மே18, 2009 ல்…. ஈழத்தமிழினத்தைத்……. துடைத்தழித்தது ஸ்ரீலங்கா; துணை நின்றது இந்தியா ; தூங்கிக் கிடந்தது சர்வதேசம்!
என்னையும்… எனது ‘உணர்வுகளை’யும் தெரிந்த நண்பர் ஒருவர் என்னிடம்,
“ சார் இப்பொது உங்களுக்குத் திருப்தி தானே…….? கொடுங்கோலன் ராஜபக்ஷ செய்த இனக் கொலைகளைச் சர்வதே நிபுணர்கள் கண்டித்திருக்கிறார்கள் அல்லவா ?” என்றார் அப்பாவித் தனமாக……!?
நண்பரது வார்ததைகளில் இருந்த அவரது நிம்மதியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும்….. அவருக்கு நான் சொன்ன பதில்…
‘ உங்கள் இன உணர்வினை நான் மதிக்கிறேன்…..ஆனால், இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையினைக் கண்டு என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை…. காரணம்….பசித்திருப்பவனுக்குப் படி அரிசி வழங்குவதையும்; பலியாகிப் போனவனுக்கு வாய்க்கரிசி போடுவதையும்…. பொத்தாம் பொதுவாக அரிசி வழங்கினார்கள் எனக் கூறித் திருப்தி அடைவதைப் போன்றதே இதுவும்’ என்பதாகும்.
எனது இந்தப் பதில் அவரை அசர வைத்து விட்டது என்றே சொல்லவேண்டும்! அவரை மட்டும் அல்ல இன்று அந்த நிபுணர்கள் குழு அளித்திருக்கும் அறிக்கையைப் படித்த இன உணர்வும், மனிதாபிமானமும் உள்ள எந்தத் தமிழருக்கும் ஏற்படும் எண்ணமே இது என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை!
ஆம், ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்ட ஓர் செயல் குறித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடும் ‘சப்பைக் கட்டுகள்’ தாம் இவை!.
கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கொலையுண்டவனின் உடலைப் பரிசோதனை செய்வது போன்றதே இந்த அறிக்கைகைகளும், ஆய்வுகளும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
இதில் உடன்பாடு கொண்ட பலர் இருப்பார்கள் என்பதும் எனது நம்பிக்கை.
அது மட்டும் அல்ல, அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் ‘மனித உரிமை மீறல்கள்’ என்னும் சொல்; மனிதர்கள் அவ்வுரிமையை மீறினால் அதனைக் கண்டிக்கும் விதமாக உபயோகிக்கப்படும் வார்த்தை. ஆனால் ’முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது மனிதர்கள் செய்யக்கூடிய கொடூரங்கள் அல்ல அவை ‘காட்டுமிராண்டித்தனமானவை’ என்று குறிப்பிட்டிருந்தால் அதனைக் கண்டு ஓரளவுக்கேனும் திருப்பி அடைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்!
ஸ்ரீ லங்கா எவ்வளவு தூரம், அதன் சிறுபானமைச் சமூகமான தமிழர்களைப் பாதுகாப்பதில் அக்கறையுடன் செயல்படுகிறது என்பதை இந்தியா உட்படச் சர்வ தேசங்களும் உணர்ந்துதானிருந்தன. இதனை அவற்றுக்கு உணர்த்திய சம்பவம் ஏற்கனவே 1983 ஜூலையில் நிகழந்தேறியிருக்கிறது.
கறுப்பு ஜூலை எனப் பெயர் பெற்றிருந்த(!) அன்றைய இனக் கலவரங்களின் பின்னரே; இலங்கைத் தமிழர்கள் முதலில் இந்தியாவுக்கும்,தொடர்ந்து பல மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாய் இடம் பெயர்ந்தார்கள். இவ் அகதிகளைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவும் செய்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே அங்கு ஆயுதப் போராட்டம் முழு அளவில் தன்னை வடிவமைத்துக் கொண்டது. முதலில் ஒன்றாகவும்,பின்னர் பலவாகவும் பிரிந்து நின்றாலும் ஈழத் தமிழ்க் குழுக்களின் குறிக்கோள் ; ஈழம் வாழ் தமிழருக்கெனத் தனியான-தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலிமை படைத்த பிரதேசம் ஒன்றினை உருவாக்குவது என்பதாகத் தான் இருந்தது. இதற்கு அன்றைய இந்திய அரசு துணைசெய்யவும் தவறவில்லை.
1986 ஆம் வருட முற்பகுதியில், வட மாநிலத் தமிழர்களைக் காப்பாற்றவென இந்திய விமானப் படை உணவுப் பொட்டலங்களை வீசியதில் இருந்தே—அந் நாட்டின் தமிழர்களைச் சிங்கள அரசுகள் எத்தனை தூரம் மனிதாபிமானமற்று நடாத்துகின்றன என்பதைச் சர்வதேசம் புரிந்திருக்க வேண்டும். அங்கு நடந்து கொண்டிருப்பது ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதம் அல்ல; அது ஓர் இன உணர்வுப் போராட்டம் என்பதை அன்றே உலக அரசுகள் உணர்ந்து அதற்கான தீர்வினை எட்டியிருக்க வேண்டும்.
அதுதான் போகட்டும், 1986ல் ஆரம்பித்த திம்புப் பேச்சுகளும்; பின்னர் 1987 ல் ஏற்பட்ட “ராஜீவ்-ஜெயவர்த்தனா” ஒப்பந்தமும் இலங்கைத் தீவில் நடைபெற்றுவரும் தமிழ்த் தேசிய இனத்தின் கிளர்ச்சிகள் யாவும் வெறும் பயங்கரவாதம் அல்ல அது ஓர் இனத்தின் உரிமைப் போராட்டமே என்பதை ஒப்புக்கொண்ட சம்பவங்கள் அல்லவா?
இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில் –ஈழத்தின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகளின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நேரத்தில், நோர்வேயின் தூண்டுதலால் நடை பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளும்……. அவற்றின் சறுக்கல்களும், நிமிர்வுகளும்…… அதன் தொடர்ச்சியாய் 2002 ல் உருவான ‘விடுதலைப் புலிகள்- ஸ்ரீ லங்கா அரசு’ இவற்றுக்கு இடையே உருவான சமாதான உடன்படிக்கை என்பன வெல்லாம்; அந்த நாட்டில் தமிழினம் தனது பிரதேச-நிர்வாக உரிமைகளுக்காகவே போராடி வருகின்றது என்பதைச் சம்பந்தப்பட்ட இந்தச் சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தியே இருக்கும்!
இவ்வாறு உலக நாடுகளுக்குத் தெரிந்தே அங்கு தொடர்ந்து கொண்டிருந்த ஓர் விடுதலைப் போராட்டம் ‘பயங்கரவாதிகளின் போராட்டமாக’ச் சித்தரிக்கப்பட்டு ; காலங்காலமாகத் தமிழினத்தை அந் நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதில் நாட்டங்கொண்ட ஸ்ரீ லங்கா அரசுக்கு ஆயுத தளபாட உதவிகளும், நிபுணத்துவ ஆலோசனைகளும் வழங்கப் பட்டு இனப் படுகொலைகள் வாயிலாக முடித்து வைக்கப்பட்டதற்கு இந்தியா உட்பட இந்த நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கின்றன!
விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதி’களாக இருப்பினும், அங்கு இறுதி போரின் போது அகப்பட்டிருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களும் பயங்கர வாதிகள் தாமா? இவர்களையேனும் காப்பாற்ற இந்தச் சர்வதேச நாடுகளும், இந்தியாவும் எந்தவொரு முயற்சியில்தானும் இறங்காது இருந்து விட்டு……… இப்போது மட்டும் நிபுணர்கள் குழுவை அனுப்புவதும், பாழாகிக் கிடக்கும் தமிழர் பிரதேசத்தைச் சீரமைக்கப் பொருள் வழங்குவதும் வேடிக்கையாக இருக்கிறது.
உண்மையில் சர்வதேசமும் ; இந்தியாவும் ஈழத்தமிழர்களுக்கு உதவி புரிய விரும்பினால்….
அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் தாயகம் என்னும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களின் நிர்வாகத்தினை , அப்பிரதேசங்களின் சொந்தக்காரர்களான தமிழர்களிடமே வழங்கும் படி, ஸ்ரீலங்காவுக்கு ஆலோசனை அளிக்கவேண்டும்.
அதனை அந் நாடு மறுக்குமாயின்; அக்கோரிக்கை நிறைவேறும் வரை அந் நாட்டுக்கு அளிக்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்திவைப்பதன் மூலம் ; இந்த நியாயமான தீர்வினை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க வேண்டும்.
ஒரு வேளை; ராஜபக்ஷேயும்,கோதபாயாவும் சர்வதேசச் சிறைகளில் வாடுவதாக இருந்தால்… எஞ்சியிருக்கும் தமிழர்கள் அதற்காக மகிழ்ச்சியடையலாம், ஆனால் அதன் மூலம் அந் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டிவிடாது.
எனவே, தமிழினப் படுகொலைகளின் இரண்டாவது ஆண்டின் நிறைவின் போதாவது, சர்வதேசமும், இந்தியாவும் தாம் செய்யத் தவறிய ‘மனிதாபிமான உதவி’யினுக்குக் கைமாறாகவேனும்… ஈழத்தமிழர்களது நெடுங்காலத் தாகத்தினைத் தீர்த்துவைக்கும் வகையில் ‘முதல் அடியினை’ எடுத்துவைக்கும் என எதிர்பார்கிறோம்.
"சர்வசித்தன்"
[www.sarvachitthan.wordpress.com
Comments