வரலாறு காணாத வகையில் மக்கள் நடத்திய அமைதிப் புரட்சி – பழ. நெடுமாறன் பாராட்டு

தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெமடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும், தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும், இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.

பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை. திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர். திருமங்கலம் சூத்திரத்தை செயற்படுத்த விடாமல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன. மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமும் திமுக கூட்டணிக்கு எதிராகத்
தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் அளித்த இந்த தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டும் அதே வேளையில் புதிய அரசை அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முதல் கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

அய். நா. விசாரணைக் குழுவினால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இராசபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், இலங்கையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு அய். நா. படையை அங்கு அனுப்பி வைப்பதற்கும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான அவசர நடவடிக்கைகளைத் தலையாய கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

Comments