கடத்தப்பட்ட என் அப்பாவை மீளத்தாருங்கள் – தந்தையின் படத்துடன் சிறுவர்கள்!

‘யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் இன்று கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலை,

இரகசிய காவல்துறையினரின் தலைமையகம், பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு ஆகியவற்றிற்கு சென்று காணாமல் போன தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு கோரினர். இதற்கான ஏற்பாட்டை ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண மேற்கொண்டிருந்தார்.



காணாமல் போன தமது உறவுகளைத் தேடித்திரியும் பெற்றோர், உறவினர்களான 82 பேர் ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்புக்கு பஸ்ஸில் அழைத்து வரப்பட்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று பகல் அழைத்து வரப்பட்ட இவர்களில் சிறுவர்கள், ‘கடத்தப்பட்ட என் அப்பாவை மீளத் தாருங்கள’என்ற வசனம் அடங்கிய சுலோகங்களை ஏந்தி நின்றனர். அத்துடன் பெண்கள் தங்களது பிள்ளைகளினதும், கணவனினதும் புகைப்படங்களை ஏந்தியவாறு கண்ணீர் வடித்துக்கொண்டு நின்றனர்.
இதன் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகப் பெற்றோரும், உறவினர்களும் தமது உறவுகளைப் பிரிந்த சோகத்தையும், வேதனையையும் கண்ணீர் மல்க ஊடகவியலாளர்களிடம் வெளிப்படுத்தினார்கள். பின்னர் சிறைச்சாலைக்குள் சென்று உறவுகளை இனம் கண்டுகொள்ள வரிசையாகக் காத்திருந்தனர்.

‘நாம் இலங்கையர்’ அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண மற்றும் அந்த அமைப்பின் சட்டத்தரணியுடன் பெற்றோர், உறவினர்கள் மூன்று மூன்று பேராக உள்ளே சென்றனர். ஏனையோர் வரிசையாகக் கண்ணீருடன் காத்திருந்தனர்.

தமது உறவுகள் இங்காவது இருப்பார்களா என்ற கேள்வியுடன் வந்தவர்களில் சிலர் தமது உறவுகளை இனங்கண்டு கொண்டனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு, மருதானை இரகசியப் பொலிஸ் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் கடற்படைத் தலைமையகத்துக்கும் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் உறவினர்கள், பெற்றோர் ஆகியோரின் விவரங்களையும் அவர்களின் காணாமல் போன உறவுகளின் விவரங்களையும் வெலிக்கடைச் சிறைச்சாலை, இரகசியப் பொலிஸ் பிரிவு, கடற்படைத்தலைமையகம் ஆகியவற்றில் ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண இன்று சமர்ப்பித்தார்.

Comments