"என்னைப் பணியிலிருந்து விலக்கவேண்டும் என Ceylon கல்லூரி மருத்துவர்கள் அவுஸ்திரேலியக் கல்லூரி மருத்துவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர். இவ்விடயம் உண்மையில் என்னைப் பெருமையில் ஆழ்த்தியுள்ளது" என பேராசிரியர் Whitehall கூறுகிறார்.'
இவ்வாறு Sydney Morning Herald ஊடகத்தின் இணையத்தளத்தில் Tim Elliott எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழுவிபரமாவது,
'பயங்கரவாதிகளின் செயற்பாட்டாளர், தந்திரமான பரப்புரைக்காரர், மூளைச் சலவை செய்யப்பட்டஒருவர்' எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இவர் அவுஸ்திரேலிய காவற்துறையால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன், கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றால் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக பழிசுமத்தப்பட்டார்.
மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவத்துறை பேராசிரியர் JohnWhitehall க்கு [University of Western Sydney's foundation chair of paediatrics and child health]
விடுதலைப் புலிகள் தொடர்பாக மறைப்பதற்கு எதுவுமில்லை. 'மக்கள் அவர்களை பயங்கரவாதிகள்' என அழைக்கிறார்கள் 'ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு சுதந்திரப் போராளிகள், அத்துடன் அவர்கள் என்னுடைய மாணவர்கள், நான் அவர்களை நேசிக்கிறேன். இவற்றை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்' என பேராசிரியர் Whitehall கூறுகிறார்.
Teaching Tamil Tiger medical students in Sri Lanka in 2005.
அந்த மாணவர்களில் குறைந்தது ஒன்பது பேர் வரையிலானோர், இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கை அரசாங்கத்திடமிருந்து பிரித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இறுதியுத்தத்தின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இந்த யுத்தம் இரு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்தபோதிலும் 68 வயதான பேராசிரியர் கடந்த இரு ஆண்டுகளாக சிறிலங்காவின் தலைமைத்துவம்; தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தூண்டும் விதத்தில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களில் அழுத்தங்கொடுத்து வருகிறார்.
'சிறிலங்கா இராணுவம் பலவற்றுக்குப் பதில் சொல்லவேண்டும்' என அண்மையில் ஐ.நாவால் வெளியீடு செய்யப்பட்ட சிறிலங்கா நிலவரம் தொடர்பான அறிக்கையை மேற்கோள்காட்டி பேராசிரியர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் இந்த அறிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுளள்தாகத் தெரிவிக்கின்றது.
"தாய் தந்தையற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்ட இல்லங்கள், பாடசாலைகள் மீது இலங்கை அரசாங்கம் வான்தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்துடன் இன்றுவரையும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இரகசிய முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தொடர் துன்பியலாக உள்ளதுடன் இதுவரை யாரும் இவ்வாறான குற்றங்களுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை" என Whitehall கூறுகிறார்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்ரிபயோற்றிக், வென்ரிலேற்றர் [antibiotics and ventilators] போன்ற மருந்துகளை வழங்குவதற்காக முதன்முதலில் Whitehall 2005ல் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
ஓராண்டு காலத்தின் பின்னர், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த மருத்துவ பீட மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக மீண்டும் அவர் சிறிலங்காவுக்கு வந்தார்.
"மூன்று வாரங்களின் பின்னர் எனது மாணவர்களில் விடுதலைப் புலிகளின் மருத்துத்துறையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருப்பதை அறிந்துகொண்டேன். இம்மாணவர்களில் பலர் யுத்தத்தில் ஈடுபடும் வீரர்கள். பலரது உடலில் போர் வடுக்கள் காணப்பட்டன. அவை சிலருக்கு மிகப் பாரதூரமானதாகவும் இருந்தன. இதில் மூவர் தமது சொந்தக் கால்களை இழந்து செயற்கைக் கால்களைப் பொருத்தியிருந்தனர்.
எறிகணைத் தாக்குதல்களின் மத்தியில் ஒளிர்விளக்குகளின் (torchlight) உதவியுடன் மட்டும் மிகப் பெரியதும் ஆபத்தானதுமான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதிலிருந்து எல்லாவிதமான களமருத்துவ நுட்பங்களையும் இந்த மருத்துவ மாணவர்கள் நன்கறிந்திருந்தனர். இவர்கள் தமது மருத்துவக்கற்கையைப் பூர்த்தி செய்வதற்கு குழந்தை மருத்துவத்தையும் கற்கவேண்டியிருந்தது" என பேராசிரியர் Whitehall தெரிவிக்கிறார்.
"அதன் பிறகு AFP யைச் சேர்ந்த இருவர் என்னை செவ்வி கண்டபோது, நோயாளிச் சிறார்களைக் குணப்படுத்த எவ்வாறான மருத்துவத்தைச் செய்யவேண்டும் என்பதை மட்டுமே நான் புலிகளுக்குக் கற்பித்தேன் எனக் கூறினேன்" என Whitehall கூறுகிறார்.
விடுதலைப் புலிகளுடன் கழித்த மூன்று மாதகாலப்பகுதியில் Whitehall [நேர்மையான விவேகமான ஈடுபாடுடைய கல்விமானான] புலிகளின் அரசியற்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் காட்டில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மருத்துவமனையையும் பார்வையிட்டிருந்தார்.
களமருத்துவம் தொடர்பான அனுபவங்களை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட போரும் மருத்துவமும் [War and Medicine] என்ற நூலை வெளியிடுவதில் தனது மருத்துவ மாணவர்களுக்கு Whitehall உதவினார்.
அவுஸ்திரேலியா, சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் சிங்கள சமூகம் மத்தியில் Whitehall இன் இவ்வாறான புலி ஆதரவுச் செயற்பாடுகள் காழ்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
"என்னைப் பணியிலிருந்து விலக்கவேண்டும் என Ceylon கல்லூரி மருத்துவர்கள் அவுஸ்திரேலியக் கல்லூரி மருத்துவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர். இவ்விடயம் உண்மையில் என்னைப் பெருமையில் ஆழ்த்தியுள்ளது" என பேராசிரியர் Whitehall கூறுகிறார்.
'சிறிலங்காவுக்கான சமாதானம், ஒற்றுமை மற்றும் மனித உரிமைக்கான அமைப்பு' [SPUR -Society for Peace, Unity and Human Rights for Sri Lanka] என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவில் வாழும் சிங்கள மக்களிற்கான அமைப்பின் பேச்சாளர் நிமால் லியனகே Nimal Liyanage, 'Whitehall ஒரு முதிர்ச்சியில்லாதவர், மோசடிக்காரர்' என குற்றஞ்சாட்டியுள்ளார்.
'Whitehall இலங்கையிலிருந்த காலப்பகுதியில் கொழும்பிற்கு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு அனுப்பப்பட்ட புலிகளின் ஒரு குழுவிற்கும் மருத்துவக் கல்வியை வழங்கியுள்ளார். தமிழ் மக்கள் துன்பப்படுகிறார்கள் எனப் பார்க்கும் Whitehall 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூந்துகள், புகையிரதங்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தெருக்கள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் போன்றவற்றில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை கண்டுகொள்ளமால் விட்டதற்கான காரணம் என்ன?' எனவும் பேச்சாளர் Nimal Liyanage கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், இவர் சுய விருப்பத்துடன் குற்றத்திற்கு துணைபோனவர். 'நல்ல பயங்கரவாதிகள்' என்ற கொள்கையுடன் புலிகளுக்கு மருத்துவத்தைப் பயிற்றுவித்துள்ளார். புலிகளின் பயங்கரவாதமானது நல்லதொரு நோக்கங்கருதியதே என்பதை தனது சுய விருப்புடன் ஏற்றுக்கொண்டு செயற்பட்டுள்ளார். சில ஆயிரம் புலிகள் மூலம் 20 மில்லியன் வரையான இலங்கையர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதை அவர் சரியாகவே பார்க்கின்றார்' எனவும் பேச்சாளர் Nimal Liyanage மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்களுக்கான சரியான நியாயமான தீர்வைத் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கும் Whitehall ஐ.நா அறிக்கை தொடர்பாக எதிர்மறைப் பார்வை கொண்டவராகவே உள்ளார்.
"தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பாக சரியான தீர்வைத் தரக்கூடிய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தற்போது இல்லை. ஆகவே ஒக்ரோபரில் Perth இல் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்தவால் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நிராகரித்தல் போன்ற ஏதாவது அரசியல் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கத்திற்கெதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.
முகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான ஒழுங்குகள் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன், முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சந்தித்துக் கலந்துரையாட சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவேண்டும். இவை நிறைவேற்றப்படும்வரை, அவுஸ்திரேலியா, சிறிலங்கா சார் நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்கக் கூடாது" என பேராசிரியர் Whitehall மேலும் தெரிவித்துள்ளார்.
நித்தியபாரதி
Comments