சிறீலங்கா மீதான அனைத்துலக விசாரணைகள் போர்க்குற்ற நீதிமன்றத்திற்கான வழியை ஏற்படுத்தும் : கோடன் வைஸ்

சிறீலங்காவின் நீண்ட வரலாற்றில் விசாரணைக்குழுக்கள் தோல்வியையே தழுவியுள்ளன. எனவே அனைத்துலக விசாரணைகள் அமைக்கப்படுவது அவசியமானது. இந்த அனைத்துலக விசாரணைகள் போர்க்குற்ற விசாரணைகளாக மாற்றமடையும் என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புக்கான முன்னாள் பிரதிநிதி கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு நேற்று முன்தினம் (18) அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி: அறிக்கை தொடர்பில் எதனை கூற விரும்புகிறீர்கள்?

பதில்: குற்றச்சாட்டுக்கள் மிகவும் தீவிரமானவை. சிறீலங்காவில் என்ன நடைபெற்றுள்ளது என்பதை அறிக்கை தெளிவாக தெரிவித்துள்ளது. அங்கு அனைத்துலக விதிகளும், பாதுகாப்பும் மீறப்பட்டுள்ளன. அங்கு இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் அனைத்துலக சமூகத்திற்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

கேள்வி: தற்போது ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள அம்சங்கள் அதிக தாக்கத்தை உண்டுபண்ணுமா?

பதில்: நல்லது, கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து நான் தெரிவித்தது என்னவெனில், அங்கு 10,000 தொடக்கம் 40,000 மக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பதே.

போரின் இறுதி மாதங்களில் இந்த மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது ஐ.நாவின் நிபுணர் குழுவும் அதனை தான் தெரிவித்துள்ளது. அங்கு பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. ஐ.நாவின் அறிக்கையின் உண்iமான தாக்கம் என்பது, அங்கு குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்துப்பட்டுள்ளதுடன், அனைத்துலக விசாரணைகள் தேவை என்பதையும் அது வலியுறுத்தியுள்ளது.

கேள்வி: செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தகவல்களையும் அறிக்கை கொண்டுள்ளது. இந்த அமைப்புக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நீங்கள் அப்போது கொழும்பில் பணியாற்றியதால், இந்த தகவல்கள் காத்திரமானவையா என்று கூறமுடியுமா?

பதில்: நிட்சயமாக, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீது சிறீலங்கா அரச படையினர் எறிகணைத்தாக்குதல்களை மே;றகொண்டிருந்தனர். அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் நிலைகளுக்கு அண்மையாகவும் எறிகணைகளை ஏவியிருந்தனர்.

வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீது சிறீலங்கா அரசு திட்டமிட்டமுறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற்றறுவந்த வைத்தியசாலை மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. 300,000 மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு தடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: சிறீலங்காவுக்கு பயணத்தை மேற்கொள்ளாது மற்றும் சிறீலங்கா அதிகாரிகளுடனும் பேசாது முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் முக்கியத்துவம் தொடர்பில் பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதே?

பதில்: சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்;கை தான் காரணம். எனினும் போர் நடைபெற்ற பகுதிகளில் இருந்து வெளியேவந்துள்ள பெருமளவான மக்களில் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தகவல்களை பெறமுடிந்துள்ளது. அவர்கள் சாட்சியமும் அளிப்பார்கள்.

சிறீலங்கா அரசு மீது வெறுப்பை கொண்டுள்ள சிறீலங்கா படையினரும், அதிகாரிகளும் தகவல்களை வழங்கியுள்ளனர்.

கேள்வி: நிபுணர் குழு சிறீலங்காவுக்கு சென்றிருந்தால், அறிக்கையின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறீர்களா?

பதில்: இல்லை, நிபுணர் குழு அங்கு சென்றிருந்தால் அவர்கள் எதனை சிறீலங்கா அரசிடம் இருந்து கேட்டிருப்பார்கள்? போரில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படவில்லை என்று சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருவதை தான் கேட்டிருப்பார்கள்.

கேள்வி: அறிக்கை விடுதலைப்புலிகள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதில்: விடுதலைப்புலிகள் மீதும் அதிக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அது தொடர்பில் நானும் தெளிவாகக் கூறியிருந்தேன். அறிக்கையும் அதனை தான் தெரிவித்துள்ளது.

பல ஆயிரம் மக்களை விடுதலைப்புலிகள் கேடையமாக பயன்படுத்தியிருந்தனர். அவர்களை வெளியேறவும் விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. வெளியேறியவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

கேள்வி: இந்த அறிக்கை தொடர்பில் சிறீலங்கா அரசின் பதில் எதனை தெரிவித்துள்ளது. அதற்கு எதிராக அரசு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே சிறீலங்காவின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

பதில்: எதிர்பார்க்கப்பட்டது போலவே சிறீலங்கா அரசு நடந்துகொண்டுள்ளது. அது மிகவும் கடுமையான எதிர்ப்பு. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதெல்லாம் அவர்கள் எதனை செய்தார்களோ அதனையே தற்போதும் செய்துவருகின்றனர்.

எல்லாவற்றையும் எதிர்ப்பதுடன், தமது போர் வெற்றி இரத்தம் சிந்தப்படாதது என தெரிவித்துவருகின்றனர்.

கேள்வி: சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சாத்தியமானது என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: நிபுணர் குழு இந்த அறிக்கையை எழுதியுள்ளது என நான் எண்ணுகிறேன். பின்னர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன் மூலம் குற்றங்களை உறுதிப்படுத்த முடியும். அங்கு குற்றங்கள் நடைபெற்றுள்ளதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஐ.நா நடவடிக்கை எடுக்காதுவிட்டால் அது ஐ.நாவுக்கு அதிக நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஐ.நாவில் உறுப்புரிமை உள்ள நாடுகளுக்கும் அது சங்டத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக சீனா, இந்தியா, ரஸ்யா ஆகிய நாடுகள் சுயாதீன அனைத்துலக விசாரணைகளை எதிர்க்கும் என நான் நம்புகிறேன்.

கேள்வி: பதில் நடவடிக்கையாக என்ன நடைபெறும் என நீங்கள் எதிர்பார்கிறீர்கள்?

பதில்: போர்க்குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டலாம் என நான் நம்புகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக முழுமையான அறிக்கை வெளியிடப்படும். சிறீலங்கா அரசு எதற்கும் ஒத்துழைக்கப்போவதில்லை.

சிறீலங்காவின் நீண்ட வரலாற்றில் விசாரணைக்குழுக்கள் தோல்வியையே தழுவியுள்ளன. அதனையும் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது. எனவே அனைத்துலக விசாரணைகள் அமைக்கப்படுவது அவசியமானது. இந்த அனைத்துலக விசாரணைகள் போர்க்குற்ற விசாரணைகளாக மாற்றமடையும்.

ஈழம் ஈ நியூஸ்.

Comments