கடந்த வருடம் மே மாதம் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதிநிதிகளின் தெரிவை, தமக்குச் சாதகமான முடிவுகளை மேற்கொள்ளும் நோக்கோடு நிறுத்தி வைத்ததுடன், ஒரு வருட காலமாக அதற்கான எந்தத் தீர்வையும் வழங்காமல் வைத்திருக்கும் ஜனநாயக பண்புகளை மீறிய நடவடிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக அணி வன்மையாகக் கண்டிப்பதுடன், அவர்களைத் தேர்வு செய்த தமிழ் மக்களது ஜனநாயக உரிமைக்கு மதிப்பளித்து, அவர்களது தெரிவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திறன் அதிகரிக்கப்பட்டு, அதன் செயற்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாக செல்வி கிருஷாந்தி சக்திதாசன் (சாளினி), திரு. திருச்சோதி திருக்குலசிங்கம், திரு. கொலின்ஸ் மைக்கேல் ஆகியோரது பங்களிப்பை ஜனநாயக அணி ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்துள்ளது.
அத்துடன், நாடு கடந்த அரசாங்கத்தின் எந்தப் பதவியில் அமர்த்தப்பட்டு இருந்தாலும் திறமையாகச் செயற்படாத மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாக, அவர்களது பிரதேசங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழீழ மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் அவர்களது பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக, தவறான பாதையில் கே.பி. அவர்களது நெறிப்படுத்தலில் செயல்பட்டு வந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள், கே.பி. குழுவால் முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய சிதைவு அமைப்பான ‘தமிழர் நடுவம்’ என்ற அமைப்பின் பின்னணியிலும் செயற்பட்டு வந்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தமிழ்த் தேசிய சிதைவு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள்மீது நாடு கடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரஞ்சு அமைப்பு ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து இரண்டு வருடங்களும், அந்த மக்களை விடுவிக்கவும், தமிழீழ மண்ணை மீட்கவும் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரான்சில் அதற்கான எந்த நகர்வையும் மேற்கொள்ளாது, இந்திய அரசியலை ஒத்த வெறும் விளம்பர அரசியலையும், தமிழ்த் தேசிய தளங்களைச் சிதைக்கும் அபாயகரமான நகர்வுகளையும் மட்டுமே மேற்கொண்டுவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தமக்கு மக்கள் வழங்கிய ஆணையுடன் தமிழீழ விடுதலை நோக்கிய நகர்வுகளை நேர்படுத்தி, தீவிரப்படுத்தி வருகின்றார்கள்.
இனி வரும் நாட்களில், மக்களுடனும், பிரான்சிலுள்ள தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடனும், ஏனைய அமைப்புக்களுடனும் இணைந்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் சூளுரை செய்துள்ளனர்.
அதே வேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான சத்தியப் பிரமாணத்தை ‘லா குர்நோவ்’ நகர சபை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களது சிலைக்கு முன்பாக, மக்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ள இருப்பதாக மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்’
Comments