(சிங்களபேரினவாதிகளால் 1981.மேமாதம் 31ம் திகதி எரித்துசாம்பலாக்கப்பட்ட யாழ்நூலகத்தின் நினைவாக...)
![[library.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0UGdPKrjoBcEo45V00t1av-5SRocejMWWfbNpKJzt-ZHXOqbqDY0fs_X1uUlKy_MHAL6DOn5ylnX-iykEzkUk6EHpIKQFm-3O8YwL7Xw1mq13HE91U698779go3DyGdeGbUrmBFH0kSaM/s1600/library.jpg)
யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள்.
அந்த நூலக எரியூட்டலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி "சுஜாதா" 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் "ஒரு இலட்சம் புத்தகங்கள்" என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து "கிருதயுகம்" என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.
இத்தகைய அறிவுலகச் சிறப்புக்கள் வாய்ந்த யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகம் எரியூட்டலின் 20வது ஆண்டு நிறைவின்போது அதன் வரலாற்றுத் தொகுப்பை எழுதிப் பிரசுரித்திருக்கின்றார் திரு. என்.செல்வராஜா.
இந்த நூல் எரியூட்டலின் 20வது வருடப் பூர்த்தியை நினைவு கூரும் வண்ணமாக வெளியிட்டு இருக்கின்றார். இது அவருடைய பிரசுராலயமாகிய அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.
அர்ப்பணிப்பும், வினையாற்றலும் உடைய உண்மையான நூலகர் ஒருவராலேயே இம்மாதிரி வரலாற்றுத் தொகுப்பு நூல் சாத்தியப்படும். மதிப்புக்குரிய என். செல்வராஜா யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த நூலகமாகிய "ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின்" நூலகராகச் சேவை செய்தவர். நூற் பெறுமதி உணர்ந்தவர். நூற்பயன்பாடு அறிந்தவர். அதுமட்டுமன்றி பழம்பெரும் நூலகரும் அறிஞருமாகிய டாக்டர் வே.இ.பாக்கியநாதன் அவர்களின் நூலக நெறிப்படுத்தலின் ஊடாக பயிற்சியும் பக்குவமும் பெற்றவர். அத்தகைய நூலகவியல் அறிஞர் ஒருவர் தொகுத்து அளித்திருக்கும் வரலாற்றுத் தொகுப்பு ஆவணப் புதையலாக இந்த நூல் விளங்குகின்றது.
127 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றியும் அதன் அழிவு பற்றியும் பொதுநூலகத்தின் சேவையின் சிறப்பும் பெருமையும் பற்றியும் கட்டுரைகள் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரைகளை நூலகர் செல்வராஜா பல்வேறு சஞ்சிகைகளில் இருந்தும் பத்திரிகைகளில் இருந்தும் அன்புடனே தேடித் தொகுத்துள்ளார். இத்தொகுப்பில் 45 கட்டுரைகள் காணப்படுகின்றன. அவற்றிலே 14 ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. எச்.ஏ.ஐ.குணத்திலக்கா, நடேசன் சத்தியேந்திரா, பேராசிரியர் நேசையா, வீ.எஸ்.துரைராஜா என்பவர்களின் ஆங்கிலக்கட்டுரைகள் இந்நூலுக்கு அணி செய்கின்றன.
நூலுக்கு ஆசியுரையை மாநகர ஆணையாளர் வே.பொ.பாலசிங்கம் வழங்கியுள்ளார்.
1894-ம் ஆண்டு சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் யாழ். பொதுநூலகம் பற்றிய குறிப்பை முதலிலே வைத்திருக்கின்றார் ஆசிரியர்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகளும், யாழ்ப்பாணத்து அறிஞர்களும் சேர்ந்து இந்த நூலகத்தை அமைக்க முற்பட்டதனை சிலோன் ஒப்சேர்வர் குறிப்பிடுகின்றது. இக்குறிப்பிலே அரசாங்கத்திடமிருந்து மேலும் 50 ரூபா மானியமாகப் பெறப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி காணப்படுகின்றது. 1954-ம் ஆண்டு புதிய நூலகத்திற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்ட செய்தியை தினகரன் வெளியிட்டுள்ளது. இதற்குப்பின்னர் எரியூட்டலும் அதனைப்பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன.
இந்த நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது.அவரவருக்குரிய நூல்களை, நூலக வரையறையை மீறாமல் தேர்ந்தெடுத்து வழங்குவதிலே யாழ். பொதுமக்கள் நூலகத்தினர் காட்டியுள்ள ஈடுபாட்டுணர்வு போற்றுதற்குரியது. இது போன்ற பல செய்திகளையும் தகவல்களையும் அக்கால நூலகச் செயற்பாடுகளையும் எரியுண்ட நூலகத்தின் புனர்நிர்மாணச் செயற்பாடுகளையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் விபரிக்கின்றது இத்தொகுப்பு நூல்.இந்நூலகத்தின் அதிதீவிர வாசகனும் படிப்பாளியுமாகிய எஸ். எம்.கமால்தீன் என்பவர் "நான் கண்ட யாழ்ப்பாணப் பொது நூலகம்" என்ற தலைப்பிலே எழுதியுள்ள கட்டுரையில்..
"எனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமேயன்றி வேறெதுவுமே காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சியே எனக்குள் மேலிட்டது. எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்? கலங்கிய கண்களோடு என் முன்நின்ற யாழ். பொது நூலகர் திருமதி ரூபவதி நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது. நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும் ஏன் உலக நாடுகள் எங்கணுமிருந்தும் ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.
யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலத்தியவனாக நிற்கின்றேன் நான். முன்னர் எத்தனையோ தடவைகள் எனது சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக்களஞ்சியம் சிதைந்து சூனியமாகி விட்டிருந்தது. இதயமே அற்றோர் கடந்த ஜுன் மாதம் முதல்நாள் அதிகாலையில் மூட்டிய தீயினால்" என மிகுந்த கவலயுடன் கொதிப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை 19.7.1981 திகதியிட்ட வீரகேசரி வார வெளியீட்டிலே பிரசுரமாயிற்று.
நீலவண்ணன் எழுதி வரதர் வெளியீடாக 1981 ஜுனில் பிரசுரமான "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது" என்ற சிறுநூல் யாழ் நூலகப்படுகொலை பற்றிக் குறிப்பிடுவதாவது:
"அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்து விட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும் அ.டொன் பொஸ்கோவும் ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது ... கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்."
அனேகமாக 1981 மே மாதம் 31-ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் வெளியான 1981-ம் ஆண்டு நாழிதழ்கள், வார இதழ்கள் யவுமே (உலகம் முழுவதும்) யாழ்ப்பாண பொது நூலகத்தின் "படுகொலை"யைப் பற்றி விலாவாரியாக எழுதியிருந்தன. அவற்றைப் பற்றிய செய்திப்பதிவுகளும் அனுதாப அறிக்கைகளும் நூலகப்புனர்நிர்மாணத்திற்கான நன்கொடைகள், அன்பளிப்புகள் பற்றிய தகவல்களும் 1984-ம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வெளியிடப்பெற்ற புனர்நிர்மாணஞ் செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத் திறப்பு விழா மலரில் பிரசுரமான மிக முக்கியமான ஓரிரு கட்டுரைகளும், பழம்பெரும் நூலகர்கள் பற்பல துறைகளைச் சார்ந்தோர் எழுதிய கட்டுரைகளும் எரிமலை, நம்நாடு, புதமைப்பெண், புதினம் போன்ற பிறநாட்டுத் தமிழ் ஏடுகளில் பிரசுரமான கட்டுரைகளும் தமிழ் நேஷன், தமிழ் நெற், போன்ற இணையத்தளங்களின் செய்தி மற்றும் தகவல்களும் அடங்கிய ஆவணக்கருவூலப் பெட்டகமாக வெளிவந்திருக்கும் இந்த வரலாற்றுத் தொகுப்பு நூல் நூலகர் என். செல்வராஜாவின் பெயரைக் காலமெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டேயிருக்கும்.
ஏனெனில் புலம்பெயர்ந்து மேலைநாடுகளுக்குப் போன ஈழத்தமிழர்களிலேயே பெரும்பான்மையினர் தமிழனுக்கேயுரிய புறத்தையும் அகத்தையும் தொலைத்துவிட்டு சுயமுகம் இழந்து இரவல் முகம் வாங்கிவரும் இன்றைய சூழலிலே என். செல்வராஜா போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மனப்பூர்வமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவையே. மகத்தான வரலாற்றுத் தொகுப்பு நூலுக்கான இந்தத் திறனாய்வுக் கட்டுரையை பேரறிஞர் அண்ணா அமெரிக்க யேல் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மண்டபத்தின் வாயில் முகப்பிலே கண்டு சொன்ன மகுட வாசகத்துடன் நிறைவு செய்கிறேன். "வரலாற்றிடமிருந்து யாரும் பாடம் படிப்பதே இல்லை."
நூலின் பிரதிகள் தபாலில் பெற விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். Mr. N.Selvarajah, 48 Hallwicks Road, Luton , Bedfordshire, LU2 9BH,United Kingdom . (Price including postage Sterling Pounds 10.00 Euro 15.00)
பேராயர் எஸ்.ஜெபநேசன், 1 June 2004 (ஆயர் இல்லம், யாழ்ப்பாணம்)
Destruction of Jaffna Public Library - May/June 1981 Jaffna Public Library - A Konstradt for Many Tamils History of the Jaffna Public Library Rescuing the Library - 20 Years later Remembering 20 Years Later - Sangam Research
--------------------
ஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரிந்து சாம்பரான நூலகம்
![[library.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0UGdPKrjoBcEo45V00t1av-5SRocejMWWfbNpKJzt-ZHXOqbqDY0fs_X1uUlKy_MHAL6DOn5ylnX-iykEzkUk6EHpIKQFm-3O8YwL7Xw1mq13HE91U698779go3DyGdeGbUrmBFH0kSaM/s1600/library.jpg)
1972 ஆம் ஆண்டு இலங்கை சோஷலிச குடிரயசு யாப்பினை ஆட்சேபித்தும் நிராகரித்தும் தந்தை செல்வா நிர்ப்பந்தித்து இருந்த காங்கேசன்துறைக்கான பாராளுமன்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வாவுக்கு எதிராக நிறுத்தப்பட்ட சிறிமாவோ பண்டார நாயக்கவின் முக்கூட்டரசு வேட்பாளர் தோழர் வ. பொன்னம்பலம் 16,000 அதிகப்படி பெரும்பான்மை வாக்குகளால் தாம் தோற்றகடிக்கப்பட்டதுமே மக்கள் தீர்ப்பை மகேஸ்வரன் தீர்ப்பாக ஏற்றுக்கொண்ட தோழர் பொன்னம்பலம் தாம் சார்ந்த இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து தமது சகாக்களுடன் விலகியவராக செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் ஓர் இணைந்த அமைப்பாக அதனையும் இணைத்துக் கொண்டிருந்தார்.
ஆகவே, தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் 1977 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் எதிர்வரவிருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது போர்த்துகேயரிடம் போரில் இழக்கப்பட்ட தமிழீழ அரசினை மீள் வித்துப் புதுப்பிப்பதற்கு தமிழீழ வாக்காளரிடம் ஆணை கோரும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக எதிர்கொள்ள முடிவு செய்தது.
எனவே, அந்த ஒரே கோரிக்கையை மட்டுமே பிரஸ்தாபிப்பதாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் தோழர் வ.பொன்னம்பலமும் உரிய பங்களிப்பை நல்கியிருந்தார்.
சம்பந்தப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வாசகம் உரைத்தவாறு கோரப்பட்ட ஆணையைத் தமிழ் மக்கள் வழங்குமிடத்து தெரிவு செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து ஒரு சுதந்திர, இறைமையுள்ள, சோஷலிச, ஜனநாயக தமிழீழ அரசை நிறுவும் யாப்பை நிறுவி அதனை எய்த முயலும் சமகாலத்தில் இலங்கையின் பாராளுமன்றத்தையும் மேற்படி இலக்கை எய்துவதற்கான ஒரு மேடையாக உபயோகிப்பார்கள் என்றே உறுதியளித்திருந்தது.
1977 ஆம் ஆண்டு ஜூலைப் பொதுத் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் வாக்காளர் பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்படி கோரிக்கைக்கு ஆதரவாகத் தெரிவு செய்ததன் மூலம் தம்மிடம் கோரப்பட்ட ஆணையை அபரிமிதமாகவே வழங்கியிருந்தனர்.
ஆயினும், தமிழ் வாக்காளரிடம் கோரிப்பெறப்பட்டிருந்த மேற்படி ஆணையை உதாசீனம் செய்தவர்களாக தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து சுதந்திர இறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசிற்கான யாப்பைத் தயாரிக்கும் பணியைத் தவிர்த்து விலக்கியவர்களாக இலங்கை பாராளுமன்றத்தை வெறும் மேடையாகவே மட்டும் உபயோகிக்க தலைப்பட்டதுடன் நில்லாது இலங்கைப் பாராளுமன்றத்தில் அதன் யாப்பிற்கு விசுவாசமுள்ள ஓர் எதிர்க் கட்சியாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர்.
மேலும், சுதந்திர முறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசை நிர்மாணிப்பதற்கு தங்களை அர்ப்பணித்திருக்க வேண்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து பிரதமர் ஜே.ஆர். ஜெயவதனவின் சூழ்ச்சிக்கு இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டும் இருந்தனர். இருப்பினும் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் டாக்டர் ச.அ. தருமலிங்கம் தலைமையில் "சுதந்திரன்' ஆசிரியர் கோவை மகேசன், ஈழவேந்தன் போன்றோர் அதனை ஆட்சேபித்து மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கோரி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய தலைப்பட்டனர். மக்கள் ஆதரவும் அவர்களுக்குச் சார்பாகவே மாறத் தலைப்பட்டது.
அத்தகைய எதிர்ப்புகளின் மத்தியில் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி யாழ். நாச்சிமார் கோவில் வீதியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். மாநகர முதல்வர் இராஜா விசுவநாதன் தலைமையில் நடந்து கொண்டிருந்த சமயம், தேர்தலை ஆட்சேபித்து ஆயுதக் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.
அதன் நிமித்தம் கட்டுப்பாடுகளை மீறிய காவல்துறையினர் கட்டுமீறி நிகழ்த்திய அனர்த்தங்களால் நாச்சிமார் கோவில் வீதியில் ஆரம்பித்த தீத்தாண்டவம் யாழ். நகரையே தீக்கிரையாக்கிற்று. யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவிருந்த கடைகள் தீயினால் பொசுக்கப்பட்டன. யாழ். பிரதான வீதியில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பணியகம் எரியுண்டது. பாட்டன் மேதரின் வர்த்தக நிறுவனம் மற்றும் டாக்டர் செபஸ்தியாம் பிள்ளையின் இல்லமும் சேதமுற்றன.
இவை அனைத்திற்கும் மேலாக யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் இல்லம் முழுமையாக எரிந்து சாம்பாராக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனை அவரது மனைவியுடன் அத்தீயில் பொசுக்க மேற்கொள்ளப்பட்ட எத்தனத்தில் இருந்து அற்புதமாக உயிர் பிழைத்த இருவரும் வீட்டின் பின் புற மதிலால் பாய்ந்து ஓடி ஓளிய நேர்ந்தது.
1981 ஆம் ஆண்டு மே 31 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீத் தாண்டவம், மறுநாளான ஜூன் முதல் நாளிலும் தொடர்ந்தது. அன்று நிகழ்த்தப்படவிருந்த பண்பாட்டுப் பேரவை நாடும் உலகமும் அறியவராது தடுக்கும் ஓர் எத்தனமாக முழு யாழ்ப்பாண குடாநாட்டிலும் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஒரே ஒரு நாளேடான ?ஈழ நாடு? பத்திரிகைப் பணிமனை முதலில் தீக்கிரையாக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்த்தப்பட்டிருந்த அடாவடித்தனமான அட்டூழியங்களையடுத்து காவல்துறையினர் ஓர் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்திருந்தது.
ஜூன் 04 ஆம் திகதி நடைபெறவிருந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்லைக் கண்காணிப்பதற்காக தெற்கில் இருந்து தருவிக்கப்பட்டிருந்த விஷேட காவல் துறையினர் யாழ்.பொது நூலகத்துக்குப் பின்னால் இருந்த துரையப்பா விளையாட்டரங்கிலும் அதன் முன்னால் இருந்த யாழ். மத்திய கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். யாழ். பொது நூலகத்தையும் துரையப்பா விளையாட்டரங்கையும் அடுத்ததாக வடக்கிற்கான உதவிப் பொலிஸ்மா அதிபர் பணிமனையும் நகரின் மத்திய பொலிஸ் நிலையமும் அமைந்திருந்தன. நகரிலோ உத்தியோகப்பற்றற்ற ஊரடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலை.
இருந்த போதிலும் பொது மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினரால் திராவிட சிற்பவியல் பாங்கில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததும் தென்னாசியாவிலேயே மிகப் பெரியதும் 98,000 க்கும் அதிகமான புத்தகங்களையும் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளை உடையதுமான யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் மனுக்குலத்துக்கே விரோதமான ஒரு குற்றச் செயலாகவும் பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டுப் பொசுக்கப்பட்டது.
இத்தகைய ஓர் பண்பாட்டுப் படுகொலை இத் தீவின் வரலாற்றில் இது முதல் நிகழ்வும் அல்ல! இறுதி நிகழ்வும் அல்ல!! கோட்டை இராசதானியின் சேனாதிபதி சப்புமல் குமாரயா யாழ்ப்பாணம் இராசதானி மீது படையெடுத்து வந்தபோது நல்லூர் நாயன்மார்க் கட்டில் இருந்த யாழ்ப்பாண இராசதானியின் தேசிய சரஸ்வதி நூலகம் அது உள்ளடக்கியிருந்த அரும் பெரும் சித்த வைத்திய நூல்களுடன் தீயினால் முற்றாகப் பொசுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராசதானியின் வேந்தர்கள் சிறந்த சித்த வைத்திய நிபுணர்களாக விளங்கியதுடன், தாமே பல மருத்துவ நூல்களை எழுதியிருந்ததும் தெரிந்ததே! ? சரஸ்வதி? நூலகம் அவற்றையும் உள்ளடக்கியிருந்தது.
அது வரலாற்றில் முற்பட்ட நிகழ்வாக இருந்தால், யாழ். பொது நூலகம் அழிக்கப்பட்டதன் பின் காஸா நகரில் சுவிடிஸ் மக்களால் அன்பளிப்பாகத் தரப்பட்டிருந்த "குளோப்' நூலகமும் அவ்வாறே அழிக்கப்பட்டிருந்தது. மேலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி நூலகம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் முதல் நாளில் அதன் நூற்று ஐம்பது வருடகால புத்தகச் சேர்வுகளுடன் பாதுகாப்புப் படையினரால் தீயினால் அழிக்கப்பட்டது. சென்னை "இந்து' பத்திரிகையின் சிறப்பு நிருபர் ஜி. பார்த்தசாரதி தமது யாழ்ப்பாணச் சுற்றுப் பயணத்தின் பின் இதனை அதன் செப்டெம்பர் 28 ஆம் திகதிய இதழில் அம்பலப்படுத்தியிருந்தார்.
யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் தீயில் பொசுங்குவதை யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி மேல் மாடியில் இருந்து காண நேர்ந்த யாழ்ப்பாணத்தின் நடமாடும் நூலகமாகப் போற்றப்பட்டு வந்தவரான பன்மொழிப் புலவர் வண. பிதா தாவீதடிகள் பேரதிர்ச்சியடைந்தவராக மூர்ச்சித்து மரணமானார். இந்த ஜூன் முதல் நாள் அடிகளாரின் இருபத்தேழாவது நினைவு தினமாகும்.
யாழ். அரசாங்க முகவராக அப்போது பதவியில் இருந்த யோகேந்திரா துரைச்சாமி தமது உத்தியோகபூர்வ வதிவிடத்தில் வாழாது யாழ். மாணிக்கூட்டுக் கோபுரத்தை அடுத்துள்ள தமது தந்தையின் "மகேந்திரா' இல்லத்திலேயே வசித்து வந்தார். யாழ். பொது நூலகம் எரிந்து கொண்டிருப்பதை யாழ். மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தவர் யாழ். அரசாங்க முகவரே.
தகவல் தெரிந்ததும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த காவல்துறையினரின் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மாநகரசபை ஊழியர் சிலரையும் உதவிக்கு உடன் அழைத்துக் கொண்டு ஸ்தலத்துக்கு விரைந்தவர் அங்கு நகர மண்டபம், சுப்பிரமணிய பூங்கா, நூலகம் மற்றும் திறந்த வெளியரங்கு காவலர்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைப்பதற்குப் பெரிதும் முயன்றார். ஆயினும் காவல் துறையினரோ அதனை அனுமதியாது அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். ஆகவே, வேறுவழியின்றி மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் காரைநகர் கடற்படையினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கோரியிருந்தார். கடற்படையினர் உதவிக்கு விரைந்து வந்திருந்தபோதும் அதற்குள் நூலகம் பெரிதளவு முழுமையாகவே அழிந்துவிட்டது.
ஊர் வாயை உலை மூடியால் மூடும் ஓர் எத்தனம் போன்றே யாழ்ப்பாணத்தில் தாம் நிகழ்ந்தவிருந்த பண்பாட்டுப் படுகொலை குறித்த தகவல் செய்தி ஊடகங்களுக்கு எட்டாதிருக்கச் செய்யும் முற்காப்பு நடவடிக்கையாகவே "ஈழநாடு' பணிமனை முன்கூட்டியே தீக்கி?ரயாக்கப்பட்டிருந்தது.
ஆகவே, யாழ்.பொதுநூலகம் அழிக்கப்பட்டிருந்த காட்சியை நேரில் சென்று கண்டிருந்தோர் புறநீங்கலாக யாழ்.குடாநாட்டினுள் வசித்தவர்களுக்குத்தானும் அச்சம்பவம் செய்தியாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தலைநகர் கொழும்பில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கோ அச்சம்பவம் வெறும் தகவலாகத்தானும் எட்டியிருக்கவில்லை.
எனவே, தலைநகர் கொழும்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளோ இலத்திரனியல் ஊடகங்களோ யாழ். பொதுநூலகத்துக்குச் சம்பவித்திருந்த பேரழிவு குறித்து ஒரு வார்த்தைதானும் பிரஸ்தாபியாதிருந்தமை புரிந்து கொள்ளக்கூடியதே.

சா.ஆ.தருமரத்தினம்
http://yarlphoenix.blogspot.com/
-----------------------------------------------------------------
இன்னும் அணைக்கமுடியாமல் எரியும் நெருப்பு

அன்றைப் பொழுது இப்போது நினைத்தாலும் அந்த நினைவுகளுக்குள் புத்தகங்கள் எரிந்த சாம்பல் மணம்தான் விசிறி அடிக்கின்றது.முழுத்தேசிய இனமும் விக்கித்துநின்ற அந்தநாளில்,எரிந்துமுடிந்து கரும்புகை பரவியபடி கிடந்த யாழ்நூலகத்தின் காட்சி சிங்கள பேரினவாதம் எமது இனத்துக்கு எதிராக இடையறாது நடாத்திவரும் அழிப்புகளுக்கு ஒருபெரும்சாட்சியாகும்.
நூலகம் என்பது வெறுமனே ஒரு கட்டிடம் என்பது அல்ல. ஒரு மக்கள் கூட்டத்தின் பாரம்பரியம், அறிவுதேடல், வாழ்வுமுறை எல்லாம் அந்த நூலகங்களின் கட்டிடங்களுக்குள் உயிரோட்டத்துடன் எப்போதும் அசைந்துகொண்டு இருக்கும்.
ஒரு சமூகத்தை ஒவ்வொரு தளத்தில்இருந்தும் அடுத்த தளத்துக்கு உந்தித்தள்ளும் வலிமைமிக்கவை இந்த வாசிகசாலைகள். மனிதனின் கண்டுபிடிப்புகளில் ‘மொழி’ என்பது எத்தனை அற்புதமானதோ, அதைப் போலவே மனிதன் அமைத்த அல்லது கட்டிய எல்லா கட்டடங்களைவிடவும் நூலகங்களே உயர்வானவை.
எந்தஒரு பிரதியுபகாரமும் கருதாது அறிவையும் ஆற்றளையும் அள்ளி வழங்கும் தாய்அன்புக்கு ஈடானவை நூலகங்கள். வெறுமனே ஒரு மாவட்டஅபிவிருத்திசபை தேர்தலின் வன்முறை என்ற குற்றச் செயலுக்குள் இந்த நூலக எரிப்பை நோக்க முடியாது.
தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரதும் சுயமாக சிந்திக்கும் உரிமைமீதும், அறிவை தேடும் மானுட இயல்புமீதும் எறியப்பட்ட கொள்ளி என்றே நோக்கவேண்டும். ஆற்றல் உள்ள இனமாக மாறுவதற்கான வாய்ப்புகளை இல்லாது செய்துவிட்டால் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற முடிவுகளோடுதான் ஆக்கிரமிப்பாளர்கள் அறிவின் ஊற்றுக்கண்களை அடைப்பார்கள். இந்த முடிவோடுதான் சிங்களமும் தனது அமைச்சர்களையும் படைவெறிநாய்களையும் அனுப்பி மிகநுனுக்கமான திட்டமிடலுடன் ஒரு தேர்தல்பொழுதில் எங்களின் தேசியசொத்தை எரித்தழித்தார்கள்.
அந்தநாளின் மக்கள் உணர்வுகள் இன்னும் அலைகளாக மனமெங்கும் பரவிக் கிடக்கின்றது. காலகாலமாக குடிஇருந்தவீடு எரிந்து தணலாக கிடப்பதுபொல எட்டத்தில் இருந்தே மக்கள்பார்த்துக் கலங்கினர். தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்குப்பட்டு வெளிபடமுடியாமல் ஏதும்கூறத் தோன்றாமல் மௌனமாக ஒரு அறிவுக் கோயிலின் சாம்பல் கலந்துவந்த காற்றை சுவாச்சித்தபடி நின்றனர்.
இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் சேர்ந்து வாழவே இனிமுடியாது என்று தமிழீழ தேசியஇனம் முடிவெடுத்த தருணங்களில் யாழ்நூலகம் எரிக்கப்பட்ட அந்த நாளும் ஒன்று.
இன்று அந்த இடத்தில் புதியநூலகம் அதைவிட அழகாக கட்டப்பட்டு இருக்கலாம். அதைவிட நவீனவசதியுடன் அது இயங்கலாம். ஆனால் அன்று அந்த மே31ம் நாள் 1981ம் ஆண்டில் எங்கள் மூளைக்குள் சொருகப்பட்ட தீக்கொள்ளி இன்னும் சுட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு சிங்கள பேரினவாதிகள் செய்த இந்த காட்டுமிராண்டித்தனம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் எரிப்பின் எச்சங்கள் எதுவும் இல்லாமல் துடைத்தெறிந்துவிட்டு புதிதாக கட்டிஎழுப்பி உள்ளார்கள்.
சுவர்களில் படிந்திருந்த கரியசாம்பலையும், எரியாமல் எஞ்சிக்கிடந்த கூரையையும், தீ தின்று துப்பிய புத்தகபக்கங்களையும், ஓலைச்சுவடிகளையும் அகற்றிவிட்டு புதியதாக கட்டடம் கட்டி அதற்கு வர்ணமும்பூசி எல்லாவற்றையும் மறைக்கலாம். ஆனால் ஒரு இனத்தின் நெஞ்சில் நெருப்பு சுட்ட அந்த வடு மாறாது.
யாழ்நூலக எரிப்பு என்பது ஒரு ஆயுதப்படை வன்முறை என்பதற்கு அப்பால் அதுதான் சிங்களத்தின் மனோபாவத்தின் அடையாளம். ஒரு தேசத்துக்குள்ளேயே அவர்கள் பெரும்பான்மையாகவும் நாங்கள் சிறுபான்மையாகவும் வாழும்வரை அந்த மனோபாவம் மாறவேமாறாது.
இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எங்களின் தேசிய அறிவுச் சொத்தான நூலகத்தை எரித்த பொழுதில் எங்கும் கோபமும் சீற்றமுமே தமிழ் மனமெங்கும் நிறைந் திருந்தது. அதற்கு முன்னரே எழுந்துவிட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீசிஎழச்செய்ததில் நூலகஎரிப்பும் ஒன்றுதான்.
பின்வந்தகாலத்தில் விடுதலைப் போராட்டம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியுடன் சிங்களபடைகளுக்கு சமனான பலத்துடன் எழுந்துநின்றது. விடுதலைப் புலிகளால் சிங்கள தேசத்தின் எந்த மூலையிலும் தாக்குதல் நடாத்தக்கூடிய வலு இருந்தது. ஆனாலும் எந்த ஒரு சிங்கள நூலகத்தின் மீதும் வான்குண்டை வீசியும், உயிரம்பை ஏவியும் தீ மூட்டியும் பழிவாங்காமல் போராடிக்காட்டிய எங்கள் தேசப்புதல்வர்களின் அறம் விண்ணளவு உணர்ந்தது. அந்த அறம்தான் என்றாவது நின்று கொல்லும் சிங்களத்தை.
ச.ச.முத்து
---------------------------------------------------
(சிங்களபேரினவாதிகளால் 1981.மேமாதம் 31ம் திகதி எரித்துசாம்பலாக்கப்பட்ட யாழ்நூலகத்தின் நினைவாக...)
-------------------------------------

Comments