ஈழம்.. கொடூரமும் கொலையும் தொடர் 1-7


ழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்​கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே...

நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்​தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்!

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை

நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால், இந்த வெற்றிக்காக இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. போரில் புலிகள் வட கிழக்குக் கடலோரப் பகுதியான வன்னிக்குத் தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான தமிழர்கள் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாதபடி, வலிமையான இரண்டு போர்க் குழுக்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். இதனால்தான், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் தாக்குண்டு சிதறினார்கள். மறுபுறம் ராணுவத்துக்கு எதிராகப் புலிகள் நடத்திய தாக்குதலிலும் தமிழ் மக்கள் சிக்கிக்கொண்டனர். போர்ச் சூழலில் மனிதாபிமான உதவிகளை வழங்க​வேண்டிய இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்களை அடக்குவதிலேயே குறியாக இருந்ததுதான் பெரும் ​துயரம்!

கடைசிக் கட்டத் தாக்குதல் உக்கிரமாக நடந்தது. அதனால், அந்த இடத்தில் இருந்து எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. 'என்ன நடந்தது?’ என்கிற புதிர் விலகும் முன்னரே, அதிபர் ராஜபக்ஷே 2009 மே 19-ம் தேதி, போரின் வெற்றியை அறிவித்தார். அதனால், இறுதிக் கட்டத் தாக்குதலின் கடுமையும், பாதிப்புகளும் உலகுக்குத் தெரியாமலே போய்விட்டது. போர் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குப் போனார். போர் நடந்த சில இடங்களையும், சில முகாம்களையும் பார்வை இட்டார். அதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அமைக்கப்​பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடக்கத்​தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக குடும்பத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தங்கள் அமைப்பில் ஆட்களை சேர்த்துக்​கொண்டனர். போரின் தீவிரத்தால் ஒரே குடும்பத்தில் இருந்து பலரையும் தங்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கும் சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர். பதுங்கு குழிகள் தோண்டும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்தினர். 2008-ல் புலிகளின் படை பலம் கணிசமாகக் குறைந்துவிட்டது. அவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. புலிகள் வலிமையாக இருந்தபோது, 20,000 பேர் அந்த அமைப்பில் இருந்துள்ளனர். ஆனால், இறுதிக் கட்டப் போரில், அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வெறும் 5,000 ஆகிவிட்டது.

புலிகளை மேலும் முடக்கும் வகையில், 'அமைப்புடன் தொடர்புடையவர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட நபர்​களைக்கூட ராணுவம் சித்ரவதைக்கு உட்படுத்தியது. இதற்காக 'வெள்ளை வேன்’ என்ற ஆபரேஷன் நடத்தப்பட்டது. புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள், அந்த வேனில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அதில் பலர் காணாமலேயே போனார்கள். கொல்லப்​பட்டவர்களின் உடல்கள், ரகசியமாக மறைக்கப்பட்டன. பலர் திரும்பி வராததால், அவர்கள் குறித்து அறிய முடியாத நிலை!

மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த 'வெள்ளை வேன்’ ஆபரேஷனுக்கு இரையாகினர்.

செய்திகளுக்குக் கடுமையான தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. செய்தியாளர்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. சில பத்திரிகையாளர்களின் பெயர்கள், 'புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று ராணுவத்தின் இணையத்தளத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டன.

போர்ச் செய்திகளை வெளியிட கடுமையான நிபந்தனைகள் 2008-ல் விதிக்கப்பட்டன. இதனை மீறிய பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்​களும் மிரட்டப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். போர் முடிந்த பிறகும் இந்த மிரட்டல்கள் வழக்​கத்தில் இருந்தன. அரசை விமர்சித்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்​பட்டார். போத்தல ஜெயந்த 'வெள்ளை வேனில்’ தூக்கிச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்குப் பிறகு விடுவிக்கப்​பட்டார். பல செய்தி நிறுவனங்​கள் நொறுக்கப்பட்டன. இது குறித்து அரசு எந்த விசாரணையும் நடத்த​வில்லை.

இறுதிக் கட்டப் போரின்போது, ஐ.நா. தொண்டு நிறுவனத்தினர், கிளி​நொச்சியை விட்டு வெளியேறிச் சென்றனர். உதவிக் குழுக்களின் உணவு விநியோகத்தை ராணுவம் தடுத்தது. தளவாடங்கள் மற்றும் பொருட்​களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, ராணுவப் பயன்பாட்டுக்காக எடுத்துக்​கொண்டது. அதனால், மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. பசியின் கோரப் பிடியில் சிக்கித் தமிழ் மக்கள் கதறினார்கள்.

இத்தகைய இக்கட்டிலும் உதவிக் குழுவினர் தங்களிடம் இருந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். ஆனால், அந்த இடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாத அளவுக்கு இரு தரப்பினரின் தாக்குதல் இருந்தது. இறுதிக் கட்டப் போரில், இலங்கை ராணுவம் அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகளைக்கூட ராணுவம் விட்டுவைக்கவில்லை. காய​மடைந்த விடுதலைப் புலிகள் சிகிச்சை பெறுவதாக நம்பப்பட்ட மருத்துவமனைகள் மீது மீண்டும், மீண்டும் தாக்குதலை நடத்தியது ராணுவம்!.

- துயரங்கள் தொடரும்...

தமிழில்: ஆண்டனிராஜ்

லங்கை அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2006-ல் நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததும், புலிகளை ஒழிக்கப் பன்முகக் கூட்டு நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. அதன்படி, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்கிற ரீதியில் பல்வேறு நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு பெற்றது. குறிப்பாக, இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகமாக்கிக்கொண்டது. இதனால், கடல் மார்க்கமாக ராணுவத் தளவாடங்களை புலிகள் எடுத்துச் செல்லும்போது, அதை இந்தியக் கடற்படை, இலங்கைக் கடற்படையினருக்குத் தெரிவித்தது. விரைந்து செயல்பட்டு அதை அழித்தார்கள்.

ஒருபக்கம் தனது படை பலத்தைப் பெருக்கிக்கொண்ட சிங்கள ராணுவம், மறுபுறத்தில் கடல் மார்க்கமாக ராணுவத் தளவாடங்களைப் புலிகள் பெற முடியாத நிலையை உருவாக்கியது. இதனால், ஏற்கெனவே சேமிப்பில் இருந்த ஆயுதங்களையே புலிகள் அமைப்பு பயன்படுத்தியது. ஆனாலும், கரும்புலிகள் தொடர்ந்து தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தி, ராணுவத்தை நிலைகுலைய வைத்தனர்.

பாவப்பட்ட ஜனங்கள்!

2008 செப்டம்பரில் பல்வேறு முனைகளிலும் இருந்து வன்னிப் பகுதியை நோக்கி ராணுவம் முன்னேற... புலிகள் பின்வாங்கினர். 'ராணுவம் கைப்பற்றிய இடங்களில், பெண்கள் மானபங்கம் செய்யப்படுவார்கள், அப்பாவி மக்கள் துன்புறுத்தப்​படுவார்கள்’ என்பதால், மக்களும் புலிகளுடன் சென்றனர். டிராக்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் மூலமாக தங்கள் உடைமைகளைக் கொண்டுசென்றனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கஷ்டத்தோடு இடம்பெயர்ந்தனர்.

பாதுகாப்பான இடத்தில் குண்டு மழை!

அதிகமான மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி புலிகளுடன் இருந்தார்கள். 2009 ஜனவரி 20-ல் 'பாதுகாப்பான பகுதி’ (நோ ஃபயர் ஸோன்) என்று சில இடங்களை ராணுவம் அறிவித்தது. அந்த இடங்களுக்குள் வருமாறு மக்களை அழைத்தது ராணுவம். இந்தப் பகுதிகளில் ஐ.நா. ஊழியர்கள் தங்கும் இடத்தை அமைத்தனர். அரசின் சார்பில் உணவுப் பொருட்கள் அங்கு விநியோகம் செய்யப்பட்டன. சிங்கள ராணுவத்தின் இந்தத் திட்டத்துக்குப் பின்னால் உள்ள கொடூரமான சதியை அறியாத அப்பாவி மக்கள் அங்கு வந்தனர். நாலாவது நாளிலேயே, வான் வழியாக நூற்றுக்கணக்கான குண்டுகள் 'பாதுகாப்பான பகுதி’ மீது விழுந்தன. எங்கும் மரண ஓலம். ஐ.நா. ஊழியர்கள் பதுங்கு குழிகள் மூலம் உயிர் தப்பினர். ஆனால், மக்களுக்கு அந்த வசதி இல்லை. ஆகவே, பீதியோடு நடுங்கினர். அபயக் குரல் கேட்டு இங்கும் அங்கும் ஓடிய மக்கள் மீது குண்டுகள் வெடித்துச் சிதற, அவலக் குரல் எழுப்பக்கூட முடியாமல், அவர்கள் கரிக்கட்டைகளாக மாறினர்.

சிங்கள ராணுவத் தரப்பில்தான் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன என்பதைப் பார்த்த ஐ.நா. பாதுகாப்பு அதிகாரி, இதுபற்றி கொழும்பு நகரில் செயல்பட்ட ஐ.நா. அலுவலகத்துக்கு பதற்றத்தோடு தகவல் கொடுத்தார். அவர்கள், ராணுவத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். ராணுவச் செய்தித் தொடர்பாளரோ அதை அவசரமாக மறுப்பதில்தான் அக்கறை காட்டினார். ஆனால், கோரத் தாக்குதல் ஓயவில்லை. பாதுகாப்புப் பகுதியில் இரவு நேரத்தில் சிங்கள ராணுவம் கொடூரமாகக் குண்டு மழை பொழிந்தது. விடிந்த பிறகு எங்கும் சடலங்கள் சிதறிக்கிடந்தன.

சிதைந்த உடல்கள்!

சிங்கள ராணுவத்தின் இந்த மனிதாபி​மானமற்ற செயலால், அங்கு தஞ்சமடைய வந்த மக்களின் சடலங்களும், மிகக் கடுமையாகக் காயம் அடைந்தவர்களும் ஏ-35 சாலை நெடுகிலும்கூட சிதறிக்கிடந்தனர். திரும்பிய பக்கம் எல்லாம் ஆயிரக்​கணக்கில் சடலங்கள், பலியான செல்லப் பிராணிகள், நொறுங்கிக்கிடந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்... சிங்கள ராணுவத்தின் இந்த ஊழித் தாண்டவத்தைக் கேட்டு வெஞ்சினம்கொண்ட புலிகள், பாதுகாப்பான பகுதிக்குள் ஓரமாக ஒளிந்து ராணுவத்தின் மீது தாக்கினர். பீரங்கித் தாக்குதலையும் நடத்தினர். புலிகள் இருந்த இடம், ஐ.நா. ஊழியர்கள் மையம் அமைத்து இருந்த இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. ஆனாலும், மக்களுக்கு அருகில் ஐ.நா. ஊழியர்கள் தங்கி இருந்த பகுதிக்குள் இந்தத் தாக்குதலை எதற்காக ராணுவம் மேற்கொண்டது? இதற்கான விளக்கம் இது வரை வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதும் ஐ.நா. ஊழியர்களும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வெளியேறி புதுக் குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல... அச்சத்தில் தவித்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஓடி நெருக்கியடித்து அந்தப் பதுங்கு குழிகளில் முடங்கினர்.

2009 பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது பாதுகாப்பான பகுதியை ராணுவம் அறிவித்தது. கடலோரத்தில் இருக்கும் அம்பலவான் போக்கணை, கரய முள்ளிவாய்க்கால், புதுமட்டளன், வலயான்மடம், வெள்ள முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 12 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த இடம் இருந்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு, தரை, கடல், வான் வழிகள் மூலமாக ராணுவம் தீவிரத் தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதிக்குள் 3,30,000 பேர் வரை இருந்தனர். இந்தத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இதேபோல, மூன்றாவது, நான்காவதாக அறிவிக்கப்​பட்ட பாதுகாப்பான பகுதிகளும் சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குத் தப்பவே இல்லை!

- துயரங்கள் தொடரும்...

தமிழில்: ஆண்டனிராஜ்

ஈழம்.. கொடூரமும் கொலையும்! பகுதி-3


'லங்கை அரசால் பாதுகாப்பான பகுதி’ என்று அறிவிக்கப்பட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவி மக்களைக் கொன்றொழித்த சிங்கள ராணுவத்தின் காட்டு தர்பார் அங்கு இருந்த மருத்துவமனைகளையும் விட்டுவைக்கவில்லை!

நொந்துபோன நோயாளிகள்!

போரில் கை, கால்களை இழந்தவர்கள்... உடல் முழுவதும் எரிந்துபோனவர்கள்... முகம் சிதைந்து உருக்குலைந்தவர்கள் போன்ற எண்ணற்றவர்களால், மருத்துவமனைகள் ஏற்கெனவே நிரம்பி வழிந்தன. பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் நரக வேதனையில் தவித்தனர்! மருத்துவமனைகளில் போதிய இட வசதியும் இல்லை; மருத்துவர்களும் இல்லை. எங்கு பார்த்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம்; மரண ஓலம்... படுக்கைகள், நோயாளிகளால் நிறைந்துவிட்டன. குண்டுக் காயங்களுடன் பலர் மேஜைகளுக்கு அடியிலும், நடைபாதையிலும், தரையிலும் கிடத்தப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியே மரங்களின் அடியிலும் நோயாளிகள்... உயிருக்குப் போராடியவர்களுக்குக்கூட, மரக் கிளைகளில் தொங்கவிடப்பட்ட குளூக்கோஸ் பாட்டில்கள் மூலம் சிகிச்சை நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் வர, நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறியது மருத்துவமனை நிர்வாகம்.

அடுத்தடுத்து, மருந்துகளும் உபகரணங்களும் தீர... இருப்பதைக்கொண்டே வைத்தியம் செய்தனர் மருத்துவர்கள். உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு கொடுக்க மயக்க மருந்து இல்லை. வேறு வழியின்றி, வலியால் துடிதுடிக்க அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அத்தியாவசிய உபகரணங்கள் இல்லாததால், மாமிசம் வெட்டும் கத்தி மூலமாக சிதைந்த உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டன. துண்டிக்கப்பட்ட கைகள், கால்கள், உடல் உறுப்புகள் அனைத்தும் குவியலாகக்கிடந்தன.

பீரங்கித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு ரத்தம் பீறிட்டு வழிய வருபவர்களுக்கு, சேலை, வேட்டி எனக் கையில் கிடைத்த பழைய துணிகளால் கட்டுப் போட்டனர். உறவுகள் இன்றித் தனியாக இருந்தவர்களுக்கு, இன்னும் கொடுமை. சிங்கள ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் காயமடைந்தவர்களுக்கு, ரத்தத்தின் தேவை அதிகரித்தது. ஆனால், ரத்த தானம் செய்ய ஆள் இல்லை; இருந்தவர்களும் சாப்பிடப் போதிய உணவு கிடைக்காமல் சோர்ந்துகிடந்தனர். என்ன செய்வது? காயமடைந்து ரத்தம் பீறிட்ட நிலையில் வந்த மக்களின் ரத்தமே தனித்தனியே பிளாஸ்டிக் பைகளில் பிடிக்கப்பட்டது. பின்னர், அதையே துணி மூலம் வடிகட்டி மறுபடியும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்தன!

உச்சக்கட்ட கொடுமை!

இந்த சோகத்துக்கு மத்தியில், மருத்துவமனைகளும் சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்டன. 2009 ஜனவரி 24-ம் தேதி, உடையார்குண்டு மருத்துவமனை மீது இரண்டு நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடந்தது. ஏற்கெனவே, அங்கு நிரம்பிக்கிடந்த மக்கள் நிலைகுலைந்து தவித்தனர். பலர் உயிரிழந்தனர்.

இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி 4-ல் கொண்டாட்டம் களை கட்டி இருந்த வேளையில், புலிகள் வசம் இருந்த புதுக்குடியிருப்பு நகரைக் கைப்பற்ற சிங்கள ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. அந்த சமயத்தில், தொடர்ந்து ஒன்பது நாட்களாக அங்கு இருந்த மருத்துவமனையைக் குறிவைத்துத் தாக்கியது. இதில் மருத்துவ ஊழியர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தத் திட்டமிட்ட தாக்குதல்பற்றி இலங்கை அரசிடம் அவர்கள் புகார் செய்தனர். ராணுவ அமைச்சகமோ, 'புதுக்குடியிருப்பு நகரில் மருத்துவமனையே கிடையாது’ என்று பொய் சொல்லியது. புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளும் சின்னாபின்னமாகின.

நந்திக்கடல் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பொன்னம்பலம் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியில் காயமடைந்த புலிகள் சிகிச்சை பெற்றனர். இதை அறிந்த சிங்கள ராணுவம், அதன் மீது ஏவுகணை வீச... அந்த மருத்துவமனை இடிந்து நொறுங்கியது.

புதுக்குடி யிருப்பைக் கைப் பற்ற, சிங்கள ராணுவம் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டபோதிலும், கடல் புலிகள் அதை முறியடித்தனர். இரு தரப்பிலும் இந்த மோதல் நடந்த அனந்தபுரம், இரணாபாலை, தேவிபுரம் பகுதி மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி கடற்கரை ஓரத்தை நோக்கி ஓடினார்கள். அவர்கள் கடைசியாக இருந்த வசிப்பிடம் அது மட்டுமே.

உணவும் குடிநீரும் கிடைக்காமல், குழந்தைகள், முதியவர்கள் திண்டாடினர். ஒரு நேரம் மட்டும் கஞ்சி கிடைத்தாலே, அதிர்ஷ்டம்தான். பால் பவுடர் வாங்க மக்கள் கால் கடுக்க வரிசையில் காத்து நிற்க... அங்கும் அவர்கள் மீது வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. திடீரென விழுந்த குண்டுகளால் எறும்புகளைப்போல் சிதறி விழுந்தனர் மக்கள். எங்கும் மரண ஓலங்கள் பீறிட்டன. பல இடங்களில் நடந்த இந்தத் தாக்குதல்களில் பலியானவர்களின் உடல்கள் பதுங்கு குழிகளில் போட்டு மூடப்பட்டன. அவர்களின் மரணங்கள் குறித்த கணக்குகள்கூட பதிவு செய்யப்படவில்லை.

- துயரங்கள் தொடரும்...

தமிழில்: ஆண்டனிராஜ், நன்றி : ஜூனியர் விகடன்

றுதிக் கட்ட ஈழப் போரின்போது, ஏக்கப் பெருமூச்சுடனும் கலக்கம் மிகுந்த

கண்களுடனும் மக்கள் தவித்துக்கொண்டு இருந்தனர். 'என்ன நடக்கிறது?’ என்பதே அவர்களுக்குப் புரியவில்லை. எதிர்ப்பு தெரிவிக்காமல் புலிகளும், தங்கள் நிலைகளை ராணுவத்திடம் விட்டுக்கொடுத்தனர். ஆனாலும், சிங்கள ராணுவம் மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனுமே, ஒவ்வோர் அடியையும் எடுத்துவைத்தது. உயிரைக் கையில் பிடித்தபடி நீண்ட தூரம் நடந்த மக்களோ, களைத்துவிட்டனர். இந்தத் துயரப் பயணத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் பலர். குண்டுப் பொழிவுக்கு பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட நேரம் இல்லை. அவை அப்படியே பாதையில் கிடக்க... எங்கும் பிண வாடை. வேகமாக நடக்க முடியாத முதியவர்கள், குடும்பத்தினரைப் பிரிந்தனர்; காயமடைந்தவர்களோ, வலி தாளாமல், வழியிலேயே விழுந்துவிட்டனர். ஆதரவற்ற இவர்கள் முன்னேறிச் செல்லும் மக்களிடம் உதவி கேட்டு அபயக் குரல் எழுப்பியும், பரிதாபப்பட்ட மீதி மக்கள் அதைக் கேட்காததுபோல், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.

ஆவேசத்தில் மக்கள்... பிடிபட்ட புலிகள்!

கடைசி மூன்று மாதங்களாக, மக்களுக்குப் பெரும் சோதனையை ஏற்படுத்தியது உணவுத் தட்டுப்பாடு. இதுவும், சிங்கள ராணுவத்தின் திட்டமிட்ட சதிதான். பாதுகாப்பான பகுதியிலும், ஒண்டுக் குடித்தனத்தில் இருப்பவரைப்போல், நெரிசலோடு தங்கினர் ஏகப்பட்ட மக்கள். குளிப்பதற்கும், ஒதுங்குவதற்கும்கூட வழி இல்லை. இந்த நிலையில், வன்முறையோடு அப்புறப்படுத்தி இந்த மக்கள் குறித்த கணக்குகளை, சிங்கள ராணுவம் திட்டமிட்டே குறைவாகச் சொன்னது.

மூன்று லட்சம் மக்கள் இருந்த நிலையில், 'வெறும் 10 ஆயிரம் பேர்’ என பச்சைப் பொய் சொன்னது. ஒவ்வொரு முறையும், அரசு தரப்பில் நடந்த கணக்கெடுப்பில், ஓர் அளவுக்கு உண்மையான தகவல் வெளிவர... ஆத்திரம் அடைந்த ராணுவம், அரசு அதிகாரிகளை மிரட்டியது; தாக்கியது. இப்படிப்பட்ட நெருக்கடிக்களுக்குப் பிறகும்கூட, தங்கள் அடைக்கலத்தில் 75 ஆயிரம் பேர் இருப்பதாகவே, பொய் சொன்னது ராணுவம்.

சிங்கள ராணுவம் இப்படித் தவறான தகவல் கொடுத்ததால், குறைவான உணவுப் பொருட்களும் மருந்துகளுமே கிடைத்தன. 'உணவுக்கான போராட்டத்தில், புலிகள் மீது மக்கள் ஆத்திரம் கொள்வார்கள்’ என அது எதிர்பார்த்தது. அதேபோல், ஒரு சில இடங்களில் புலிகள் பலர் பிடிபட்டனர். இதில், ராணுவத்துக்கு ரொம்பக் கொண்டாட்டம்!

ஆனாலும், 'போதிய மருந்துகள் கிடைக்கவில்லை’ என டாக்டர்கள் வெளி உலகத்துக்கு சொல்லிவிட்டனர். அவர்களைப் பிடித்த ராணுவம், 'எல்லா மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது!’ என தங்கள் முன்னிலையில் அறிக்கையை வெளியிடச் சொன்னது. இந்த இரு முரண்பட்ட தகவல்களையும் உற்று நோக்கும்போது, டாக்டர்கள் மிரட்டப்பட்டது, அப்பட்டமாக அம்பலமானது!

சிங்கள ராணுவம் கட்டவிழ்த்த பொய்களால், போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்த தகவல்களையும் பெற முடியவில்லை. 'போர் நடந்த பகுதியில் இருந்தவர்கள், எத்தனை பேர்? வன்னியில் இருந்து வெளியேறியவர்கள் எவ்வளவு? இறுதிக் கட்டப் போரில் எவ்வளவு புலிகள் இருந்தார்கள்? கொல்லப்பட்ட மக்களை எங்கே புதைத்தார்கள் அல்லது எங்கே வீசினார்கள்?’ எனப் பல கேள்விகளுக்கு நிஜமான பதில் வரவில்லை. இதனால், பலியானவர்கள் எண்ணிக்கை தெரியாமலே போய்விட்டது. இருப்பினும், இருக்கும் விவரங்களைக்கொண்டு பார்க்கையில், 40 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள் உயிர் இழந்து இருக்கலாம் எனத் தெரிகிறது. முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே, உண்மையான தகவல்களைப் பெற முடியும்!

போர்க் குற்றம்!

இறுதிக் கட்டப் போரில் சர்வதேச விதிமுறைகளுக்கு மாறான பல செயல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் மீது கொத்துக் குண்டுகள் அல்லது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக, புதுக் குடியிருப்புப் பகுதியில் இந்த வகைக் குண்டுகளே வீசப்பட்டன. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நோயாளிகளின் உடம்பில் இருந்த தீக்காயங்களைப் பார்க்கும்போது, அவை ரசாயனக் குண்டு தாக்குதல் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால், 'இந்த வகைக் குண்டுகளை நாங்கள் பயன்படுத்தவே இல்லை’ என்று சிங்கள ராணுவம் மறுத்து இருக்கிறது.

2009 மே 15-ம் தேதி, போர் முடிவுக்கு வந்துவிட்டதைப் புலிகள் உணர்ந்துவிட்டனர். அதனால், தங்களிடம் இருந்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் பாதுகாப்புக்காகக் கைவசம் இருந்த ஆயுதங்களையும் அழித்தனர். பிரமாண்டமான சத்தத்தோடு, அந்தப் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. இந்த சமயத்தில்தான், சிங்கள ராணுவம் நந்திக்கடல் பகுதிக்கு முன்னேறி வந்தது. இதனால், லட்சக்கணக்கான மக்களும், புலிகளும் தங்கி இருந்த பகுதி வெறும் மூன்று கிலோ மீட்டருக்குள் சுருங்கிப்போனது, கடலோரம் முழுவதும் மனிதத் தலைகள் தென்பட... உடல் உபாதைக்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

கொல்லப்பட்ட தலைவர்கள்!

மே 16-ல், சிங்கள ராணுவம் போர் வெற்றியை அறிவித்ததும், புலிகளின் முக்கியத் தலைவர்களும், அவர்களுக்குப் பாதுகாப்புக்காக இருந்த 250 தற்கொலைப் படை வீரர்களும் வெள்ள முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் சுருங்கினர். இந்த சமயத்தில், புலிகளின் முக்கியத் தலைவர்களான நடேசன், புலித்தேவன், கர்னல் ரமேஷ் ஆகியோர் சரண் அடைய முடிவு செய்தனர். இது தொடர்பாக, இலங்கை அரசு, ஐ.நா., செஞ்சிலுவை சங்கம், நார்வே அரசு, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் பாதுகாப்பு அமைச்சகமும் இதனை ஏற்றனர்.

'புலிகள் தரப்பினர் சரண் அடையும்போது, மத்தியஸ்தர்கள் யாரும் உடன் வரக் கூடாது!’ என்ற நிபந்தனைக்கும் புலிகள் சம்மதித்தனர். சிங்கள ராணுவத்தினர் தெரிவித்த வழித்தடத்தில், மே 18-ம் தேதி, புலிகளின் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடியோடு வந்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதுபற்றி சிங்கள ராணுவத்தின் தரப்பில் இருந்து தினமும் ஒவ்வொரு தகவலாக தெரிவிக்கப்பட்டபோதிலும், நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) அந்தச் சமாதானங்களை ஏற்கவில்லை. சரண் அடைய முன்வந்த புலிகளை சிங்கள ராணுவம் திட்டமிட்டுக் கொன்றுவிட்டதாகவே கருதுகிறோம்.

-துயரங்கள் தொடரும்.

தமிழில் : ஆண்டனிராஜ், நன்றி : ஜூனியர் விகடன்

ஈழப் போரின் ஆரம்பத்தில் இருந்தே... 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்’ என்பதை சிங்கள ராணுவம் வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்று, கடைசிக் கட்டப் போரின்போது, சரணடைய முன்வந்த முன்னணித் தலைவர்களைக் கொடூரமாகத்

திட்டமிட்டுக் கொன்ற ராணுவம், அதற்குப் பின்னரும் பல்வேறு அத்துமீறல்களை அரங்கேற்றியது. இந்தக் கொடுமைகள் தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

புலிகள் பலவீனம் அடைந்ததும், சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அப்பாவி மக்கள் அதிக அச்சத்துடனேயே சென்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அவர்களை ராணுவம் சந்தேகத்தோடு பார்த்து கொலைகள் செய்தது. நிறையப் பெண்கள் புதிய விதவைகளாக மாறிவிட்டனர். அழவும் முடியாமல், அலறவும் முடியாமல் அவர்கள் நிலை குத்திய கண்களோடு வானத்தைப் பார்த்தனர். தஞ்சமடைய வெவ்வேறு இடங்களுக்கு ஓடியதால், பல குடும்பங்கள் திசைக்கு திசை சிதறிவிட்டன. குழந்தைகள் தனியாக... தாய் தனியாக... தந்தை தனியாக... வெவ்வேறு முகாம்களில் அவலத்துடன் தங்கினர்.

உதவிய கருணா... உதறலில் மக்கள்!

நம்பி வந்த மக்களை வட்டுவாகல் பாலம் அருகே நிறுத்திய சிங்கள ராணுவம், 'அவர்களில் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கக்கூடும்’ என அஞ்சியது. 'வெடிகுண்டுகள் இருக்குமோ... துப்பாக்கிகள் இருக்குமோ’ என்ற பயத்தால், மக்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து சோதனை செய்தனர். உயிருக்குப் பயந்து ஓடி வந்தவர்களிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்தது ராணுவம். இதனால், கேமரா, லேப்-டாப் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட போர்க் காட்சிகள், கொடூரச் செயல்கள்போன்ற ஆவணங்கள் எல்லாம் சுவடற்றுப்போய் விட்டன!

பின்னர், அவர்களை அங்கு இருந்து கால்நடையாகவே கிளிநொச்சி, புல்மோட்டை, பாடவியா பகுதிகளுக்கு இழுத்து வந்தனர். வழி எல்லாம் முளைத்து இருந்தன பல சோதனைச் சாவடிகள்; அவற்றில் நடந்ததோ... ஈரமற்ற சோதனைகள்! புலிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைத் துளைத்து எடுத்தனர். கேவலமான இந்த சோதனைகளில் பெண்களும், குழந்தைகளும்கூட தப்பவில்லை.

அத்துடன் சிங்கள ராணுவத்துக்குத் துணையாக வந்திருந்தது, புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் அமைப்பு. புலிகள் அமைப்பினரை மட்டும் அல்லாமல், அவர்களின் ஆதரவாளர்களையும் அந்த அமைப்பு காட்டிக் கொடுத்தது. புலிகள் அமைப்பில் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்கள், குறுகிய காலம் மட்டுமே இருந்தவர்கள், ஒரு சில உதவிகளை மட்டும் செய்தவர்களைக்கூட கருணா அமைப்பு காட்டிக்கொடுத்தது. அப்படிப் பிடிபட்டவர்கள் விசாரணைக்காக தனியாக அழைத்துச் செல்லப்பட்டு... பலர் கொல்லப்பட்டனர். கூடுதல் விசாரணை என்ற பெயரில் போனவர்களும், திரும்பி வரவே இல்லை.

இந்த சோதனைகளுக்குப் பிறகு, துயரப்பட்டு நகர்ந்த மக்கள் கூட்டத்தை ஓமந்தை என்ற இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அடுத்த கட்ட நரகப் பரிசோதனை... வந்தவர்களின் ஆடைகளை எல்லாம் ராணுவம் அவிழ்க்கச் சொல்லியது. பெண்கள், சிறுமிகளின் உடைகளையும் கட்டாயப்படுத்தி அவிழ்த்து சோதனை இட்டனர். தலை குனிந்து கூனிக் குறுகிய அந்த ஈழப் பெண்களைப் பார்த்து கொக்கரித்தனர் சிங்கள வீரர்கள். கூடவே அவர்களின் பரிகாசமும், அட்டகாசச் சிரிப்பும் அந்த இடத்தையே நிறைக்க... கதறித் துடித்தனர் ஆதரவற்ற பெண்கள்!

மருத்துவமனைகள் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்ததும், சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள். ராணுவ வீரர்களும், சி.ஐ.டி. பிரிவும் மாறி மாறி அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுக்க, அப்பாவி மக்கள் நொந்து போய்விட்டனர். பயங்கரவாதப் புலனாய்வு அமைப்பினர் (டி.ஐ.டி) தனியாக விசாரணை நடத்தினர். இந்த வேதனையை சகிக்க முடியாத நோயாளிகள் பலர், 'சிகிச்சை இல்லாமல் உயிர் போனாலும் பரவாயில்லை’ என்ற முடிவெடுத்து மருத்துவமனையைவிட்டு வெளியேறினர்.

மரண தண்டனை!

ராணுவத்தால் பிடிக்கப்பட்ட புலிகள் பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் இருக்கின்றன. பிரிட்டனின் சேனல்-4, சில வீடியோ காட்சிகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அப்பாவிகள் தரையில் உட்காரவைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் கட்டப்பட்டு உள்ளன. ஒட்டுத் துணியும் அவர்களிடம் இல்லை. அவர்களின் முகத்தை தரையை நோக்கி குனியும்படி சிங்கள ராணுவத்தினரிடம் இருந்து கட்டளை வருகிறது. அதைத் தொடர்ந்து, பின்னால் இருந்தபடி சிங்கள வீரர்கள் சரமாரியாக சுடுகிறார்கள். துடிதுடிக்கும் உடல்கள் ஓய்ந்து அடங்குகின்றன. அதே இடத்தில், ஏற்கெனவே கொல்லப்பட்டுக்கிடக்கும் நிறைய உடல்களும் காட்சிகளில் தெரிகின்றன.

அதே சேனலில் மீண்டும் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. அதில், தலையில் சுடப்பட்டு சிதறிக்கிடக்கும் ஆண்கள், பெண்களின் நிர்வாண உடல்கள் சிதறிக்கிடந்தன. அதில் ஒரு சிறுவனும், இளம் பெண்ணும் அலங்கோலமாகக்கிடக்க... அந்தப் பெண், புலிகளின் மீடியா அமைப்பில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இசைப்பிரியா!

கொல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்ரவதைக்கு உட்பட்டு இருக்கிறார்கள் என்பதை அந்த உடல்களே சாட்சியம் அளிக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மை பற்றி முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அவை உண்மையானவை என்பது தெளிவானது.

அத்துமீறல்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. சிங்கள ராணுவ வீரர்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்த அபலைப் பெண்களின் நிலைமையோ துன்பக் கேணிதான்!

(துயரங்கள் தொடரும்)

தமிழில் : ஆண்டனிராஜ் நன்றி : ஜூனியர் விகடன்

முந்தைய பகுதிகளைப் படிக்க, http://www.facebook.com/SLWarCrimes?sk=notes

றுதிக் கட்டப் போரில், திசை தெரியாமல் தவித்த அபலைப் பெண்களை எள்ளி நகையாடிய சிங்கள வீரர்கள், அவர்களை இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தனர். 'தம் சமூகத்துக்கு உரிய பண்பாடு மற்றும் அச்சம் காரணமாக, இந்தக் கொடூரங்கள் தங்கள் குடும்பத்தினருக்குக்கூட தெரிந்துவிடக் கூடாது!’ என்று மனதுக்குள் புழுங்கித் தவித்தனர் பெண்கள்.

சிங்கள ராணுவத்தினருக்கு இது சாதகமாகிவிட... பெற்றோரைப் பிரிந்து தனியாக முகாம்களில் சிக்கிய சிறுமிகளை, கைம்பெண்களை, அநாதைப் பெண்களைக் குறிவைத்து, நாக்கில் எச்சில் வழியத் தேடி அலைந்தனர். எதிர்ப்பு தெரிவித்த பெண்களை, 'புலிகளின் ஆதரவாளர்’ என முத்திரை குத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அடித்துத் துவைத்தனர். அப்படி கொண்டுசெல்லப்பட்ட பல பெண்களும், சிறுமிகளும் திரும்பி வரவே இல்லை.

முகாம்களில், உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தது. அதைப் போக்க, அரசு நிர்வாகம் கொஞ்சம்கூட அக்கறை காட்டவில்லை. 'ஒட்டிய வயிற்றுடன் பசி தாங்காமல் கதறிய குழந்தைகளுக்கு ஏதாவது உணவுப் பொருள் கிடைத்துவிடாதா?’ என்று ராணுவத்தினரிடம் தாய்மார்கள் கையேந்தும் நிலைமை தொடர்ந்தது. மனம் பொறுக்காமல், உணவுக்காக பால் பவுடர் கேட்டுக் கதறும் பெண்களிடம், சிங்களச் சிப்பாய்கள் மானத்தை விலை பேசினர்.

அதே சமயம், 'இந்தக் கொடூரங்களால் அச்சப்பட்ட மக்கள், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்து வெளியேறினால், எல்லாம் வெளி உலகத்துக்கு தெரிந்துவிடுமே?’ என்கிற கவலையும் ராணுவத்துக்கு இருந்தது. அதனால், மக்களை வெளியேறவிடாமல் தடுத்தனர். அந்த இடங்களைச் சுற்றிலும் முள் வேலிகள் அமைக்கப்பட்டன.

காடுகளின் நடுவில் தார்ப்பாய் மூலமாக அமைக்கப்பட்ட குடில்கள்... சுட்டெரிக்கும் வெயில்... தகிக்கும் அனல்... தாகம்... கொடும் பசி என இந்தச் சூழலில் குடிலுக்குள் முடங்கிக்கிடந்தவர்கள் பலர், தொற்று நோய்களால் மாண்டனர். உடல் உபாதையைத் தணிக்க வெளியே செல்லும்போதும், குளிக்கும்போதும், உடைகளை மாற்றும்போதும், பக்கத்திலேயே பல்லை இளித்தபடி வஞ்சகத்தோடு நின்றது சிங்களப் படை.

தட்டிக் கேட்க யாரும் இல்லை என்கிற தைரியத்தில் ஈழப் பெண்களைச் சிதைத்தனர். முகாம்களில் ராணுவத்துக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் முகம் அறியா நபர்களோ, ஏஜென்ட்டுகள்போல செயல்பட்டதால், அவர்கள் சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்துவிட்டு, அதற்குப் பிரதிபலனாக பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற வன்கொடுமைகள் பெண்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்த, 'இந்த வேதனைகளை சகிப்பதற்குப் பதிலாக, ராணுவம் வீசிய கொத்துக் குண்டுகளுக்கும், பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் இரையாகி மடிந்து இருக்கலாமே’ என்ற ஆற்றாமையில் தவித்தனர். மன அழுத்தத்துக்கு உள்ளான பெண்கள், சிறுமிகள் பலர் தற்கொலை மூலம் தங்களின் இறுதி முடிவை வலிந்து தேடிக்கொண்டனர். அவர்களின் உடல்களை காடுகளுக்குள் வீசி எறிந்தது ராணுவம்.

முள் வேலிகளைக் கடந்து தப்பிச் செல்ல முயன்றதில் பிடிபட்டவர்கள், தீவிர விசாரணை என்ற பெயரில் வதை முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்தினரும், தொண்டு நிறுவனத்தினரும் கடுமையான நிபந்தனைகளுக்குப் பின்னரே, வதை முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மக்களிடம் பேசுவதற்கும், அனுபவங்கள்பற்றி விசாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இவற்றை ராணுவத்தினர் தீவிரமாகக் கண்காணித்தனர்.

இதை எல்லாம் மீறி முகாம்களின் கொடுமையான நிகழ்வுகள் ஊடகங்களில் வெளிவந்தன. குறிப்பாக, சர்வதேச ஊடகங்கள் இந்த விவகாரங்களில் அதிக அக்கறை எடுத்துச் செயல்பட்டன. இது ராணுவத்துக்கு எட்டிக்காயாக இருந்தது. ஆகவே, அவர்கள் தங்கள் ஆத்திரத்தை மக்களிடமே சுமத்தினர். தமிழர்கள் யாராவது, தொண்டு அமைப்பினருடன் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்தால், 'புலிகளுக்கு உதவியவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, உடனடியாக அவர்களை வதை முகாமுக்கு அனுப்பினர். இதனால், முகாம்களில் இருந்தவர்கள்கூட, ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு அஞ்சி நடுங்கினர்.

அத்துடன், முகாம்களில் லஞ்ச ஊழல் தலை விரித்து ஆடியது. ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் சொற்பப் பணத்தையும் ராணுவத்தினரிடம் கொடுத்துவிட்டு சலுகைகளை எதிர்நோக்கினர். முள் வேலியைச் சுற்றி இரவும் பகலும் ராணுவத்தினர் காவல் காத்து நின்றபோதிலும், லஞ்சம் கொடுத்துவிட்டு சிலர் முகாம்களில் இருந்து தப்பித்தனர்.

செய்திகள் கசிவதற்கான அனைத்து வழிகளையும் ராணுவம் அடைத்த பிறகும்கூட, வெளி உலகுக்குத் தகவல்கள் போய்க்கொண்டே இருந்தன. இதற்கு சர்வதேச உதவி அமைப்புகள் காரணமாக இருப்பதாக நம்பியதால், கோபம் அடைந்த ராணுவம், முகாம்களில் பணியாற்றிய செஞ்சிலுவைச் சங்கத்தினரை வெளியேற்றுவதில் குறியாக இருந்தது. இதைத் தவிர, தவறுகளைச் சரிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையைப் புனரமைப்பு செய்யும் பணிக்காகப் பல்வேறு நாடுகள் நிதி உதவி செய்தன. 'இலங்கை அரசு, முகாம்களின் நிலைமையை மாற்றாவிட்டால், நிதி உதவியை நிறுத்துவோம்’ என அவை எச்சரித்தன. அதன் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கையாக முள் வேலி முகாம்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது, ராணுவம்.

அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து கொன்று ஒழித்தது, மருத்துவமனைகள் மற்றும் உதவி மையங்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது, போரின்போது பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் கிடைக்கவிடாமல் தடுத்தது என மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதன் மூலம், இலங்கை ராணுவம் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்டு இருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை ராணுவம் காற்றில் பறக்கவிட்டது எப்படி?

- துயரங்கள் தொடரும்.

தமிழில் : ஆண்டனிராஜ், நன்றி : ஜூனியர் விகடன்

-----------

ஈழம்.. கொடூரமும் கொலையும்! தொடர் 7

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை!

இவற்றை மிகவும் கவனமாக நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) ஆய்வு செய்தோம். குறிப்பாக, 'சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பாக நடந்த சம்பவங்கள் எவை?’ என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்தோம்.

சிங்கள ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே அப்பாவி மக்கள் சிக்கிக்கொண்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான், சர்வதேச சட்டங்களையும் அளவுகோலாக வைத்து இந்த ஆய்வை நடத்தினோம்.

சர்வதேச சட்டங்கள் சொல்வது என்ன?

போரில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நிராயுதபாணியாக இருக்கும்போது, எதிர்த் தரப்பினர் எந்த விதத் தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது. ஒருவேளை, காயம் காரணமாகவோ அல்லது நோய் பாதிப்பாலோகூட ஆயுதத்தைக் கைவிட்டாலும்கூட, அவர்களிடம் மனிதாபிமானம் காட்டப்பட வேண்டும். தாக்குதல் நடத்துவதோ... சித்ரவதை செய் வதோ, பிணைக் கைதிகள் ஆக்குவதோ கூடாது. இதைத்தான் சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது.

இலங்கையில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா? நிச்சயமாக இல்லை!

சட்டங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, மனிதாபிமானம் இல்லாத செயல்கள் நிறைய நடந்தன. சிங்கள ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்துக்கும் இலங்கை அரசே பொறுப்பு. புலிகளைப் பொறுத்த வரை, மனித உரிமை தொடர்பான எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போட்டது இல்லை. இருந்தாலும், அவர்கள் தரப்பில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்து இருந்தால், அதற்கும் அவர்களே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இலங்கை அரசின் சட்ட மீறல்கள்!

சர்வதேச சட்ட திட்டங்களை மதித்து சிங்கள ராணுவம் போர் நடத்தவே இல்லை. குண்டு வீச்சு, ராக்கெட் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், சித்ரவதை எனப் பல வழி களில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாது காப்பான பகுதிகளிலும்கூட தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றை அரசு மறுத்தபோதிலும், ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததைத் திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே கருத வேண்டும்.

போரில் சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டவர்கள், காயம் அடைந்து சரண் அடைந்தவர்கள் உள்ளிட்டோரி டம், ராணுவம் மிகக் கொடூரமாக நடந்தது. அவர்களிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் நிர்வாண நிலை யில், கண்களையும் கைகளையும் கட்டிக் கோரமாகக் கொலை செய்தனர். இதற்கு வீடியோ காட்சிகள் பலமான சாட்சி.

சர்வதேச சட்டத்தின்படி, 'தாக்குதல் நடத்துபவர் மீது மட்டுமே எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருப்பவர்கள் போராளியா... பொதுஜனமா என்ற சந்தேகம் வந்துவிட்டால், அவர்களை பொதுஜனமாகவே கருத வேண்டும்.’ இந்த விதிமுறையும் சிங்கள ராணுவம் பொருட்படுத்தவில்லை.

இறுதிக் கட்டப் போரில், வன்னிப் பகுதியில் அப்பாவி மக்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்பது அரசின் வாதம். ஆனால், உண்மை என்ன? அந்தப் பகுதியில் சிங்கள ராணுவம் வான் வழியாகவும், பீரங்கி மூலமாகவும் நடத்திய தாக்குதல்களில், ஆயிரக்கணக் கான மக்கள் குற்றுயிரும் குலையுயிரும் ஆனார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

'புலிகள் மீது மட்டுமே தாக்குதல் நடந்து வந்ததாகவும், பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப் படவில்லை’ என்றும் ராணுவம் சொன்னதில் துளியும் உண்மை இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வன்னியில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளித்த எச்சரிக்கைகள், கடைசி வரையிலும் மதிக்கப்படவில்லை.

ஒரு தாக்குதல் நடக்கும்போது, மனிதர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு சிறிய பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் எழுந்தாலே, அத்தகைய தாக்குதலை நடத்தக் கூடாது. இலங்கைப் போரின்போது இந்த சட்டமும் காக்கப்படவில்லை. உணவுக்காக மக்கள் கூட்டம் காத்திருந்த இடத்திலும், போக்கிடம் இல்லாமல் தவித்த நோயாளிகள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகள் மீதும் ஏவுகணைகள் குறிவைத்தன. விமானங்களில் இருந்து பெய்த குண்டு மழை, பீரங்கித் தாக்குதல் போன்றவை மனிதக் குடியிருப்புகளை இலக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தால், உயிருக்குப் பயந்து பதுங்கி இருப்பார்கள். பெரும் அளவிலான உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதை ஏன் சிங்கள ராணுவம் செய்யவில்லை?

துயரங்கள் தொடரும்

நன்றி
ஜூனியர் விகடன்

http://www.facebook.com/SLWarCrimes?sk=notes

Comments