தியோஜாதா அனுப்பிய கையெழுத்துக் கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது.

“அன்புள்ள திரு.நடேசன் மற்றும் திரு.புலித்தேவன்,

வணக்கம்.

வாழும் கலை ஸ்தாபனம் பூஜ்ய சிறீசிறீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்டு, இன்று உலகில் 150 நாடுகளுக்கும் மேலாகப் பரவியுள்ளது. மனிதாபிமானத் தொண்டு, கல்வி, அதிர்ச்சித்துயர் தீர்ப்பு மற்றும் மனித ஆற்றலை வளர்ச்சியுறச் செய்யும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

உகந்த தீர்வு ஒன்றினை சிறீலங்காவில் ஏற்படுத்திட மூன்று ஆண்டுகளாக முக்கிய முயற்சிகளை பூஜ்ய சிறீசிறீ அவர்கள் எடுத்தது உங்களுக்குத் தெரியும். ஆஸ்லோவில் 2008 ஏப்ரல் திங்களில் நடைபெற்ற பன்னாட்டு மாநாடு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு மதிப்பு மற்றும் நீதியை மீண்டும் பெற்றுத்தர, பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பூஜ்ய சிறீசிறீ அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது ஆகியவை உங்களுக்கு நினைவிருக்கும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தீர்வு காண்பவர்களையும், உயர் பதவியாளர்களையும் பூஜ்ய சிறீசிறீ அவர்கள் அடிக்கடி சந்தித்து வருகின்றார்.
இந்த முயற்சிகளைத் தொடர்ந்து 2008 நவம்பர் 10ஆம் நாள் திங்கட்கிழமை அன்று பூஜ்ய சிறீசிறீ அவர்கள் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அதற்கு முன்னால், பூஜ்ய சிறீசிறீ அவர்களுக்கும் உங்கள் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இடையே சற்போன் அல்லது ஸ்கைப் வழியாக தனிப்பட்ட, அந்தரங்கமான, நேருக்கு நேர் பேச்சுவார்த்தையை நாங்கள் வேண்டுகிறோம். நெருக்கடியான இக்காலகட்டத்தில் முந்துரிமை மற்றும் அவசர நிமித்தமாக உங்கள் தலைவருடன் கலந்துரையாட பல முக்கிய குறிப்புகள் உள்ளன. தமிழர்களுக்கு நீதியும் அமைதியும் வேண்டி, அச்சமும் தயவும் இன்றி, உங்கள் தலைவர் பேசுவார் என்பதை நாம் அறிவோம். இந்த உணர்வின் அடிப்படையில்தான் நாங்கள் வேண்டுகிறோம், இந்த பேச்சுவார்த்தை நிகழ வேண்டும் என்று.

முழுமையான இரகசியம் மற்றும் பொறுப்புடன் இது நிகழும் என்று நாங்கள் உறுதியளிக்கின்றோம். நம் பாசத்திற்குரிய தமிழர்களின் பரந்த நலன் கருதி இந்தப் பேச்சுவார்த்தை நிகழும் என்று நம்புகிறோம். தங்களிடமிருந்து உகந்த பதிலை எதிர்நோக்கியுள்ளோம்.

அன்புடன்,

சுவாமி சத்தியோஜாதா.”

இவ்வாறாக தனது கொழும்புப் பயணத்திற்கு முன்னோடியாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் உரையாடுவதற்கான முயற்சிகளில் சிறீசிறீ ரவிசங்கர் அவர்கள் ஈடுபட்டிருக்க, தனது டில்லிப் பயணத்திற்கான ஆயத்தங்களில் வித்தியாதரன் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

எனினும் வித்தியாதரன் ஊடாகவும், சிறீசிறீ ரவிசங்கர் ஊடாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியா வழங்க இருந்த செய்தி மிகவும் ஆபத்தான பரிமாணங்களைக் கொண்டிருந்தது. அவை தொடர்பான தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய கடிதப் பரிமாற்றங்களையும் இப்பத்தியின் அடுத்த தொடரில் நோக்குவோம்.

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு (16.04.2011)

Comments