பின்லாடனோடு பிரபாகரனை ஒப்பிடுவதா ? பிளேக்கின் ரெட்டைவேடம் !

யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் குற்றங்களை புரிந்துள்ளனர் என்றும் குற்றம் இழைத்தவர்கள் அதற்கான பரிகாரங்களை தேடிக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான உதவி செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு முன்னர் நேற்று மாலை கொழும்பில் அவர் பத்திரிகையாளர் மகாநாட்டை நடத்தியிருந்தார். அந்த மாநாட்டிலேயே அவர் இக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இருதரப்பினரும் யுதக் குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் தெரிவித்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக அதிர்வின் செய்தியாளர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவரை, சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் பேசவிடாது கேள்விகளைத் தொடுத்தவண்ணம் இருந்ததாகவும் அறியப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழு நல்ல பரிந்துரைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களின் அனைத்து முக்கிய பிரச்சினைகளையும் உள்ளடக்கியதான ஒரு உறுதியான அறிக்கை வெளிவர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை இல்லை என்பதனை அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின் லேடன், பிரபாகரன் ஆகியோர் உலகில் இரக்கமற்ற பயங்கரவாத தலைவர்கள் என அவர் வர்ணிக்கவும் தவறவில்லை. இக் கூற்றுகளே சிங்கள ஊடகவியலாளர்களைச் சாந்தப்படுத்தியதாகவும் அறியப்படுகிறது. ஒசாமா பின் லேடனின் மரணத்தை ஒரு விதமாகவும் பிரபாகரனின் மரணத்தை ஒரு விதமாகவும் அமெரிக்கா கையாள்கிறதா ? என ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது பிரபாகரன் மற்றும் ஒசாமா பின் லேடன் ஆகிய இருவரும் உலகில் மிக மோசமான பயங்கரவாதிகள் என வரலாற்றில இடம்பெறுவார்கள் என குறிப்பிட்டார் ரொபேட் ஓ பிளேக்.

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவின் நேரடி இலக்காக ஒசாமா பின் லேடன் இருந்தார். அவரை பிடிப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம், ஆனால் புலிகளை அழிக்க நாங்கள் அவ்வியக்கத்தைத் தடைசெய்து இலங்கை அரசுக்கு உதவிபுரிந்தோம் எனத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் தற்போதும் அமெரிக்கா தனது ஆதரவை இலங்கைக்கு வழங்கி வருவதாக பிளேக் கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளதாக கொழும்பில் இருந்து சில செய்திகள் கசிந்துள்ளது.

கோத்தபாயவைச் சந்திப்பதற்கு முன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸைச் சந்தித்திருந்த பிளேக், அமெரிக்கா இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் உற்றுநோக்கும் போது, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டவில்லை என்றே தோன்றுகிறது. இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும், அவர்கள் சுயநிர்ணய உரிமையோடும், அலகுகளுடன் கூடிய அதிகாரத்தோடு வாழவேண்டும் என பிளேக் கூறியுள்ளார். அப்படியாயின் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது அவருக்கு நன்கு புரிகிறது. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்துக்காகப் போராடும் ஒரு இயக்கத்தை பயங்கரவாதிகள் என்றும், அதன் தலைவரை இரக்கமற்ற பயங்கரவாதி என்றும் இவர் எவ்வாறு சித்தரிக்கிறார் ?

அமெரிக்கா ரெட்டைவேடம் போடுகிறதா என்ற சந்தேகமே தற்போது தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் ரொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்த அனைத்து தமிழ் செயல்பாட்டாளர்களும் தமது நிலைப்பாட்டை மீளாய்வுசெய்வது நல்லது என்று கருதவே தோன்றுகிறது.

Comments