முள்ளிவாய்க்காலில் மூன்று சீவன்கள்

கோண்டாவில் சரவணமுத்து கிளிநொச்சியில் குடியேற்றிப் பல வருடங்கள் சென்றவிட்டன. அவருடைய குடும்பம்

மிகச் சிறியது மனைவி பாக்கியம் மாத்திரம் தான். பிள்ளைகள் கிடையாது. மலடன் என்ற பட்டம் பெயருக்குப் பயந்து அவர் வன்னிக்கு வந்து விட்டார்.

ஈழத் தமிழரின் விடுதலைப் போர் தொடங்கிய பிறகு அவருக்குப் பல பிள்ளைகள் கிடைத்தனர். அவரும் மனைவியும் போராளிப் பெடியன்களுக்கு சமைத்துப் போட்டார்கள். படுக்க இடம் கொடுத்தார்கள் அவர்கள் அப்பா, அம்மா என்று அழைத்த போது மகிழ்ந்தார்கள்.

போராட்டம் சூடு பிடித்துப் பெண்களும் இணைந்த பிறகு சரவணமுத்தருக்கும் பாக்கியத்திற்கும். பெண் பிள்ளைகளும் கிடைத்தார்கள். அவர்களுக்கும் இவர்கள் அப்பாவும் அம்மாவுமானார்கள். யாழ்ப்பாண மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்த போது கோண்டாவில் சனங்கள் அவர்கள் வீட்டில் நிரம்பினார்கள்.எதற்கும் முடிவுண்டு என்று சொல்வார்கள். முல்லைத்தீவைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் போராளிகள் இருந்த போது கிளிநொச்சி பறிபோகும் என்று அவர்கள் எண்ணவில்லை. அதுகும் நடந்து விட்டது.

சரவணமுத்தரும் மனைவியும் வீடு வாசலை இழந்து உடையார்கட்டுக் கிராமத்திற்கு வந்தனர்.சரவணமுத்தருக்கு நாய் வளர்ப்பதில் பெரிய ஆர்வம். அவர் சிறிய நாய்களை

வளர்க்க விரும்புவதில்லை. நல்ல உயரமான வாட்ட சாட்டமான நாய்கள் தான் அவருக்குப் பிடிக்கும் அவர் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது அவருடைய நாயும் கூடச் சென்றது.

பெடியள் கிளிநொச்சியைத் திருப்பிப் பிடித்த போது சரவணமுத்தர் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தார். அப்போது புதிய நாயோடு வந்தார். பழையது உடையார்கட்டு மண்ணுக்கு இரையாகி விட்டது. அதற்கு வயது வந்து விட்டது. போக வேண்டிய நேரத்தில் போய்விட்டது.

இது தான் நாய்வளர்க்க கூடாது என்ற புத்திமதியின் இரகசியம். நாய்க்கு ஆயுசு குறைவு. அது எமக்கு முந்தி இறந்து விடும் இருக்கப்பட்ட எங்களுக்குத் துயரம். புதிய நாயைத் தேடிப் பிடிச்சு நல்லபடி வளர்த்தால் துயரம் குறையும்
சரவணமுத்தரும் பாக்கியமும் பல சாதி நாய்களை வளர்த்தவர்கள்.

ஏல்லாவற்றிற்கும் பெயர் சூட்டிச் செல்லமாக வளர்த்தவர்கள் பிறகு பறி கொடுத்தவர்கள். கிளிநொச்சியை மீண்டும் இழக்க வேண்டிய அவலம் சில வருடங்களுக்குப் பிறகு தோன்றியது.
அது தான் அவர்களுக்கு இறுதிப்பயணம் கையில் எடுக்கக் கூடியவற்றை எடுத்

துக் கொண்டு வாழ்ந்த மண்ணையும் வீட்டையும் திரும்பிப் பாராமல் சனத்தோடு சனமாக நடை பயணத்தை தொடங்கினார்கள். அவர்களுடைய நாயும் கூடச் சென்றது.

இந்த முறையும் உடையார்கட்டில் தங்கலாம் என்று ஒரு கணக்கு வைத்திருந்தார்கள். அது மிகப் பெரிய தவறு. மெல்ல மெல்லச் சனக் கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. இது தான் . இதற்கு மேல் முடியாது என்று நினைத்தவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
சாகச் சாகச் சனக் கூட்டம் ஏதொவொரு திசையில் சென்று கொண்டிருந்தது ஈழத் தமிழர்களின் அவலம். எல்லை கடந்தது.இன்று இருந்தாரை நாளை காண முடியாது என்ற நிலை தோன்றியது.

முள்ளிவாய்க்கால் வந்து விட்டது. தீப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட தீக் குச்சிகள் போல் இந்தச் சிறிய கடற்கரைக் கிராமத்திற்குள் மக்கள் அடைபட்டனர். எதிரிக்கு இது நல்லவாய்ப்பு. தமிழனுக்கு..?

சரவணமுத்தரும் பாக்கியமும் ஒரு பக்கத்தில் முடங்கிக் கொண்டார்க

ள். அவர்களுடைய நாயும் ஒட்டிக் கொணடு தவித்தது. அதற்கு ஏதோ தெரியும் என்று நினைக்கிறேன் அது பாக்கியத்தை விட்டு நகர மறுத்து விட்டது.

உணவுத் தேடலுக்குச் சரவணமுத்தர் சென்ற போது ஒரு அனர்த்தம் நடந்தது. எங்கிருந்தோ வந்த குண்டு பாக்கியத்தின் கதையை முடித்து விட்டது. நாய் மாத்திரம் சிதறிய உடலுக்குக் காவலாக இருந்தது. சரவணமுத்தர் வந்த போது எல்லாம் முடிந்து விட்டது.

பாக்கியத்தின் கழுத்திலை காதிலை இருந்ததைக் கழற்றிப் போட்டு ஒரு குழியில் உடலைக் கிடத்தி மூடினார்கள். நாய் மூடிய குழிக்கு மேல் படுத்து விட்டது. சரவணமுத்தர் அதிர்ச்சியில் அப்படியே நின்றார்.உதவிக்கு வந்தவர்கள் அடுத்த குண்டு வரப்போகுது என்று அச்சத்தில் வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள். அடுத்த குண்டு நேராக வந்து சரவணமுத்தரையும் நாயையும் சிறிய இறைச்சித் துண்டுகளாகச் சிதறடித்தது. மூவர் கதையும் முடிந்து விட்டது.

விதுரன்

Comments