மே மாதம் 18ம் திகதி மாலை 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேணில் நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது அகவணக்கத்தை செலுத்தினர்.
விக்ரோறியாவின் தமிழர் அமைப்புக்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கிறீன் கட்சியின் மத்திய மெல்பேண் நாடாளுமன்ற உறுப்பினர் அடம் பான்ற், கிறீன் கட்சியின் மெல்பேண் மாநில செனட்டர் கலாநிதி ரிச்சர்ட் டி நட்டால், விக்ரோறிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லூக் டொனலன்ட், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஜனனி, வண.பிதா டீக்கன், லிபரல் கட்சியின் உறுப்பினரும், இந்திய தமிழ் சங்கத் தலைவருமான ஆஸ்டன் அசோக்குமார் மற்றும் ஏனைய அவுஸ்திரேலிய சமூக செயற்பாட்டாளர்கள் வன் ரட், சூ போல்ற்றன் ஆகியோரும் உரையாற்றினர். ‘
'முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்’ என்ற பாட்டிற்கு இளைஞர் ஸ்ரீராம் சிறப்பாக பரதநாட்டியம் ஆடினார். அவருடைய தங்கை கீதா “பூமிப் பாட்டு”என்ற மைக்கல் ஜக்சனின் ஆங்கில பாட்டை உருக்கமாக பாடி, பலரதும் கவனத்கை ஈர்த்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஐ.நாவுக்கான கையெழுத்து பெறும் நடவடிக்கைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
அத்துடன் இந்த மனிதப் படுகொலைகளைப் பற்றியும், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வற்புறுத்தும் பதாதைகளும், படங்களும், உருவச்சிலைகளும் அங்கு பல்லின மக்களின் கவனத்தினை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததோடு, பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் அந்த வழியால் சென்ற பல்லின மக்களுக்கு தொண்டர்களினால் வழங்கப்பட்டது.
இதேவேளை மாலை ஆறு மணிக்கு சிட்னியின் மாட்டீன் பிளேசில் ஆரம்பமான நினைவேந்தல் நாள் நிகழ்வில் 600 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் விதையான உறவுகளுக்கு தமது அகவணக்கத்தை செலுத்தினர்.
முன்னாள் நியுசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஜட்ஜ் (Virginia Judge) கிறீன் கட்சியைச் சேர்ந்த பெடரல் செனட்டர் லீ றேனான் (Lee Rhiannon) நியு சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் சூபிறிஜ் (David Shoebridge) நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த சேரன் ஆகியோர் உரையாற்றினர்.
இதேவேளை மதியம் முதல் மாலை ஆறு மணி வரை தமிழ் இளையோர் அமைப்பினர் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை, இந் நிகழ்விற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு ஊர்தியில் சென்றும் விநியோகித்தனர். 3000 இற்கும் மேற்பட்ட ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இத்துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டோர் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசை உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரியதுடன் அண்மையில் சிறிலங்கா கடற்படைத்தளபதி ஒருவரை தூதுவராக ஏற்றுக்கொண்டமைக்கும் தமது அதிருப்தியையும் தெரிவித்தனர்.
மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப்போயுள்ள தாயக மக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் பெருமளவில் திரண்டு வந்து, முள்ளிவாய்க்காலில் வித்தாகிப்போன எம்மக்களையும் எமது போராளிகளின் கனவை நனவாக்க அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
ஜ.நாவில் தமிழருக்கென்று ஒரு கொடி பறக்கவேண்டும் -சிட்னியில் சி. சேரன்
புதன், 18 மே, 2011 அனைவருக்கும் வணக்கம் உண்மையான இந்த மே 18வது நாளில் இந்த இடத்தில் உங்களுக்கு முன்னால் நிண்டு கதைப்பது ஒரு மிகபெரிய கஸ்டமான நிலைமையாக இருக்கிறது. ஏன்னென்றால் இதில் நிற்கும் பொழுது 2009ல் என்ன நடந்தது என்று தொடர்ச்சியாகவே மனதில் ஒடிகொண்டு இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் மக்களை நாம் இழந்தோம் இன்றைக்கு இந்த மாதிரியான நிலமையில் நாங்கள் இருக்கும் பொழுது இனியும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இன்றைக்கு இதே நாட்டில் பிறந்த எமது இளையோர் அமைப்பு கிட்டதட்ட 20 பேர் இந்த குளிரான நிலத்தில் படுத்து ஒரு 2000 துண்டுப் பிரசுரங்களை இணைந்து அவுஸ்ரேலியா மக்கள் கொடுத்தார்கள். அனைத்து அவுஸ்ரேலியா மக்களும் எங்களுடன் வந்து கதைத்தது மிகபெரிய அழுத்தம் ஒன்றை கொடுத்ததை இவ்வளவு நாளும் இந்த விசியம் தெரியவில்லை. இப்ப தெரிய வந்திருக்கிறது என்று சொல்லி எங்களுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுத்தார்கள். இதில் இருந்து என்ன தெரியுதென்றால் எங்கட வருங்காலத்தக்கு ஏற்ப எமது மக்களுக்குரிய செயற்பாடுகளில் இறங்கினால் தான் எங்களுக்கு என்று ஒரு விடிவு காலம் வரும். நாங்கள் சும்மா இருந்தால் அது நடக்கப் போவதில்லை.
இந்த நேரத்தில் தேசியத் தலைவர் அவர்கள் சொன்ன கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை நாங்கள் போராடுவோம். இன்றைக்கு நான் உங்களை கேட்கிறேன். நாங்கள் செத்தா போயிற்றம். நாங்கள் உயிரோட தானே இருக்கிறோம். இந்த உலகத்திற்கு எமது நாட்டில் என்ன நடந்தது என்று எடுத்து சொல்லி நாங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றோம். எமது விடுதலைக்காக நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம் என்று சொல்லவேண்டும்.
இந்த நாளை துக்க நாள் என்றும், போர்க்குற்ற நாள் என்றும், இன அழிப்புக் குரிய நாள் என்றும் சொல்லியிருக்கினம். என்னை பொறுத்தவரையில் இந்த நாள் நாங்கள் அனைவரும் உறுதி எடுக்க வேண்டிய நாள். இன்னொரு மே 18 நடக்க விடமாட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டிய நாள். 60 வருடமாக எமது நாட்டில் நடக்கின்ற இன அழிப்பை நாங்கள் தடுப்போம் என்று உறுதி எடுக்க வேண்டிய நாள். எமது மக்களுக்கு உண்மையான நிரந்தரமான ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுப்போம் என்று உறுதி எடுக்க வேண்டிய நாள். எமது விடுதலைக்காக என்னென்ன செயற்பாடுகளிள் நாம் இறங்க வேண்டுமோ அனைத்து செயற்பாடுகளிலும் நாம் இறங்குவோம் என்று உறுதி எடுக்க வேண்டிய நாள்.
எமது போராட்டத்திற்காக நாங்கள் எங்கள் நேரத்தை கொடுத்தோம்! அவர்கள் வாழ்க்கையை அர்பணித்தார்கள். நாங்கள் வேர்வை சிந்தினோம்! அவர்கள் இரத்தம் சிந்தினார்கள். நாங்கள் உதவி செய்தோம்! அவர்கள் உயிரையே கொடுத்தார்கள். புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களாகிய எங்களுக்கு இன்னும் செய்வதற்கு எவ்வளவோ இருக்குறது. அனைத்து செயற்பாடுகளிலும் நாங்கள் இறங்கினால் தான் எங்களுக்கு என்று ஒரு விடிவு காலம் வரும். இளையோர் அமைப்போடு இணைந்து தோழ்லோடு தோழாக நின்று அனைவரும் செயற்பாடுகளில் இறங்க வேண்டும்.
நீங்கள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள் இதே வருடம் தென் சூடானுக்கு விடுதலை கிடைச்சிருக்கு. ஐநாவில் விரைவில் தென் சூடானின் கொடி பறக்கத்தான் போகிறது. ஐநா என்ற அமைப்பு துவங்கின நாளில் இருந்து இன்டைக்கு வரை புதிது புதிதாகவே கொடிகள் அங்கு பறக்கின்றன.
இதே போல தமிழர்களுக்கு என்று ஒரு கொடி பறக்கத்தான் போகிறது. கட்டாயம் தமிழீழத்தில் கொடி பறக்கவேண்டும். இது நடக்கும். அங்கு இறந்த அத்தனை மக்களையும் மனதில் நிறுத்தி இன்றைய நாளில் உறுதி எடுப்போம்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்“
Comments