எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமையாளர்களின் கூட்டறிக்கை

எமது ஒன்றிணைந்த போராட்டங்களின் மூலம், எமது ஈழத்துச் சொந்தங்களைப் படுகொலை செய்த கொடுங்கோலர்களான ராஜபக்சே சகோதரர்களை சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த எம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்து முடிப்போம் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத் துறையினர், தொழில் நுட்பவியலாளர்கள், தொழில் முனைவர்கள் ஊடகவியலாளர்கள், கல்வியாளர்களின் மனித உரிமையாளர்கள் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கம், போராளிகள் என இரு தரப்பினரதும் மனித உரிமை மீறல்கள் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இலங்கைப் படையினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள் உள்பட போராளிகளின் தலைமையைச் சேர்ந்தவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முற்றிலுமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கம் பாரிய மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருக்கின்றது என்பதனைத் திட்டவட்டமாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் செறிந்த பாதுகாப்பு வலையங்களின் மீது பாரிய அழிவு ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் பாவித்திருக்கிறது. சர்வதேசிய நியமங்களை மீறி மருத்துவமனைகள் மீது இலங்கைப் படைத்தரப்பினர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரின் தாக்குதலில் 40,000 ஈழ வெகுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்குழவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 70,000 க்கும் மேற்பட்டதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரபூர்வப் பேச்சாளர் கோல்டன் வைஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இச்சூழலில், மனித குலத்திற்கு எதிராகக் குற்றமிழைத்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய அரசு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்திருப்பதாகவும் இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கின்ற போதிலும் இவ்வமைச்சுக்குரிய சகல அதிகாரங்களைக் கொண்டிருக்கின்ற மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் நேரடியாகவே இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதனை நிபுணர் குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் குற்றங்கள் விசாரணை செய்யப்படும் எனில் சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக ராஜபக்ச சகோதரர்கள் நிறுத்தப்படுவார்கள்.

முள்ளிவாய்க்காலில் ஈழ வெகுமக்களைப் படுகொலை செய்து முடித்து இரண்டு வருடங்கள் கழிகின்ற நிலையில், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு தமிழ் மக்களுக்கு கௌரவமான ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு மகிந்த ராஜபக்ச இதுவரை எவ்வித முனைப்புக்களையும் வெளிப்படுத்தவில்லை என்பது இப்படுகொலைகளுக்கு ஒரு உள் நோக்கம் இருக்கின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது.

இந் நிலையில், ராஜபக்ச சகோதரர்களை சர்வதேசியக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். வெகுமக்களைக் கொலை செய்யும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் இதுவொரு பாடமாக அமையும் என நினைக்கிறோம்.

தமது சொந்த மக்களையே கொல்லும் உலகின் சர்வாதிகாரிகளை நோக்கி, தமது தாய் தந்தையரின் நிலம் கொடுங்கோலர்களால் சூறையாடப்பட்டபோது, தமது இரத்த சொந்தங்களான வெகுமக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, உலகின் மகத்தான மக்கள் கவிஞனான பாப்லோ நெருடா கோரியதனையே நாமும் கோருகிறோம் :

மரணமடைந்த எமது தோழமைகளின் சார்பாக

நான் தண்டனை கோருகிறேன்

யார் எமது தந்தையர் நாட்டை

எமது இரத்தத்தில் முக்குளித்துச் சிதற வைத்தார்களோ

அவர்களுக்கு எதிராக

நான் தண்டனை கோருகிறேன்

இந்த உலகின் மீது பாவக்கைகள் செலுத்தி

கொடுமைகள் நிகழக் காரணமாக இருந்தவர்க்கு எதிராக

நான் தண்டனை கோருகிறேன்

இந்தக் கொடுமைகளை விட்டுக்கொடுத்து

இதை மன்னிப்போராய் இருப்போர்க்கு மத்தியிலும்

நான் தண்டனை கோருகிறேன்

சுற்றிலும் நடந்த குரூரங்களை மறந்துவிட்டு

அவர்களோடு கைகுலுக்க நான் விரும்பவில்லை

அவர்களது இரத்தக் கறைபடிந்த கைகளை

நான் தொடவிரும்பவில்லை

மரணமடைந்த எமது தோழமைகளின் சார்பாக

நான் தண்டனை கோருகிறேன்

பாப்லோ நெருடாவின் குரல் இன்று தமிழ் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது. இன்றைய தேவை தமிழக மக்களின் ஒன்றுபட்ட குரல். அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கருத்து மாறுபாடுகளைத் தாண்டிய குரல். அமைப்புக்களுக்கு இடையிலான வித்தியாசங்களைத் தாண்டிய குரல் இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை.

இந்திய அரசியல் குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தமக்குள் எத்தனைக் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், கையறுநிலையில் இருக்கும் எமது இரத்த சொந்தங்களான ஈழத்தமிழ் மக்களின் நலன் கருதி, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி, நாம் ஒன்றினைந்து போராட வேண்டிய நேரம் இது.

எமது ஒன்றுபட்ட குரல் மட்டுமே தமிழக அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். எமது ஒன்றுபட்ட குரல் மட்டுமே இந்திய அரசின் மீதான தமிழக மக்களின் அழுத்தத்தை அதிகரிக்கும். ஓன்றுபட்ட மக்கள்திரளின் குரல் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் மீதான, சர்வதேசிய நாடுகளின் மீதான எமது செல்வாக்கினை நிலைநாட்டும்.

ஓன்றுபட்ட மக்கள்திரள் அரசியலின் சாதனைக்குச் சாட்சியமாக நமக்கு முன் அரபுப் புரட்சி இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் வெகுமக்களும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு எதிரான தமது பிரக்ஞையைக் கொண்டிருக்கிறார்கள் எனவும், அம்மக்களுக்கு ஆதரவான தமது மனசாட்சியின் கடமையை அவாவுகிறார்கள் எனவும் நாம் நம்புகிறோம்.

இதுவே நாம் செயல்படவேண்டிய மிகப்பெரும் தருணம்.

இந்தப் பிரச்சினையில் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதனை உலகெங்கும் வாழும் தமிழ் குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர்களாக நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத்துறை சார்ந்தோர், தொழில்நுட்பவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், மனித உரிமையாளர்கள் எனும் நாங்கள் இந்தக் கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளின் முன்பாகவும், ஜனநாயக அமைப்புக்களின் முன்பாகவும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கிறோம்.

வித்தியாசங்களுக்கு அப்பால், மாறுபாடுகளுக்கு அப்பால், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும், வெகுஜன அமைப்புக்களையும், வெகுமக்களையும் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து செயல்படுமாறு தாழ்மையுடன் நாங்கள் கோருகிறோம்.

எமது ஒன்றிணைந்த போராட்டங்களின் மூலம், எமது ஈழத்துச் சொந்தங்களைப் படுகொலை செய்த கொடுங்கோலர்களான ராஜபக்சே சகோதரர்களை சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த எம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்து முடிப்போம் என நாங்கள் அழைக்கிறோம்.

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு எனும் மணிவாக்கியத்தை நாம் செயல்படுத்த வேண்டிய தருணம் இது. எமது இரத்த சொந்தங்களான ஈழத்தமிழ் மக்களுக்கான எமது வரலாற்றுக் கடமையை ஆற்றுவருமாறு அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.

நன்றியுடன்

ஓருங்கிணைப்புக் குழு

நாஞ்சில் நாடன் (எழுத்தாளர்)

எஸ்.எஸ்.ராஜகோபாலன் (கல்வியியலாளர்)

டிராட்ஸ்க்கி மருது (ஓவியக் கலைஞர்)

கௌதமன் (திரைப்பட இயக்குனர்)

கீற்று நந்தன் (தொழில்நுட்பவியலாளர்)

வெப்துனியா அய்யநாதன் (ஊடகவியலாளர்)

விசுவநாதன் (தொழில் முனைவர்)

கண.குறிஞ்சி (மனித உரிமையாளர்)

Comments