குட்டித்தீவில் குமுறல்கள் - 02

தந்தை செல்வா, அன்றே சொன்னார்….!

உலகப் பற்றினை உதறித் தள்ள முற்படும் ஞானியர் கூடத் தம் தாயின் மீதுள்ள பாசத்தைக் கைவிட இயலுவதில்லை!

Capture-Thanthai_Selvaஆதிசங்கரரில் ஆரம்பித்துப் பட்டினத்தடிகள் வரை இந்த வரலாற்றைக் காணலாம்…..

இறைவன் மீது பக்தி கொண்டு, அவனது புகழ்பாடித் திரிந்த இறை அடியார்கள் கூட, அந்த இறைவனைப் போற்றும் போது……

“தாயிற் சிறந்த தயாவான தத்துவனே….” என்றும்

“தாயினும் நல்ல தலைவன்…” என்றும் ….

தாயை முன்னிலைப்படுத்தியே தங்கள் கருத்துகளைப் பாடல்களாய் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஓர் இனத்தின் குமுறல்களை எழுத வந்த இடத்தில்…. இது என்ன இடை நடுவில்… ’தாய் பற்றிய புராணம்’ என்று குழம்புகிறீர்களா?

உலக உறவுகளில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரிக்கவோ, விலக்கி வைக்கவோ முடியாத உறவு… தாயின் மீதான உறவு. பறவைகள்.. விலங்குகளுக் கிடையே கூட இந்த உறவு குறிப்பிட்ட காலம் வரை பிரிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

வீட்டில் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்போர் இதனைக் கண்கூடாகக் காணமுடியும்…

தன் குஞ்சுகளுக்காகப் போராடும் கோழிகள்; தனது குட்டிகளையும், கன்றுகளையும் ‘மடிகளை’(முலை) நோக்கி இழுத்துவிடும் ஆடு-மாடுகள் என இந்தத் தாயன்பு எல்லா உயிர்களிடத்தும் விரவிக் கிடப்பதை எவரும் மறுப்பதில்லை.

மனித வரலாற்றில்…… இந்தத் தாயினுக்கு ஒப்பாகச் சொல்லப்படுபவை….. ஒருவரது மொழியும்; அவர் பிறந்த மண்ணும் ஆகும்.

மொழியைத் தாய் மொழி என்றும், பிறந்து வாழும் மண்ணைத் தாய்மண் அல்லது தாயகம் என்றும் சொல்வது உலகின் எந்த மொழி பேசுபவர்க்கும்,எந்த நாட்டைச் சேர்ந்தவர்க்கும் பொதுவான ஒன்று.

மனித இனம் தனது எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த அன்று மொழியும்; அதன் பின்னர் அவன் தனது நாடோடி வாழக்கையைக் கைவிட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த போது அவனுக்கு என்று ஓர் இடமும் உறுதியானது.

மனித இனத்தின் முதல் இரு அடையாளங்களாய் அமைந்த இந்த மொழியையும், அவன் வாழும் மண்ணையும் அவன் தன் தாயினும் மேலாக எண்ண ஆரம்பித்தான், நேசித்தான் . எனவே தான் இவை இரண்டுமே ’தாய்’ என்னும் அடை மொழியால் சிறப்படைகிறது.

இவை தன்னிடமிருந்து பறி போவதையும், இவற்றில் ஒன்றினைத் தானும் இழப்பதையும் அவனால் பொறுத்துக் கொள்ள இயலுவதில்லை.

Capture-Thanthai_Selva1தாயை நேசிக்கும், போற்றும் எந்த மனிதனுக்கும் ஏற்படும் உடனுறை உணர்வு இது எனலாம்.

மனிதன் என்னும் பொதுப் பெயரில் உருவான இனம்; பின்னர், பேசும் மொழியாலும்,வாழும் இடத்தாலும் தனக்கென ‘இன’ அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு… அதனைப் பாதுகாப்பதே தனது பெருமை என்னும் நிலையை அடைந்தது.

குறிப்பிட்ட மொழி பேசும் மனிதர்கள் கூடிவாழும் இடம் அவர்களது நாடாயிற்று. இந்தக் கூட்டு வாழ்க்கையே காலப் போக்கில் அவர்களுக்கு எனக் கலாச்சாரத்தையும்,பண்பாட்டினையும் தோற்றுவித்தது.

இவற்றைப் பேணுவதும், போற்றுவதும் அவர்களது தனி உரிமையாகவும், பெருமையாகவும் நிலைபெற்றது.

எனவேதான்….. ஓர் இனத்தை- அதன் அடையாளத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் மொழியையும், அவ்வினம் ஒன்றாகக் கூடிவாழும் இடத்தையும் அழித்து விட்டால் போதும் என்னும் திட்டத்தினை ; இன்று நாகரீகத்தில் முதிர்ச்சி அடைந்து விட்டதாகப் பேசும் சில நாடுகள் ஆங்காங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நாடுகளின் வரிசையில் முதலிடம் பிடிப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கும் நாடு ஸ்ரீலங்கா என்றால் மறுப்பதற்கில்லை!

பிரித்தானிய அரசு, தனது நிர்வாக எளிமைக்காக இலங்கைத் தீவின் இரு தேசிய இனங்களையும் ஒரே அலகின் கீழ் அமைத்துத் தனது ‘வர்த்தக வேட்டையை’ நடாத்தி வந்தது. அதே நிர்வாக முறையின் கீழ், மக்கட் தொகையில் அதிகமாக இருந்த சிங்களர்களிடம் நாட்டைக் கையளித்து விட்டும் சென்றது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்களப் பெரும் பான்மையிடம் அரச நிர்வாகம் வழங்கப்பட்ட நாளே இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக உலகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஈழத் தமிழர்களின் சுதந்திரம் படிப்படியாகப் பறி போவதற்கு வகை செய்யப்பட்ட நாளே அது என்பதைச் சுதந்திர(?) இலங்கையின் அரசியல் வரலாறு கடந்த அறுபத்து மூன்று வருடங்களாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் இலங்கைத் தீவில் காலடி வைக்கும் வரை, அங்கு தமிழர்களுக்கென ஓர் அரசும், சிங்களர்களுக்குத் தனியான அரசுகளும் இருந்து வந்தன. அன்றைய கால வழக்கப்படி அரசர்களுக்கிடையில் எழும் முரண்பாடுகளால் இரு நாடுகளுக்கிடையே போர்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழர்களும் சிங்களர்களும் தங்களது தாயகத்தில், தங்கள் மொழி, பண்பாடு இவற்றினைத் தொடர்ந்து பேணும் நிலை இருந்து வந்துள்ளது.

போர்த்துக்கேயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், அவர்களின் பின் ஆங்கிலேயர்களும் இலங்கைத்தீவின் நிர்வாகத்தினைச் சுமார் நானூறு வருடங்களுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் தான் அத்தீவின் இரு இன அரசுகளது நிர்வாகமும் ஒன்றாக இணைக்கப் பட்டது.

எனினும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக் கொண்ட சிங்கள இனத்தின் தலைமை, மீண்டும் தமிழர்கள் தங்கள் ஆட்சி உரிமைக்காகப் போராடும் வலிமையினை ஒடுக்கும் வகையில் தனது திட்டங்களைத் தீட்டலாயிற்று.

அதன் முதல் படியாக, அந் நாட்டின் தமிழ் பேசும் மக்களது எண்ணிக்கையினை மட்டுப்படுத்தும் சட்டம் ஒன்றினை இயற்றியது. இது தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியினரை வெளியேற்ற என உருவாக்கப்பட்ட மறைமுக ‘இன ஒழிப்புக் கொள்கை’ எனலாம்.

இலங்கை; சுதந்திரம் அடைந்ததும் சிங்களப் பெரும்பான்மை அரசு கொண்டு வந்த மலையகத் தமிழர்களைப் பாதித்த இந்தப் ‘பிரஜா உரிமைச் சட்டம்’, ஏற்கனவே சிறுபான்மை இனத்தினராக இருக்கும் தமிழர்களைக் குரல் அற்றவர்களாக்கும் முயற்சியாகவே கருதப்பட்டது.

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் ,விவாதத்திற்கு வந்தபோது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைகாக அடுத்து வந்த முப்பது ஆண்டுகளாகப் போராடிய ‘தந்தை செல்வா’ அவர்கள்; “ இன்று மலையகத்தவர்களை நாட்டை விட்டு விரட்டும் சிங்கள அரசு, நாளை ஈழத்தமிழர்களையும் விரட்டுவதற்கு முன்வரலாம்” எனக் கூறிய வார்த்தைகள், இன்று அந் நாட்டு அரசின் செயல்கள் மூலம் செயலுருப் பெறுவதாகவே தெரிகிறது.

( குமுறல்கள் தொடரும்….)

- "சர்வசித்தன்"

[www.sarvachitthan.wordpress.com]

Comments