அனைத்துலக மக்களவைகளின் ஆதரவோடு டென்மார்க் தமிழர் பேரவை அமைப்பின் உறுப்பினர்களான திரு. பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன், ஆகியோர் நீதி கேட்டு 1000 கிலோமீற்றர்கள்” என்னும் மிதிவண்டிப் போராட்டத்தை கடந்த மே முதலாம் நாள் டென்மார்க் நாட்டிலிருந்து தொடங்கி, மே 17ம் நாள் நெதர்லாந்து நாட்டிலுள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தைச் சென்றடைந்தனர்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம சட்டவல்லுனர் திரு. José Luis Moreno Ocampo அவர்கள் இருவரையும் இன்முகத்துடன் வரவேற்று, சிறிலங்கா அரசுகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட தமிழினவழிப்புப்பற்றிக் கேட்டுக் கொண்டதுடன் தமிழ்மக்கள் இனிவரும்காலங்களில் முன்னெடுக்க வேண்டிய பணிபற்றியும் ஆலோசனை வழங்கியிருந்ததோடு அனைத்துலக மக்களவைகள் மேற்கொண்டு வருகின்ற கையெழுத்துச் சேகரிப்புப் போராட்டத்தையும் பாராட்டியிருந்தார்.
நேற்று, போர்க்குற்றவியல் நாளான மே 18ம் நாள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் நூற்றுக்கணக்கான ஐரோப்பா வாழ் மக்கள் கலந்துகொண்டு, ஐக்கிய நாடுகள் அவையால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி விசாரணை வேண்டி அமைதிப் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
அவர்களின் உரிமைப்போராட்டத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற விசாரணைக்குழு அதிகாரிகள் அவர்களைச் சந்தித்திருந்ததோடு, தமிழ்மக்களின் நிலைப்பாட்டை தாம் விளங்கிக் கொள்வதாகவும், டென்மார்க் சட்டவாளர் திரு. Bjorn Elmquist அவர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையை தாம் ஓரிரு கிழமைகளுக்குள் கருத்தில் எடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.
அத்துடன் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவ்வாறான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே சிறீலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்கு தகுந்த ஒறுப்பினை வழங்குவதோடு தமிழ்மக்களுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் கூறியிருந்தனர்.
தமது இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு தமிழனும் சிறீலங்கா பேரினவாதிகளால் மேற்கொள்ளபட்ட, மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்ற இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை தமது நாடுகளில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஊடாக அனைத்துலக மக்களவைகளுக்கு seyalakam.makkalavai@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் சிறீலங்கா அரசுக்கெதிரான உடனடிச் சட்டநடவடிக்கை மேற்றகொள்வதற்கேற்றவகையில் அனைத்துத் தமிழ்மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துலக மக்களவைகள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.
Comments